தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 17 May 2014

அறிந்தும் அறியாமலும்…(3)

வாழ்வின் இரு முகங்கள்
“ஏன் எங்களையே (IT பிரிவினர் ) எப்போதும் குறிவைத்துத் தாக்குகின்றீர்கள்? எங்களைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் எழுதுகின்றார்களா?” என்று கேட்டுச் சில மடல்கள் வந்துள்ளன.
“உங்கள் தலைமுறை 40 ஆண்டுகளில் ஈட்ட முடியாத தொகையை, நான்கைந்து ஆண்டுகளில் கணிப்பொறித்துறையில் உள்ள நாங்கள் ஈட்டி விடுகிறோம் என்னும் பொறாமையில் நீங்கள் எல்லோரும் புழுங்குகின்றீர்கள்” எனச் சிலர் குற்றம் சாற்றியுள்ளனர்.
“எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் உங்களின் கோட்பாடு, மருத்துவர்களுக்குப் பொருந்துமா, தீயணைப்புத் துறை ஊழியர்களுக்குப் பொருந்துமா?” என்னும் விவாதங்களும் எழுந்துள்ளன.

எப்படியோ, தங்கள் நேரத்தைச் செலவழித்து, என்னோடும், நம்மோடும் உரையாட முன் வந்துள்ள இளைஞர்களுக்கு முதலில் என் நன்றி! நாகரிகக் குறைவான சொற்களால் எழுதப்பெற்றுள்ள சில கடிதங்களையும் கருத்துகளையும் புறக்கணித்துவிட்டு, மேற்காணும் கருத்துகளுக்கு விடையளிக்க வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரையும் குறி வைத்துத் தாக்குவது நம் நோக்கமில்லை என்றாலும், சென்ற என் கட்டுரையில், கணிப்பொறித் துறை இளைஞர்கள் மீதும், அத்துறையின் இன்றைய நிலை மீதும் சில விமர்சனங்கள் வெளிப்பட்டுள்ளன. அதனால் அவர்கள் கொண்ட சினத்திலும் நியாயம் உள்ளது.
கணிப்பொறித்துறையில் உள்ள இளைஞர்கள் மட்டுமில்லை, அத்துறையினால் நம் நாடும், பெரும் வருமானத்தை ஈட்டுகின்றது என்பதை நாம் அறிவோம். ஆண்டு ஒன்றுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், அத்துறையினால் இந்தியா வருமானம் பெறுகின்றது என்று கூறுகின்றனர். நாடும், நம் பிள்ளைகளும் பெறும் வருமானம் கண்டு நாம் பொறாமைப் படுவோமா? சொந்தப் பிள்ளைகளின் மீது பொறாமை கொள்ளும் பெற்றோர்கள் உலகில் எங்கும் இருக்க முடியாது.
எனினும் இன்றைய நிலை குறித்து நமக்குள்ள இரண்டு கருத்தோட்டங்களை மறைக்க வேண்டியதில்லை.
ஒன்று, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரே நாட்டில், ஒரே சமூகத்தில் வாழும் ஒத்த வயதுடைய இளைஞர்களிடையே, பாரதூரமான பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவது விரும்பத்தக்கதன்று. பிற துறைகளில் பணியாற்றும் இளைஞர்களின் பொருளாதார நிலையையும் உயர்த்திட அரசுகள் திட்டமிட வேண்டும். உடனடியாகச் ‘சமத்துவ சமுதாயத்தை’ அமைத்துவிட வேண்டும் என்பது இதன் பொருளன்று. மிகப்பெரிய ‘வர்க்க வேறுபாடுகள்’ ஏற்பட்டுவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே நம் கோரிக்கை.
இரண்டாவது, நாட்டின் முன்னேற்றம் பற்றியது. ஒரு நாட்டின் முன்னேற்றத்தில், பொருளாதாரத்தின் பங்கு மிக இன்றியமையாதது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அம் முன்னேற்றம், சமூகப் பண்பாட்டு முன்னேற்றத்தோடு பின்னிப் பிணைந்ததாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான முன்னேற்றமாக இருக்கும்.
அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசம், தன் அரசியல் விடுதலைக்காகப் போராடுவது நியாயமானதும், இயற்கையானதும் ஆகும். ஆனால் அவ்வரசியல் விடுதலை பண்பாட்டு விடுதலையை நோக்கி நகர்வதற்கான முதல்படி என்னும் புரிதல், மிகச் தேவையான ஒன்றில்லையா?
பண்பாட்டிலேயே மிக உயர்ந்தது சமத்துவப் பண்பாடுதானே? சமத்துவத்திற்கு எதிரான வர்க்கம், சாதி உள்ளிட்ட பல கூறுகறை எதிர்த்துப் போராடுவதில் ஓர் ஒருங்கிணைவு நம்மிடம் ஏற்பட வேண்டாமா?
காலப்போக்கில் பல புதிய விழிப்புணர்வுகளும், சில போர்க்குணங்களும் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளன என்பதை யார்தான் மறுக்க முடியும்? ஆனால் அந்த விழிப்புணர்வு, சமத்துவம் மற்றும் சமூகநீதியை மையமாகக் கொண்டிருக்கவில்லையே என்பது நம் ஆதங்கம்.

பொருளியல் துறையில் நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், ஜோன் டிரீஸ் ((Amartya sen & Jean Dreeze)) இருவரும் இணைந்து எழுதியுள்ள ‘‘An Uncertain Glory’’(First Edition 2013) என்னும் நூல் தரும் செய்திகள் சிலவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.
“2012 டிசம்பரில், ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி, தில்லியில், பாலியல் வன்முறைக்கு உள்ளான போது, பொதுமக்கள் கிளர்ந்து எழுந்தனர். இந்தியாவில் அரசியல் சிக்கலாகவே அது உருப்பெற்றது. மக்களின் இந்த அறச்சினம் வரவேற்கத்தக்க முன்னேற்றமாக இருந்தது. பாதிக்கப்பட்ட மாணவியை, நடுத்தட்டு மக்கள் தங்களில் ஒருவராக மிக எளிதில் அடையாளப்படுத்திக் கொண்டனர். அதனால் அது பெரும் போராட்டமாக உருப்பெற்றது. ஆனால் இதனைப் போன்ற காட்டுவிலங்காண்டித் தனங்கள், பொருளாதாரத்திலும், சமூகத்திலும் ஒடுக்கப்பட்ட தலித் பெண்களின் மீது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அவையெல்லாம் ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவுமில்லை. பொதுமக்களின் கோபத்தைக் கிளறவும் இல்லை”
இவ்வாறு அந்த நூலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அவர்கள் எழுதியுள்ள வரிகளை அப்படியே சொல்லுக்குச் சொல் நான் மொழி பெயர்க்கவில்லை என்றாலும், அவர்களின் கருத்தைச் சிறிதும் மாற்றாமல் மேலே தந்துள்ளேன். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மையானது என்பதை நம்மால் உணர முடிகின்றது.
தனிப்பட்ட மனிதர்களின் பாலியல் வன்முறைகள், வரம்பு மீறல்கள் ஆகியனவற்றைத் தாண்டி, வடநாட்டில் ‘காப்’ (KAPP) பஞ்சாயத்துகளும், தென்னாட்டில் ‘சாதிப்’ பஞ்சாயத்துகளும் எத்தனை கொடூரமான தீர்ப்புகளை வழங்கியுள்ளன. பெண்களை - குறிப்பாகத் தலித் பெண்களை - அடிப்பதும், உதைப்பதும், பொது இடத்தில் நிர்வாணப் படுத்துவதும், ‘கௌரவக் கொலை’ செய்வதும் இன்றும் நடந்து கொண்டுதானே உள்ளன. அவை குறித்தெல்லாம், பொதுமக்களின் சினம், தீயாக மூண்டு எழவில்லையே ஏன்? ஏனெனில், அவையெல்லாம், வருண - சாதித் ‘தருமங்களாக’ இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
அமர்த்தியா சென்னின் நூல், வர்க்க அடிப்படையிலும் இன்னொரு வினாவை முன்வைக்கின்றது.
“2002 ஜுலை 30 - 31 ஆம் நாள்களில் நாட்டில் மிகப்பெரிய மின்வெட்டு ஏற்பட்டு. ஏறத்தாழ 600 மில்லியன் மக்கள், அந்த நாள்களில், மின்சாரம் இன்றித் தவித்தனர். அப்போது நாடே கொந்தளித்தது. அந்தக் கோபத்தில் நியாயம் உள்ளது. ஆனால் அவர்களுள் 200 மில்லியன் மக்கள், நிரந்தரமாகவே, மின்சார இணைப்பு இல்லாமல், காலகாலமாக வாழ்ந்து வருகின்றனரே, அவர்களைப் பற்றி இங்கு ஒன்றுமே பேசப்படுவதில்லையே, ஏன்?”
முதலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்தி, வருணம் சார்ந்தது என்றால், இரண்டாவதாக உள்ள செய்தி, வர்க்கம் சார்ந்தது. இந்தியாவைப் பொறுத்தமட்டில், பல நேரங்களில், வருணமும், வர்க்கமும் பின்னிக்கிடக்கின்றன என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. வரலாற்றாசிரியர் டாயன்பீ கூறுவதுபோல, “உருவத்தில் சாதியாகவும், உள்ளடக்கத்தில் வர்க்கமாகவும்” (‘caste in form and class in content’)இந்திய சமூக அமைப்பு உள்ளது.
எனவே, ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் இரண்டு பக்கங்கள் உள்ளன. பொருளாதார வளர்ச்சியும், சமூக முன்னேற்றமும் (economic growth and social progress)என அவற்றைக் குறிப்பிடலாம். சமூக முன்னேற்றம் என்பது முழுக்க முழுக்க சமூக நீதியை  (social justice) அடிப்படையாகக் கொண்டது.
சமூக நீதிக் கோட்பாடு என்பதை, வெறுமனே இடஒதுக்கீடு (Reservation) என்று குறுக்கிப் பார்க்கும் போக்கு இங்கு உள்ளது. சமூக நீதி என்பது, வர்க்கம், சாதி, பால் முதலான பல்வேறு அடிப்படைகளில், மக்கள் ஒடுக்கப்படும் அநீதிக்கு எதிரானது, சமத்துவத்தைத் தன் உள்ளடக்கமாகக் கொண்டது.
ஆனால், இவை குறித்தெல்லாம் நம் பாடப்புத்தகங்களும், பாடத்திட்டங்களும் வாய் திறப்பதில்லை. சமூகநீதி தொடர்பான நீண்ட வரலாறு, தமிழகத்திற்கு உண்டு. ஆனால் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும், தமிழ்நாட்டுக் கல்வி அதனை எடுத்துரைப்பதே இல்லை.
இளைஞர்களும், பாடத்திட்டத்திற்கு வெளியே நூல்களைத் தேடிப் படிப்பதில்லை. படிப்பு முடிந்து, பணிகளுக்குச் சென்ற பின்னும், சமூக வரலாற்று நூல்களிலிருந்து விலகியும், அந்நியப்பட்டுமே நிற்கின்றனர். நாளேடுகள் தொடங்கி, கனமான நூல்கள் வரை, படிக்கும் பழக்கம் என்பது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது.
“எங்க சார் படிக்க நேரமிருக்கு. காலையில் வேலக்கிப் போனா, ராத்திரிதான் திரும்பி வரோம். ‘நெட்’டுல கொஞ்சம் கொஞ்சம் படிக்கிறோம். சனி, ஞாயிறு ரிலாக்ஸ் பண்ணவே சரியா இருக்கு” என்ற வெளிப்படையாகக் கூறும் இளைஞர்களும் உள்ளனர்.
அவர்கள் கூறும் அந்த நேரமின்மையைக் கருத்தில் கொண்டே, எட்டு மணி நேரம் மட்டும் வேலை என்கின்றோம். அதற்கும் கூட நம் இளைஞர்கள் சிலர் சினம் கொள்கின்றனர். இக்கட்டுரையின் முன்பகுதியில் குறித்துள்ளபடி, மருத்துவர்கள் உள்பட, உலகில் உள்ள அனைவருக்கும் எட்டுமணி நேர வேலையை வலியுறுத்துவீர்களா என்று கேட்கின்றனர்.
கண்டிப்பாக...யாராக இருந்தால் என்ன? எல்லோருக்கும் விதி பொதுவாகத்தானே இருக்க வேண்டும். விதிவிலக்காகச் சில நாள்களில், சில வேளைகளில் கூடுதலாகப் பணியாற்ற வேண்டி வரலாம். அதில் பிழையில்லை. ஆனால் அந்த விதிவிலக்கே, விதியாக ஆகிவிடக் கூடாது.
உழைக்கவும், உறங்கவுமான நேரம் போக, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது ஓய்வு இருந்தால்தான்-, படிக்கவும், சிந்திக்கவும், பழகவும், உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். அப்போதுதான் மனித வாழ்க்கை பொருளுடையதாக ஆகும். மெதுவாக நம்மை இறுக்கிக் கொண்டிருக்கும் இயந்திரத் தன்மையிலிருந்து விடுபட்டு, மனிதத் தன்மையை நாம் தழுவிக் கொள்ள முடியும்.
கற்பது, பட்டம் பெறுவது, வேலையில் அமர்வது, பொருள் ஈட்டுவது, பொருளாதார நிலையை உறுதிப்படுத்திக் கொள்வது போன்றவையெல்லாம், வாழ்வின் ஒரு பகுதி என்றால், பொது அறிவை நோக்கிப் படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, விளையாடுவது, இசையில், இலக்கியத்தில் தோய்வது, பிறருக்கு உதவுவது போன்றவைகள் இன்னொரு பகுதி இல்லையா!
இரண்டில் ஒன்று போதும் என்று எவரும் முடிவெடுக்க முடியாது. இரண்டும் தேவை. முதல் பகுதியை நோக்கி எவரையும் நாம் தள்ள வேண்டியதில்லை. இயல்பாகவே எல்லோரும் அதனை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இரண்டாவது பகுதியும் வாழ்வில் இன்றியமையாதது என்பதைச் சிறிது சிறிதாக இன்றைய உலகமும், இளைஞர்களும் மறந்து கொண்டிருக்கின்றனர்.
மீண்டும் மீண்டும் அதனை நினைவுபடுத்துவதற்காகவே, இப்போது இதுபோன்ற தொடர்கள் தேவையாக உள்ளன.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

(தொடர்புகளுக்கு:subavee11@gmail.com)

நன்றி: tamil.oneindia.in

3 comments:

  1. ///உழைக்கவும், உறங்கவுமான நேரம் போக, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமாவது ஓய்வு இருந்தால்தான்-, படிக்கவும், சிந்திக்கவும், பழகவும், உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். ///
    பழகுவதற்கே இன்று யாரும் தயாராக இல்லை ஐயா. ஒவ்வொருவரும் தேவைக்காகத்தான் அடுத்தவர்களுடன் பேசுகிறார்களே தவிர, உண்மையான நட்பு கொண்டு பழகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது ஐயா.
    ஒவ்வொருவரும் தனித் தனி தீவுகளாகவே செயலாற்றி வருகிறார்கள்.
    தன் வீடு, தன் பெண்டு, தண் பிள்ளை என அனைவருமே சுருங்கிவிட்டனர்

    ReplyDelete
  2. பாலன்17 May 2014 at 23:22

    வேதங்களில் அசுரர்கள்,இதிகாச புராணங்களில் அரக்கர்கள்,சாஸ்திரங்களில் சூத்திரர்கள்,20ஆம் நூற்றாண்டில் தகுதி,திறமையில்லாதவர்கள்,21ஆம் வேதங்களில் அசுரர்கள்,இதிகாச புராணங்களில் அரக்கர்கள்,சாஸ்திரங்களில் சூத்திரர்கள்,20ஆம் நூற்றாண்டில் தகுதி,திறமையில்லாதவர்கள்,21ஆம் நூற்றாண்டில் ஊழல்வாதிகள் எனக் கூறப்பட்டவர்கள் வெள்ளையர்+உயர் ஜாதியை தவிடு பொடி ஆக்கி விட்டு முதன்முதலில் தனி மெஜரிட்டியோடு பிரதமராக வந்ததைப் பற்றி உங்களின் கருத்தென்ன?.இது சமூக நீதியின் one of the உச்சமல்லவா? (other உச்சங்கள் President & Chairman Rajyasabah K R Narayanan, Speaker Meira Kumar, Cheif justice Bala Krishnan,Sadasivam etc.,)

    ReplyDelete
  3. செல்லமுத்து19 May 2014 at 00:06

    இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது தனிநபர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்குமேயன்றி, சாதி எனும் சமூகக் கொடுமையை ஒழிக்க உதவாது என்பதுடன், அதுவே சாதிய பிழைப்புவாத, வாக்கு வங்கி அரசியலுக்கும் வழி திறந்து விடுகிறது என்பதையே அனுபவங்கள் காட்டுகின்றன.சாதியை ஒழித்து சமத்துவத்தைக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளாகச் சிபாரிசு செய்யப்பட்ட இட ஒதுக்கீட்டால் பதவியும் அதிகாரமும் பெற்ற ஆதிக்க சாதியினரின் சங்கங்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக ஒன்றுதிரண்டு நிற்கிறார்கள்.ஜஸ்டிஸ் பார்ட்டி முதல்(பார்ப்பனர்களுக்கு எதிராக பார்ப்பனரல்லாத உயர் சாதி ஹிந்துக்களுக்காக தொடங்கப் பட்டது) இன்றுள்ள திராவிடக் கட்சிகள் வரை(அண்ணா தன் முதலியார் சாதி அன்பழகனை,நெடுஞ்செழியனை வளர்த்தார், அதனையும் மீறி கருணாந்தி வெற்றி பெற்றார்,ஆனால் அவரும் இன்னும் சுருங்கிப் போய் தன் குடும்பத்தையே+சாதியையே ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... வளர்த்துக் கொண்டுள்ளார்) இதையேப் பார்க்கிறோம்.தமிழ் நாட்டில் சமூக நீதி இப்படிச் சுருங்கி விட்டது.

    ReplyDelete