தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 21 April 2018

50 ஆண்டு கால ஆட்சியில்....


15 ஆவது நிதிக்குழுவில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு - குறிப்பாகத் தென் மாவட்டங்களுக்கு - நிதி ஒதுக்கீடு குறைய வாய்ப்புள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. அதனையொட்டித்   தமிழகத்தின் துணை முதல்வர் . பன்னீர்செல்வம், நிதிக்குழுத் தலைவர் என்.கே. சிங் அவர்களைப்  பார்த்தபோது, "கவலை வேண்டாம், பார்த்துக்கொள்ளலாம்" என்று அவர் கூறியுள்ளார் என்றாலும், இறுதியில் உரிய நிதி நமக்கு வரப்போவதில்லை என்பதுதான்  உண்மை

மத்திய அரசே ஆளுநரைத்  திரும்பப் பெறு!பல்கலைக்கழக நடவடிக்கைகளில் தலையிடுவதற்கே மாநில அரசுக்கு உரிமையில்லை என்று சொல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித். பிறகு பல்கலைக்கழக இணைவேந்தராக மாநிலக் கல்வி அமைச்சர் ஏன் நியமிக்கப்படுகிறார்?

போகிற போக்கைப் பார்த்தால், நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தின்போது, அரசு எழுதிக் கொடுக்கும் உரையை நான் படிக்க மாட்டேன், நானேதான் சொந்தமாக உரை எழுதி படிப்பேன் என்றும், அமைச்சர்கள் பதவிப் பிரமாணத்தை நான்தான் நடத்தி வைக்கிறேன் என்பதால், முதலமைச்சர், அமைச்சர்கள் எல்லோரையும் நான்தான் நியமிப்பேன் என்றும் அடுத்தகட்ட அறிவிப்பை ஆளுநரிடம் நாம் எதிர்பார்க்கலாம்.

Tuesday, 17 April 2018

கறுப்பும் காவியும் - 3

மண்டைக்காடு 


நான் முன்பு குறிப்பிட்ட நான்கு இயக்கங்களில், காங்கிரஸ் தவிர, மற்ற மூன்று இயக்கங்களும் 1915-25 காலகட்டத்தில் இங்கு தோன்றியவை. பொதுவுடைமை இயக்கம், வெளிநாட்டில் தோன்றி, இங்கு பரவியது. திராவிட இயக்கம் தமிழகத்திலும், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நாக்பூரிலும் தோன்றின. இவ்விரு இயக்கங்களும் நேர் எதிரான கொள்கைகளைக் கொண்டவை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தோற்றுவித்தவர்கள் சித்பவன் பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, இந்துக்களுக்கான இயக்கம் என்னும் பெயரில் அது உருவானது.

திராவிட இயக்கமோ, மறுமுனையில், பார்ப்பனர் அல்லாதோரால் மட்டுமே உருவாக்கப்பட்டது. 1912-13 திராவிடர் சங்கம் என்னும் பெயரிலும், 1916க்குப் பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (நீதிக்கட்சி) என்னும் பெயரிலும் அதுநடைபெற்றது. அக்கட்சியின்  முதல் அறிக்கையே "பார்ப்பனரல்லாதோர் அறிக்கை" (Non-brahmin Manifesto) என்றுதான் பெயரிடப்பட்டது. தமிழர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, திராவிடர்களுக்கான இயக்கம் என்னும் புரிதலோடு, இவ்வியக்கம் உருவானது