தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 9 August 2014

அறிந்தும் அறியாமலும்…(15)

சாதி காப்பாற்றும் கடவுள்!


19ஆம் நூற்றாண்டின் இறுதியில், வள்ளலாருக்குப் பிறகு, மனோன்மணீயம் சுந்தரனார், நல்லுசாமிப் பிள்ளை, அயோத்திதாசப் பண்டிதர், ரெட்டைமலை சீனிவாசனார் ஆகியோர் வைதீக எதிர்ப்பில் முனைப்புக் காட்டியவர்கள் என்று கூறலாம். அதே நேரத்தில், அவர்கள் அனைவரும் ஒரே தளத்தில் நின்றவர்கள் இல்லை. வெவ்வேறு போக்குகளின் அடிப்படையில் அவர்கள் வைதீக எதிர்ப்பாளர்களாகத் திகழ்ந்தனர்.

சுந்தரனார், ஒரு தத்துவப் பேராசிரியர். வேதாந்தம், சித்தாந்தம் போன்றவைகளைப் பற்றித் தன் நாடக நூலான மனோன்மணீயத்தில் அவர் விரிவாகப் பேசியுள்ளார். ஆரியப் பண்பாட்டை அவர் கடுமையாகச் சாடினார். ஆரியம் போல் உலக வழக்கு அழிந்து ஒழிந்துபோகாத மொழி தமிழ் என்றார். உங்களின் கோத்திரம் என்ன?’ என்று விவேகானந்தர் கேட்டபோது, ‘திராவிடக் கோத்திரம்என்று விடையளித்தார்.


நல்லுசாமிப் பிள்ளையோ, ஆரியத்தை எதிர்த்தார் என்றாலும், சைவத்தில் மிக உறுதியாகக் காலூன்றி நின்றார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழறிஞர் ஆறுமுக நாவலரின் வழியைப் பின்பற்றினார். பார்ப்பன எதிர்ப்பு, சைவப் பற்றாக மாறியது. அவருடைய தொடர்ச்சியாகவே, இருபதாம் நூற்றாண்டில், தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரையும் பார்க்க வேண்டியுள்ளது. சைவமும், தமிழும் எம்மிரு கண்கள்என்ற கொள்கை உடையவர்களே இவர்கள் அனைவரும்.

அயோத்திதாசப் பண்டிதரும், ரெட்டைமலையாரும் வைதீகம் கற்பித்த சாதி இழிவை எதிர்த்துப் போராடியவர்கள். வருண - சாதி எதிர்ப்பின் வலிமையான குரலாக ஒலித்தவர்கள். 1892, 1894ஆம் ஆண்டுகளிலேயே, திராவிடத்தின் பெயரால் அமைப்புகளை உருவாக்கியவர்கள். திராவிடம்என்னும் போர்க்குணம் மிக்க சொல்லை, ஆரியத்திற்கும், வைதீகத்திற்கும் எதிரான சொல்லாய் உயர்த்திப் பிடித்த பெருமை அவர்களையே சாரும். எனினும், பார்ப்பனர்களை வேஷ பிராமணர்கள் என்றும், தாங்களே (ஆதி திராவிடர்கள்) உண்மையான பிராமணர்கள் என்றும் கூறினார்கள். மேலும், அருந்ததியர், வில்லியர் போன்ற சமூக மக்களைத் தங்களினும் கீழானவர்கள் என்றனர். ஆகவே, சமூகத்தில் கற்பிக்கப்பட்டிருந்த சாதி அடுக்குகள் அனைத்தையும் ஒரு சேரத் தகர்க்காமல், தங்களுக்கு மேலிருந்த அடுக்கின் மீது மட்டுமே போர் தொடுத்தவர்கள் ஆனார்கள்.

1915க்குப் பிறகு பொதுவாழ்க்கைக்கு வந்த தந்தை பெரியார், முதலில் காங்கிரஸ்காரராகவும், அண்ணல் காந்தியாரின் உண்மைத் தொண்டராகவுமே இருந்தார். ஆனால் அரசியல் விடுதலைக்குக் குரல் கொடுக்கும் காங்கிரஸ் கட்சி, சமூக விடுதலைக்குக் குரல் கொடுக்கவில்லை என்பதை உணர்ந்து கொண்ட பின், 1925 இறுதியில் அக்கட்சியைவிட்டு வெளியேறினார்.

1926ஆம் ஆண்டு அவர் தோற்றுவித்த சுயமரியாதை இயக்கம், ஆழ வேரோடியிருந்த வைதீகத்திற்கு மாபெரும் அறைகூவலாக எழுந்தது. அவருக்கு முன்பாக, வைதீக எதிர்ப்பு, நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் வளர்ந்து வந்த போதும், பெரியாரின் சுயமரியாதை இயக்கம், மூன்று அடிப்படைகளில், முந்தைய போக்குகளில் இருந்து வேறுபட்டு நின்று வீரியம் பெற்றது.

1. சுயமரியாதை இயக்கம், ஆன்மீகத்தை விட்டு வெளியே வந்தது. வைதீக எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் ஒன்றாகப் பிணைத்தது.
2. வைதீகம் கற்பித்த வருணாசிரம அடுக்கின் மீது, கடும் தாக்குதலை முன்வைத்தது. எவரும் எவரையும் விட உயர்ந்தவர்களோ, தாழ்ந்தவர்களோ இல்லை, அனைவரும் சமம் என்றது.
3. அறிவாளிகள், புலவர்கள் வட்டத்தை விட்டு வெளியில் வந்து, வைதீக எதிர்ப்பை, ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்றியது.

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கை, ஆழ்ந்து நோக்க வேண்டிய ஒன்றாகும். சுயமரியாதை இயக்கம் தொடங்கியவுடனேயே, அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுக்கவில்லை. சுயமரியாதை இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, 1925 மே மாதம், அவர் குடியரசு இதழை வெளியிடத் தொடங்கிவிட்டார். அவ்விதழ், தொடக்க காலத்தில், முகப்பில், கோயில், சிலுவை, பிறை ஆகிய மதச் சின்னங்களைத் தாங்கியே வந்தது. எம்மதமும் சம்மதமே என்ற போக்கையே அது காட்டுகின்றது. ஆனால், காலப்போக்கில் அவர் கடவுள் மறுப்பைக் கையில் எடுத்தார். அக்கருத்து வளர்ந்த நிலையில் 1967ஆம் ஆண்டு, ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லைஎன்னும் முழக்கத்தை உயர்த்திப் பிடித்தார்.

எனினும், மேலைநாட்டுக் கடவுள் மறுப்பாளர்களுக்கும், பெரியாருக்கும், ஒரு நுட்பமான வேறுபாடு உண்டு. அவர்கள் தத்துவத் தளத்தில், கருத்து முதல் வாதம் என்றும், பொருள் முதல் வாதம் என்றும் வாதுரைகளை நிகழ்த்தினர். பெரியாரின் கடவுள் மறுப்பு, தத்துவத் தளத்தில் பிறக்கவில்லை. சமூகத் தளத்தில் பிறந்தது. தத்துவத் தளத்தை நோக்கி நகர்ந்தது.

பெரியார் ஒரு சமத்துவப் போராளி. சாதி, மதம், இனம், பால் என்னும் எந்த அடிப்படையிலும் சமூகத்திலும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கக்கூடாது என்பதே, சுயமரியாதை   இயக்கத்தின் அடிப்படை இலக்கு. ஆனால் இங்கே அனைத்து நிலையிலும் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப்பட்டிருந்தன. இக்கொடுமையை வெகுமக்களால் எப்படி ஏற்க முடிகிறது என்பதைப் பெரியார் எண்ணிப் பார்த்தார்.

நான் உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன்என்று சொன்னால், எவரும் ஏற்க மாட்டார்கள். ஆனால் நம் நாட்டில், ஒடுக்கப்பட்டவர்களே அதனை ஏற்றார்கள், எப்படி? ‘ஆண் உயர்ந்தவன், பெண் தாழ்ந்தவள்என்னும் கற்பிதத்தைப் பெண்களே ஏற்குமாறு செய்துள்ளனரே, எப்படி? இவ்வினாக்கள், பெரியாரிடம் ஒரு தெளிவை ஏற்படுத்தின.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும்தான் ஏற்றத்தாழ்வு பேசும் இழிநிலை இங்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பெரியார் உணர்ந்தார். நான்தான் உன்னைச் சூத்திரனாகவும், பஞ்சமனாகவும், சண்டாளனாகவும் படைத்தேன்என்று கடவுளே சொல்வது போல, இங்கு இயற்றப்பட்ட இதிகாச புராணங்கள், தம்மைத் தாமே அடிமைகள் என்று மக்களை நம்ப வைத்தன.

கடவுளின் அவதாரமான இராமரே, தவம் செய்த ஒரு மாபெரும் குற்றத்திற்காகச் சம்பூகனின் தலையை அறுத்தார் என்று இராமாயணத்தின் உத்தரகாண்டம் கூறுகின்றது. எனவே, சூத்திரனாகப் பிறந்த ஒருவன், ‘பார்ப்பன தருமத்திற்குஉரியதான தவத்தை மேற்கொள்ளலாகாது என்று, கடவுளே அவனைத் தண்டித்து விட்டார் என்றால், மக்கள் நம்பத்தானே செய்வார்கள்.

இராமர், சீதை இருவருமே கடவுள் அவதாரங்கள் என்கிறது இராமாயணம். எனினும், பிரிந்திருந்த காலத்தில், தான் கற்போடுதான் இருந்தேன் என்பதை மெய்ப்பிப்பதற்குச் சீதை மட்டும்தான் நெருப்பில்(அக்னி) இறங்க வேண்டியிருந்தது. தனித்திருந்த இராமர், தன் கற்பை மெய்ப்பிப்பதற்கு நெருப்பில் இறங்க வேண்டிய தேவை எழவில்லை. ஆதலால், கடவுள் அவதாரமாகவே இருந்தாலும், பெண் தாழ்ந்தவள் என்னும் கருத்தை இராமாயணம் உறுதி செய்கின்றது. கடவுள் நிலையே அதுதான் என்றால், தங்கள் நிலைபற்றிச் சாதாரணப் பெண்கள் எப்படி எண்ணுவார்கள்?

இந்து மதத்தைத் தாண்டி, மற்ற மதங்களிலும் பெண்களின் நிலை தாழ்வாகத்தான் குறிக்கப்பட்டுள்ளது. ஆணினுடைய விலா எலும்பிலிருந்துதான் பெண் படைக்கப்பட்டாள் என்று கூறுகின்றன, கிறித்துவ, இசுலாம் மதத்தின் வேத நூல்கள்.

ஆகவே, கடவுள் - மத நம்பிக்கைகளைத் தகர்க்காமல், அடிமைத் தளையிலிருந்து மக்களை மீட்க முடியாது என உறுதி பூண்டார் பெரியார். ஆகவே, கருத்து முதலில் தோன்றியதா, பொருள் முதலில் தோன்றியதா என்னும் தத்துவ விளக்கங்களுக்குள் எல்லாம் உட்புகாமல், ‘கடவுளும் இல்லை, ஒரு வெங்காயமும் இல்லைஎன்று ஓங்கி உரைத்தார். அந்தக் குரல் பல அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

சக்தியுள்ள சாமியின் கோயிலுக்குச் சாவியும், பூட்டும் ஏன்?” என்று கேட்டார் பெரியார். அண்டாவில் இருந்தால் தண்ணீர், அதையே கெண்டியில் கொடுத்தால் தீர்த்தமா?” என்றார். கடவுள்தான் உலகைப் படைத்தார் என்றால், கடவுளை யார் படைத்தார்?” என்று வினவினார். இவைபோன்ற வினாக்கள், மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே அலை அலையாகப் பரவின. தமிழகம் ஒரு புதிய எழுச்சியைக் கண்டது. தத்துவங்கள் அனைத்தும், படித்தவர்கள், சான்றோர்களுக்கு மட்டுமே உரியன என்னும் மாயை உடைந்தது. தெருவுக்குத் தெரு, தேநீர்க் கடைக்குத் தேநீர்க்கடை, கடவுள் உண்டா, இல்லையா என்ற விவாதங்கள் எழுந்தன. முடிதிருத்தும் நிலையங்களெல்லாம் முற்போக்கு அரசியல் நோக்கி முகம் காட்டின.

கடவுள் நம்பிக்கை உடையத் தொடங்கியபோது, அது பெருவெடிப்பாக வெளிப்பட்டது. பெரியார் ஏன் இப்படிக் கடவுளே இல்லை என்கிறார் என்று வைதீகர்கள் வெகுண்டு எழுந்தபோது, தந்தை பெரியார், தன் தெளிவான நோக்கத்தைக் கீழ்க்காணும் வரிகளால் விளக்கினார்.

நம் கடவுள் - சாதி காப்பாற்றும் கடவுள்
நம் மதம் - சாதி காப்பாற்றும் மதம்
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி

என்று அவர் கூறியபோது, பலரும் அதிர்ந்து நின்றார்கள். ஆனால், சாதியை ஒழித்தே தீரவேண்டும் என்ற நோக்கில், கடவுள், மதம், அரசாங்கம், இலக்கியம், மொழி என எல்லாவற்றின் மீதும் போர் தொடுத்தார் பெரியார்!


(காரிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com
நன்றி: tamil.oneindia.in


3 comments:

  1. பெரியார் என்ற ஒருவர் இல்லாமல் போயிருந்தால்,
    இன்றைய தமிழகத்தின், தமிழர்களின் நிலையினை எண்ணிப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது ஐயா

    ReplyDelete
  2. ஆந்திராவில் கேரளாவில், கன்னடாவில் பெரியார் தம் பரப்புரையை செய்ய வில்லை இருந்தாலும் அவர்கள் என்ன கெட்டா போனார்கள். அன்று இருந்ததைக் காட்டிலும் இன்றைய தமிழகம் பல புதுப்புது மூடநம்பிக்கைகளில் மூழ்கி போயிருக்கின்றன. அக்ஷயை திருதியை, பிரதோஷம், ராகு காலம், எமகண்டம், வாஸ்து, எண் ஜோதிடம், பெயரியல் ஜோதிடம், என இன்னும் எண்ணிக்கையில் அடங்கா மூட நம்பிக்கைகள் பல நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகளி்டத்தில் இனப்பற்று மொழிபற்று இருக்கிறது. அதன் மூலமாக அவர்கள் எதை இழந்தாலும் திரும்ப பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழனிடத்தில் என்ன இருக்கிறது. தமிழனின் மொழிப்பற்றை ஆங்கிலத்தின் மூலம் பெரியார் அழித்தார். தமிழ் இனப்பற்றை திராவிடம் எனும் பொய் இன்த்தைக் காட்டி அழித்தார். தமிழனுக்கு சுயமரியாதை இல்லை, மானம் இல்லை வெட்கங்கெட்டவன், கையாலாகதவன், தமிழ் ஒரு சனியன் பிடித்த மொழி என்றெல்லாம் உளவியல் ரீதியாக தமிழனை ஒன்றுக்கும் தகுதியில்லாதவனாக மாற்றினார் பெரியார்.
    தமிழ் வரலாற்றை மழுங்கடித்தார். இன்றைய நிலைமை தமிழகத்தில் இருக்கும் செல்வங்களை எல்லாம் ஆன்மீகம் என்கிற பெயரில் ஆந்திராவில் இருக்கும் திருப்பதி வெங்டாச்சலபதி்க்கோ, கேரளாவில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கோ கொண்டு போய் கொட்டுகிறான் தமிழன். இதனால் பலன் கொழிப்பவர்கள் ஆந்திரர்கள், மலையாளிகள். தமிழனுக்கு அப்போதே கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் தமிழக செல்வங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்காவது போயிருக்கும். அதையும் கெடுத்தார் பொியார். கடவுள் இல்லை என்று பெரியாருக்கு முன்பே கூறியவர் எம் பாட்டன் திருவள்ளுவர். முற்போக்கு என்கிற பேரில் தமிழன் முன்னேற்றத்தை கெடுத்தவர் பெரியார். உண்மையாக சிந்தித்தால் நமக்கு பெரியாாின் தமிழின வஞ்சகம் தெரியவரும் இவருடைய திராவிட சித்தாந்தம்
    மற்ற மொழி பேசுகிறவர்களிடத்தில் எந்த அளவுக்கு போய் சேர்ந்தது. என்பதை உணர்ந்தாலே போதும் தமிழன் விழித்துக் கொள்வான். அதை சுபவீ போன்றவர்கள் தான் செய்ய வேண்டும்
    தமிழ் வாழ்ந்தால் தமிழ்நாடு தானுயரும்
    இமயமலை போலுயர்ந்த ஒரு நாடும்
    தன் மொழியில் தாழ்ந்தால் வீழும்.
    தமிழ் வீழக் கூடிய அத்தகைய வேலையைத்தான் தமிழ்நாட்டில், தமிழர்கள் மத்தியில் பெரியார் செய்தார் தமிழர்களே இதை தெரிந்துக் கொள்ளுங்கள்
    வாழ்கத் தமிழ் வளர்கத் தமிழ்

    ReplyDelete