தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 15 November 2014

அறிந்தும் அறியாமலும்…(28)

பெரிய மரத்தின் சிறிய விதை!


சென்ற இயலில் அரசியல் குறித்தும், அரசியலில் அனைவரின் பங்களிப்பும்  தேவை என்பது குறித்தும்  எழுதியிருந்தேன். அதற்கு வந்த பின்னூட்டங்களில், இரண்டினைப் பற்றிப் பேச வேண்டியுள்ளது. 

ஒரு நண்பர், நீங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்று கேட்டுள்ளார். ஏன் அவர் அவ்வாறு வினா எழுப்பியுள்ளார் என்பது முதலில் எனக்குப் புரியவில்லை. நான் அரசியலில்தான் - முழு நேர அரசியலில்தான்  இருக்கிறேன். தேர்தலில் போட்டியிடுவதில்லை என்பதால் அப்படிக் கேட்டிருக்கலாம். தேர்தல் என்பது அரசியலின் ஒரு பகுதியே தவிர, அது மட்டுமே அரசியல் ஆகி விடாது.


இன்னொரு நண்பர், சாதிகளின் இருப்பிடமாக உள்ள மதத்திற்குள்ளும், லஞ்சத்தின் இருப்பிடமாக உள்ள அரசியலுக்குள்ளும் வர விரும்பவில்லை என்றும், கல்வியின் மூலமாக அடுத்த தலைமுறையை அணுக விரும்புவதாகவும் எழுதியுள்ளார்.

எந்தத் துறையில் ஈடுபடுவது என்பதை முடிவு செய்வது அவரவர் விருப்பம். மற்றவர்கள் அதில் தலையிட முடியாது. ஆனால் கல்வி என்பதும் அரசியலைத் தாண்டி நிற்க முடியாது என்பதை மட்டுமே சென்ற இயலில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன். இன்னமும் அழுத்தமாகச் சொன்னால், தமிழ்நாட்டின் 20ஆம்  நூற்றாண்டு அரசியலைத்  தீர்மானித்ததே கல்வி உரிமைதான்.

கல்வித் திறன் என்பது நம் அறிவு சார்ந்தது என்றால், கல்வி உரிமை என்பது அரசியல் சார்ந்தது. அந்த உரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்ததை எதிர்த்துத்தான் இந்த மண்ணில் ஒடுக்கப் பட்டோர் இயக்கமும், திராவிட இயக்கமும் தோன்றின.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், இந்தியாவில் மதம் சார்ந்த கல்வி மட்டுமே இருந்தது. எல்லோருக்கும் படிக்கும் உரிமை இல்லை. மக்கள். இந்துக்களாகவும், இஸ்லாமியர்களாகவும்தான் பிரிந்து நின்றனர். ஆங்கிலேயர்களும் குரறுக்கிடாமல்தான் இருந்தனர்.கல்கத்தாவில் இருந்த மதரசா கல்லூரியும், பெனாரசில் இருந்த  இந்துக் கல்லூரியும்தான் அன்று பெரிய கல்லூரிகள். அரபு மற்றும்சமற்கிருதம் மொழிகளே பாட மொழிகள்.

மதத்தை விட்டுக் கல்வியைப் பிரித்த ஆங்கிலேயர்கள் என்று இருவரை நாம் மறக்காமல் குறிக்க வேண்டும். ஒருவர், இந்தியாவின் தலைமை ஆளுநராக 1828 முதல் 1835 வரை பொறுப்பு வகித்த வில்லியம் பெண்டிங். இன்னொருவர் தாமஸ் பாபிங்டன் மெக்காலே. இவர்களைத் தொடர்ந்து, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆளுநராக இருந்த கர்சான். இவர்கள்தாம், ஆயிரம் ஆண்டுகளாக நமக்கு மறுக்கப் பட்டிருந்த கல்வியைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள். மூடிக் கிடந்த கல்விக் கதவுகளை எல்லோருக்கும் திறந்து விட்டவர்கள். 

நம் பாடப் புத்தகங்களும், நாம் படிக்கும் பொதுவான சில நூல்களும் மேற்காணும் மூவரில் இருவரைப் பற்றி மிகக் கடுமையாக விமர்சித்து வருவதை நாம் அறிவோம். நம்மைக் குமாஸ்தாக்கள் ஆக்குவதற்கான படிப்பை தந்த மெக்காலே என்றும்,வங்கத்தைத் துண்டாடிய கர்சான் என்றும்தான் படித்திருக்கிறோம். இரண்டு கூற்றிலும் உண்மை உண்டு. ஆனால் இரண்டையும் தாண்டி, அவர்கள் பெற்றுத் தந்த கல்வி உரிமை மிகப் பெரியது. ஒருவேளை, அவர்கள் மிகுதியாகத் தூற்றப் படுவதற்கும்   அதுவே காரணமாக இருக்கலாம். சிலருக்கு மட்டுமே உரியதாக இருந்த கல்வியை அனைவர்க்கும் பொதுவாக்கியதால் அவர்கள் மீது சிலருக்குத் தீராக் கோபம் ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புண்டுதானே!  

கல்வி என்பது ஏன் ஒரு பிரிவினருக்கு மட்டும் உரியதாக இருக்க வேண்டும்,அதனை ஏன் எல்லோருக்கும் பொதுவாக்கக் கூடாது என்ற வினாவை எழுப்பியவர் வில்லியம் பெண்டிங். அவர் காலத்தில் கொண்டுவரப்பட்ட 'ஆங்கிலக் கல்வி முறைச் சட்டம் 1835' என்பதுதான் முதல் தொடக்கம். அதற்கு ஏற்ற வகையில் மெக்காலே 1835 பெப்ருவரியில் 'இந்தியக் கல்வி பற்றி ஒரு நிமிடம்' என்னும் தலைப்பில் ஓர் அறிக்கை கொடுத்தார். அந்த அறிக்கைதான், மெக்காலே மீது சிலர் சினம் கொள்ளப் பெரும் காரணமாக இருந்தது. அதில் அவர் சில கடுமையான தொடர்களைப்  .பயன்படுத்தி  இருந்தார். "இங்கே சமற்கிருதத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில வரலாற்றுச் செய்திகள் நம் நாட்டில் ()இங்கிலாந்தில்) தொடக்கப் பள்ளிகளில் இடம் பெற்றுள்ள தரம் குறைந்த சிறு நூல்களில் உள்ளவற்றை விட மட்டமாக இருக்கிறது" என்று அவர் குறிப்பிட்டிருந்தார். மதம் பற்றிய செய்திகளே மிகுதியாக உள்ளன, அறிவியல் செய்திகளைக்  காணவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

அதன்பின்பே, 1836இல் இந்தியாவில், பொதுக் கல்வித் திட்டம் தொடங்கியது. கல்வி நிலையங்களின் கதவுகள் திறக்கப்பட்டன. ஆனால் கற்றுக் கொள்ள வருவோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது. பெண்களின் எண்ணிக்கையோ இல்லை என்றே சொல்லிவிடலாம். பிறகு, 1899இல் இந்தியாவின் வைஸ்ராயாகப் பொறுப்பேற்ற கர்சான், இந்தியா முழுவதும், எல்லா மட்டத்திலும் கல்வி பரவுவதற்கு வழி வகுத்தார். அதன்பின்பே, கல்வி எல்லோருக்கும் பொது என்ற நிலை வரத் தொடங்கியது.


எனினும் அது அவ்வளவு எளிதில் வந்துவிடவில்லை என்பதையும் நாம் மனம்கொள்ள வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அயோத்திதாசப் பண்டிதர் போன்ற பெரியவர்கள் சில முயற்சிகள் எடுத்தனர். அமெரிக்க ராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றிய ஆல்காட், பிரம்ம ஞான சபையை நிறுவும் எண்ணத்தோடு சென்னைக்கு வந்தார். 1894இல், தாழ்த்தப்பட்ட பிள்ளைகளும் படிக்கும் வகையில், ஒரு பள்ளியை நிறுவினார். அதனை அறிந்த அயோத்திதாசப் பண்டிதர், 1898 ஜூன் 8 ஆம் நாள் அவருக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பினார். 

தமிழகம் முழுவதும் அதே போன்ற பள்ளிகளை நிறுவி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவ்விண்ணப்பத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இந்து  மதத்தின் சாதி அமைப்பால் திராவிடர்கள் ஆகிய தங்களுக்கு மறுக்கப்பட்டு வரும் கல்வியை ஆங்கிலேயர்களாகிய நீங்கள்தான் தர வேண்டும் என்று பண்டிதர் கேட்டுக்கொண்டார். 

ஆனாலும் , 1911ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, ஆங்கிலக் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை கீழ்க்காணுமாறுதான் இருந்தது:

பார்ப்பனர்கள்        -     22.27%
வெள்ளாளர்கள்    -       2.12%
மற்ற சமூகத்தினர் அனைவரும் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே படித்திருந்தனர். 

மேற்காணும் புள்ளி விவரம்தான், தங்களின் நிலை பற்றி உணர வெகு மக்களாக இருந்த தமிழர்களுக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. 

இதற்கு மாற்று என்ன? பலரும் சிந்தித்தனர். அவர்களுள் முதன்மையானவராக இருந்தார், டாக்டர் சி. நடேசனார். 1912 ஆம் ஆண்டு, 'தி மெட்ராஸ் யுனைடெட் லீக்'  என்னும் அமைப்பைத் தொடங்கினார். அதுதான் திராவிட இயக்கம் என்னும் பெரிய ஆலமரத்தின் சிறிய விதை.

 (காரிக்கிழமைதோறும் சந்திப்போம் )

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com


நன்றி: tamil.oneindia.in

4 comments:

  1. அறியாத பல செய்திகளைஅறிந்து கொண்டேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. ல.எழில்மாறன்15 November 2014 at 10:15

    ”புரட்சியாளர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகின்றார்கள்” - சே குவேரா.

    ReplyDelete
  3. Dear Sp.V Sir,

    I didn't expect that my comment would influence you to take this topic. I am thrilled.

    Your above article is also excellent. I always wonder how come you read so much, analyse it thoroughly and present it to the readers with proof. Even while writing about historic facts, you use scientific method.

    I've to write my thoughts about how education also can influence political system. I need time.

    But I've to tell that I've assumed that today education is available to all - thanks to Periyar and all. So I didn't think of "Right to education" is a challenge today, but getting that education by several kids is a challenge.

    One Tamil movie song "pallikoodam pogama paadangalum padikama , paritchaiyum ealudhama naanga pass aaga veendum" is still sung by several kids even today. This is because of the education system we have today. I wish to change that.


    If we say that even today " Right to education is still not 100% available ", then it is a serious concern which has to be addressed first.

    anbudan,
    Viru

    ReplyDelete
  4. Thozhar. Subavi your ever great

    ReplyDelete