தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 16 August 2014

அறிந்தும் அறியாமலும்…(16)

தொடரும் அபிமன்யுக்கள்


இத்தொடரில், பெரியாரைப் பற்றி ஓர் இயலில் மட்டுமே எழுத எண்ணியிருந்தேன். ஆனால், சென்ற இயலுக்கு வந்துள்ள பின்னூட்டங்களும், என் மின் அஞ்சலுக்கு வந்துள்ள மடல்களும், மீண்டும் இந்த இயலிலும், பெரியாரைப் பற்றியே எழுத வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளன. பெரியாரின் சமூகத் தொண்டினை மீண்டும் மீண்டும் மக்களிடத்தில் கொண்டு செல்லும் பணியில் என்னைத் தொடர்ந்து ஈடுபடுத்தும் அந்த நண்பர்களுக்கு முதலில் என் நன்றி!


பெரியார் என்ற பெயரைப் பார்த்ததுமே, சிலருக்குக் கடுமையான எரிச்சலும், சினமும் வந்து விடுகின்றன. கட்டுரையில் காணப்படும் மற்ற அனைத்துச் செய்திகளையும் புறந்தள்ளிவிட்டுப் பெரியாரைத் தாக்குவதில் முனைப்புக் காட்டத் தொடங்கி விடுகின்றனர். அதுபோன்ற கடிதங்களில், நிலவன்பறை என்பவரிடமிருந்து வந்துள்ள மடலிலிருந்து சில வரிகளைக் கீழே தருகின்றேன்

"ஆந்திராவில் கேரளாவில், கர்நாடகாவிலும் பெரியார் தம் பரப்புரையை செய்ய வில்லை. இருந்தாலும் அவர்கள் என்ன கெட்டா போனார்கள். அன்று இருந்ததைக் காட்டிலும் இன்றைய தமிழகம் பல புதுப்புது மூட நம்பிக்கைகளில் மூழ்கி போயிருக்கிறது. அக்ஷயை திருதியை, பிரதோஷம், ராகு காலம், எமகண்டம், வாஸ்து, எண் ஜோதிடம், பெயரியல் ஜோதிடம், என இன்னும் எண்ணிக்கையில் அடங்கா மூட நம்பிக்கைகள் பல. நினைத்தால் நெஞ்சம் கொதிக்கிறது. ஆந்திரர்கள், கன்னடர்கள், மலையாளிகளிடத்தில் இனப்பற்று, மொழிபற்று இருக்கிறது. அதன் மூலமாக அவர்கள் எதை இழந்தாலும் திரும்பப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தமிழனிடத்தில் என்ன இருக்கிறது? தமிழனின் மொழிப்பற்றை ஆங்கிலத்தின் மூலம் பெரியார் அழித்தார். தமிழ் இனப்பற்றை திராவிடம் எனும் பொய் இன்த்தைக் காட்டி அழித்தார். தமிழனுக்கு சுயமரியாதை இல்லை, மானம் இல்லை, வெட்கங்கெட்டவன், கையாலாகதவன், தமிழ் ஒரு சனியன் பிடித்த மொழி என்றெல்லாம் உளவியல் ரீதியாக தமிழனை ஒன்றுக்கும் தகுதியில்லாதவனாக மாற்றினார் பெரியார்.

தமிழ் வரலாற்றை மழுங்கடித்தார். இன்றைய நிலைமை, தமிழகத்தில் இருக்கும் செல்வங்களை எல்லாம் ஆன்மீகம் என்கிற பெயரில் ஆந்திராவில் இருக்கும் திருப்பதி வெங்டாச்சலபதிக்கோ, கேரளாவில் இருக்கும் ஐயப்பன் கோயிலுக்கோ கொண்டு போய் கொட்டுகிறான் தமிழன். இதனால் பலன் கொழிப்பவர்கள் ஆந்திரர்கள், மலையாளிகள். தமிழனுக்கு அப்போதே கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால் தமிழக செல்வங்கள் தமிழ்நாட்டில் இருக்கும் ஏதாவது ஒரு கோயிலுக்காவது போயிருக்கும். அதையும் கெடுத்தார் பெரியார். கடவுள் இல்லை என்று பெரியாருக்கு முன்பே கூறியவர் எம் பாட்டன் திருவள்ளுவர். முற்போக்கு என்கிற பேரில் தமிழன் முன்னேற்றத்தை கெடுத்தவர் பெரியார். உண்மையாக சிந்தித்தால் நமக்கு பெரியாரின் தமிழின வஞ்சகம் தெரியவரும்.."

மேற்காணும் மடலுக்கெல்லாம் நாம் விடை எழுதிக் கொண்டிருக்க வேண்டுமா என்று கேட்கும் நண்பர்கள் உண்டு. இவ்விடை, அத் தனி மனிதருக்காக எழுதப்படுவதன்று. அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. (ஆனாலும், யாராக இருக்கக்கூடும் என்பது தெரிகிறது!). அவர் போன்று பலராலும் பரப்பப்படும் பொய்யுரைகளுக்கு மாறாக உள்ள உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகவேனும், நாம் உறுதியாக எழுத வேண்டியுள்ளது.

பெரியார், திராவிடம், சுயமரியாதை போன்ற சொற்களே கூட இன்று சிலருக்குப் பெரும் ஒவ்வாமையாக உள்ளன. இப்போக்கு, திராவிட இயக்க ஒவ்வாமை அல்லது திட்டமிடப்பட்ட உள்நோக்கத்தின் வெளிப்பாடு என இரண்டில் ஒன்றாகவே இருக்க முடியும். எவ்வாறிருப்பினும், அவர்களும், நாமும் சந்திக்கும் புள்ளி இனி மிக மிக அரிதாகவே அமையும். எத்தனை உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் அவர்கள் ஏற்கப் போவதில்லை. எனவே, அவர்களுக்காக எழுதாமல், உண்மைகளைக் கூற வேண்டும் என்ற நோக்கத்திற்காக எழுதுவது என்னும் அடிப்படையிலேயே கீழ்வரும் செய்திகள் தரப்படுகின்றன.

* ஆந்திரம், கேரளம், கர்நாடகத்திலெல்லாம் பெரியார் பரப்புரை செய்யவில்லை. அங்கெல்லாம் அவர்கள் என்ன கெட்டா போனார்கள் என்று அம்மடல் கேட்கிறது.

உலகம் முழுவதும் பெரியாரின் கருத்துரைகளால்தான் திருந்தியது என்று எவரும், எப்போதும் கூறவில்லை. பெரியார் இல்லையென்றால், அவர்கள் எல்லோரும் கெட்டுப் போயிருப்பார்கள் என்றும் கூறவில்லை. அந்தந்தப் பகுதியின் தேவைகளுக்கும், அந்தந்தக் காலத்தின் தேவைகளுக்கும் ஏற்ப புதிய பாதைகளும், அற நெறிகளும் தோன்றும் என்பதுதான் இயற்கை. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதுதான் அறிவியல்.

* அக்ஷய திரிதியை போன்ற மூடநம்பிக்கைகள் பெருகிவிட்டன என்று கூறிக் கொந்தளிக்கிறார். இதனையே சிலர் வேறு மாதிரிக் கூறுகின்றனர். முன்பு இருந்ததைவிட இன்று கோயில்களும், மூடநம்பிக்கைகளும் வெகுவாகக் கூடிவிட்டன. பெரியாரின் தோல்வியைத்தானே இது காட்டுகிறது என்கின்றனர்.

கடவுள் நம்பிக்கை, கோயில்கள் எல்லாம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காகப் பெருமைப்பட்டுக் கொள்கிறவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் ஒரு வினா உள்ளது. கடவுள் நம்பிக்கையும், கோயில்களும் கூடியுள்ளனவே... கொலைகளும், கொள்ளைகளும், குற்றங்களும் நாட்டில் குறைந்துள்ளனவா? அவையும் கூடியேதான் உள்ளன என்றால், பிறகு கடவுள் நம்பிக்கை கூடினால் என்ன, குறைந்தால் என்ன?

கவிஞர் கண்ணதாசன் சொல்வது போல, ‘திருடனும் அரஹரா சிவசிவா என்றுதானே திருநீறு பூசுகின்றான்.'

திருவள்ளுவர் சொன்ன பல்வேறு அறநெறிகளுக்கு எதிராகத் தீநெறிகள் பல இன்று பெருகியுள்ளன. எனவே கள்ளுண்ணாமை, சூது போன்ற அதிகாரங்களை இயற்றிய வள்ளுவர் தோற்றுப்போய்விட்டார் என யாரும் கூறுவதில்லை.

* மடல் எழுதியுள்ள நண்பர், இன்னொரு ‘விசித்திரமான' வாதத்தை முன் வைத்துள்ளார். ஆந்திர, கேரள, கர்நாடக மக்கள், மொழிப் பற்று உடையவர்களாக இருப்பதால், இழந்தாலும் திரும்பப் பெற்று விடுவார்கள் என்கிறார்.

அவ்வளவு மொழிப்பற்று உடைய மக்கள், தங்கள் மொழியே சிதைந்து போகும் அளவுக்கு ஏன் சமற்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்தனர் என்பது தெரியவில்லை. மேலும், மொழிப் பற்று உடையவர்கள் எல்லோரும், சமூக நீதிச் சிந்தனை உடையவர்களாகவும் இருப்பார்கள் என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை. சில வேளைகளில் நடப்பு உண்மை நேர் மாறாக உள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

* தமிழனுக்கு அப்போதே கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால், தமிழ்நாட்டுக் கோயில்களுக்கு மட்டுமே சென்று, உண்டியலில் பணத்தைக் கொட்டியிருப்பானாம். பெரியார் செய்த கடவுள் மறுப்புப் பரப்புரையால், திருப்பதி, கேரளாவிற்குச் சென்று பணம், நகைகளைக் கொடுத்துவிட்டு வருகிறானாம்.

பெரியார் என்ன, தமிழ்நாட்டில் மட்டும் கடவுள் இல்லை, ஆந்திராவில், கேரளாவில் எல்லாம் இருக்கிறார் என்றா கூறினார்? மேலே சுட்டப்பட்டிருக்கும் ‘திறனாய்வுகள்' எல்லாம் எந்த உள்ளீடும் அற்றவை என்பதை நாம் அறிவோம். ஆனால் இவை போன்ற கருத்துகள் இன்று தமிழகமெங்கும் பரப்பப்படுகின்றன. தமிழுக்குத் திராவிடம்தான் எதிரி என்பதாக ஒரு சித்திரம் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.

திராவிடம் என்பது ஆரியத்தின் எதிர்ச் சொல்லே அன்றி, தமிழின் எதிர்ச்சொல் இல்லை. திராவிடம், தமிழ் இரண்டும் ஏறத்தாழ ஒரு பொருள் குறித்தனவே. ஒரே ஒரு நுட்பமான வேறுபாடு மட்டுமே உண்டு. ‘திராவிடம்' என்றால், ‘பார்ப்பனிய ஆதிக்கத்தை எதிர்க்கும் தமிழ் உணர்வு' என்று பொருள்.

இந்தப் பொருளை எந்த அகராதியிலிருந்து எடுத்தீர்கள் என்று சிலர் கேட்கலாம். எல்லாச் சொற்களுக்கும், அகராதியிலிருந்து மட்டுமே பொருளைப் பெற்றுவிட முடியாது. வரலாற்றிலிருந்தும், நடைமுறையிலிருந்தும் பொருளைப் பெற முயல்வதும் ஒரு வகையில் இன்றியமையாதது.

ஆரியமொழி சமற்கிருதம்தான் உலக மொழிகளுக்கெல்லாம் தாய் என்னும் பொய்யான கருத்து பரப்பப்பட்ட வேளையில், ‘இல்லையில்லை...திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை, தமிழ் தனித்தியங்க வல்லது' என்றார் கால்டுவெல் ஆரியத்திற்கு எதிராகத் திராவிடம் அங்கே முன்வைக்கப்பட்டது.

ஆரியர்களான பார்ப்பனர்களே பிறப்பால் உயர்ந்த குடிகள் என்னும் கருத்து மேலோங்கி இருந்த வேளையில், அந்தப் பொய்ம்மையை உடைத்துச் சமத்துவம் படைக்க இயக்கங்கள் கண்ட, அயோத்திதாசரும், ரெட்டைமலையாரும், தங்கள் இயக்கங்களின் பெயர்களில், கவனமாக, ‘திராவிட' என்னும் சொல்லை இணைத்தனர்.

எங்கெல்லாம் ஆரியம் தலை காட்டிற்றோ, அங்கெல்லாம் திராவிடம் எதிர் நின்றது. திராவிடம் என்பது ‘தமிழ்' என்னும் சொல்லின் மருவிய வழக்காக இருக்கலாம். ஆனால், அது ஆதிக்க எதிர்ப்பையும், சமத்துவ வேட்கையையும் உள்ளடக்கியது என்பதை வரலாறு அறிந்த எவரும் மறுக்க மாட்டார்கள்.

உண்மைகள் இவ்வாறிருக்க, ‘திராவிடம்' என்னும் கோட்பாடு ஏன் இன்று சிலரால் மறுக்கப்படுகிறது? திராவிட எழுச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் ஆதிக்கத்தை இழக்க நேர்ந்தவர்கள் அதனை எதிர்ப்பது இயற்கை. திராவிடத்தால் பயன் பெற்றவர்கள் படிப்பறிவு பெற்றவர்கள் அதனை எதிர்ப்பதற்கு என்ன காரணம்?

திராவிட இயக்கத்தை அன்று இராஜாஜி எதிர்த்ததற்குப் பொருள் புரிகிறது. ஆனால், ம.பொ.சி.யும் எதிர்த்தாரே என்ன காரணம் என்று நமக்கு ஐயம் வரலாம். அவர் இராஜாஜியின் சீடர் என்பதுதான் காரணம். அதனை இராஜாஜியே கூறியிருக்கிறார். "கிராமணியார்(ம.பொ.சி) வீரஅபிமன்யு போன்றவர். என்னால் உடைக்க முடியாத எதிரிகளின் வியூகத்தை உடைத்து அவர் என்னை உள்ளே அழைத்துச் செல்கிறார்" என்று கூறியுள்ளார்.


அபிமன்யுக்களின் வரிசை இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது!

(காரிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

5 comments:

  1. Good essay we do not bother about these kind of people I always say to my friends what ever I have today it all because of one man who is Periyar,for me tamil is second -Bala from SA

    ReplyDelete
  2. அயோத்திதாசரும், ரெட்டைமலையாரும், பரவலாய் அறியப்படாமல் போனதற்கு அவர்களின் சாதி தவிர்த்து ஏதேனும் காரணம் இருக்கிறதா?.

    ReplyDelete
  3. அருமை

    ReplyDelete
  4. பெரியார் என்ற ஒருவர் இல்லையேல் இன்று நாம் ஏது?
    பெரியார் கருத்துக்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன என்பதைத்தான், இதுபோன்ற அர்த்தமற்ற கடிதங்கள் நிலைநாட்டுகின்றன

    ReplyDelete
  5. This article is based on logic than facts. But I'm convinced with the logic. Others may not.

    ReplyDelete