தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 27 November 2016

சுயமரியாதை - 44

பிறந்தது திராவிடர் கழகம் 


                                             
கர்ப்பத்தடையைத் தாண்டி, 'கலியாண  ரத்து' (மணமுறிவு) உரிமையையும் பெரியார் வலியுறுத்தினார்.  இன்று மணமுறிவு என்பது சாதாரணமாகி விட்டது. குடும்ப நீதிமன்றங்களில்தான் இன்று மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ளனர். திருமணமாகிச் சில மாதங்களிலேயே நீதிமன்றத்துக்கு வந்துவிடும் இளைய தலைமுறையினரை இன்று நாம் பார்க்கிறோம். இதனையா பெரியார் விரும்பினார் என்று கேட்கலாம்.


பெண்கள் எந்த உரிமையுமற்று அடிமைகளாக இருந்த அன்றைய சமூகத்தில் பெரியார் அந்த ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அப்போதும் கூட அதனை இரு பாலாருக்கும் வேண்டும் என்றுதான் அவர் கூறினார். "திருமண இரத்து என்பது, கணவன்-மனைவி ஆகியவர்களுக்கு இருக்க வேண்டிய தற்காப்பு ஆயுதம். இதைக் கொண்டு இருவருமே அடிக்கடி குத்திக் கொள்வார்கள் என்று கூறுவது அபத்தம்"  (1946 செப்.4  - விடுதலை - தலையங்கம்) என்றார் பெரியார். ஆனால் இன்று நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று நமக்குத் தோன்றலாம். சில மாற்றங்களும், உரிமைகளும் தொடங்கும்போது இப்படித்தான் இருக்கும். காலப்போக்கில் இவை சரியாகிவிடும். அதே நேரத்தில் இனி ஆண்கள் பெண்களை அடிமைகளாக வைத்துக் கொள்ள இயலாது என்ற நிலை உருவாகிக் கொண்டுள்ளதை எண்ணி நாம் அனைவரும் மகிழ வேண்டும்.

'எல்லாத் திருமணங்களையும் பதிவு செய்துவிட வேண்டும்" என்றும் பெரியார் கூறினார். அவருடைய நோக்கமெல்லாம் முழுமையான குடும்ப ஜனநாயகத்தைக் கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான். என்ன செய்தும் குடும்பத்தில் ஜனநாயகம்  வரவில்லை, ஆண்களின் கையே ஓங்கியிருக்கிறது என்றால் என்ன செய்யலாம் என்பது குறித்து, 24.06.1973 அன்று பெங்களூரில் அவர் பேசிய பேச்சு ஒன்று இன்றுவரை பலரால் எதிர்மறையாகக் கூறப்பட்டு வருகிறது.  அந்தக் கூட்டத்தில் பெரியார், 

"இதற்கு ஒரு பரிகாரம் என்னவென்றால், 'கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன்-மனைவி என்ற உறவும், பெண் அடிமைத்தன்மையும் உருவாகிறது" 

என்று பேசினார். இக்கூற்றின் உள்ளார்ந்த பொருளை விட்டுவிட்டு, பெரியார் தன் இறுதி நாள் பேச்சுகளில் இந்தச் சமுதாயத்தையே சீர்குலைக்கும் வகையில் பேசிவிட்டார் என்று சில 'அறிவுஜீவிகள்' குரல்கொடுத்துக் கொண்டுள்ளனர். குடும்ப ஜனநாயகம் என்பதுதான் அவருடைய இலக்கு. அது கிட்டாது என்றால், இந்தக் குடும்ப அமைப்பையே புறக்கணிக்கும் அளவுக்கு அவர் சென்றார். இந்த அமைப்பு முறை, நாம் வகுத்துள்ள பண்பாட்டு நெறிகள் போன்ற எல்லாவற்றையும் தாண்டி, சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம் ஆகிய மூன்றுமே பெரியாருக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் பெரிதெனப்பட்டன.  

இக்கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழ்ச் சமூகம் என்ற பொருளில்தான், அவர் 'திராவிடம்' என்னும் சொல்லை முன்னெடுத்தார். தமிழன் என்று சொன்னால், பார்ப்பான் நானும் தமிழன்தான் என்று சொல்லி உள்ளே வந்துவிடுவான், திராவிடன் என்றால் எந்தப் பார்ப்பானும் தன்னை ஒரு திராவிடன் என்று சொல்ல முன்வரமாட்டான் என்றார் பெரியார்.

19ஆம் நூற்றாண்டிலேயே திராவிடன் என்ற சொல் வழக்கிற்கு வந்துவிட்டது. கால்டுவெல்லுக்குப் பிறகு அச்சொல், தமிழனுக்குப் பெருமை சேர்க்கும் சொல்லாயிற்று. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் அயோத்திதாசப் பண்டிதர், அச்சொல்லைக் கொண்டு ஓர் இயக்கத்தைத் தொடங்கினார். தன் இறுதிக் காலம் வரையில் தன் எழுத்துகளில் அவர் அச்சொல்லைப் பயன்படுத்தினார்.

1912 ஆம் ஆண்டு சி. நடேசனார் தொடங்கிய "மெட்றாஸ் யுனைடெட் லீக்' என்னும் சங்கம், மறு  ஆண்டு 'திராவிடர் சங்கம்' என்று மாற்றப்பட்டது. 'பிராமணர் அல்லாத சங்கம் என்னும் பெயர் முதலில் முன் மொழியப்பட்டு, 'எதிர்மறையாக நாம் ஏன் ஒரு பெயரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்' என்ற சிந்தனையின் அடிப்படையில் திராவிடர் சங்கம் ஆனது.  ஆதலால், பார்ப்பனர் அல்லாதோர் என்பதே திராவிடர் என்றானது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

காங்கிரசை விட்டு விலகிச் சுயமரியாதை இயக்கம் கண்ட பெரியார்,  அந்த இயக்கத்தில் இருந்தபடியே, 1938இல், நீதிக்கட்சிக்குத் தலைவரானார். 1944 ஆகஸ்டில், நீதிக்கட்சி 'திராவிடர் கழகம்' என்று பெயர் மாற்றப்பட்டது. சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டு,  1944 ஆம் ஆண்டு இம்மண்ணில் திராவிடர் கழகம் பிறந்தது. 

                                                                 (அடுத்த இதழில் நிறைவடையும்)

நன்றி: நக்கீரன்     

1 comment:

  1. மு. சந்தோஷ் குமார்29 November 2016 at 18:38

    நெடுந்தொடராக வளரும் என் நினைத்தேன்..
    குறுந்தொடராக நின்றது வருத்தமே
    ஆனாலும் நிறைவாக உள்ளது.

    ReplyDelete