தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 3 June 2009

கோடிப் பிள்ளையில் நானும் ஒருவன்


இடுப்பில் பணிந்து கட்டிய துண்டை
எடுத்துத் தோளில் போட்ட இயக்கம்

அடுப்பங் கரையை விட்டு வந்தால்
படுக்கை அறைக்கு மட்டுமே பெண்கள்

என்ற இழிவை இடித்துத் தகர்த்து
பெண்ணைப் போற்றிய பெரியார் இயக்கம்

பயமறி யாத பார்ப்பன எதிர்ப்புச்
சுயமரி யாதைச் சுடரொளி இயக்கம்

நாட்டில் பரவிட நாளும் உழைத்த
வீட்டில் பிறந்தேன் என்பதோ டன்றிப்

பெரியார் அண்ணா பேரா சிரியர்
அருமைக் கலைஞர் அன்றைய நாவலர்


அனைவர் பேச்சையும் கேட்டு வளர்ந்த
நினைவுகள் இன்னும் நீங்கிட வில்லை.

எனினும் பாதை இடையில் மாறிக்
கனிவே இன்றிக் கழகம் சாடினேன்

சாதி எதிர்ப்பில் சமத்துவ நெறியில்
ஆதித் தமிழர் உரிமைப் போரில்

ஈழ உணர்வில் இனத்தின் உயர்வில்
ஆழ மாகக் கால்பதித் தாலும்

திராவிட எதிர்ப்பே தமிழ்ப்பற் றென்னும்
திரிபு வாதத் திசையில் ஓடினேன்

கழகம் எதிர்த்தேன் கலைஞரை எதிர்த்தேன்
பழகிய திராவிடப் பாதை எதிர்த்தேன்

ஏறத் தாழ இருபது ஆண்டுகள்
மாற வில்லை என்மனப் போக்கு

கழிந்தது இளமைக் காலம் போனது
விழித்துக் கொள்ள வெகுநாள் ஆனது

எக்கணம் தனிலும் இனிமை காட்டும்
நக்கீரன் கோபால் நல்கிய வாய்ப்பால்

மூன்னே ஆண்டுகள் முன்புதான் மீண்டும்
ஈன்ற தாய்க்கு இணையாய் அன்பைக்

காட்டும் தலைவர் கலைஞரைக் கண்டேன்
கரங்கள் பற்றிக் கலங்கி நின்றேன்

சாந்தம் தவழும் சங்கத் தமிழிடம்
காந்தம் ஈர்த்த இரும்பாய் ஆனேன்

திங்கள் ஒருமுறை யேனும் அந்தப்
பொங்கும் தமிழைக் கண்டு மகிழ்ந்தேன்

இப்போ தந்த இடைவெளி சுருங்கித்
தப்பாமல் பலநாள் சந்திக் கின்றேன்

எங்கோ வெளியூர் சென்று திரும்பினால்
' எங்கே உன்னைக் காணவே இல்லை? '

என்று தலைவர் கேட்கும் வாஞ்சை
அன்று ஒலித்தஎன் அப்பாவின் குரல்தான் !

தேர்தல் பயணம் புறப்படும் முன்னர்
ஆறுத லாக அருகில் அழைத்துப்

' பத்திர மாகப் போய்வா ' என்றார்
சொத்தும் சுகமும் அன்றுதான் பெற்றேன்

ஆடி அடங்கும் உலகின் போக்கில்
கோடியில் ஒருவராய்க் குவளையில் பிறந்தீர் !

தாடி இல்லாத பெரியார் உங்கள்
கோடிப் பிள்ளையில் நானும் ஒருவன்

வாழ்த்து வதற்கு வயதென்ன வேண்டும்
வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்கபல் லாண்டு

2 comments:

  1. "சாந்தம் தவழும் சங்கத் தமிழிடம்
    காந்தம் ஈர்த்த இரும்பாய் ஆனேன்"- அருமை அய்யா

    ReplyDelete