தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 24 November 2016

எது மூன்றாவது 'பெரிய' கட்சி?



தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள் பல செய்திகளை நமக்குக் கோடிட்டுக் காட்டுகின்றன. ஆனால் ஊடகங்கள் பலவும், உண்மையல்லாத ஒரு செய்தியினைப் பெரிதுபடுத்துகின்றன. தமிழ்நாட்டில், பா.ஜ.க., மூன்றாவது பெரிய கட்சியாய் உருவெடுத்துள்ளது என்பதுதான் அந்த உண்மைக்கு மாறான செய்தி! 


தேர்தல் முடிவுகளைச் சற்றுக் கூர்மையாகக் கவனித்தால் எது உண்மை என்று நமக்குப் புலப்படும். தஞ்சாவூரில் 1,86,444 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. பெற்றிருப்பது 3806 வாக்குகள் மட்டுமே. தே.மு.தி.க.1534 வாக்குகளையும், பா.ம.க. 794 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி 729 வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவிற்கு 2295 வாக்குகள் விழுந்துள்ளன.  அப்படிப் பார்த்தால், நான்காவது 'பெரிய' கட்சி நோட்டாதான்.

அரவக்குறிச்சியில் 1,64,582 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. 3162 வாக்குகளையும், தே.மு.தி.க. 1513 வாக்குகளையும், பா.ம.க. 995 வாக்குகளையும், நாம் தமிழர் 482 வாக்குகளையும் பெற்றுள்ளன. நோட்டாவுக்கு 1538 வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கும் நோட்டாதான் 4ஆவது இடத்தில் உள்ளது. 

திருப்பரங்குன்றம் தொகுதியில் மொத்தம் 2,03,098 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றுள் பா.ஜ.க. பெற்றிருப்பது 6930 வாக்குகள். தே .மு.தி.க. 4105 வாக்குகளும், நாம் தமிழர் 568 வாக்குகளும் பெற்றுள்ளன. நோட்டாவுக்கு 2214 வாக்குகள் கிடைத்துள்ளன. பா.ம.க. அங்கு போட்டியிடவில்லை. 

ஒவ்வொரு தொகுதியிலும் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய  இரு கட்சிகளும் 92 முதல் 95 விழுக்காடு வாக்குகளைப் பெற்றுவிட்ட பின்னர், மீதமுள்ள 5-8 சதவீத வாக்குகளைத்தான் அனைத்துக் கட்சிகளும், சுயேட்சைகளும், நோட்டாவும் பகிர்ந்து கொண்டுள்ளன. சிலவிடங்களில் சில சுயேட்சைகள் இவர்களை விடக் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளனர்.  இதுதான் இந்தக் கட்சிகளுக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கு. இதனை வைத்துக் கொண்டுதான், இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று நாங்கள்தான் என்று சற்றும் வெட்கப்படாமல் கூறிக்கொண்டுள்ளனர்.  புதுவையில் நாம் தமிழரின் நிலை மிகவும் மோசம். அங்கு அவர்கள் வாங்கியுள்ள வாக்குகள் வெறும் 90 மட்டுமே. 

இதில் பா.ஜ.க. நாங்கள்தான் மூன்றாவது பெரிய கட்சி என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் அவர்கள் மூன்றாவது இடத்தில் இருப்பது உண்மைதான். ஆனால் அது ஏணி வைத்தாலும் இரண்டாவது இடத்தைக் கூட எட்டமுடியாத மூன்றாவது இடம். இந்தத் தேர்தலில், வேறு பல காட்சிகள் போட்டியிடாத நிலையில்,  மூன்றாவது இடத்தில் உள்ள கட்சி  என்பது வேறு, மூன்றாவது பெரிய கட்சி என்பது வேறு.  'பெரிய' என்னும் சொல்லுக்கு என்ன பொருள் என்பதே நமக்கு விளங்கவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதியில் பா.ஜ.க. 6930 வாக்குகள் வாங்கியிருக்கிறதே என்று வியப்படைய வேண்டாம். அங்கு நடந்தது இடைத்தேர்தல். ஆறு மாதங்களுக்கு முன் அதே தொகுதியில் நடந்த பொதுத் தேர்தலில் அக்கட்சி வாங்கியிருந்த வாக்குகள் 7698. ஆறு மாதங்களில் அக்கட்சியின் வாக்குகளில் 768 வாக்குகள் குறைந்துள்ளன என்பதுதான் உண்மை. மற்ற இரு தொகுதிகளிலும் பொதுத் தேர்தல் நடைபெறவில்லை. எனவே ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை. 

மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற, நிதிவலிமை, அமைப்பு வலிமை எல்லாம் பெற்றுள்ள ஒரு கட்சி சில ஆயிரங்கள் வாக்குகளைத்தான் பெற முடிகிறது என்பது அவமானமே தவிர, பெருமை இல்லை.

இந்த இடைத்தேர்தல் சொல்லியுள்ள வேறு சில உண்மைகளையும் நாம் பார்க்க வேண்டும்.  "நான் கிங் ஆகணுமா, கிங் மேக்கர் ஆகணுமா" என்று பொதுத்தேர்தலில் கேட்டுக்கொண்டிருந்த விஜய்காந்தைப் பார்த்து மக்கள், "நீங்கள் ஒன்றும் ஆக வேண்டாம், சும்மா இருந்தால் போதும்" என்று இப்போது தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். மூன்று தொகுதிகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள தொகுதி என்பதாலும், அவரே  நேரில் வந்து ஆதரவு கேட்ட தொகுதி என்பதாலும், அங்கு வாக்குகள் சற்றுக் கூடுதலாகக் கிடைக்க வாய்ப்புண்டு என்ற எண்ணம் பலருக்கும்  இருந்தது. ஆனால் அங்கும் பதிவான இரண்டு லட்சத்திற்கும் கூடுதலான வாக்குகளில், வெறும் 5000 வாக்குகளைக் கூட அக்கட்சியால் பெற முடியவில்லை. 

'முதல்வர் வேட்பாளர்' அன்புமணியின் கட்சி போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் ஆயிரம் வாக்குகளைக் கூட வாங்க முடியவில்லை. நாம் தமிழர் கட்சியின் நிலைமை குறித்து யாரும் பேசவில்லை. பேசுகின்ற நிலைக்குக் கூட அது வரவில்லை. 

தனித்தனியாக எல்லாக் கட்சிகளும் தமிழ்நாட்டில் போட்டியிட்டால், இன்றும் மூன்றாவது இடத்திற்கு வர காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்புள்ளது. அப்போதும் கூட, மூன்றாவது 'பெரிய' கட்சியாக அது வருவதற்கில்லை. தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு காட்சிகளையும் தாண்டி, மூன்றாவது பெரிய கட்சி என்று ஏதும் இன்று தமிழகத்தில் இல்லை. இந்த உண்மை சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் உண்மை இதுதான்!


14 comments:

  1. என்ன ஆனாலும் சரி காங்கிரஸ், பாஜக இவுங்க ரெண்டு பேரும் தமிழ் நாட்டுல கால் வைக்க முடியாத நிலை. இதற்கான பல கா ரணங்களில் ஒன்று இந்த சிறு கட்சிகள். அதனாலேயே இவர்களின் இருப்பு அவசியமாகின்றது ..

    ReplyDelete
  2. பொதுத் தேர்தலை ஒப்பிடும் பொது BJPக்கு திருப்பரங்குன்றம் தொகுதியில் 768 வாக்குகள் குறைவாக கிடைத்துள்ளன என்று குறிப்பிடும் நீங்கள், மொத வாக்கு பதிவு அதிகரித்துள்ள நிலையிலும் தி.மு.க. விற்கு 1௦௦ வாக்குகள் குறைவாக கிடைதுள்ள்ளன என்பதை ஏன் குறிப்பிடவில்லை. இத்தனைக்கும் மக்கள் நலக் கூட்டணி போட்டியிடாததால் , அது பொதுத்தேர்தலில் பெற்ற 15191 வாக்குகளின் பலன் தி.மு.கவிற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டுமே. மாறாக அந்த வாக்குகளும் அதிமுக விற்கு போய், அவர்கள் 20,000 வாக்குகள் கூடுலாக பெற்றதன் பொருள் என்ன? .

    தி.மு.க பாரம்பரியமாக வெல்லும் தஞ்சை,அரவக்குறிச்சியில்- அதிமுக வுக்கு இணையாக நீங்களும் பண முதலைகளை இறக்கியும் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில, அதுவும் ஜெயா மருத்துவமனையில் இருக்கும்போது, தி.மு.க தோல்வி அடைந்திருக்கிறது. காரணம் பெரும்பான்மை வாக்காளர்கள் தி.மு,க வை நம்ப மறுக்கிறார்கள் என்பது தான்.

    அது மட்டுமல்ல இடை தேர்தல் முடிவுகள் ( புதிய தலைமுறை தொலைக்கட்சியில் தெரிவித்த) உங்களது தனிப்பட்ட கணிப்பையும் தவறாக்கி விட்டது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்..

    ReplyDelete
    Replies
    1. இடை தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றி பெரும் என்று அறியாதவரா நீங்கள். இந்த தேர்தலில் திமுக வளர்ச்சி அடைந்துள்ளது

      Delete
  3. இரத்தினவேல்24 November 2016 at 14:09

    இடைத் தேர்தலில், டெபாசிட் இழந்த கட்சிகளுக்குள் அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக வேண்டுமானால் பா.ஜ.க. பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்.

    ReplyDelete
  4. NOTA oru katchiyaa ? Read the news properly, 'BJP is the PARTY who came third...'

    ReplyDelete
  5. 2016 பொதுத்தேர்தலின் போது திருப்பரங்குன்றத்தில் அதிமுக வேட்பாளர் சீனிவேல் பெற்ற ஓட்டு எண்ணிக்கை 93,453 திமுக மணிமாறன் பெற்ற ஓட்டு எண்ணிக்கை 70,461 அதிமுக B டீம் அதாவது மக்கள் நலக்கூட்டணி பெற்ற வாக்கு எண்ணிக்கை 15,275 இப்போது இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் போஸ் பெற்றிருக்கிற வாக்கு எண்ணிக்கை 1,13,076 திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் பெற்றிருக்கிற ஓட்டு எண்ணிக்கை 70,463 ஆக பொதுத்தேர்தலிலிலும் இடைத்தேர்தலிலும் ஏறத்தாழ திமுக ஒரே மாதிர ஓட்டு எண்ணிக்கையையே பெற்று இருக்கிறது மக்கள் நல அதிமுக B அணியின் மொத்த ஓட்டும் ( தே தி மு க இல்லாமல்) அப்படியே அதிமுகவுக்க விழுந்திருக்கிறது இந்த ஒரு காரணத்தாலேயே மிஸ்டர் 1500 கோடி தேர்தலை புறக்கணித்தார் அங்கு உள்ள அந்த கட்சியைச்சேர்நத திருவாளர் தூய்மைகளுக்கு கட்டாயம் நல்ல கவனிப்பு இருந்திருக்கும் மேலும் பொதுத்தேர்தலிலே இந்த பணபலத்தை அதிகார பலத்தை பிரயோகிக்கும் ஆளும் கட்சியினருக்கு இடைத்தேர்தல் எல்லாம் ஜுஜுபி இதற்கு முன்னர் நடந்த இடைத்தேர்தல்களில் எல்லாம் எம் ஜி ஆர் காலம் உட்பட தேர்தலில் திமுக தோல்வி அடைந்த நேரத்தில் கூட தபால் ஓட்டுக்களை திமுக அதிக பெற்று வந்திருக்கிறது தபால் ஓட்டில் கூட தடாலடி கோல்மால் செய்யக்கூடிய திறமை மற்றும் பெருமை அதிமுகவையே சேரும்

    ReplyDelete
    Replies
    1. செல்வா சிவா: உங்களது அலசல் சகிக்க வில்லை. மக்கள் நலக்கூட்டணி போட்டியிட்டாலும் போட்டியிடாவிட்டாலும் தி.மு.க. வாங்கிய வோட்டு ஒன்று தான். பெரும் வித்தியாசமில்லை. மக்கள் நலக்கூட்டணியால் பிரிந்தது அ.தி.மு.க. ஒட்டு தான். தேர்தலுக்கு முன்: 93,453 தேர்தலுக்கு பின்: 1,13,076.

      அப்படி பார்த்தால் மக்கள் நலக்கூட்டணி அ.தி.மு.க. வின் B-டீம் என்பதை விட தி.மு.க. வின் எதிர் ஓட்டுக்கள் என்று கூறவேண்டும். தி.மு.க. எதிர் ஓட்டுக்களை பிரிக்க அ.தி.மு.க. ஏன் 1500 கோடி செலவு செய்ய வேண்டும் ? ஒரு சமயம் 1500 கோடி தி.மு.க. கொடுத்ததோ ?

      Delete
    2. So you,Subavee,Veeramani,Kalaignar, Stalin etc etc., should understand the matter of fact that DMK can't penetrate new turf they can hold only existing votes[alone they are never going to get it future also]and depend heavily on alliance to bridge the gap and capture power!.But unfortunately they are so so selfish and narrow minded as they want alliance sweat but don't want to share sweet[power]with the alliance who has the power to raise DMK to the throne[as seen before in 1996&2006].Atleast next election openly declare you share power with alliances[and also promise alliance to give juicy portfolios as they demanded in delhi in 2004&2009] then DMK could win!.

      Delete
    3. Anonymous ஆக வரும் பதிவுகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை நீங்கள் தங்கள் பெயருடன் பதிவு செய்தால் எத்தகைய கேள்விகளுக்கும் பதில் சொல்லத்தயாராக இருக்கிறேன்

      Delete
    4. நண்பர் செல்வா சிவா,உங்கள் கூற்றுப்படி அதிமுக B டீம் ஆன மக்கள் நலக் கூட்டணி 2016 May பொதுத் தேர்தலில் போட்டியிடாமல் இருந்தால் அந்த வாக்குகளும் (இப்போதைய இடைத்தேர்தல் போலவே ) அதிமுக விற்குப் போய் இருக்கும் என்று ஆகிறது. ஒரு வேலை அப்படி நடந்திருந்தால் , அதிமுக இன்னும் கூடுதலாக தொகுதிகளை பெற்றிருக்கும் என்றும் பொருள் கொள்ள வேண்டியிருக்கும். நீங்க Same side goal போடுறீங்க.

      Delete
    5. செல்வா சிவா: நீங்கள் பெரும் அரசியல் திறமையை உம்முள் வைத்துள்ளீர் ! பாராட்டுக்கள் ! Anonymous ஆகா இருந்தால் என்ன ஆண்டவனாக இருந்தால் என்ன ? கேள்விக்குத்தானே பதில் ? ஆளுக்கு என்றால் ? எமது பெயர் தானே வேண்டும் - சிவச்செல்வன்.

      Delete
  6. எனக்கு ஒரு கண்(திமுகவின் தோல்வி)போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும்(பாஜகவின் படுதோல்வி)போகிவிட்டதே என்று மகிழும் நிலைக்கு வந்துவிட்ட உங்களின் எண்ணம்,கருத்து உன்னதமானது,தன்னிகரற்றது!

    ReplyDelete
  7. பிஜெபி ஆயிரக்கணக்கில் ஓட்டு வாங்குவதென்பது ஒரு நல்ல அறிகுறி அல்ல.அதனை மறைத்து அதை குறுக்கி பார்ப்பதும் அதனை எள்ளி நகையாடுவதும் ஒரு பக்கா திமுக உடன்பிறப்பிற்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம்.தனி இயக்கமாக பயணப்படும் ஒரு நட்பு சக்தியாக திமுகவை எச்சரிக்க வேண்டிய தேவை உங்களுக்கில்லையா?உண்மையில் தஞ்சை தொகுதியில் திமுக வென்றிருக்க வேண்டும்.தன் மீது எந்த அரசியல் கறையுமற்ற இளம் மருத்துவரான அவரை தனித்தன்மை கொண்டவராக தொகுதியின் தேவையறிந்து நிறைவேற்றக் கூடியவராக முன்னிறுத்தும் வாய்ப்பை புறக்கணித்து அதிமுக வேட்பாளரை ஊர்வலமாக அழைத்துபோய் ஓட்டு கேட்ட அதே பாணியை பின்பற்றியது தான் சறுக்கலின் முதல்பாதி.அதிமுக அப்படி மேலோட்டமாக உலா வந்ததே தவிர வேறொரு வகையில் ஒட்டுக்கு அதிக பணம் கொடுத்து வென்று விட்டனர்.அந்த போட்டியில் திமுக நாலில் ஒரு பங்கு மட்டுமே தர முடிந்தது.ஆக திமுக ஓட்டுக்கு பணம் என்கிற போட்டியில் இறங்காமல் வேட்பாளரின் தனித்தன்மையையும் மக்கள் பிரச்சினையையும் முன்னிறுத்தி ஒரு உத்தியை வகுத்திருந்தால் அது ஜனநாயகத்திற்கும் வலு சேர்த்திருக்கும்.ஆனால் இப்படியெல்லாம் திமுக தலைமையிடம் போய் யோசனை சொன்னால் ”நம்மள ஒழிக்க பார்க்கிறார்” என்று உங்களையே அப்புறம் உள்ளே சேர்க்க மாட்டார்கள்.அந்தளவிற்கு திமுக திரும்பி வர இயலாத தூரத்தை தாண்டி விட்டார்கள்.பாவம் உங்களை குறை சொல்லியும் பிரயோசனமில்லை.

    ReplyDelete
  8. இடைத் தேர்தல் என்பதே ஆளும் கட்சியின் முடிவுகளாகிப் போன காலமிது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    சனநாயக கடமையை புறக்கனித்தல் கூடாது என்கிற அடிப்படையிலேயே தி.மு.க போட்டியிட்டது.

    செயலலிதா வின் அனுதாபம் பெண்களிடத்தில், தேர்தல் ஆனையத்தின் பட்டவர்தனமான ஆதரவு, மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் மாநில அரசுடனான இரகசிய உறவு இவைகளை தான்டி தி.மு.கழகத்தின் வாக்குகளை வெற்றியாகவே உணர்கிறேன்.

    ReplyDelete