தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 13 October 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (7)

இந்திய இலங்கை உடன்பாடும், தி.மு.க.வின் நிலைப்பாடும்

இந்திய இலங்கை உடன்பாட்டை எதிர்த்தும், இந்திய அமைதிப் படையை எதிர்த்தும் தி.மு.கழகமும், திராவிடர் கழகமும், தமிழ் அமைப்புகளும் தமிழ்நாட்டில் பெரும் இயக்கத்தையே நடத்தின  என்பதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன.ஆனால் அய்யா நெடுமாறன் அவர்களோ, தினமணிக் கட்டுரையில் (27.06.2012),
"1987 ஆம் ஆண்டில், ஈழத் தமிழர்களின் சம்மதம் இல்லாமல், ஜெயவர்த்தனேவுடன் பிரதமர் ராஜீவ் காந்தி உடன்பாடு செய்திருந்தபோது அதைக் கண்டிக்க இறுதிவரை கருணாநிதி முன்வரவில்லை."
என்று குறிப்பிடுகின்றார். மேலும் அவர் அதே கட்டுரையில்,
"எதிர்க்கட்சியில் இருந்தபோதும் சரி, ஆளுங் ட்சியின் தலைவராக விளங்கியபோதும் சரி, தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எந்த அளவுக்கு கருணாநிதி துணை நின்றார் என்பதை நாம் பார்த்தால், ஏமாற்றமும் அதிர்ச்சியும்தான் மிஞ்சும்"
என்றும் குறிப்பிடுகின்றார். அவருடைய தினமணிக் கட்டுரை சிறு நூலாக அச்சிடப் பெற்றுத் தமிழ்நாட்டில் பரவலாக வழங்கப்பெற்றும் வருகின்றது. எனவே, அவர் கூற்றுக்கு மாற்றாக உள்ள சான்றுகளை  மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய கட்டாயம் நமக்கும் வந்துள்ளது.


ஒப்பந்தம் செய்யப்பட்ட நாளிலிருந்தே அதனைக் கலைஞர் கடுமையாக எதிர்த்துள்ளார். உடன்பாட்டின் அடிப்படையே தவறானது என்று பல கூட்டங்களில் பேசியுள்ளார். எந்த இரண்டு பேருக்கு இடையில் பிணக்கோ, அவர்கள் இருவரும்தான் உடன்பாட்டில் கையெழுத்து இட வேண்டுமே அல்லாமல், சமாதானம் செய்யப்போன ஒருவர் அதில் கையெழுத்து இடுவது என்ன நியாயம் என்று கேட்டுள்ளார். இதோ அதற்கான சான்று:

இந்திய அமைதிப் படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் போர் தொடங்கிய ஒரு மாதத்திற்குள்ளாகவே, ஒப்பந்தத்தையும், இந்திய இராணுவச் செயல்பாடுகளையும் எதிர்த்து, தமிழ்நாடு முழுவதும், 07.11.1987 முதல் 17.11.1987 வரை, 'ஈழத்தமிழர் பாதுகாப்புப் பொதுக்கூட்டங்களைத் தி.மு.க. நடத்தியுள்ளது.

நவம்பர் 9 அன்று சேலத்திலும், 10 அன்று வேலூரிலும் கலைஞர் பேசியுள்ளார். அக்கூட்டங்களில் அவர் ஆற்றிய உரைகள் எழுத்து மாறாமல் முரசொலியில் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய இலங்கை உடன்பாடு குறித்து அக்கூட்டங்களில் அவர் பேசியுள்ள ஒரு செய்தி கீழே தரப் பட்டுள்ளது:

"கந்தன் நிலத்தைக் கருப்பனுக்கு விற்கிறான். கருப்பன் கந்தனிடம் வாங்குகிறான். ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடுகின்றவர்கள் யார்? கந்தனும், கருப்பனும்தான் கையெழுத்துப் போட வேண்டும். வேண்டுமானால், பக்கத்தில் இருக்கிற கடம்பன் சாட்சிக் கையெழுத்து போடலாம்...............சாட்சியும்,நிலத்தை வாங்குகிறவனும் போட்டுக்கொண்டால் அந்த agreement செல்லுமா? அந்த ஒப்பந்தம் செல்லாது. இன்றைக்கு அப்படித்தான் ராஜீவ் காந்தி போட்ட கையெழுத்து சாட்சி கையெழுத்து. ஜெயவர்த்தனாவோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய கையெழுத்து எங்கே?"
                         


இந்திய இலங்கை உடன்பாட்டை எதிர்த்து இத்தனை எளிமையாக, மக்களுக்கு எளிதில் விளங்கும் வகையில் எடுத்துச் சொல்லியிருக்கும் கலைஞர், கையெழுத்துப் போட வேண்டியவர் யார் என்பதையும் அடுத்துக் கூறியுள்ளார். அந்தக் கையெழுத்தைப் பெறுவதற்குத்தான் பிரபாகரனை டில்லிக்கு அழைத்துச் சென்றனர் என்றும், ஆனால் அதற்கு பிரபாகரன் உடன்படவில்லை என்றும் அவர் விளக்கியுள்ளார். இனி அவர் சொற்களிலேயே அதனைக் காண்போம்:

"தனி விமானம் கொடுத்து, ராஜ உபசாரத்தோடு அழைத்து வந்து, டெல்லியில் உட்காரவைத்து, சாதாரண ஓட்டலில் கூட அல்ல, அசோகா ஓட்டலில் உட்காரவைத்து,இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடு என்று சொன்னதும் பிரபாகரன் விழித்துக் கொண்டார்..........காலில் விழுகின்ற பழக்கம் ஈழத் தமிழனுக்குக் கிடையாது, விடுதலைப் புலிகளுக்குக் கிடையாது என்று பிரபாகரன் சொல்லிவிட்டார்."

உடன்பாட்டின் பிழையை எடுத்துக் காட்டியதோடு மட்டுமின்றி, ஈழத் தமிழர்களையும், விடுதலைப் புலிகளையும் சிறப்பித்தும் கலைஞர் பேசியுள்ளார். ஆனால் கலைஞரைப் புலிகளின் எதிரியாகக் காட்டுவதிலேயே எப்போதும் நெடுமாறன் குறியாக இருப்பது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள புலிகள் ஆதரவாளர்களை எப்போதும் தன் பக்கமே வைத்துக் கொள்வதிலும், ஈழத் தமிழர்களுக்குத் தான் மட்டுமே பாடுபடுவதாய் உலகத் தமிழர்களை நம்ப வைப்பதிலும் அவர் கவனமாக இருப்பதே  காரணம். கலைஞர் மீதான அவருடைய நெடுநாள் பகையும் இன்னொரு காரணம்.

இன்றைக்கு இருப்பது போல் அன்று தனியார் தொலைக்காட்சிகளோ, தனியார் வானொலிகளோ கிடையாது. எனவே அரசு ஊடகங்கள் சொல்லும் செய்திகள்தான் மக்களைச் சென்றடையும். அத் தருணத்தில், அரசு ஊடகங்கள்,ஈழ மக்களிடையே புலிகளுக்கு எந்த ஆதரவும் இல்லை என்னும் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தன. அந்தப் புரட்டையும் உடைத்து நொறுக்கி,ஈழ மக்கள் புலிகளை ஆதரிக்கின்றனர் என்ற உண்மையையும் கலைஞர் அக்கூட்டத்தில் எடுத்துச் சொல்லியுள்ளார்:

"திலீபன் உண்ணாவிரதம் இருந்த காட்சியை விடுதலைப் புலிகள் வீடியோ படமாக எடுத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அதை நமது கழகச் சொற்பொழிவாளர்களுக்கும் போட்டுக் காட்டினேன். அது குற்றம் என்றால் அரசு நடவடிக்கை எடுக்கலாம். மக்கள் ஆதரவு புலிகளுக்கு இல்லை என்கிறார்களே, அந்தப் படத்தைப் பார்த்தால் தெரியும்................புற்றீசல் புறப்பட்டது போல் தமிழ் மக்கள் உண்ணாவிரதம் இருக்கும் திலீபனைக் காண வந்து கொண்டே இருக்கிறார்கள். புலிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லையென்று இங்கே தொலைகாட்சி,வானொலி சொல்வது அனைத்தும் அப்பட்டமான பொய்களே.".

இவ்வாறு இந்திய இலங்கை உடன்பாட்டிற்கு எதிராகவும், புலிகளுக்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் கூட்டங்கள் நடத்தியவர் கலைஞர்.அது மட்டுமல்லாமல், ஈழத் தமிழர்களுக்கு எதிர்ப் பரப்புரை செய்த தொலைக்காட்சிப் பெட்டி உடைப்புப் போராட்டத்தையும் தி.மு.க. நடத்தியது.  ஆனால் அவர், 'உடன்பாட்டைக் கண்டிக்க இறுதிவரை முன்வரவில்லை' என்று நெடுமாறன் அவர்கள் எழுதுவதும்,, அதனைப் பார்ப்பனப் பத்திரிகைகள் வெளியிட்டு மகிழ்வதும் இங்கு வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், 'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்னும் பாடல் கலைஞருக்காகவே எழுதப் பட்டிருப்பதாக நெடுமாறன் குறிப்பிடுகின்றார். அந்தப் பாடல் வரி யாருக்குப் பொருந்துகின்றது என்பதைக் காலம் சொல்லாமலா போய்விடும்?

இன்னொன்றையும் இங்கே சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தில், ஈழ மக்களுக்காக வைகோ மட்டுமே தி.மு.க. சார்பில் பேசினார் என்பது போன்ற ஒரு தோற்றமும் இங்கே உருவாக்கப் பட்டுள்ளது. அவர் பேசியது உண்மைதான். ஆனால் முரசொலி மாறனும் உடன்பாட்டை எதிர்த்துப் பேசியுள்ளார். "களத்தில் நிற்கும் புலிகளை விட்டுவிட்டுப் போடப்படும் ஒப்பந்தம் எப்படிச் சரிஆனதாக இருக்கும்?" என்று மாறன் கேட்ட கேள்விக்குத்தான் "They are after all two thousand boys" என்று ராஜீவ் ஆணவமாகப் பதில் சொன்னார். அதனையும் குறிப்பிட்டுக் கூட்டத்தில் பேசியுள்ள கலைஞர், "ஏன் அந்த இரண்டாயிரம் பொடியன்களைச் சமாளிக்க முடியாமல் நம் இந்திய இராணுவம் திணறுகின்றது ன்றும் கேட்கின்றார். 
                   
புலிகளால் நொறுக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் டாங்கி ஒன்றின் படத்தை      முரசொலி (19.01.1988) வெளியிட்டுள்ளது. இப்படித் தேச விரோதமாகப் படங்களைச் சில தேச விரோதப் பத்திரிகைகள் வெளியிடுகின்றன என்றும் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் மறுநாளே அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டது. நேரடியாகவே 'கொலைகார ராஜீவ் அரசு ஒழிக' என்று முரசொலியில் கருத்துப்படம் (08.09.1988) வெளியானது.


விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கொடுப்பது போன்ற ஒரு படத்தைக் கண்டு வருந்தி, முரசொலி மாறன், 09.081987 ஆம் நாள் முரசொலியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதன் முதல் வரியைக் கீழே தந்துள்ளேன்:
                   
"தமிழ் ஈழ  விடுதலைப் புலிகள் ஆயுதங்களைச் சரண் செய்ததைத் தொலைக்காட்சியில் காட்டினார்கள். பேரறிஞர் அண்ணாவின் பொன்னுடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப் பட்டிருந்ததைப் பார்ப்பது போல் இருந்தது." .

முரசொலி மாறனின் இந்தக் குரல் வெளியில் சொல்லப் பட்டதுண்டா? அவரைப் புலிகளின் கடுமையான எதிரி என்பது போன்ற சித்திரத்தைத்தானே இங்கே சிலர் திட்டமிட்டு உருவாக்கினர்.
                           
இந்திய இராணுவம் ஈழத்தில் இருந்த போது, திராவிடர் கழகம் எத்தனை கடுமையாய் அதனை எதிர்த்தது என்பதை நாம் அறிவோம். "ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் ராஜீவைச் சரித்திரம் கூண்டிலே நிறுத்தும் " என்றும்," ஜெயவர்த்தனா சொல்படி இந்திய ராணுவம் செயல்படுவது மகா அவமானம்" என்றும் அன்றைக்கு உணர்ச்சிமிகு உரைகளை ஆற்றி, இளைஞர்களிடம் ஈழ ஆதரவு நிலையை உருவாக்கியவர் தி.க. தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இல்லையா?
                           
28.11.1987 அன்று, சென்னை, புதுவண்ணைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது இந்திய இராணுவம் ஒரு பேட்டை ரவுடியைப் போல் செயல்படலாமா என்கிற அளவிற்கு மிகக் கடுமையாக அவர் பேசியுள்ளார். இதோ அவருடைய பேச்சிலிருந்து ஒரு பகுதி:

"எங்கேயாவது யாருக்காவது சண்டை என்று சொன்னால், பேட்டை ரவுடியைக் கூப்பிடு என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட பேட்டை ரவுடியாக இந்திய இராணுவம் ஜெயவர்த்தனாவுக்குச் செயல்படுகிறது. கூலிப் படையாகப் போனால் கூட, கூலி வாங்கிக் கொண்டு சண்டை போடலாம். ஆனால் இங்கே நம்முடைய பணத்தைச் செலவு செய்து கொண்டு ஈழ மக்களைக் கொல்வதா?

கோழியிலிருந்து, முட்டையிலிருந்து, ரொட்டியிலிருந்து ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய் செலவாகிறது. எதற்காக சம்மந்தம் இல்லாமல், நம்முடைய ராணுவத் தோழர்கள் ரத்தத்தைச் சிந்தி உயிரைக் கொடுக்க வேண்டும்? நான் மனிதாபிமானத்தோடு சொல்கிறேன், ஈழத் தமிழனும் சாகக் கூடாது, இந்திய ராணுவத் தமிழனும் சாகக் கூடாது."




இப்படித் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு - புலிகள் ஆதரவுக் கருத்துப் பரப்புரையைத் தி,மு,க,வும், தி,க.வும் கொண்டு சென்றன. தங்கள் சொந்த நாட்டின் ராணுவத்தை எதிர்த்து, தங்கள் நாட்டிலேயே பிரச்சாரம் செய்வது எளிதான செயலா? எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, ஏதோ ஒரு குறிப்பிட்ட மூன்று பேர் மட்டுமே அன்றும் இன்றும் ஈழ ஆதரவாளர்களாக  இருப்பது போல் காட்ட முயல்வது மிகப் பெரிய வரலாற்றுப் புரட்டல்லவா?

அய்யா நெடுமாறன் மீது நான் மிகுந்த மதிப்புடையவன். அவர் மூலமாகவே ஈழ வரலாற்றுச் செய்திகள் பலவற்றையும்  நான் ஒரு கட்டத்தில் அறிந்து கொண்டேன். அவரோடு பயணம் செய்த பல வேளைகளிலும், அவரோடு சிறையில் இருந்த காலங்களிலும் அவர் எனக்கு எவ்வளவோ அரசியல் செய்திகளைக் கற்பித்துள்ளார். எதையும் நான் மறக்கவில்லை. அவற்றிற்கு நான் என்றும் நன்றியோடு உள்ளேன். ஆனால், தன் சொந்தப் பகைக்காக வரலாற்றையே அவர் மாற்றிச் சொல்வதைப் பொறுக்க முடியாதவர்களில் ஒருவனாகவே நான் உள்ளேன். அதனாலேயே அவர் எடுத்து வைக்கும் செய்திப் பிழைகளை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் நமக்கு உருவாகின்றது.

இந்திய இலங்கை உடன்பாட்டையும், இந்திய அமைதிப் படையையும் கடுமையாக எதிர்த்தவர்களில் நெடுமாறன் அவர்களுக்கும் முதன்மையான இடம் உண்டு. அதனை யாராலும் மறுக்க முடியாது.ஆனால் அதற்காக ஈழ ஆதரவின் 'மொத்தக் குத்தகையையும்' அவர் எடுத்துக் கொள்ள முடியாது. இறுதி நாள்களில், எம்.ஜி.ஆர். உடன்பாட்டிற்கும், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கும் ஆதரவாக இருந்தார் என்பதையும் அவர் மறைக்கத் தேவையில்லை.

எம்.ஜி.ஆர். ஆட்சியில்தான், 11.10.1987 காலை, சென்னை, அடையாரில் இருந்த புலிகளின் அலுவலகத்தைத் தமிழகக் காவல் துறையினர் சோதனை இட்டனர். உடன்பாட்டை ஆதரித்துச்  சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜீவ் காந்தியோடு, எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டு பேசினார். இனிமேல் தமிழ்நாட்டில் புலிகளுக்கு இடமில்லை என்பதைத் தமிழக அரசின் நடவடிக்கைகள் மறைமுகமாக உணர்த்தின.

இவ்வாறு மத்திய, மாநில அரசுகள் இரண்டுமே புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்ட தருணத்தில், தமிழகத்தில் இருந்த தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள், திரைப்படக் கலைஞர்கள் சிலர் உள்ளிட்ட பலர் வீரம் செறிந்த தங்கள் எதிர்ப்பினை இங்கு வெளிப்படுத்தினார்கள். அச் செயல்பாடுகளையும் நாம் பதிவு செய்திட வேண்டும். அந்நேரத்தில், தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சிகள் என்ன நிலைபாட்டினை மேற்கொண்டன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

தி.மு.க.வின் உறுப்பினராகவும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும்  இருந்த வைகோ அவர்களின் பங்களிப்பும், அதனால் ஏற்பட்ட நன்மை, தீமைகளும் யாவை என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் அடுத்து நாம் காண்போம்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)
.

12 comments:

  1. விடுதலைப் புலிகள் கலைஞர் வைத்திருந்த அன்பையும், நல்லெண்ணத்தையும் மறைத்து கலைஞரும் பிரபாகரனும் விரோதிகள் என இன்றைய இளைஞர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவர்களுக்கு சேதாரம் ஏற்படுத்தும் நீங்கள் தரும் ஆதாரம்...

    ReplyDelete
  2. இத்தனை சான்றுகள் இருந்தும் எப்படி நெடுமாறன் போன்றோருக்கு வாய் கூசாமல் பொய் சொல்ல முடிகிறது என்று தெரியவில்லை. திமுகவின் முன்னணி பேச்சாளர்கள்
    தங்களுடைய பரப்புரை மூலம் மக்களிடம் இச் செய்திகளை எடுத்துச் செல்ல வேண்டும். இத் தொடர் நூலாக வெளிவரும் முன்னரே அண்ணன் சுபவீ அவர்களின் அனுமதியோடு ஒவ்வொரு அத்தியாயத்தையும் நகல் எடுத்து மற்றவர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்குத் தர வேண்டும். திராவிட இயக்கத் தோழர்களும், நேர்மையான வலைப் பதிவர்களும் இத்தொடரில் வரும் செய்திகளை தங்களின் தளங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா. நான் தரும் தகவல்களை நகல் எடுத்துக் கொடுப்பதற்கு என்னிடம் எந்த அனுமதியும் பெற வேண்டியதில்லை. சுபவீ வலைப்பூவிலிருந்து எடுக்கப்பட்டது என்னும் அடிக்குறிப்பு மட்டும் இருந்தால் போதுமானது. இந்த உண்மைகள் அனைத்தும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் நம் விருப்பம்.

      Delete
  3. ஆட்சியில் இல்லாத போது விடுதலைப்புலிகளுக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கும் தி.மு.க , ஆட்சியில் இருக்கும் போது சுருதியை குறைத்து கொள்ளும் என்ற குற்றச்சாட்டு தி.மு.க வின் மீது இருந்து வருகிறது . உதாரணமாக 2009 ஆம் ஆண்டு சட்ட சபையில் அப்பொழுது நிதி அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் , ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசும் போது " தி.மு.க விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கட்சியும் அல்ல எதிரான கட்சியும் அல்ல .எங்கள் நோக்கம் ஈழத்தமிழர் பிரச்சனையை தீர்ப்பதும் அவர்களை காப்பது மட்டுமே " என்று கூறியுள்ளார்.

    In his reply to the motion of thanks to Governor for his address to the Assembly, Finance Minister and leader of the House K Anbazagan said: "we neither supported (LTTE) nor opposed it. Our main aim is to solve the Sri Lankan Tamils issue and to protect them."

    http://www.indianexpress.com/news/dmk-neither-supported-nor-opposed-ltte/416679/


    மேலும் சட்ட சபையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸின் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் இலங்கை அரசு 48 மணி நேர போர் நிறுத்த அழைப்புக்கு பதில் அளிக்காத பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கண்டனம் தெரிவித்தார் . இலங்கை அரசு , "இந்திய அரசின் உதவியோடு தமிழர்களை காப்போம் என்று கூறியதற்கு விடுதலைப்புலிகள் ஏன் விடையளிக்கவில்லை என்று வினவி உள்ளார் . தங்கள் வசம் உள்ள அப்பாவித்தமிழர்களை ஏன் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்ப முன் வரவில்லை என்றும் கேட்டுள்ளார். இவை அனைத்தும் சட்ட சபையில் தெரிவிக்கப்பட கருத்துக்கள் .

    Ruling DMK on Friday sharply criticised the LTTE for not responding to the 48-hour ceasefire declared by the Sri Lankan government in the Vanni region to evacuate large number of civilian Tamils caught in the figthing between the island army and the Tigers.

    http://www.hindustantimes.com/India-news/Chennai/DMK-flays-LTTE-for-not-responding-to-48-hr-ceasefire/Article1-372640.aspx

    அன்று மறைந்த முரசொலி மாறன் மூலம் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை எதற்காக சரண் செய்ய வேண்டும் என்று கேட்ட தி.மு.க , 2009 ஆம் ஆண்டு கழகத்தின் நீண்ட கால பொதுச் செயலாளராக இருக்கும் பேராசிரியர் மூலம் ஆயுதங்களை விடுத்து போர் நிறுத்தம் செய்யாதது ஏன் என்று கேட்டது முரண்பாடாக இருக்கிறது . சு ப வீ அய்யா அவர்கள் இந்த முரண் பாட்டை விளக்க வேண்டும். நெடுமாறன் அய்யா அவர்களின் இரட்டை நிலையை ஆதாரத்தோடு விமர்சிக்கும் தாங்கள் , தி.மு.க.வின் இரட்டை நிலையை பற்றி இந்த தொடரில் குறிப்பிடாதது வருத்தம் அளிக்கிறது.

    இறுதி காட்ட போரின் தன்மையை அறிந்து , தி.மு.க அவ்வாறு போர் நிறுத்தம் கோரியதா ? அப்படியானால் போர் நிறுத்தம் கோரிய தி.மு.க.வின் நிலைப்பாடு சரியா ? அல்லது போர் நிறுத்தத்தை ஏற்காமல் போரை தொடர்ந்தது விடுதலைப்புலிகளின் நிலைப்பாடு சரியா ?

    இவற்றிற்கு அய்யா அவர்களிடம் இருந்து விடைகளை எதிர் நோக்கி உள்ளேன்

    நன்றி
    தே . ரகு

    ReplyDelete
    Replies
    1. ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க. தன் நிலையை மாற்றிக் கொண்டது எனக் கூற முடியாது. 1989இல் ஆட்சிக்கு வந்த பின்னும் எப்படி ஆதரவு தெரிவித்தது என்பதை என்னால் விளக்க முடியும். எனினும், 1991 ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு பல மாற்றங்கள் நடந்தன. அவற்றை நான் விரிவாகவே கூற இருக்கிறேன். நீங்கள் சட்டமன்ற விவாதத்திலிருந்து சிலவற்றை எடுத்துத் தந்துள்ளீர்கள். அது குறித்த முழு விவாதத்தையும் படித்துவிட்டு, இத் தொடர் , 2009 ஆம் ஆண்டு வரலாற்றிற்கு வரும்போது உங்கள் கேள்விக்கான விடையையும் தருகின்றேன்.

      Delete
  4. 87ல் இவ்வளவு செய்த கலைஞர் 2009ல் இவற்றில் நூறில் ஒரு பங்கு செய்திருந்தாலும் கூட எம் மக்கள் பலரை காப்பாற்றி இருக்கலாம்.
    -
    இப்படிக்கு இன்று நடுத்தெருவில் விடப்பட்டிருக்கும் ஒரு ஈழதமிழன்

    ReplyDelete
    Replies
    1. 2009 ஆம் ஆண்டிலும் கலைஞர் என்ன செய்தார், என்ன செய்ய முடியவில்லை என்பவைகளையும் தக்க சான்றுகளுடன், என்னால் இயன்றவரை எடுத்துத் தருகின்றேன். தொடர் முடியும்வரை பொறுத்திருங்கள்.

      Delete
  5. சான்றுகளும் சாட்சிகளும் இருந்தாலும் நெடுமாறன் தன் பேச்சை மாற்றப்போவதில்லை. மாற்றிப் பேசினால் அவரின் அடையாளம் தொலைந்துவிடும்.

    தான் பிழைக்க யாரையாவது குற்றம் சாட்டவேண்டும். யாரை சாட்டினால் விளம்பரமும், புகழும் உடனே கிடைக்குமோ அவரை அவர் குற்றம் சாட்டுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. வ.இரா.தமிழ் நேசன்,மும்பை-72.
      அப்பப்பா....எவ்வளவு ஆதாரங்கள்.நீங்கள் வீசுகின்ற சவுக்கின் வேகம் கண்டு;என் புளுகு,உன் புளுகு,
      இவ்வளவுதான்;எங்கப்பன் புளுகு கப்பலிலே வருது என புளுகிகொண்டிருந்தவர்களெல்லாம்
      உங்கள் சவுக்கின் சீற்றம் கண்டு முட்டுச் சந்திற்குள்ளே ஓடி ஒளிந்துகொண்டதாக கேள்வி.
      ஆனாலும் நீங்கள் சாற்றை சுழற்றுவதை நிறுத்தி விடவேண்டாம் . பதுங்கி இருந்து விட்டு மீண்டும்
      வந்தாலும் வருவார்கள் பொல்லாத புளுகர்கள்.

      Delete
  6. வணக்கம் வாழ்க பெரியார். வெல்க திராவிடரின் தமிழகம் தங்களின் வலைப்பூவில் என்னை இணைத்துக்கொண்டதற்கு நன்றி. தங்களின் வலைப்பூ முகவரி அண்ணன் பொள்ளாச்சி உமாபதி தந்தார் மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  7. அருமை. ஈழ அரசியலை என் போன்ற இளைஞர்களுக்கும் எளிமையாக புரியவைக்கும் உங்கள் ஸ்டைல் அருமை!
    நானும் திரு நெடுமாறன் அவர்களின் கட்டுரையை தினமணி தலையங்கத்தில் படித்தேன். அதில் கூறியிருக்கும் பலவற்றை பொய் என்று போட்டு உடைத்திருக்கிறீர்கள். இதை தினமணி வெளியிடவேண்டும். அதுதான் நடு நிலை. வெகுஜன மக்களை இந்த கருத்துக்கள் சென்று சேர்ந்தால் தான் இந்த கட்டுரை எழுதப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறும். அதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையை புரியவைக்க நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். அதற்கு கோடி நன்றிகள்!

    -அன்புடன்
    விக்ரமன்.

    ReplyDelete
  8. ராஜபக்சேவின் தேர்தல் வெற்றிக்கு காரணம் யார்?
    தேர்தலை புறக்கணிக்க சொன்னது யார்?
    அமெரிக்கா ஒசாமாவை கொன்றாலும் அல் கொய்தாவை அழிக்கமுடியவில்லையே ஏன்?
    பிரபாகரன் இல்லைஎன்றதும் விடுதலை புலிகள் இயக்கம் காணாமல் போனது ஏன்?
    என் அடி மனதில் ஆயிரம் கேள்விகள் ஓடிகின்றன என் சில கேள்விகளுக்கும் பதில் தாருங்கள் ஐயா

    ReplyDelete