தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 12 May 2015

வாழ்க நீதிபதி குமாரசாமி!


               
நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்துள்ளது. இப்போது விசித்திரமான தீர்ப்புகளையும் சந்திக்கத் தொடங்கியுள்ளது. 

ஜெயலலிதா வழக்கு 19 ஆண்டுகள் நடைபெற்றது.  இப்போது அவர் விடுதலை ஆகி விட்டார். நடிகர் சல்மான்கான் வழக்கு 13 ஆண்டுகள் நடைபெற்று, 5 ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்டது. ஐந்தே மணி நேரத்தில் பிணை(ஜாமீன்) வாங்கி விட்டார். ஆனால், வாக்குமூலத்தையே தவறாகப் பதிவு செய்தோம் என்று காவல் துறை உயர் அதிகாரியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னும், பேரறிவாளன்கள் ஆண்டுகள் பலவாய்ச்  சிறையில் உள்ளனர். 


இச்சூழலில்,   பெங்களூரு உயர்நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பு, மூடர்கள் பலரின் கண்களைத் திறந்துள்ளது. வரலாற்றுப் புகழ் மிக்க அத்தீர்ப்பை வழங்கிய நீதிப் பேரரசர் குமாரசாமி அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நீதிக்கு முன் அனைவரும் சமம், நீதிபதிகள் அனைவரும் கடவுளுக்குச் சமம் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் நாட்டில் எவ்வளவோ பேர் உள்ளனர். அவர்களின் மூட நம்பிக்கைகளை எல்லாம் ஒரே வரித் தீர்ப்பில் அடித்து உடைத்து நொறுக்கிய பெருமை அவரையே சாரும்.

அஞ்சும், பத்தும் லஞ்சம் வாங்கிவிட்டு, ஊழல் வழக்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்போரெல்லாம், இன்று அச்சம் நீங்கி, பீடு நடை போட்டுப் பெருமிதத்தோடு உலா வருகின்றனர். எங்கு நோக்கினும் பாரதியார் பாடல்தான்.  அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்ப தில்லையே  என்று அவர்கள் பாடிப் பரவசம் அடைகின்றனர். ஆனாலும்  பாவம் அவர்களுக்குத் தெரியாது , எல்லோருக்கும் இப்படி "நீதி" கிடைத்து விடாது என்பது!  ஏழை, எளியவர்களுக்கெல்லாம் அவ்வளவு எளிதில் கிடைப்பதற்கு, நீதி ஒன்றும் அவ்வளவு மலிவானதில்லை.  

ஏறத்தாழ 19 ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் இப்படித் திடீரென ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. இதனை அப்போதே நீதிபதி குமாரசாமியிடம் கொடுத்திருந்தால், 97 ஆம் ஆண்டே தீர்ப்பு அளித்திருப்பார்,  நீதியும்  கிடைத்திருக்கும். ஜெயலிலிதா சசிகலா மட்டுமின்றி  சின்ன எம்ஜிஆர், சின்ன எம்ஜிஆர் என்று ஊரெல்லாம் சுவரொட்டி ஒட்டிய (அவரே ஒட்டிக்கொண்ட)சுதாகரும் உலக உத்தமர்தான் என்னும் உண்மையும் அன்றே உலகுக்குத் தெரிந்திருக்கும்.அவர் மீது ஜெயலலிதாவே கஞ்சா வழக்குப் போட்டிருந்தாலும், அவர் ஓர்  உத்தமர் என்பது  பெங்களூருத் தீர்ப்பினால் இன்று  ஊருக்கே விளங்கிவிட்டது. 

இத்தனை ஆண்டுகள் இழுக்காமல், அன்றைக்கே இந்த வரலாற்றுப் புகழ் மிக்க தீர்ப்பைத் தந்திருந்தால்,   அரசுக்கும் 19 ஆண்டு காலம் பல கோடி ரூபாய் வழக்கிற்காகச் செலவாகி இருக்காது. உத்தமர்களின் மீது வழக்குத் தொடுத்து, மக்கள் வரிப்பணத்தைப் பல கோடி செலவு செய்தவர்களுக்குத்தான் இனிமேல்  தண்டனை தர வேண்டும். 

வழக்கு நடத்திய கர்நாடக அரசும், ஒரு பெரும் பிழை செய்து விட்டது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரை, இந்தியாவின் நிதி அமைச்சரே வீட்டிற்கு வந்து சந்தித்த பின்பாவது, அரசு திருந்தி வழக்கைத் திரும்பப் பெற்றிருக்க வேண்டும். நிதி அமைச்சரே வீட்டிற்கு வந்து சந்திக்கும் அளவு உயரத்தில் இருக்கும் ஒருவர் எப்படிக் குற்றவாளியாக இருக்க முடியும் என்பதை அரசு உணர வேண்டாமா?

பெங்களூருத் தீர்ப்பு இன்னொரு நன்மையையும் செய்துள்ளது. நீதி மன்றத்தையே முழுமையாக நம்பிக் கொண்டிருந்த நம் போன்ற பலருக்கு ஒரு படிப்பினையைத் தந்துள்ளது. மக்கள் மன்றத்தை நம்புங்கள் என்று பொட்டில் அறைந்து சொல்லியிருக்கிறது. நீதி மன்றத்தில் நியாயத்தை எதிர்பார்த்து நின்றவர்களின் நாடி நரம்புகளில் ஒரு புதிய சூட்டினை ஏற்றியுள்ளது. தீமைகளை எதிர்கொள்ள வேண்டிய தருணம் இது என்பதை உணர்த்தியுள்ளது. 

தி.மு.க. உள்ளிட்ட பல எதிர்க் கட்சித்  தொண்டர்களிடையே ஒரு எதிபார்ப்பு இருந்தது என்பதை மறைக்க வேண்டியதில்லை.  ஜெயலலிதா சிறைக்குச் சென்றுவிட்டால், அந்தக் கட்சி வீழ்ந்துவிடும், நாம் வென்றுவிடலாம் என்ற எண்ணம் இருந்தது. அது வீரனுக்கு அழகில்லை. எதிரியை ஒதுக்கிவிட்டுப் பெறும்  வெற்றியை விட, எதிரியைக் களத்தில் சந்தித்துப் பெறும்  வெற்றியே வீரம் நிறைந்தது . அந்த வெற்றியைப் பெறும் ஊக்கத்தோடும், உணர்வோடும் களமிறங்க வேண்டிய காலத்தில் நாம் நிற்கிறோம் என்னும் எழுச்சியை இத்தீர்ப்பல்லவா  நமக்குள் ஏற்படுத்தியுள்ளது. வாழ்க நீதிபதி குமாரசாமி!

1931 ஆம் ஆண்டு பகத்சிங் தூக்கிலிடப்பட்ட போது  நாடே கொந்தளித்தது. எல்லோரும் அதனை எதிர்த்து எழுந்தனர், எழுதினர். தந்தை பெரியார் மட்டும், அவர் தூக்கிலிடப்பட்ட மறுவாரமே,அதனை வரவேற்றுத்  தன் குடியரசு இதழில், "நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணம் உடையவர்களாகப் பார்த்து, மாகாணத்திற்கு நான்கு பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்று மனதார வேண்டுகின்றோம்" என்று எழுதினர்.ஏன் தெரியுமா? உண்மைகள் வீழ்த்தப்படும் போதுதான் உணர்ச்சிகள் பொங்கி எழும்.  அப்படியாவது மனிதர்கள்  மானமும், சூடு, சுரணையும் உள்ளவர்களாக மாறுவார்கள் என்று பெரியார் நம்பினார்.   

அதுபோல், இப்படித் தீர்ப்புகளைத் தொடர்ந்து தந்து, நீதிமன்றத்தை நம்பும் மனிதர்களைச் சூடு, சுரணை உள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்று நீதிபதிகளைக் கேட்டுக் கொள்கின்றோம். 

நீதிபதி குமாரசாமி அவர்கள் பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க! 

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

நன்றி: tamil.oneindia.in


10 comments:

  1. வழக்கில் சொல்லி இருப்பதைப்போல கூட்டு சதி இந்த நால்வருக்குள் இருந்ததோ இல்லையோ அனால் கர்நாடகம் கூடி பேசி எடுத்த முடிவு இந்த விடுதலை என்று ஐயம் உள்ளது. மேல் முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கர்நாடக உயர் நீதி மன்றம் சில பல காரண காரியங்களை கருத்தில் கொண்டு முழு விடுதலையைத்தான் இந்த மேல் முறையீட்டில் தீர்ப்பாக தரும் என்று நான் தொடக்கத்திலேயே எண்ணி சிலரிடம் சொல்லியிருந்தேன் அண்ணா. அதைப்போலவே தீர்ப்பு வந்து விட்டது. எனது அனுமானங்கள் என்னவாக இருந்ததென்றால், கீழ் நீதி மன்றம் தண்டனை கொடுத்ததும் அவ்வாறு சொன்ன தீர்ப்பால் இங்குள்ள அ.தி.மு.க. ஆட்கள் இருமாநில பிரச்சனையாக அதை மாற்றி தேசிய பிரச்சனையாக ஆக்கினார்கள். அப்போதே கர்நாடக முதலமைச்சர் இந்த தீர்ப்புக்கும் கர்நாடக அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறிக்கை கொடுத்தார். அதனால் முதல் அனுமானமாக என்ன தோன்றியதென்றால் கர்நாடக அரசு இந்த வழக்கில் தேவையான அளவுக்கு அக்கறையை காட்டாது ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்க்கும் என்பதாகும். அதற்கு அடையாளமாகத்தான் கர்நாடக அரசு இந்த மேல்முறையீட்டு வழக்கில் தனது அரசு சார்பாக வழக்கறிஞரை நியமனம் செய்யவில்லை! வழக்கிலும் ஒரு தரப்பாக சேரவில்லை. அதற்காக முயற்சியையும் அது எடுக்கவில்லை. உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டதால்தான் சரி செய்கிறோம் என்று ஆச்சாரியரை நியமனம் செய்து நானும் பதில் போடுகிறேன் என்று வெறும் பதினெட்டு பக்கம் கொண்ட ஒரு பதிலை சமர்ப்பித்தது. ஆச்சாரியார் அறிவாளி. சொன்னவுடன் கால நேரம் கேட்காமல் உடனே பதிலை போட்டுவிட்டு இப்போது வாய் வாதம் செய்யவோ பொறுமையாக அலசி ஆராய்ந்து பதில் தயாரிக்கவோ போதிய நேரம் கொடுக்கவில்லை என்று பெங்களூரில் கூலாக சொல்கிறார். அவர் இப்படி சொல்லிவிடலாம் என்பதை முன்பே தீர்மானித்துவிட்டார் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அந்த பதில் மனுவிலும் கர்நாடக அரசு பெருவாரியான வாதங்களை எடுத்து வைக்காமல் மேல்முறையீடே செல்லாது என்று நன்கு யோசித்தே வேண்டுமென்றே அப்படி ஒரு பொத்தாம் பொதுவான பதிலை சமர்ப்பித்தது. கர்நாடக அரசும் உயர்நீதி மன்றமும் கூட்டாக என்ன யோசித்து பார்த்திருக்கும் என்றால் நான் ஆரம்பத்தில் சொன்னது போல இருமாநில பிரச்சனையாக இது ஆகக்கூடாது என்று யோசித்து பார்த்திருக்கும். மேலும் பெங்களூருவிலும் சட்டம் ஒழுங்கு இந்த வழக்கால் கேட்டுவிடக்கூடாது என்றும் யோசித்து பார்த்திருக்கும். அதனால்தான் இப்படி ஒரு விடுதலை தீர்ப்பு! மேலும் நீதியரசர் இந்த தீர்ப்பை இப்படியே கொடுக்கலாம் அதில் நேர்மை ஞாயம் குறை இருந்தாலும் அப்படியே விடுதலை செய்து விடலாம் அதுவே சிறந்த வழி என்றும் அவர் எண்ணியிருந்திருக்கலாம். தாம் கொடுத்த இந்த விடுதலை தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் எடுபடாது என்பதை நன்கு உணர்ந்தே விடுதலை செய்துள்ளார் என்று கருத இடம் கொடுத்துள்ளது. இப்படியெல்லாம் யோசித்தவர்களா உச்சநீதிமன்றத்துக்கு ஓடுவார்கள்? இது என்ன கர்நாடக மாநில பிரச்சனையா? அல்லது கர்நாடக மாநில அரசியல்வாதிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனையா? இது பக்கத்து மாநில முதலமைச்சர் பிரச்சனை. இதில் நமக்கு ஏன் வம்பு என்று ஒதுங்கிகொள்ளும் அவ்வளவுதான். சரி யார் மேல்முறையீடு செய்வார்கள்? சுப்பிரமணி சுவாமி செய்வாரா? அவர் ஒரு மதில் மேல் கேடி (கேடி என்றால் தெலுங்கில் பூனை என்று பொருள்) எந்த பக்கம் குதிப்பார் என்பதே தெரியாதே! அவரை நம்பமுடியாது. அவரை விட்டுவிடலாம். தி.மு.க. செய்யுமா? தற்போதிய நிலவரம் அவர்களுக்கு இரண்டு உள்ளது. ஒன்று மேல்முறையீடு போகாமல் இந்த தீர்ப்பால் மக்களிடம் ஏற்ப்பட்டுள்ள எதிர்மறை எண்ணத்தை ஓட்டுக்களாக ஆக்கிக்கொள்ள தேர்தலை சந்திப்பார்கள். இல்லையென்றால் அ.தி.மு.க. தலைவர் தனது வீரத்தனமான பேச்சால் தி.மு.க.வை வசைபாடிக்கொண்டே இருந்தால் அந்த எரிச்சல் தாளாமல் மேல்முறையீட்டுக்கு போவார்கள். இந்த அனுமானங்களையும் மீறி உச்ச நீதி மன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து ஆராய்ந்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கு இல்லை அண்ணா. எது எப்படியோ எந்த தீர்ப்பு ஜெயலலித்தாவுக்கு மக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்துவதைவிட வெறுப்பையே ஏற்படுத்தி உள்ளதை அறியமுடிகிறது
    - இப்படிக்கு,
    வழக்கறிஞர் பிச்சலிங்கம் ராஜேந்திரன்.

    ReplyDelete
  2. பார்ப்பான் நீதிபதியாக உள்ள நாடு கடும்புலி வாழும் நாடு என்று அய்யா அவர்கள் அன்றே சொன்னார்கள் அது அன்று மட்டுமல்ல இன்றைக்கும் என்றைக்கும் பொருந்தும் என்பதே உண்மை ..இப்போது இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம் என்பது உண்மை. பாரதீய ஆட்சி வந்ததில் இருந்து பார்ப்பனீயம் வீறுகொண்டு எழுந்து ஆட துவங்கியுள்ளது ..இன்றைய இளைய சமுதாயமோ டி 20 போதையில் உள்ளது என்பது நிதர்சனம்

    மேலும் ஒரு இடியாக கீழ்குறிப்பிட்டுள்ள செய்தி நம்மை மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளது

    நீதிபதி தேர்வுக் குழு.. நீதிபதி கர்ணனின் உத்தரவுகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!

    Read more at: http://tamil.oneindia.com/news/india/apex-court-stays-justice-karnan-s-interim-order-226507.html

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்14 May 2015 at 01:01

      மிகச்சிறந்த நீதிபதியான V.R.கிருஷணய்யர் போன்றவர்கள் எந்த ஜாதி?.நீதிபதி கர்ணன் எப்படிப்பட்டவர்,எவ்வாறு தீர்ப்பளிப்பார் என்பது தமிழகத்திற்கே தெரியும்.நீங்கள் may be தலித்தாக இருக்கலாம் அதனால்தான் இவ்வளவு பாசம், ஆதரவு அவருக்கு!.மேலும் பவானிசிங் SPPயாக அனுமதித்தது செல்லாது என்று சொன்னதோடு நில்லாமால் அன்பழகன் மற்றும் ஆச்சார்யா எழுத்துப்புர்வமாக வாதங்களை தாக்கல் செய்யாலாம்(பானுமதி&மதன்லோக்கூர் அன்பழகன் எழுத்துப்புர்வமாக வாதங்களை தாக்கல் செய்யமுடியாது என்று இறுதித் தீர்ப்பளித்த போதும்)என்று சொன்ன தீபக்மிஸ்ரா பிராமணர்.வழக்குத் தொடர்ந்து ஜெயலலிதா பதவியிழக்கச் செய்த சுப்பிரமணியசாமி பிராமணர்(அதே சுப்பிரமணியசாமியின் 2G&200கோடி KTV case என்றால் சுபவீக்கு அவர் பிராமணர் என்ற ஜாதிக் கண்ணோட்டம் வந்துவிடும்),அதோடு தற்போதய SPP ஆச்சார்யா பிராமணர்,ஆனால் பவானிசிங்&குமாரசாமி சூ.....இந்த வழக்கில் தேவையான அளவுக்கு அக்கறையை காட்டாத,அரசு வழக்கறிஞரை நியமிக்காத சித்தராமய்யா ஒரு சூ..... ஆகவே நேர்மையை பிராமணர் என்பதால் ஜாதிக் கண்ணோட்டத்தோடு மதிக்கவிட்டாலும் பரவாயில்லை தயவுசெய்து சுபவீ போல, திமுக/ கலைஞர் போல,திக போலத் நேர்மையற்ற முறையில் துவேஷத்தோடு தூற்றாதீர்கள்.

      Delete
    2. ஸ்ரீராம் பிராமணாள் அவாளுக்கு எங்கள் விளக்கம் என்னவென்றால் நாங்கள் உங்களை ஜாதி கண்ணோட்டத்தோடு காணவே இல்லை. இன கண்ணோட்டத்துடன்தான் காண்கிறோம். திராவிடரான எங்களிடமிருந்து இனத்தால் வேறுபட்ட ஆரியரான தாங்கள் தங்களை எங்களுக்குள் ஒரு ஜாதியாக நினைத்துக்கொள்வதில் சூழ்ச்சி உள்ளது. தங்களை எங்கள் ஜாதிக்குள் ஒரு ஜாதியாக காட்டிக்கொண்டால் தங்களுக்கு தக்க பாதுகாப்பு என்பதால்தான் இனத்தால் வேறுபட்ட தாங்கள் தங்களை எங்களுக்குள் ஒரு ஜாதியாக பிரகடனபடுத்திக்கொண்டு வருகிறீர்கள் என்பதை நாங்கள் நன்கு உணர்ந்துதான் உள்ளோம்.

      தங்களுடைய சுப்பிரமணி சுவாமி ஒரு பிராமணர் அவர் சக பிராமணர் என்றும் பாராமல் ஜெயலலிதாமீது வழக்கு தொடுத்தார் என்னே அவருடைய நேர்மை! என்று தாங்கள் பெருமிதம் கொள்வீர்கள் என்றால் அது உங்களுடைய ஏமாற்று வேலை. அவர் சக பிராமணர் என்றும் பாராமல் வழக்கு தொடுத்தார் என்பதை நாங்கள் நம்பவில்லை. ஜெயலலிதாவை தனது சக பிராமனப்பெண்ணாக கருதி இருந்தால் அநேகமாக வழக்கே எழுந்திருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம் . ஜெயலலிதாவை அடுத்தாத்து மாட்டுப்பெண்ணாக! புரியவில்லையா , அதாவது மாற்று இனத்து மருமக பெண்ணாக கருதிதான் அவரின் மீது ஆதாரங்களை திரட்டி வழக்கு தொடுத்தார் என்பதே எங்களின் ஐயப்பாடு.

      சரி அது இருக்கட்டும்

      தாங்கள் பிராமணர்களை தெளிவாக பிராமணர் என்று எழுதி பெருமிதம் காட்டினீர்கள். அதே வேளையில் மற்றவர்களை சூ என்கிற எழுத்தின் மூலம் சூத்திரர்கள் என்று தாங்கள் குறிப்பால் உணர்த்தி தாங்கள்தான் மற்றவர்களை ஜாதி ரீதியாக பிளவுபடுத்தி பார்த்துக்கொண்டு வருகிறீர்கள் என்பதை உலகுக்கு காட்டிவிட்டீர்கள். தாங்கள் இன்றும் சனாதன சிந்தனையோடு இருக்கும் வேளையில் செல்வ சிவாவுக்கு புத்திமதி எதற்கு?

      இப்போதெல்லாம் பிராமணர்கள் பழையபடி இல்லை அவாள்கள் மாறிவிட்டார்கள் என்கிற பிரச்சாரங்களை தங்களுக்கு அடிவருடும் ஆட்கள் நம்பலாம். புலி பசித்தாலும் புல்லை திங்காது ஓநாய்கள் ஒருவழியாய் ஓய்வு எடுக்காது என்பதை திராவிடர்களான நாங்கள் பகுத்தறிவு தடியால் விளாசப்பட்டு புரியவைக்கப்பட்டுவிட்டோம் என்பதை தாங்கள் நன்கு உணர்ந்து, இனி 'கருதுரைக்கிறோம்' என்று வராதீர்கள் ஸ்ரீராம் பார்ப்பனரே நீர் அந்த ஸ்ரீராம் ஆயினும் நாகாக்க!
      - வழக்கறிஞர் பிச்சலிங்கம் ராஜேந்திரன்.

      Delete
  3. ஸ்ரீராம்16 May 2015 at 16:37

    No wonder in your reply!.It showed you are just an extension of SuBaVi, i.e.to 'Shoot the messanger and ignore the message!' to escape&divert from any meaningful discussion.ஆதனால்தான் V.R.கிருஷணய்யர்,தீபக்மிஸ்ரா,சுப்பிரமணியசாமி Vs பவானிசிங்,குமாரசாமி என்பதற்கு உங்களிடமிருந்து எந்த பதிலுமில்லை!.இனத்துவேஷம் பிடித்த உங்களின் கூற்றுப்படி நான் இனத்தால் வேறுபட்ட ஆரியர் என்பதை வாதத்திற்கு உண்மை என்று வைத்துக் கொண்டாலும் எனக்கு இங்கு இந்தியாவில்,தமிழகத்தில் வாழ,இயங்க உங்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் உள்ளது அரசியலமைப்புச் சட்டப்படி!, உங்களைப்போன்ற இனத்துவேஷிகள் எங்களுக்கு கொடுக்கவேண்டிய அவசியமில்லை!.காலகாலமாக நாங்கள் இங்கு இருந்தும்(சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம் முதல் திருக்குறள் வரை எங்களைப் பற்றிய குறிப்புகளிருக்கிறது!) இப்படிப் பேசுகிறிர்களே பிறகு ஏன் சிங்கப்பூர்,மலேஷியா,இலங்கை,பிஜி& போனவுடன் ஆஸ்திரேலியாவில் சம உரிமை,citizenship&தனிநாடு கோருகிறிர்கள்?.
    தமிழகத்தில் அனைவரும் அறிந்தபடி நீங்களெல்லாம் ஆதாயச்சூதாடி ஓநாய்கள்தானே பிறகு எனக்கு எதற்கு ஓநாய் கதைகள்&வசனங்களெல்லாம்!.புலி பசித்தாலும் புல்லைத்திங்காமலிருக்கலாம் ஆனால் உங்களைப்போன்ற திராவிடக் கட்சிகளின் அடிவருடிகள்&ஆதாயச்சூதாடிகளுக்குப் பசித்தால் புல்லையல்ல தங்களின் பல்லைத் தின்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!. புரியவில்லை?.எந்த மாநிலத்திலுமில்லாதபடி ஜெயலலிதாவிடம் ஆதாயப் பிழைப்பிற்காக ஆச்சரியப்படுமளவிற்கு எப்படி சுயமரியாதை, தன்மானத்தோடு நடக்கிறது உங்கள் கூட்டம்!(இது கருணாநிதியின் அடிவருடிகளுக்கும் பொருந்தும்). ஜெயலலிதாவை அடுத்தாத்து மாட்டுப்பெண்ணாக?!~~புரியவில்லை,விளக்குங்கள்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீர்களா திராவிடர்களே, ஸ்ரீராம் ஆரியரின் சொல்லோட்டங்களை படித்தீர்களா திராவிடர்களே. திராவிடர்களின் மீதான ஆரியர்களின் தீய எண்ணங்களை வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பை ஆரிய ஸ்ரீராம் இதோ நமக்கு தெளிவாக விளக்கமாக எரிச்சலுடன் கூடிய தமது எழுத்தின் மூலமாக தந்துள்ளார்.

      திராவிடர்களே கவனியுங்கள். அந்த ஆரிய ஸ்ரீராம் நம்மை சூத்திரர்களாக வருணித்த நிலையில் நாம் சொல்லோனா வேதனை மனதில் கொண்டோம், தக்க முறையில் நமது வேதனையை வெளிப்படுத்தினோம். அந்த வேதனைக்கு, அது அப்படி அல்ல சக இந்திய குடிமகனே, நான் புண்படுத்தும் நோக்கில் "சூ" என்கிற எழுத்தை பயன்படுத்தவில்லை. அது புண்படுத்தி இருந்தால் அவ்வாறு பொருள் ஆனதற்கு நான் உளமார வருத்துகிறேன் ஆயினும் நான் விரும்பியது ஆரோகியமான கலந்துரையாடலைத்தான். "சூ" என்கிற எழுத்து என் எண்ணத்தை திசை மாற்றிவிட்டதாக எண்ணுகிறேன் அதற்காக நான் வருந்துகிறேன் என்று அந்த ஆரிய ஸ்ரீராம் குறிப்பிட்டு இருந்தால் நாமும் சக இந்திய குடிமகன் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு நம்மை சூத்திரர்களாக வருணித்து விட்டார் என்று கருதி மனசாந்தி அடைந்து இருந்திருக்கலாம் ஆனால் நாங்கள் அப்படித்தான், மாறவே மாட்டோம் நானும் நீயும் வேறடா இதுவே பிரம்மன் படைப்படா என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக நம்மை கீழ்மக்களாக வருணித்துள்ளார். அவர் தம்மை வாதத்துக்கு ஆரியர் என்று அங்கிகரித்துக்கொண்ட வகையில் நாம் நம்மை சூத்திரர்களாக வாதத்துக்கு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று மிகவும் சாமார்த்தியமாக வாதுரைத்துள்ளார் அதை திராவிடர்களான நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாம் யார் நமது இனம் என்ன என்பதை நான் மட்டும் சொல்லிக்கொண்டு வருவதை விட அதை இது போன்ற ஆரிய ஸ்ரீராம் மூலமாகவும் திராவிடர்களுக்கு புரியவைக்கவே நான் முயன்றேன்! அது நடந்தது. ஆரிய ஸ்ரீராம் மிகத்தெளிவாக அவர் வேறு நாம் வேறு என்பதை எரிச்சல் கலந்த எழுத்தின் மூலம் நமக்கு புரியவைத்துவிட்டார்.

      அந்த ஆரிய ஸ்ரீராம் இங்கு வாழ்வதற்கு இந்திய அரசியலமைப்பு உரிமை வழங்கிஉள்ளதாம். அதே இந்திய அரசியலமைப்புதான் மக்களை கீழ்மக்களாக தீண்டத்தகாதவர்களாக நடத்தக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அதை அவர் மீறி நம்மை சூத்திரர்களாக வருணித்துள்ளார். ஆரியர் என்று நாம் மாற்று இனத்தாரை குறிப்பிட்டு சொன்னது கேவலம் இல்லை அதில் தெளிவு உள்ளது தெளிவான அடையாளம் உள்ளது ஆரியர் என்பது கீழ்நிலையையோ உயர்நிலையையோ குறிக்காது. அவாளை இன்னொரு இனத்து மக்களாக நாம் ஏன் குறிப்பிட்டோம்? நமக்குள் திணிக்கப்பட்டு உள்ள ஜாதிகளுக்குள் அவர்கள் ஒரு ஜாதி அல்ல என்பதை திராவிடர்களான நாம் புரிநிது கொள்ளவேண்டும் என்பதற்காகவே ஆரியர் திராவிடர் என்கிற வேறுபாட்டை குறிப்பிட்டு தெளிவாக்கினோம். நாம் எதிர் பார்த்தோ எதிர் பார்க்காமலோ அந்த ஆரிய ஸ்ரீ ராமே நமக்கு தெளிவாக நம்மை கேலி பேசி அவர்கள் ஆரியர்கள் நாம் திராவிடர்கள் என்பதை புரியவைத்து விட்டார். ஆகவே திராவிடர்களே நாம் நம்மை உணர்ந்து நமது சக இனத்தாருக்கு தோள் கொடுத்துதவும் தோழனாக இன்னும் இன்னும் சிறப்பானதொரு திராவிட தமிழராக மிளிரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்!

      குறிப்பு:- பாருங்கள் திராவிடர்களே. இந்த ஆரிய ஸ்ரீ ராம் நம்மை சூத்திரர்களாக வருணித்துள்ளார். ஆனால் நாமோ அதை தாங்கிக்கொண்டு அவரிடம் கை கட்டி மிகப்பணிவாக ஆரோகியமான கலந்துரையாடலை நடத்த வேண்டுமாம்.

      "சிந்தியுங்கள் திராவிடர்களே, ஒன்று சேருங்கள் திராவிடர்களே!"

      எங்கே பாடுங்கள் பார்ப்போம்.

      திராவிடரே திராவிடரே
      எங்கும் எதிலும் திராவிடரே.
      எல்லாம் வல்ல திராவிடரே
      நமது நிலமே திராவிடமே.

      இந்திய நாடு ஒரு நாடு
      அதிலே இருக்கு தமிழ் நாடு.
      அந்த நாடே நம் நாடு
      அதுவே நமது திராவிடமே.

      திராவிடரே திராவிடரே
      எங்கும் எதிலும் திராவிடரே.
      எல்லாம் வல்ல திராவிடரே
      நமது நிலமே திராவிடமே.

      -வழக்கறிஞர் பிச்சலிங்கம் ராஜேந்திரன்.

      Delete
    2. லெனின்17 June 2015 at 22:28

      இஸ்லாத்தை கிறிஸ்துவத்தை வெறுக்கும் இந்து மதவாதிகள் ஆர் எஸ் எஸ் காரர்கள், இந்து மதத்தை வெறுக்கும் அம்பேட்கர்வாதிகள் பெரியார்வாதிகள் இஸ்லாமிய கிறிஸ்துவ மதவாதிகள், ஆத்தீகத்தை வெறுக்கும் நாத்தீகர்கள், நாத்தீகத்தை வெறுக்கும் ஆத்தீகர்கள், அம்பேட்கரியத்தை வெறுக்கும் பெரியார்வாதிகள்,ஆரியத்தை வெறுக்கும் திராவிட இனவாதிகள் திராவிடத்தை வெறுக்கும் ஆரிய இனவாதிகள்,இந்திய தேசியத்தை வெறுக்கும் தமிழ் தேசியவாதிகள், தமிழ் தேசியத்தை வெறுக்கும் இந்திய தேசியவாதிகள் என எல்லோருமே ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.
      தங்கள் ஆழ்மனதில் புரையோடிப்போயுள்ள வெறுப்பைத் தனித்துக்கொள்ள இவர்கள் பேசுவதுதான் தத்துவங்கள் மதங்கள் இனங்கள் தேசியங்கள் ...
      மதம் தத்துவம் இனம் தேசியம் எல்லாம் மக்களுக்கு நன்மை பயக்க உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளாக இருக்க வேண்டுமே ஒழிய மனித சமுதாயத்தில் வெறுப்பை வளர்க் பயன்படுத்தக் கூடாது.
      நான் மதவாதியும் இல்லை மத எதிர்ப்பாளனும் இல்லை......
      நான் தத்துவவாதியும் இல்லை தத்துவங்களுக்கு எதிரானவனும் இல்லை....
      நான் இனவாதியும் இல்லை இனங்களுக்கு எதிரானவனும் அல்ல....
      நான் தேசியவாதியும் இல்லை தேசியங்களுக்கு எதிரானவனும் அல்ல....
      உங்கள் இனங்களையும் தத்துவங்களையும் மக்களுக்கு எதிராக பயன்படுத்தாதீர்கள்.
      மனித ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காதீர்கள் .......
      வெறுப்பை தவிர்த்து அன்பை பரப்புங்கள்....
      எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்.......

      Delete
  4. 65 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் புதிய நீதிமுறை செத்துவிட்டது என்று அங்கலாயிக்கும் நீங்களும், உங்களைப் போன்றவர்களின் குரலும் நியாயமானதுதான்!.ஆகவே வடக்கே குப்தர்கள் காலம் முதல் தெற்கே பல்லவ,முக்கியமாக சோழ(±சேர&பாண்டிய)&நாயக்கர் காலங்கள் வரை பொற்காலமாக மாற்றியதும்,சில ஆயிரம் காலங்கள் இந்தியாவில் கோலோச்சியதுமாகிய most trusted&tested lawவாகிய இந்த மண்ணின் நீதியான மநுநீதியை இந்நாட்டில் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று போராடத் தயாரா?

    ReplyDelete
  5. 29.5.2015 இல் அனானிமஸ்ஸாக கருத்துதிர்த்துள்ள ஒருவர் ஒரு குழப்படி வேலையை தமது வரிகளுக்குள் நுழைத்துள்ளார். அதை அவரேகூட உணர்ந்துள்ளாரா என்று தெரியவில்லை. ஆயினும் அவருக்கும் சேர்த்து அதை எங்கள் திராவிடர்களும் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக நான் இப்போது வந்துள்ளேன்.

    பாருங்கள் திராவிடர்களே, குப்தர்கள் வடக்கே ஆண்டார்களாம் பல்லவர்களும் சேர சோழ அரசுகளும் தெற்கே இருந்தனவாம். இதில் என்ன குழப்பம் என்று எண்ணுகிறீர்களா?

    "வடக்கு தெற்கு என்பதுதான் குழப்பம்"

    வடக்கு என்றால் எந்தநாட்டுக்கு வடக்கு?
    தெற்கு என்றால் எந்தநாட்டுக்கு தெற்கு?

    குப்தர்கள் வடக்கே ஆண்டார்களாம் பல்லவர்கள் தெற்கே ஆண்டார்களாம். இப்படி அவர்கள் ஆட்சியை வருணிப்பதில் என்னதவறு என்றால், அப்போதைய நிலப்பகுதி குப்தர்கள் காலத்திலும் பல்லவர்கள் காலத்திலும் ஒருங்கிணைந்த ஒரே நாட்டுப்பகுதிபோல் அல்லவா அவர்களின் ஆட்சி வருணிப்பில் காணப்படுகிறது. அதுதான் தவறு.

    குப்தர்கள் தாம் வென்ற இடம் வரை ஆண்டார்கள் பல்லவர்களும் அவ்வாறே. இந்த வடக்கு தெற்கு வருணிப்பு இந்திய நாட்டின் தற்போதைய நில எல்லையை அடிப்படையாய் வைத்து சொல்லப்பட்டுள்ளதை திராவிடர்களாகிய நாம் உணரவேண்டும்.

    அடுத்து, மனுதர்மத்தை அதிகம் நம்பப்பட்ட ஆய்வு செய்யப்பட்ட ஒரு சட்டமாக (most trusted&tested law) வருணிக்கப்பட்டு சொல்லப்பட்டுள்ளதை எச்சரிக்கையாக கவனிக்க வேண்டும். மனுதர்மத்தை சட்டவடிவாக தற்போதும் வேண்டும் என்று அங்கலாய்ப்பது யாருடைய ஆளுமைக்காக? திராவிடர்களை கொடுமைபடுத்த முற்றிலும் அழித்தொழிக்க எண்ணுபவர்களின் ஆளுமைக்காக ஆரியர்களுக்காக என்பதை திராவிடர்களாகிய நாம் உணர வேண்டும்.

    குப்தர்களின் பல்லவர்களின் சேர சோழ மன்னர்களின் பொற்கால ஆட்சிக்கு மனுதர்மம்தான் காரணம் என்று சொல்லப்படுவது அந்தந்த மன்னர்கள் தத்தமது ஆட்சிகாலங்களில் தமது கூறிய அறிவைகொண்டும் தமது அவைகளில் வீற்றிருந்த அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகளாலும் தாம் ஆட்சி புரிந்த தன்மைகளைஎல்லாம் கேவலப்படுத்துவதை போலவும் சிறுமை படுத்துவதை போலவும் உள்ளது.

    அவரவர்களுக்கு அவரவர் காலங்களில் தனிதனி சட்டங்களை போட்டுக்கொண்டார்கள் அவ்வளவுதான். மனுதரமத்தை அவர்கள் துணை கொண்டும் கொள்ளாமலும் அவர்கள் ஆட்சி அமைந்திருக்க வாய்ப்பு உள்ளதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். துணை கொள்ளும் அளவுக்கு மனுதர்மம் ஒன்றும் எல்லோரும் சரிசமம் என்று சமூகநீதி பேசும் தர்மம் அல்லவே. அப்படி சமுகநீதிக்கு புறம்பான அந்த அதர்மத்தையா மன்னர்கள் தமது பொற்க்கால ஆட்சிக்கு பயன்படுத்திக்கொண்டார்கள்? அவ்வாறு அவர்கள் மனுதர்மத்தை தூக்கி பிடித்திருந்தால் அது எப்படி பொற்க்கால ஆட்சியாகும்? ஆரியர்களுக்கு தமது ஆளுமைக்கு நிரந்தர மேலாண்மைக்கு உள்ள ஆசை பேராசைதான் இப்படியெல்லாம் மனுதர்மத்தை அங்கலாய்த்து ஆதரிக்க சொல்கிறது அதை திராவிட மக்கள் நன்கு உணர வேண்டும்.

    மனுதர்மம்தான் சிறந்த தர்மம் என்றால் அதை காலம் காலமாக ஆரியர்கள் தமது தந்தை பாஷையான (கவனிக்க:- ஆரியர்கள் தமது பாஷையை தாய் பாஷை என்று கூறமாட்டார்கள் தந்தை பாஷை என்றுதான் வருணிப்பார்கள்) சமஸ்க்ரத பாஷையில் மட்டும் ஏன் வைத்திருந்தார்கள்? என்பதை திராவிடர்கள் யோசிக்கவேண்டும். திராவிடர்களே கேளுங்கள், நமது தமிழ் மன்னர்கள் மனுதர்ம சாஸ்திர ஸ்லோகங்களை ஏதோ ஒரு புனித ஸ்லோகன் என்று எண்ணி இருத்திருக்கலாம் மற்றபடி அதன் உட்பொருள் அறிந்து நமது மன்னர்கள் தமது பொற்க்கால ஆட்சியை நடத்தவில்லை என்பது திண்ணம். நமது மன்னர்கள் அதாவது திராவிடத் தமிழ் மன்னர்கள் நமது முன்னோர்களை அறிவாளிகளாகவும் ஆண்டுள்ளார்கள் அறிவுகெட்ட ஆண்டிகளாகவும் ஆண்டுள்ளார்கள் என்பதையும் நாம் உணரவேண்டும். ஆயினும் மனுதர்மத்தை தமது அடிப்படை தர்மமாக அவர்கள் ஒருநாளும் எண்ணி ஆட்சிபுரிந்திருக்கவே இல்லை இல்லை இல்லவே இல்லை.

    ReplyDelete
  6. ஐயா, தீர்ப்பு வந்த அன்று, மிகச் சாதாரண, எக்கட்சியினையும் சாராத இந்திய பிரஜையாகிய நான், மிகவும் மனம் நொந்தேன்; நம்பிக்கை இழந்தேன். ஏனெனில் ஒரு நீதிமன்றம் தன் தீர்ப்பினைக் கொடுத்து, அதற்கான கணக்கீட்டுக்களை தெளிவுற கூறியிருந்தது.

    ஆனால், அக்கணக்கீட்டுக்களை குழப்பநிலையில் மாற்றி, மாறுபட்ட தீர்ப்பாக வேறொரு நீதிமன்றத்தில் வரும்போது, பல்வேறு சந்தேகஙகள் உதிக்கின்றன.

    ஆனால், தற்போது நீதிமன்றம் விழித்து, சரியான தீர்வுக்காக, அதன் அழுத்தத்தை கர்நாடக அரசுக்கு கொடுக்க ஆரம்பித்துள்ளது. எனவே நம்பிக்கைகள் பிறக்கின்றன. சரியான தீர்ப்பு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

    வாழிய நீதிமன்றங்கள். அதர்மத்தின் வாழ்வுதனை இறுதியில் நீதி வெல்லும்

    ReplyDelete