தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 17 August 2015

எதிரி யார், மதுவா, கலைஞரா?

"குடி குடியைக்  கெடுக்கும்
குடியை அரசு காக்கும்"
என்பதாக நகர்ந்து கொண்டுள்ளது தமிழ்நாட்டின்  இன்றைய அரசியல். 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப் படுத்துவோம்' என்று தி.மு.கழகத் தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையும், பெரியவர் சசி பெருமாளின் மதுவுக்கு எதிரான போரில் நிகழ்ந்த மரணமும் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பல்வேறு கட்சியினரும், மக்களும், மாணவர்களும் மதுவுக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடத் தொடங்கினர். 


மது எதிர்ப்பு அரசியல் ஒருபுறம் தொடங்க, வழக்கம் போல், கலைஞர் எதிர்ப்பு அரசியல் மறுபுறம் தொடங்கிற்று. மதுவிலக்கே எங்கள் உயிர்க் கொள்கை என்று பேசிவந்த சிலர், 'கருணாநிதி எப்படி மதுக் கடைகளை மூடுவதாகச் சொல்லலாம்' என்று இப்போது மிகவும் கோபப்படுகின்றனர். கலைஞர் ஆட்சிக்கு வந்து மதுக்கடைகளை மூடினால், மீண்டும் அவற்றை திறக்கச்  சொல்லிப் போராட்டம் நடத்தினாலும் நடத்துவார்கள் போலிருக்கிறது. 


நெடுமாறன் அவர்கள் மதுவிலக்குக் கொள்கையைக் கொண்டவர். ஆனால் அவர்தான் எப்போதும் கலைஞர் எதிர்ப்பு அரசியலையும் இங்கு முன்னின்று  நடத்தி வருபவர். ஆதலால், கலைஞரின் அறிவிப்பை மகிழ்ந்து பாராட்ட வேண்டிய அவர் அதனை எதிர்த்துக் கடுமையாக அறிக்கைகள் விடத் தொடங்கினார். 44 ஆண்டுகளுக்கு முன்னால் மதுவைக் கொண்டு வந்தவர் இவர்தானே, இவரால்தானே நாடு கெட்டது, அதற்காக மக்களிடம் இவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலவாறாக அறிக்கைப் போரைத் தொடங்கினார்.

1974இல் கலைஞர் ஆட்சியில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் 1981இல் எம்.ஜி.ஆர் ஆட்சியில் திறக்கப்பட்டன என்பது உலகறிந்த உண்மை. அப்படித் திறக்கப்பட்ட வேளையில், நெடுமாறன் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். மதுரை மத்தியத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு 1980-84 காலகட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், மதுவிலக்கு தளர்த்தப் பட்டபோது சட்டமன்றத்தில் என்ன பேசினார் என்பது நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். 

1981 மார்ச் 21 ஆம் நாளன்று, அன்றைய நிதி அமைச்சர் நாவலர் நிதிநிலை அறிக்கையினைப் படித்தபோது, நடைமுறையில் இருக்கும் மதுவிலக்கு மீண்டும் சில நிபந்தனைகளோடு தளர்த்தப் படுவதாக அவையில் அறிவித்தார். அந்த நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் 24ஆம் தேதி முதல் சட்டமன்றத்தில் தொடங்கியது. பலரும் உரையாற்றினர். அப்போது தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த நெடுமாறன் 28.03.1981 அன்று, நிதிநிலை அறிக்கை குறித்துச் சட்டமன்றத்தில் ஏறத்தாழ 50 நிமிடங்கள் உரை ஆற்றியுள்ளார். அவருடைய முழு உரையும் தமிழக அரசின் சட்டமன்றத் துறை வெளியிட்டுள்ள "தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நடவடிக்கைகள்" நூலில் இடம்பெற்றுள்ளது. மொத்தம் 16 பக்கங்களில் வெளியாகியுள்ள அவ்வுரையில் மதுவிலக்கு குறித்து அவர் என்ன பேசியுள்ளார் என்பதை அனைவரும் படித்துப் பார்க்க வேண்டும். 

கலைஞர்தான்  மதுக்கடைகளைத் திறந்துவிட்டார் என்று அனல் பறக்கப் பேசும் நெடுமாறன், எம்.ஜி.ஆர் மதுக்கடைகளைத் திறந்தபோதும் அதே ஆவேசத்தோடு அதனை எதிர்த்திருப்பார் என்று எவரேனும் நினைத்தால் அவர்கள் அவரைப் புரிந்துகொள்ளவில்லை என்பதே பொருள். அந்த நீண்ட உரையில், மிக மென்மையாக, மிக நயமாக மூன்றே மூன்று வரிகள் மட்டுமே மதுவிலக்கு குறித்துப் பேசியுள்ளார். அந்த வரிகளை அப்படியே பார்க்கலாம்: 

"(மதுவிலக்கைப் பற்றி) எங்களுடைய நிலை என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் மதுவிலக்குக் கொள்கையில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். அதைத் தீவிரமாக அமுல்படுத்த வேண்டும் என்பது எங்கள் கட்சியின் கொள்கை."

இவ்வளவுதான். இதற்கு மேல் ஒரு வரி கூட அப்பேச்சில் இடம்பெறவில்லை. மேலே உள்ள மூன்று வரிகளையும் கவனித்துப் படித்தால் பல உண்மைகள் புரியும். மதுக்கடைகளை மீண்டும் திறக்கவிருப்பதாக அரசு கூறுவதற்கு ஒரு சிறு கண்டனம் கூட இல்லை. போகட்டும், கடைகளை மீண்டும் திறக்காதீர்கள் என்னும் வேண்டுகோள் கூட இல்லை. தங்கள் கட்சியின் கொள்கை என்ன என்பதைக் கூறிவிட்டு, வேலை முடிந்ததெனக்  கருதி,  வேறு செய்திக்குப் போய்விடுகிறார். இதுதான் அவருடைய மதுவிலக்குக் கொள்கை அரசியல் நாணயம். 

இதனை விட எது கொடுமை என்றால், அவ்வுரையில் மறைமுகமாக எரிசாராய ஊழலுக்கு அவர் துணை போயிருப்பதுதான். அன்றைய இந்திரா காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் துணைத் தலைவர் சுந்தரராசன் எரிசாராய ஊழல்  குறித்துப் பேசிய  உரைக்குத் தன் பேச்சில் அவர் விடை சொல்கிறார். 

அன்றைய எம்.ஜி.ஆர்  ஆட்சியில் மிகப் பெரிதாகப் பேசப்பட்ட  ஊழல் எரிசாராய ஊழல். சர்க்கரை ஆலைகளில்  கிடைக்கும் ஒரு டன் கழிவுப்பாகிலிருந்து 75 லிட்டர் எரிசாராயம் தயாரிக்கலாம். அப்படித் தமிழ்நாட்டில்  தயாரிக்கப்பட்ட லட்சகணக்கான லிட்டர் எரிசாராயம் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டது. அதற்கு 1980 ஜூலையில் தடை விதித்த தமிழக அரசு, அடுத்த மாதமே தடையை நீக்கியது. அவ்வாறு தடையை நீக்கிக்  கேரளாவிற்கு அதனைக் கொண்டு வருவதற்குத் தான் பகீரதப் பிரயத்தனம் செய்ததாகவும், பெரும்பொருள் செலவழித்ததாகவும் அகமத்கான் என்னும் ஒப்பந்தக்காரர் கூறிய செய்தி மலையாள நாளேடுகளில் வெளிவந்தது. தில்லியிலிருந்து வரும் ஆங்கில ஏடுகள் சிலவும் அவ்வூழல் பற்றி எழுதியிருந்தன. தடையை நீக்குவதற்குப் பல கோடி ரூபாய் கை மாறியிருக்கிறது என்று அவ்வேடுகள் குற்றம் சாட்டின.

இரண்டு அரசுகளுக்கு இடையிலான சிக்கல் என்பதால் அதனை ஆராய, மத்திய அரசு , ஒரிசா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.கே. ரே என்பவர் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்தது. அதற்கு ரே கமிஷன் என்று பெயர். அதனை எம்.ஜி.ஆர் எதிர்த்தார். நீதிபதி கைலாசம் தலைமையில் தானே ஒரு கமிஷனை அமைத்தார். அதற்கு எதிர்ப்பு வலுக்கவே கைலாசம் விலகிக்கொள்ள, நீதிபதி சதாசிவத்தை அந்த இடத்தில் எம்.ஜி.ஆர் அமர்த்தினார்.

நெடுமாறன் தன் சட்டமன்ற உரையில், மத்திய அரசு அமைத்த ஆணையம் கூடாது என்றும், எம்.ஜி.ஆர் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட ஆணையமே செயல்பட வேண்டும் என்றும் கூறுகிறார். குற்றம் சாட்டப்பட்டவரே எப்படி நீதிபதியை நியமிக்கலாம் என்று இன்று ராஜபக்ஷேவைப் பார்த்தக் கேட்கும் நெடுமாறன் அன்று அதே கூத்துக்குத் துணை போகிறார்.   அவருடைய் சாராய எதிர்ப்பின் லட்சணம் இதுதான். 

'மாமியார் உடைத்தால் மண்குடம்" என்று நம் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஆரிய மாயையில் 'பேசும் நா இரண்டுடையாய் போற்றி!" என்பார் அறிஞர் அண்ணா.  

நெடுமாறன் போன்றவர்களுக்கு எதிரி மது அன்று, கலைஞர்தான்! 



நன்றி: நக்கீரன்

3 comments:

  1. சரியான கட்டுரை இது
    திமுக வையும் கருணாநிதி யையும் எதிர்த்து காழ்ப்புணர்வோடு பேசினால் தான் இவர்களால் அரசியல் செய்ய முடியும்.

    ReplyDelete
  2. தமிழ் என்று தொடங்கும் அல்லது தமிழர் பெயரில் கட்சி வைத்துகொண்டிருப்பவர்கள் அனைவருமே ஏன் தன்மானமற்றவர்களாக இருக்கிறார்கள், கூலிக்கு வேலை செய்கிறார்கள். கூலிக்கு ஏற்ப கூச்சலிடுகிறார்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete