தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 10 March 2019

பெரியாரியத்தின் நுழைவாயில் சென்னை புத்தகக் கண்காட்சி நமக்குப் பல புதிய அனுபவங்களையும், புதிய நண்பர்கள் பலரையும் பெற்றுத் தந்தது. அங்கு நம் 'கருஞ்சட்டைப் பதிப்பகம்' அரங்கில் என்னைச் சந்தித்து, உங்களை நேரில் கண்டு பேச வேண்டும் என்றும், உங்களோடு சேர்ந்து அமைப்பில் பணியாற்ற வேண்டும் என்றும் ஆர்வம் தெரிவித்த நண்பர்களின் பெயர்களையும், அவர்களின் தொலைபேசி எண்களையும் தோழர் ஜெயசூர் குறித்துக் கொண்டே வந்தார். ஒரு நூறு பேருக்கும் மேலானவர்கள் பெயர்கள் கொடுத்துள்ளனர் என்று அவர் சொன்னபோது மகிழ்ச்சியாய் இருந்தது. சென்னையில் வாழும் நண்பர்களை மட்டும் முதல் சுற்றில் பார்த்துவிடலாம் என்று கருதி, நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று, ஏறத்தாழ 50 நண்பர்கள் 03.02.2019 அன்று சென்னை எழும்பூரில் வந்து குழுமினர்.

மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 8 மணி வரையில் அவர்களுடன் உரையாடுவதற்கு அது நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த சந்திப்பில் பல்வேறு நல்ல கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. காவிகளின் கொட்டம் அடக்கத் தமிழ்நாட்டில் பெரியாரிய, அம்பேத்கரியச் சிந்தனைகளை வெகுவாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதே அனைவரது மையக் கருத்தாக இருந்தது.

என் உரையை, தொலைக்காட்சி விவாதங்களில் நான் காட்டும் நிதானப் போக்கைப் பலர் வரவேற்று மகிழ்ந்தனர். எல்லோருடைய பாராட்டிற்கும் நடுவே, என்னை நெகிழ வைத்த பாராட்டு ஒன்று இருந்தது. அதனை நான் அங்கேயே குறிப்பிட்டேன். யுவராஜ் என்னும் தோழர் பேசும்போது, "நான் ஒரு நாத்திகக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். அதனால் எனக்குச் சிறு வயதிலிருந்தே கடவுள் நம்பிக்கை கிடையாது. இறை நம்பிக்கை உடையவர்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்காது. அவர்கள் மீது ஒரு விதமான வெறுப்பு எனக்கு உண்டு. ஆனால் ஐயா சுபவீ அவர்களின் உரைகளைத் தொடர்ந்து கேட்டபிறகு, யார் ஒருவரையும் வெறுக்கக் கூடாது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. மாற்றுக் கருத்து உடையவர்களிடமும், அன்பும், நேசமும் உடையவர்களாக நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது" என்று கூறினார். எதிர்க் கருத்துகள்தாம் நமக்கு உண்டே தவிர, தனிப்பட்ட முறையில் நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. யாரோடும் நமக்குப் பகை இல்லை. யார் ஒருவரையும் கண்ணியக் குறைவாகப் பேசவோ, எழுதவோ கூடாது என்று பலமுறை நான் வற்புறுத்திப் பேசியுள்ளேன். அது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்த்தியுள்ளது என்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது.

16 ஆண்டுகளுக்கு முன், பொடா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தபோது,2003 ஆம் ஆண்டு, நான் எழுதிய கடிதம் ஒன்றை மிகப் பத்திரமாக வைத்திருப்பதாகக் கூறி, ராஜேந்திரன் என்னும் நண்பர் அந்தக் கடிதத்தைக் கொண்டுவந்து காட்டினார்.

குறிப்பாக நண்பர்கள் ஓரிருவர் பேசும்போது, தங்களுக்குப் பெரியார் குறித்துப் பெரிதாக முதலில் ஒன்றும் தெரியாது என்றும், என்னுடைய உரையையும், தோழர்கள் அருள்மொழி, மதிமாறன் ஆகியோரது உரைகளையும், YouTube வழி கேட்டபின்பு, பெரியாரின் கருத்துகளை நிறையப் படிக்கத் தொடங்கி விட்டதாகவும் கூறினர். அதனால் சுபவீ தான், எனக்குப் 'பெரியாரியலின் நுழைவாயில்" (Gateway of Periyaarism) என்று மிகுந்த நேசத்துடன் நண்பர் ஒருவர் குறிப்பிட்டார்.

அந்த நேரத்தில் எனக்கு இன்னொரு நினைவு வர, அதனை அவர்களிடம் தெரிவித்தேன். சில நாள்களுக்கு முன்னால், கோவையிலிருந்து மருத்துவர் ஒருவர் தொலைபேசியில் பேசினார். அவருடைய அனுபவம் சற்று வேறுபட்டதாக இருந்தது. இளம் வயதினரான அவர் பெரியார் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை என்றும், எந்த இயக்கத்தினோடும் தொடர்பில் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், ஒருமுறை ஹெச், ராஜா, பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டபோது தான் மிகுந்த கோபம் கொண்டதாகவும், அதற்கான காரணம் கூட விளங்கவில்லை என்றும் கூறினார். பெரியாரை ஒருவர் திட்டினால் தனக்கு ஏன் கோபம் வருகிறது என்று அவர் எண்ணிப் பார்த்தாராம். காரணம் அவருக்குப் புரியவில்லை என்றாலும், ஏதோ தன் தாத்தாவை ஒருவர் இழிவுபடுத்த முயல்வது போல் உணர்ந்தாராம்.

அன்றிலிருந்து பெரியாரின் கருத்துகளை படிக்கத் தொடங்கினாராம். அதன் தொடர்ச்சியாக என் உரைகள் பலவற்றைக் கேட்டாராம். இப்போது அவர் ஒரு பெரியாரியவாதி ஆகிவிட்டார். என்னோடு தொடர்ந்து தொடர்பில் இருந்து வர விரும்புவதாகவும் கூறினார்.

நான் இப்படிச் சொன்னேன், "பாருங்கள் இந்த மருத்துவருக்கு, ஹெச். ராஜாதான், பெரியாரியத்தின் நுழைவாயிலாக இருந்திருக்கிறார்."

அரங்கில் எழுந்த சிரிப்பலை அடங்கச் சில நிமிடங்கள் ஆயின.
-- 
அன்புடன்
சுப.வீரபாண்டியன்

No comments:

Post a Comment