தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday 11 March 2016

அரசியல் மேடை - 13

தனித்து நின்று தலை நிமிர்வோம்!


                             
எதிர்பார்த்த நேரத்திலெல்லாம் மௌனம் சாதித்த தே.மு.தி.க. கட்சித் தலைவர் விஜயகாந்த், எதிர்பாராத நேரத்தில் தன் முடிவை இன்று தெரிவித்துள்ளார். தனித்துப் போட்டி அல்லது தன் தலைமையை ஏற்றுக் கொள்பவர்களுடன் இணைந்து போட்டி என்பது அவர் முடிவு. அவருக்கு நம் வாழ்த்துகள்! 


இதனால் தி.மு.க. தொண்டர்களுக்குச் சோர்வு வரும் என்று சிலர் நினைக்கின்றனர். நெருக்கடிகள் வரும் போதெல்லாம் நிமிர்ந்து நிற்கும் தலை தி.மு.க. தொண்டனுடையது. இன்றைய அ.தி.மு.க.வின் அராஜக ஆட்சியை அகற்றுவதற்கு, அதே எண்ணமுள்ள கட்சிகள் இணைந்து நின்றால் நல்லது என்று கருதினோமே அல்லாமல், அவர்களை நம்பி நாம் இல்லை. அவர்கள் நம்முடன் வராததால் நமக்கு எந்த நட்டமும் இல்லை.

கூடுதல் இடங்களில் தி.மு.கழகம் போட்டியிடுவதற்கான வாய்ப்பு இப்போது வந்துள்ளது. புதிய ஊக்கம், புதிய எழுச்சி இதனால் தொண்டர்களிடம் ஏற்படும். இந்தக் குதிரை இனிமேல்தான் இன்னும் விரைந்து ஓடும். 

ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறுவதால், மீண்டும் ஆளும் கட்சி வெற்றி பெரும் என்று ஒரு கருத்து இனிமேல் திட்டமிட்டுப் பரப்பப்படும். பழைய தேர்தல் முடிவுகள் அது உண்மையில்லை என்பதை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. குறிப்பாக, 1989, 1996 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் பல முனைப் போட்டி ஏற்பட்டது. அவ்விரு தேர்தல்களிலும் தி.மு.க.தான் வெற்றி பெற்றது.

1989 தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுத்த இடங்கள் தவிர்த்து, தி.மு.க. 197 இடங்களிலும், அ.தி.மு.க. (ஜெ) 196 இடங்களிலும். அ.தி.மு.க.(ஜா) 175 இடங்களிலும், காங்கிரஸ் 208 இடங்களிலும் போட்டியிட்டன. சிவாஜி கணேசனின் கட்சி ஜானகி அம்மையாரோடு கூட்டணி வைத்திருந்தது. இவை தவிர பா.ஜ.க.  35 இடங்களிலும், பழ.நெடுமாறனின் கட்சி 8 இடங்களிலும் போட்டியிட்டன. மூப்பனார், ஜெயலலிதா, ஜானகி எல்லோரும் அன்று முதலமைச்சர் கனவில் இருந்தனர். ஆனால் அந்தப் பன்முனைப் போட்டியில் ஆளும் கட்சி வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சியான  தி.மு.க. தனியாக 146 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

1996 ஆண்டு பொதுத் தேர்தலில், தி.மு.க. அணி, அ.தி.மு.க. அணி, ம.தி.மு.க அணி, பா.ம.க., வாழப்பாடி காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகள் போட்டியிட்டன. தி.மு.க. வாக்குகளை வைகோ பிரித்து விடுவார் என்று கணக்குப் போடப்பட்டது. ஆனால் அந்தக் கனவு மெய்ப்படவில்லை. தி.மு.க. - த.மா.க. அணியே வெற்றி வாகை சூடியது.

இன்று தி.மு.க., காங்கிரஸ், முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்த  ஒரு கூட்டணி அமைந்துள்ளது. வேறு சில கட்சிகளும் வரலாம். விஜயகாந்த் வராமல் போனதில் அவருக்குத்தான் நட்டம் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டும். தேவையில்லாமல் ஒரு கட்சியை வளர்த்துவிட்ட பழியும் நம்மை வந்தடையாமல் இருக்கும்.

நல்லதே நடந்துள்ளது. தலைவரின் வழிகாட்டல், தளபதியின் உழைப்பு, தொண்டர்களின் வியர்வை நாளைய வெற்றியை நம் மடியில் கொண்டு வந்து சேர்க்கும். 


உடன்பிறப்புகளின் உழைப்பில் வார உறுதிகள் உளவோ!  வாருங்கள் தோழர்களே, இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்!!

10 comments:

  1. neeigal soona koripil iranthu onru mattum nandraka poorikerathu. kalingar achiku varum neram mattum intha arisial kachi thalivarkaluku muthalvar asai vanthu vedukerathu.

    ReplyDelete
  2. திமுக விஜயகாந்த் அவர்களை அதிகமாக நம்பி இருந்ததோ, என்ற என்னம் பரவாலாக உள்ளது! மேலும் ஊழல் என்ற வார்த்தை இளைஞர்கள் மத்தியில் அதிகமாக பேசபடுகிறது! ஏதோ இவர்கள் புனிதர்கள் போலவும் பேசுகிறார்கள்! அனைத்தையும் விட ஒரு காசுகூட, பெறாத கம்யூனிஸ்ட், வைகோ தொல்லை தான் தாங்கமுடியல ஐயா!! முடியல

    ReplyDelete
  3. தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற அறிவிப்பு வந்தவுடன் சமூக வலைதளங்களில் அதிகம் குதூகலித்தவர்கள் அதிமுக கார்ர்களல்ல நாம் தமிழர், மக்கள் நலக்கூட்டணி மற்றும் பாஜகவினரே...இவர்களனைவருக்கும் திமுக வென்றுவிடக் கூடாது என்ற ஒற்றை நோக்கம் மட்டுமே. தங்களின் வெற்றி தோல்வியைப் பற்றி அவர்களுக்குக் கவலையே இல்லை. ஆனாலும் இவர்களையெல்லாம் மீறி எப்படி வெற்றி பெற வேண்டும் என்பது நம் அரக்கர் குலத் தலைவன் கலைஞருக்குத் தெரியும்...

    ReplyDelete
  4. தமிழகத்தில் திமுகவில் மட்டும்தான் இன்றும் கூட சுயலாபம் கருதாத கொள்கை பிடிப்புள்ள தொண்டர்கள் அதிக அளவில் உள்ளார்கள். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தொண்டனும் இப்போது நிம்மதி பெருமூச்சு விடுவான். அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக சுயமரியாயதையை இழக்கவேண்டுமா? அதுவும் ஒரு தராதரம் இல்லாத அரசியல் வேஷங்களுடன் கூட்டு வேண்டுமா என்றெல்லாம் மக்கள் கொஞ்சம் வேதனை பட்டுகொண்டார்கள் என்பதுதான் உண்மை. குடியை ஒழிக்க சபதம் கொண்டுள்ள புதிய ஆட்சி குடிகாரர்களே இல்லாமல் அமையட்டும்.

    ReplyDelete
  5. உங்கள் கடைசி வரியில் குறிப்பிட்ட "இருக்கும் துணைகளை இணைத்துக் கொண்டு, தனியாய் நின்றே தலை நிமிர்வோம்!!" என்ற கருத்தை ஒட்டியே தமிழர் தலைவர் கி வீரமணி அவர்களும் சத்தியமூர்த்திபவனில் ஈ வே கி சம்பத் பிறந்தநாள் கூட்டத்தில் பேசும்போதும் குறிப்பிட்டார்

    ReplyDelete
  6. திமுக விற்கு இது பலவீனம் அல்ல பலம் காலம் தந்த நல் வாய்ப்பு திமுக வில் திராவிட கொள்கை உணர்வு கொண்ட தொண்டர்கள் மத்தியில் ஒருவித சோர்வு இருந்தது அது இப்போது நீங்கியது இனி உத்வேகத்துடன் தொண்டர்கள் செயல்படுவார்கள்

    ReplyDelete
  7. நல்ல வேட்பாளர் தேர்வு, புது பிரச்சார யுக்தி, இன்றைய அரசின் பல்முனைத்தோல்வி பற்றி ஒவ்வொரு வீட்டு பெண்களிடம் சேர்க்கும் முறை. இவை மட்டுமே திமுகவின் வெற்றிக்கான காரணிகளாக இருக்க வேண்டும். நீங்கள் கூறியது போல் பழி விழாமல் இருக்க உதவிய விஜயகாந்துக்கு நன்றி கூறி பரப்புரையை முடுக்கி விட வேண்டும்.

    ReplyDelete
  8. அப்புறம் எதற்கு பழம் ,பால் என்றெல்லாம் உங்கள் முதலாளி அங்காலாய்த்து கொண்டிருந்தார் ?

    ReplyDelete
  9. “ஙப் போல் வளை” – க்கு உதாரணமான கட்சியை கேப்டன் அவர்கள் தவற விட்டுவிட்டார்.

    ReplyDelete
  10. தேமுதிக அழிவதற்கு சரித்திரத்தில் வேறு யாருக்கும் இம்மியளவு இடமில்லை, ஏன் என்றால் அந்த வேலையை விஜயகாந்த் கனகச்சிதமாக செய்து வருகிறார்

    ReplyDelete