தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 22 June 2013

நதியோடும் பாதையில்... (1)


ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நதி போன்றதுதான். நாம் விரும்பினாலும்,  விரும்பாவிட்டாலும் அது ஓடிக் கொண்டே இருக்கிறது. நாம் விரும்பி மகிழும் கணங்கள் அப்படியே உறைந்து போவதுமில்லை. விரும்பாத துயரம் நிறைந்த நொடிகள் நகராமல் இருப்பதும் இல்லை. 'எல்லாம் கடந்து போகும்' என்னும் தொடர் இந்த உண்மையைத்தான் கூறுகின்றது. 

சில நதிகள் பல நாடுகளைக் கடந்து பல்லாயிரம் மைல்கள் ஓடுகின்றன. வேறு சிலவோ, புறப்பட்ட இடத்திற்கு அருகிலேயே கடலில் கலந்து விடுகின்றன. எப்படியிருந்தாலும் அவை ஓடிக் கொண்டே இருக்கின்றன என்பதுதான்  அவற்றின் சிறப்பு.

மானுட வாழ்வும் அப்படித்தான். ஓடுதல், ஓடிக் கொண்டே இருத்தல்தான் நாம் உயிரோடிருப்பதின் அடையாளம். இயங்குதல் வாழ்க்கை. தேங்குதல் மரணம்.

வாழ்க்கை என்னும் நதியோடும் பாதையில் எல்லா மனிதர்களுக்கும் எத்தனையோ அனுபவங்கள்.  ஆனால் அவற்றைச் சிலர் மட்டுமே பதிவு செய்கின்றனர்.  அத்தகைய ஒரு பதிவுதான் இத்தொடர்.

நிறையப் பொது நிகழ்வுகள், அவற்றையொட்டிப் பல பயணங்கள், பயணங்களில் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் என்று என் வாழ்க்கை நதி ஓடிக்கொண்டிருப்பதால், அந்த அனுபவங்களுள்  சிலவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது


இந்த நதியின் முதல் பகுதி  ஒரு துயரச் செய்தியோடு தொடங்குகிறது.

திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் 


அந்தத் துயரச் செய்தியைத் தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிக் கொண்டிருந்த போது  நான் திருவண்ணாமலையில் இருந்தேன். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் செயற்குழுக் கூட்டம் அன்று அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. சிறந்த நடிகரும், திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் 59 வயதில் மரணம் அடைந்து விட்டார் என்னும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

20ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எனக்கு நட்பு இருந்தது.  திரைப்படத் துறையில் உள்ள பொதுவுடமைச் சிந்தனையாளராகத்தான் அவருடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடத்தவிருந்த ஒரு தொடர் ஓட்டத்திற்கு நன்கொடை வாங்கச் சென்றிருந்த போது , தியாகராய நகரில் இருந்த அவருடைய அலுவலகத்தில் அவரை முதன் முதலில் சந்தித்தேன். அது 1980களின் இறுதியாக இருக்க வேண்டும். தோழர்கள் நீண்ட பயணம் சுந்தரம், இல. கோவிந்தசாமி ஆகியோர் என்னை அவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தனர். நண்பர்  ஜீவ பாரதி அப்போது அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

திரைப்பட இயக்குனர் என்ற எந்தப் பகட்டும் இல்லாமல் எங்களை வரவேற்றுப் பேசி, நன்கொடையும் கொடுத்து அனுப்பி வைத்தார். அதன்பின் அவருக்கும் எனக்குமான நட்பு தொடர்ந்தது. நல்ல நண்பரைப் போல பழகுவார். நேரிலும், தொலைபேசியிலும் 'தோழர்' என்றுதான் அழைப்பார்.

1991 இறுதியில், "இனி" என்னும் மாத இதழைத் தொடங்கி நானும் நண்பர்களும் நடத்தியபோது, அவர் செய்த உதவிகள் மறக்கக்கூடியன அல்ல. வெறும் நிதி உதவி மட்டுமன்று. நண்பர்கள் பலருக்கு அந்த இதழை அறிமுகப்படுத்தினார். அவரே  சில கட்டுரைகளையும் எழுதித் தந்தார். அவரைப் பார்க்க வரும் திரைப்பட நண்பர்களிடம் எங்கள் இதழுக்கான ஆண்டுக்கட்டணம் ரூ.35 பெற்றுக் கொண்டுதான் அவர்களிடம் பேசத் தொடங்குவார். 

அவர்தான் எனக்கு நடிகர் சத்தியராஜ் அவர்களை அறிமுகப்படுத்தி வைத்தார். 'அமைதிப்படை' படத்தின் தொடக்க வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில், வயதான தோற்றத்தில் இருந்த சத்தியராஜைக் காட்டி, 'யாரென்று தெரிகிறதா?' என்று கேட்டார். இன்று வரை அவரும் நல்ல நண்பராக இருந்து வருகின்றார்.

அமைதிப்படையின் மூலம் மணிவண்ணன் நல்ல நடிகராகவும் மக்கள் மனங்களில் இடம்பெற்றார். இருவரும் புகழின் உச்சத்திற்குச் சென்ற நேரம் அது. அந்தத் தருணத்தில்,   வெகுமக்களிடம் அறிமுகமே இல்லாத என் வேண்டுகோளை ஏற்று இருவரும் பொள்ளாச்சியில் நடைபெற்ற 'இனி' வாசகர் வட்டக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர். ஒரு சின்ன அரங்கத்தில் நடைபெற்ற கூட்டம் அது. புகழ் மிக்க நடிகர்கள் யாரும் அப்படி ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். 

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவரே ஒரு மாத இதழ் தொடங்கினார். 'போர்வாள்' என்று பெயர். 'இனி'யிலிருந்து பிரிந்த நண்பர் விடுதலை அந்த இதழில் பணியாற்றினார். எழுத்தாளர் பிரபஞ்சன் அதன் ஆசிரியர். இனி மாதிரியே ஒரு இதழை இனி இதழுக்குப் போட்டியாகத் தொடங்குவது போன்ற ஒரு தோற்றம் இருந்தது. அதில் எனக்கும் சிறு வருத்தம் இருக்கவே செய்தது. ஆனால் அவரே என்னை அழைத்து 'அப்படியெல்லாம் கருத வேண்டாம்' என்றார். போர்வாள் வெளியீட்டு விழாவிலும்  கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அவர் அழைப்பை ஏற்று பெரியார் திடலில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். ஆசிரியர் வீரமணி, அண்ணன் வைகோ, கவிஞர் இன்குலாப்,  கலைப்புலி தாணு என்று பலரும் கலந்து கொண்டோம்.

பிறகும் பல ஆண்டுகள் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த வேளையில்தான், நண்பர் செல்வபாரதி மூலம் தம்பி சீமான் எனக்கு அறிமுகம் ஆனார். 

அந்த அறிமுகமே பின்னால் எங்களுக்குள் ஒரு பிரிவையும் ஏற்படுத்தியது. 2010இல் சீமான் உருவாக்கிய 'நாம் தமிழர் கட்சியி ல் அவர் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியினர் கலைஞரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதனால் எங்களுக்குள் அரசியல் எதிர்நிலை உருவானது. அப்போதும் அரசியல் வேறுபாடுதான். தனிப்பட்ட பகை ஏதுமில்லை.

அம்பத்தூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில், "சுபவீயின் மீசை முன்பு புலிவால் போன்று இருந்தது. இப்போது எலிவால் மீசை ஆகிவிட்டது" என்று அவர் பேசியதாக நண்பர்கள் சிலர் கூறினர். தனிப்பட்ட முறையில் அப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசக் கூடியவர் இல்லை அவர் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. உண்மைதான். அவர் அப்படிப் பேசவில்லை என்றும், அவர் இருந்த மேடையில் இன்னொருவர்தான் அவ்வாறு பேசினார் என்றும் பிறகு தெரிந்தது. 


திருவண்ணாமலையிலிருந்து சென்னை வந்த நானும், நண்பர்கள் மாறன், குமரன், எட்வின் ஆகியோரும் நேரே அவர் இல்லம் சென்று, அவர் உடலுக்கு மாலை வைத்து இறுதி வணக்கம் செலுத்தினோம்.


இங்கிலாந்து நாட்டின் மேற்குப் பகுதியில் ஓடும் ப்ரூக் (The brook) நதி பற்றிப் பாடிய கவிஞர் டென்னிசன்,
"Men may come and men may go
But i go on forever"
என்று பாடுவார். உண்மைதான். மனிதர்கள் வருகிறார்கள், மனிதர்கள் போகிறார்கள்........ஆனால் நல்ல மனிதர்கள் எப்போதாவதுதான் வருகிறார்கள். அவர்களும் நம்மைவிட்டு அவசரமாகப் போய்விடுகிறார்கள்.


                                         ■ ■ ■ ■

சிங்களனின் சித்தப்பன் மக்கள்!
                                 

எனக்குக் குருதி அழுத்தம் (blood pressure) இல்லையென்றுதான் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனாலும், நான் துக்ளக் இதழைப் படித்து முடிக்கும் வேளைகளில் சோதனை செய்து பார்த்தால் ரத்த அழுத்தம்  கூடுதலாக இருக்க வாய்ப்பிருக்கிறது. 

இந்த வாரமும் அப்படித்தான். 26.06.2013ஆம் நாளிட்ட துக்ளக் இதழில், எஸ்.ஜெ. இதயா என்பவர் எழுதியுள்ள 'இலங்கைக்குச் சென்று பாருங்கள்' கட்டுரையைப் படித்து முடித்த   வேளையில் என் கோபம் கூடிப் போயிற்று. 

மூன்று தலைமுறைகளாகக் களத்தில் நின்று இலட்சக்கணக்கான உயிர்களைப் பலி கொடுத்து, சொத்து சுகம் அனைத்தையும் இழந்து சொந்த தேசத்திலேயே அகதிகள் ஆகிப் போன அந்த மக்களின் ரத்தக் காயங்களை மேலும் கீறி மிளகாய்ப் பொடி  தூவுவது போல இருக்கிறது அந்தக் கட்டுரை. சிங்களர்களை விட இவர்கள் கொடுமையானவர்களாக இருக்கிறார்கள்.

துக்ளக் இதழ் சார்பில் ஈழத்திற்குப்  ஆறு நாள் பயணம் போய் அனைத்தையும் தெரிந்துகொண்டு வந்துவிட்டார்களாம். அங்கு எல்லாம் நன்றாக  இருக்கிறதாம். புலிகள் போய்விட்ட பின்பு, சிங்களர் ஆட்சியில் எல்லாம் ' சேமமாக' இருக்கிறதாம்.  எழுதுகிறார்கள்.

அத்தோடு நிற்கவில்லை. அந்த மக்களைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் இன்னும் எத்தனை இழிவாக எழுதுகின்றனர் தெரியுமா? இதோ படியுங்கள்:
            
"யாழ்ப்பாணம் பஸ் நிலையம் அருகில் உள்ள புத்தகக் 
கடை ஒன்றில் இலங்கையிலிருந்து வெளியாகும் 
நாளிதழ்கள், வார, மாத இதழ்கள அத்தனையையும் நான் 
ஒன்று விடாமல் வாங்கினேன். 20க்கும் மேற்பட்ட அந்த 
இதழ்களில் இரண்டு இதழ்கள்  பச்சையான தமிழில் 
எழுதப்பட்ட மஞ்சள் பத்திரிகைகள், அனுபவக் கதைகள் 
என்ற பெயரில் படு ஆபாசமான சம்பவங்கள் அதில் ஈழத் 
தமிழில் எழுதப்பட்டிருந்தன. அதையும்தான் யாழ்ப்பாணத் 
தமிழர்கள் வாங்கி வாசிக்கிறார்கள்."
      
ஈழத்தமிழர்கள் இன்று போர்க்குணத்தோடு இல்லை.விடுதலைத் தாகம் எல்லாம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் மஞ்சள் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கும் காமுகர்கள் என்று உலகிற்குச் சொல்கிறது துக்ளக். பிறகு இது குறித்துத் தன் கருத்தை எழுதுகிறார் அந்த மஞ்சள் புத்தக வாசிப்பாளர்:

"அங்குள்ள மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு 
வாழ்கிறார்கள் என்றால், சினிமா பார்ப்பதற்கும், சினிமா 
கிசுகிசுக்களைக் கேட்பதற்கும், மஞ்சள் பத்திரிகை 
படிப்பதற்கும் யாருக்காவது தோன்றுமா? இவையெல்லாம் 
அங்கு இயல்பான மனித வாழ்க்கை துவங்கி விட்டது 
என்பதற்கான அடையாளங்கள் அன்றி வேறென்ன?"

ஆக, சினிமா பார்ப்பதும், கிசுகிசுக்களைக் கேட்பதும், ஆபாச நூல்களைப் படிப்பதும்தான் இயல்பான வாழ்வின் அடையாளங்களாகத் தெரிகிறது துக்ளக் இதழுக்கு. என்ன செய்வது அவர்களின் வாழ்க்கை முறை அப்படித்தான் போலும்! 'வேண்டுமானால் நீங்கள் ஒருமுறை இலங்கைக்குச் சென்று பாருங்கள்' என்று நமக்கு இலவச அறிவுரை வேறு.

இலங்கை செல்ல எவன் நமக்கு விசா கொடுப்பான்? துக்ளக், ராஜபக்சேவுக்கு நெருக்கமான பத்திரிகை. அவர்கள் சிங்களனின் சித்தப்பா மக்கள், அவர்களுக்கு உடனே விசா கிடைக்கும். நமக்கு எப்படி?

இன்னொன்றையும் இங்கு நாம் பதிவு செய்ய வேண்டும். இன்று நேற்றன்று, இப்படித்தான் பல்லாண்டுகளாய்த் துக்ளக் ஈழ மக்களைக்  கொச்சைப் படுத்தி வருகின்றது. ஆனால் இங்குள்ள தமிழ்த் தேசியப் புலிகளோ, தமிழ் ஈழ ஆதரவாளர்களோ அது பற்றியெல்லாம் கண்டு கொள்வதில்லை. ஏனெனில், துக்ளக் சோ அம்மாவுக்கு வேண்டியவர். அது மட்டுமின்றி, அவர் கலைஞர் எதிர்ப்பாளர்.  எனவே அவரை எதிர்த்து எவரும் எழுவதில்லை.


புலம் பெயர்ந்த தமிழர்களில் பலரும் கூட இதனைக் கண்டு கொள்வதில்லை.  இங்கே ஈழ ஆதரவு என்றால், கலைஞர் எதிர்ப்பு! கலைஞர் ஆதரவு என்றால் அது ஈழத்திற்குத் துரோகம்! இப்படிப்பட்ட மனநிலைதான் இங்கே திட்டமிட்டு வளர்க்கபடுகின்றது. இந்நிலை ஈழத்திற்கும் நல்லதில்லை.....எதிர்காலத் தமிழ்நாட்டிற்கும் நல்லதில்லை.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

8 comments:

  1. அருமையான தொடர். பல அரிய தகவல்களை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மேலும் இந்த வலைப்பூவை நிர்வகிப்பவருக்கு ஒரு வேண்டுகோள். ஒவ்வொரு பதிவுக்கும் இன்னும் பல 'label'கள் தர வேண்டும். உதாரணத்திற்கு சுபவீ, சுபவீரபாண்டியன், ஈழம், அரசியல், கலைஞர் என லேபிள்கள் கொடுத்தால் தான் google போன்ற தேடுதளங்களில் அக்குறிச்சொற்களை யாரேனும் தேடும்போது இந்த வலைப்பூ முகவரி தேடலில் கிடைக்கும். இதன்மூலம் நிறைய பார்வையாளர்கள் கிடைப்பார்கள். மேலும் தொடர்களுக்கு லேபிள் செய்யும் போது தொடரின் பேரை மட்டுமல்லாதுஅத்தியாய எண்ணையும் சேர்த்து பதிவிட்டால் பின்னர் தேடும்போதும் எளிதாய் கிடைக்கும். உதாரணத்திற்கு நதியின் பாதையில் தொடருக்கு 'நதியின் பாதையில்' என்ற லேபிளுடன் 'நதியின் பாதையில் 1' என்ற லேபிளும் கொடுத்தால் பிற்காலங்களின் தேடுதல் சுலபமாக இருக்கும். தமிழகம் ஈழம் நான் கட்டுரைக்கும் இதைச் செய்யலாம். நன்றி.

    ReplyDelete
  2. டெசோ அமைப்பு என்பதே இவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கிறது. அனைவரும் ஒன்றுகூடி தேரிழுத்தால் மட்டுமே இலக்கை எட்டலாம். ஆனால் திட்டமிட்டு, திமுகவையும், டெசோவையும் ஈழ எதிரிகளாகச் சித்தரிப்பதன்மூலம், ஈழப்போராட்டம் நீர்த்துப்போய்விடுகிறது. அதைக்கூட அறியாமல் கண்மூடித்தனமாக டெசோவை எதிர்ப்போர்குறித்து என்ன சொல்ல..? டெசோ எதிர்ப்புக்கு இணையத்திலும், வெளியிலும் எண்ணெய் வார்ப்பதன்மூலம் ஈழப்போராட்டத்தைத் திட்டமிட்டு தடுக்கும் வேலையை சிலர் செய்கின்றனர். அவர்களையெல்லாம் ஒரு `நூல்` இணைக்கிறது.

    ReplyDelete
  3. எந்த நிலையிலும் தன் எழுத்தாலும் பேச்சாலும் தன் தரத்தையும் தமிழின் தரத்தையும் தாழ்த்திக் கொள்ளாதவர் அண்ணன் சுபவீ அவர்கள்.
    சிங்களனின் சித்தப்பன் மக்கள் பற்றிய கட்டுரையின் இறுதியாக குறிப்பிட்டிருக்கும் இன்றைய தமிழ் நாட்டின் நிலை மிகுந்த வருத்தத்திற்கும் அச்சத்திற்கும் உரிய நிலை. இந்த நிலை இன்னும் தொடர்வதால் உறவுகளெல்லாம் பகையாக மாறிவருகின்றன. பகை உணர்வு தரம் தாழ்ந்த விமர்சனங்களாக வெளிப்படுகிறன. அந்த விமர்சனங்கள் தமிழுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் இழிவைத் தேடித் தருகின்றன. இந்த நிலையை வளர்த்து ஆதாயம் தேடுபவர்களை இளைஞர்களுக்கு சரியாக அடையாளம் காட்டவேண்டும்

    ReplyDelete
  4. நல்லதொரு நேர்மையான பதிவு படிப்போம் பரப்புவோம்.

    ReplyDelete
  5. இயக்குநர், நடிகர், எழுத்தாளர், தமிழுணர்வாளர் மணிவண்ணன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் அய்யா. தொடருங்கள், தொடரக் காத்திருக்கின்றோம் அய்யா

    ReplyDelete
  6. அய்யாவிற்கு வணக்கம்,90 களின் இறுதியில் நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவுடன் அப்பயணத்தை பற்றி தமிழ் தமிழர் இயக்க தோழர்களோடு பகிர்வதற்காக அம்பத்தூர் வருவீர்கள்.அவ்வேளையில் எப்படி தாய் தமிழ் பள்ளியில் காத்திருப்பேனோ அதே மனநிலையோடு....

    ReplyDelete
  7. // இங்கே ஈழ ஆதரவு என்றால், கலைஞர் எதிர்ப்பு! கலைஞர் ஆதரவு என்றால் அது ஈழத்திற்குத் துரோகம்! //

    நச் ... இப்படிப்பட்ட மனநிலை கொண்டோரோடும் இணைந்துதான் ஈழ அரசியலையும், தமிழ் தேசிய அரசியலையும் வென்றெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த பிம்பத்தை உடைத்தெறிய முனையும் உங்கள் எழுத்துக்களை சுவாசிக்க காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
  8. ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒரு நதி போன்றதுதான்-என்ற
    ஐயா சுப.வீ அவர்களின்
    மிகவும் அழகான ஆழமான வார்த்தைகளில்
    பிரவாகத்தை எடுத்திருக்கும் இந்த நதி...........
    அனைவரின் தாகம் தீர்க்கும் ...........
    என்ற நம்பிக்கையுடன் ..........
    இனி ஒவ்வொரு சனிக்காகவும் காத்திருக்கிறேன்-உங்கள்
    பணி சிறக்க வாழ்த்துகிறேன் .
    அன்புடன்...
    க.அருண். (விழுப்புரம்)

    ReplyDelete