தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 13 March 2017

வடமாநிலத் தேர்தல்கள் கற்றுத்தரும் பாடம்


 உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சில செய்திகளையும்,சில  பாடங்களையும் கொண்டு வந்துள்ளன.  

உ.பி.யிலும், உத்தரகாண்டிலும் பா.ஜ.க பெற்றுள்ள பெரும் வெற்றியைக் குறைத்து மதிப்பிட்டு நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. வாக்கு இயந்திரத்தில் ஏதோ செய்து விட்டார்கள் என்று மாயாவதி சொல்வதெல்லாம் நம்பக்  கூடியதன்று. அவ்வாறெனில், பஞ்சாபில் மட்டும் இயந்திரங்களைத் தங்கள் விருப்பத்திற்கு மாற்ற முடியாமல் போய்விடுமா என்ன


குடும்பத் சண்டையும், கூட்டணிச் சண்டையும்தான் தோல்விக்குக் காரணம் என்கிறார் பிஹார் முதலமைச்சர் நித்திஷ் குமார். அதில் ஒரு உண்மை இருக்கவே செய்கிறது.தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னால்  உ.பி.யில் அப்பா, பிள்ளை, சித்தப்பா இடையே நடந்த குடுமிபிடிச் சண்டையின் நெடி இந்தியா முழுவதும் வீசியது.   அரசியல்வாதிகளின் மீதே ஓர் அருவருப்பை அது  கொண்டுவந்தது. இவர் அவரை நீக்குவதும், அவர் இவரை நீக்குவதுமாகச் சிறுபிள்ளை விளையாட்டு அங்கு நடைபெற்றது. அக்கட்சியின் ஆதரவாளர்களே முகம் சுழிக்கும் அளவுக்கு அந்தக் கலவரங்கள் அங்கு நடைபெற்றன. சமாஜ்வாதி, காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தோல்வி அடைந்ததற்கு அது ஒரு முதன்மையான காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது. 

நிதிஷ் குமார் சொல்வதை போல, பெரும் கூட்டணி உருவாகாமல் போனதும் இன்னொரு காரணம்தான். பிஹாரில் நிதிஷ், லாலு, காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஆனால், உ.பி.யில், முலாயம், மாயாவதி இருவரும் ஒன்று சேரவே இல்லை. அதனால் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகள் பிரிந்தன. அது பா.ஜ.க. விற்கு நல்லதாகப் போய்விட்டது.  

மேலே சொல்லப்பட்டுள்ளவை உண்மையான காரணங்கள்தான் என்றாலும், இவை சில இடங்களில் வெற்றியைத் தீர்மானிப்பதற்கு உதவியிருக்கலாம். அல்லது, வாக்குகள் வித்தியாசத்தைக் கூட்டுவதற்குப் பயன்பட்டிருக்கலாம். அவ்வளவுதானே தவிர, இத்தனை பெரிய வெற்றிக்கு அவை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. நான்கில் மூன்று பங்கு வெற்றியை ஒரு கட்சி பெற வேண்டும் என்றால் அது ஒரு அலை, சுனாமி அலை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு பெரிய அலை வீசுவதற்கு என்ன காரணம்?

உத்தரகாண்ட் மாநிலம் தனிப் போக்குடையது. உ.பி.யிலிருந்து பிரிக்கப்பட்டு, இந்தியாவின் 27ஆவது மாநிலமாக, 2000 நவம்பரில் அது உருவெடுத்தது. அங்கு பார்ப்பனர்களும், ராஜ் புத்திரர்களும் எண்ணிக்கையில் மிகுதி. வருண அதர்மம் அங்கு பெரும்பான்மையோரால் ஏற்கப்பட்ட ஒன்று. ஒரு கோடியே  ஒரு லட்சம் க்களை மட்டுமே கொண்டுள்ள சிறிய மாநிலமான உத்தர்காண்டில் இந்தி ஆட்சி மொழி, சமற்கிருதம் இணை ஆட்சிமொழி.  பார்ப்பனர்களால்  'தேவபூமி' என்று அழைக்கப்படும் மாநிலமும் உத்த்ரகாண்ட்தான். எனவே அங்கு பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றியைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றாலும், அவ்வளவு பெரிய வெற்றிக்கு என்ன காரணம் என்று சிந்தித்தல் நல்லது. 

சென்ற தேர்தலில் (2012), அங்கு காங்கிரஸ், பா.ஜ.க.இரண்டு கட்சிகளும் சமமான இடங்களை பெற்றிருந்தன.  காங்கிரஸ் 32 இடங்களிலும், பா.ஜ.க. 31 இடங்களிலும் வென்றன.யாருக்கும் பெரும்பான்மை இல்லை. இறுதியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆனால் 2016 மார்ச்சில் காங்கிரசின் 9 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்த்தினர். பிறகு ஆட்சி கலைக்கப்பட்டதும், உயர்நீதி மன்றம்உச்ச நீதி மன்றம் என்று வழக்குகள் நடந்ததும் நாம் அறிந்தவையே. இந்தக் குழப்பங்களும், காங்கிரஸ் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்ததற்குக் காரணங்களாக இருக்கலாம். 

உத்தர்காண்டில் இஸ்லாமியர்களின் வாக்குகள் குறைவு. ஆனால் உ.பி.யில் ஏறத்தாழ 21 விழுக்காடு இஸ்லாமியர்களின் வாக்குகள் உள்ளன. பிறகு ஏன் சமாஜ்வாதி,  கங்கிரசுக்கு இவ்வளவு பெரிய வீழ்ச்சி?   முத்தலாக் விவகாரத்தில், இஸ்லாமியப் பெண்கள்  ஏமாந்து, பா.ஜ.க வை நம்பியிருக்கக் கூடும் என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது. அதனால் இஸ்லாமிய பெண்களின் வாக்குகளில் ஒரு பகுதி அங்கு சென்றிருக்க வாய்ப்புள்ளது. அது குறித்த ஆய்வும் தேவைப்படுகின்றது..

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை ஏழை, எளிய மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. அது நடுத்தட்டு மக்களைத்தான் பெரிதும் பாதித்தது. ஆனால் நடுத்தட்டில் உள்ள இளைஞர்கள் பலர் இன்னும் மோடி மயக்கத்திலிருந்து விடுபடாமல் உள்ளனர் என்ற உண்மையையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.   

அதே நேரத்தில் பஞ்சாபில் காங்கிரஸ் பெற்றுள்ள மகத்தான வெற்றியையும், பா.ஜ.க  அடைந்துள்ள மகத்தான தோல்வியையும் அலட்சியப்படுத்த வேண்டியதில்லை.சென்ற முறை ஆளும் கட்சியாய் இருந்த பா.ஜ.க இப்போது அங்கு மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. அகாலிதளக் கூட்டணிக்கு 18 இடங்கள் கிடைத்துள்ளன என்ற போதிலும், பா.ஜ.க பெற்றுள்ள இடங்கள் வெறும் மூன்று மட்டும்தான். கோவாவில் அக்கட்சி ஆட்சியை இழந்துள்ளது. எனவே, பா.ஜ.க. வின் வெற்றியினால் நாம் விரக்தி அடைந்து விடும் எல்லைக்கும் செல்ல வேண்டியதில்லை.  

எனினும் சில பாடங்களைப்  பல கட்சிகளும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. முதலில் காங்கிரஸ், தன் உட்கட்சி சண்டையை ஓரளவுக்கேனும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். தங்களைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளையும்  'சம தூரத்தில்' வைத்துப் பார்க்கும் 'தனிப்பெரும் சித்தாந்தத்தை'ச்  சற்று ஒதுக்கி வைத்து, பொதுவுடமைக் கட்சிகள், பொது எதிரியை வீழ்த்தும் குறிக்கோளை முன்னெடுக்க வேண்டும்.  பொது மக்களை மோடி மாயையிலிருந்து முற்றுமாக வெளிக்கொண்டுவர வேண்டும். 

இந்த உறுதிகளை எடுத்துக்கொண்டு அனைவரும் பணியாற்றவில்லை என்றால், காவிப்படையினர் நாட்டை மலிவு விலைக்கு, 'கார்ப்பொரேட்' முதலாளிகளிடம் விற்று விடுவார்கள். அம்பேத்கார் சொன்ன, 'பார்ப்பனியம், முதலாளித்துவம்' ஆகிய இரு சமூகத் தீமைகளும் இங்கு சலங்கை கட்டி ஆடுவதை வேடிக்கை பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியிருக்காது!.  


11 comments:

  1. காங்கிரஸ் பாடம் கற்றுக்கொள்ளுமா என்றால் அது இல்லை என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. இப்போது அதன் நிலமை, சரியான வியூகம் அமைத்து களபணியாற்ற திறமையான தலைமை இன்றி பறக்கும் காற்று குதிரையாக உள்ளது. மண் குதிரையாக கூட அல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய இயக்கங்கள் பொது எதிரியை எதிர்த்து களமாட வேண்டிய நிலைக்கு உள்ளது. வரலாற்றில் தமிழகத்தை பல முறை இந்தியாவே குனிந்து பார்த்த நேரங்கள் உண்டு. அப்படி ஒரு ஒருங்கிணைப்பு தற்போது காலத்தின் கட்டாயம் என்று நினைக்கிறேன். A compromise on their individual agenda is the need of the hour.

    ReplyDelete
  2. காவியின் ஆட்டத்தை முடிப்பதற்கு பொது எதிரியாக பாசக பார்க்கப்பட வேண்டும்.
    நாடாளுமன்ற தேர்தலில் இது வெளிபடுமானால் காவி ஆட்டம் தடைபடும்.

    ReplyDelete
  3. எது எப்படி ஆயினும் பிஜேபியை உண்மையிலேயே பொது எதிரியாக காங்கிரஸ் பார்ப்பதாக தெரியவில்லை. காங்கிரஸ் இந்துத்வா கொள்கையை நாசகார விஷயமாக கருதவில்லை. கம்யூனிஸ்டு கட்சி நடத்துபவர்களின் தலைமைப் பீடத்தில் பார்ப்பனரே அமர்ந்து இருக்கும் போது அவர்களுக்கு உள்ளுக்குள் இந்துத்வா உணர்வு இருக்கு என்று குற்றம் சாட்ட வேண்டியுள்ளது. பகு.ச.க. சமாஜ்வாடி கட்சி என்று எதை எடுத்துக்கொண்டாலும் அதன் தலைமைகளுக்கு பதவிபோதைதான் உள்ளது. வடநாட்டு பார்ப்பான் பார்பனரல்லாதோர் மத்தியில் சுணக்கம் இல்லாமல் இணக்கமே இழையோடுகிறது என்று ஐயமுறவேண்டியுள்ளது. பிஜேபி எனும்பேரில் காங்கிரஸ் ஆளுகிறது காங்கிரஸ் எனும் பேரில் பிஜேபி ஆட்டம் போடுகிறது. பார்ப்பான் தலைமை கொண்ட கம்யூனிஸ்டு இந்துத்வா போக்கரிகளுடன் கம்யூனல் சமரசம் செய்துகொண்டுவிட்டது. அவர்களுக்கு மத்தியில் அரசியல்வாதிகள சகஜமாக போய்வந்துகொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பிஜேபி காலூன்றயியலாது என்று ஒரு முன்னாள் பிஜேபி மனிதர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகி திருவாய் மலர்கிறார்...இந்த நிலையில் இந்த தேர்தலில் பிஜேபி வெற்றி மியூச்சுவல் அன்டர்ஸ்டான்டிங்கு வெற்றி. அவாளின் கொண்டாட்டம் நமமவாளுக்குத்தான் திண்டாட்டம். தன் கையே தனக்கு உதவி என்பதைப்போல திட்டமிடலே சரியான தற்காப்பு அரசியல். நான் அடிப்பதைப்போல அடிக்கிறேன் நீ அழுவதைப்போல அழு என்பதுபோல இந்த தேர்தல் நடந்தது.

    ReplyDelete
  4. மணிப்பூரை தவிர ஐந்து மாநில தேர்தலில் மாநிலத்தில் நடைபெறும் ஆட்சிக்கு எதிராக இருக்கும்
    மக்கள் மனநிலையை இது காட்டுகிறது !
    உத்தரபிரதேச , உத்தர்காண்டில் - சமாஜுவாடிக்கு, காங்கிரஸுக்கு எதிராகவும் !
    கோவா வில் ஆளும் - பிஜேபி கு எதிராகவும் !
    பஞ்சாபில் - ஆளும் பிஜேபி கு எதிராகவும் !
    மணிப்பூரில் மட்டும் ஆளும் காங்கிரஸுக்கு ஆதரவு !
    இதை வைத்து பாராளுமன்ற தேர்தலை ஒப்பீடு செய்வது தவறு !
    ஆனால் காங்கிரஸ் பொறுத்தவரை
    மக்கள் செல்வாக்கு மிக்க மாநில தலைவரைகளை , பிரிந்து போனவர்களை மீண்டும் காங்கிரஸிக்கு கொண்டு
    வருவது முக்கியம் !
    கவரவம் பார்க்காமல் S M கிருஷ்ணா , ஜெகன் மோகன் ரெட்டி , சந்திரசேகர் ராவ் போன்ற முன்னாள் காங்கிரஸ் தலைவர்களை
    கொண்டுவர வேண்டிய நேரம் !

    ReplyDelete
    Replies
    1. Wrong analysis.. In both GOA and Manipur BJP vote percentage is higher than Congress. Your view on anti-incumbency is not right. Popular vote is with BJP.

      Delete
  5. இந்த தேர்தலில் பிஜேபி ஜெயித்ததிற்கு மோடி ஓபிசி என்பது முக்கிய காரணம் என்று ஊடக விவாதங்களில் பார்க்க நேரிட்டது. இந்தியாவில் சில லட்சங்களே வசிக்கும் பார்ப்பணர்களின் கட்சி பிஜேபி என்று பயம் கொள்வது ஏன். அந்த கட்சியை ஓபிசி கட்சி என்று சொல்ல ஆரம்பிக்கலாமே. அது நம் எல்லாருக்கும் தலித்துகளுக்கும் சேர்த்து நல்லதுதானே. தமிழகத்தில் கூட தலைமை பார்ப்பணர்கள் கையில் இல்லாமல் நாடார்கள் கையில்தானே உள்ளது. கேரளா ஆந்திரா கர்நாடகாவிலும் ஓபிசி ஆதிக்க நிலைதானே. அது பிடிக்காமல்தானே கமல் போன்றவர்கள் குமுறுகிறார்கள். இன்று இந்தியாவில் இருக்கும் அத்தனை கார்ப்பரேட்டுகளும் கடந்த மூன்று வருடங்களில் சடாரென்று முளைத்தவர்களா என்ன?. டாடா எல்லா துறையிலும் புகுந்து வெற்றிக்கொடி நாட்டுவதற்கு அவர்கள் உழைப்பு மட்டும்தான் காரணமா. காங்கிரஸின் தயை இல்லாமல் வளர்ந்திருக்க முடியுமா. இந்தியாவில் பிஸினஸ் ஜாம்பவான் சாதிகள் என்றால் சிந்தி, பார்ப்பணர்கள, மார்வாடிகள், ரெட்டி,அகர்வால் ஆகியோர். இவர்கள் பார்ப்பணர்களின் மற்றும் காங்கிரஸின் ஆதரவு பெற்றவர்கள். பணியா ஜெயின் போன்றவர்கள் பிஜேபி ஆதரவு பிஸினஸ் சாதிகள். மார்வாடி கெஜ்ரிவால் மோடியை எதிர்க்க காரணமும் இதுவே. இதனை அடிப்படையாக வைத்துதான் இந்த இரு கட்சிகள் உளள்கின்றன. எல்லா கார்ப்பரேட்டுகளும் அரசியல்வாதிகளை அரவணைத்துதான் தங்கள் பிழைப்பை ஓட்டியாக வேண்டியுள்ளது. பிஜேபி வளர்த்து விடும் அம்பாணியின் ஜியோவை பாருங்கள். இன்டெர்னட் கட்டணங்களை அடித்து நொறுக்கி எளிய மக்களுக்கு கொண்டு சேர்த்திருக்கிறது. காங்கிரஸ் வளர்த்துவிடும் பிஸினஸ் சாதிகளில் பணம் மட்டுமே பிரதானம் என்ற பார்ப்பண மனநிலை உணர முடியும். ஒரு உதாரணம் மார்வாடி பஜாஜ் கம்பெனி பல்சார் என்ற 150சிசி பைக்கை நம் ரோடுகளின் நிலை அறிந்தும் காங்கிரஸ் ஆதரவினால் மார்க்கெட்டில் இறக்கி லாபம் பார்த்து. அதன் விளைவை மிக அதிக வாகன விபத்துகளாக அறுவடை செய்கிறோம். பல விதமான திட்டங்களால் மோடியால் எளிய மக்கள் வளரவே செய்கிறார்கள். ஆனால் பார்ப்பண காங்கிரசால் கார்ப்பரேட்டுகள் மட்டுமே வளர்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை மற்றும் யதார்த்தம். ஆகவே ஒட்டு மொத்தமாக இந்தியா தோற்பதற்கு ஏழைகளின் தேசம் இந்தியா என்று மாறியதற்கு பார்ப்பண காங்கரசிற்கு பெரும்பங்கு இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. தென்னிந்தியாவில் தான் பார்ப்பனர்கள் குறைவு. UP யில் மட்டும் 2 கோடி பார்ப்பனர்கள் உள்ளனர். மொத்த இந்தியாவில் 6 கோடிக்கு மேல் பார்ப்பனர்கள் உள்ளனர். சும்மா தெரியாம அடிச்சி விட வேண்டியது. பாஜக பார்ப்பனர்களுக்கு மட்டுமான கட்சி இல்லை எனப்து தான் என் கருத்து. ஆனால், திராவிட/கம்யூனிச இயக்கங்கள் அதை பார்ப்பனிய கட்சி என்று சொல்வதற்கான காரணம், ரஸ்ஸ் யின் கொள்கை அடிப்படையில். இவர்களை பொறுத்தவரை பாஜக/ரஸ்ஸ் வர்ண கட்டமைப்பை பாதுகாக்க நினைப்பவர்கள். அதனால் எதிர்க்கிறார்கள். MLA க்களின் சாதியை கணக்கிட்டு இவர்கள் சொல்லுவதில்லை.

      Delete
  6. உண்மை ! மத சார்பற்ற கட்சிகள் தேர்தலில் ஒன்றினைந்து நிற்க வேண்டியதின் தேவை இப்போது தான் மிக அதிகம்

    ReplyDelete
  7. Demonetization effect was minimal in UP. Most of the time money was available in the ATMs. Since elections were coming they gave importance to UP. Mayawati and Mulayam cannot join. Jadavs(Dalits) were affected by Yadavs during this term and previous SP rule. If they join now, then in future they cannot make politics against each other. Now, even Nitish kumar is having that problem and he is gradually moving towards BJP.

    ReplyDelete
  8. பிற்ப்படுத்தப்பட்ட மக்களை கட்சிகள் கண்டுகொள்ளாமல் விட்டதும் ஒரு காரனம்தான். பாஜக தந்திரமாக அதில் காயை நகர்த்திக்கொண்டிருக்கின்றது.

    ReplyDelete
  9. இரத்தினவேல்14 March 2017 at 13:58

    பேராசிரியர் சுபவீயின் தெளிவான அரசியல் பார்வை.

    ReplyDelete