தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.
Showing posts with label பகிர்வு. Show all posts
Showing posts with label பகிர்வு. Show all posts

Tuesday, 10 November 2015

பகிர்வு - 23


உங்களையும் தெலுங்கர் என்று குறிப்பிட்டு ஒரு நூலில் எழுதியுள்ளார்களாமே?
- முத்தையா குமரன், சென்னை -83

விடை: ஆம். அண்மையில் உதயன் என்னும் நண்பர் ஒருவர் அதனை மின் அஞ்சல் வழி எனக்கு அனுப்பியிருந்தார். அது குறித்து 03.11.2015 அன்று சென்னையில் நடைபெற்ற கவிஞர் முடியரசன் விழாவில் பேசினேன்.அதனைக் கீழே தந்துள்ளேன். 

நான் எப்படித் தெலுங்கன் என்பதை 'அறிவியல் பூர்வமாக' அவர்கள் விளக்கியுள்ளனர். பெங்களூரு குணாவின் நண்பர் சொன்னதாக அந்தச் செய்தியைத் தமிழின மீட்சி இரண்டாம் பதிப்பில் வெளியிட்டுள்ளனர் என்பது தகவல். 

Friday, 6 November 2015

பகிர்வு - 22


முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது சென்னையில் நடத்தப்பெற்றுள்ள தாக்குதல் குறித்து உங்கள் கருத்து என்ன?                
- ஏ . செல்வகுமாரன் 

விடை: 4ஆம் தேதி இரவிலிருந்தே வாட்ஸ் அப் தளத்தில் அந்தச் செய்தி வரத் தொடங்கியது. அடுத்த நாள் காலை வந்த நாளேடுகள் அதனை உறுதிப்படுத்தின. ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் அதனைப் பாராட்டியும், வரவேற்றும் செய்திகள் அனுப்பிக் கொண்டே இருந்தனர். ஒரு லட்சத்திற்கும் கூடுதலான நம் ஈழ உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த எம்.கே. நாராயணனும் ஒரு விதத்தில் காரணம் என்பதால், தமிழ் உணர்வாளர்களிடையே அவர் மீதான ஒரு கடுங் கோபம் நீண்ட நாளாகவே இருந்து வந்தது. நம் கோபம் நியாயம்! அதன் வெளிப்பாடாகவே, அந்தக் கருத்தரங்கம் நடைபெற்ற இடத்தில், நாம் தமிழர் கட்சியினர் , மே 17 இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழர்களின் உணர்வுகளை எதிரொலித்த அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்!

Wednesday, 28 October 2015

பகிர்வு - 21


மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த எல்லோரும் பார்ப்பனர் என்ற தமிழ்ச்சொல்லை பயன்படுத்துவதை தவிர்ப்பதேன? சிறந்த சிந்தனைவாதியான டாக்டர் அருணன் போன்றவர்கள் கூட பிராமணர்கள் என்றே சொல்லி வருகிறார்கள் ஏனிந்த தயக்கம் அப்படியெனில் அவர்கள் சூத்திர்ரகள் என்று ஒப்புக்கொளவது என்றுதானே அர்த்தம்?

-    செல்வம் என்கிற சிவா, சவுதி அரேபியா

விடை: அவர்களுடைய மனத்தை அந்தச் சொல்  காயப்படுத்தும் என்று அவர்கள் கருதக்கூடும்.  ஆனால் அந்தச் சொல் எவரையும் காயப்படுத்தக் கூடியதன்று என்னும் செய்தி பலமுறை சொல்லப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை இங்கு நாம் அதனை நினைவு படுத்திக் கொள்ளலாம்.  அவர்கள் குறி பார்ப்பவர்களாக இருந்துள்ளமையால், பார்ப்பனர் என்னும் சொல்லால் அவர்களைக் குறித்துள்ளனர். அவ்வளவே!  பொதுவுடமைத் தோழர்கள் பிராமணன் என்னும் சொல்லைப் பயன்படுத்துவதுதான்  முரண்பாடானது! அந்தச் சொல், பகுத்தறிவாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியாத 'பிரம்மன்' என்னும் கருத்துருவோடு தொடர்புடையது. 


Tuesday, 27 October 2015

பகிர்வு - 20

அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொண்டு, பா.ம.க. அணியில் சேர விஜயகாந்திற்கு மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அழைப்பை தே .மு.தி.க ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ளதா?
- ஆ. சற்குணன்


விடை: ஆனாலும் விஜயகாந்தை இந்த அளவுக்கு மருத்துவர் கோபப்படுத்துவது நியாயமில்லை என்றுதான் தோன்றுகிறது. அவருடைய வாக்கு வங்கியில் சரிவு உள்ளது என்பது உண்மையாய் இருக்கலாம். எனினும் பா.ம.க.வை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வாக்குகள் இன்றும் கூடுதலாகவே உள்ளன, தே.மு.தி,க.விடம்! பிறகு எப்படி அவர் அன்புமணியின் தலைமையை ஏற்றுக்கொள்வார்?  

Friday, 23 October 2015

யார் தமிழர்


தமிழ் மக்கள் பல காலங்களாக கேரளம், கர்னாடகம், ஆந்திரா மற்றும் மகாராட்டிர உள்ளிட்ட மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். அந்தந்த மாநில மொழிகளை நன்கு பேசுகிறார்கள் ஆனாலும் அங்கு யாரும் அவர்கள்ளை மலையாளிகளாகவோ, கன்னடர்களாகவோ  பார்க்கவில்லையே? நாம் மட்டும் ஏன் தமிழ்நாட்டில் வாழும் பிற மொழி பேசும் மக்களை தமிழர்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும்? அவர்களை சகோதர இனத்தவராகவே கருதி நேசிப்பதில் என்ன தவறு என்று புதிய தலைமுறை நேர்காணலில் சீமான் கேட்கிறார்..இது பற்றி உங்கள் கருத்து என்ன?
-செந்தமிழ் அருவி 

விடை:  இங்கும் நாம் மலையாளிகளை, மலையாளிகளாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்றுதான்  நோக்கப்படுகின்றனர்.  தமிழர்களாக அவர்களே அவர்களை அறிவித்துக் கொள்வதில்லை. சிக்கல் எங்கே வருகிறது என்றால், 400, 500 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து குடியேறி, தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நாம் எப்படிப் பார்ப்பது என்பதுதான். இவர்களுக்குத் தங்கள் மாநிலங்களில் எந்தத் தொடர்பும் இல்லை, நிலமும் இல்லை என்றால் அவர்கள் யார்? அவர்களின் மண உறவுகள், சொத்து எல்லாம் இங்குதான் இருக்கிறது எனில், அவர்களைத் தமிழர்களாகப் பார்ப்பதுதானே சரி. நண்பர்கள் சீமான், மணியரசன் போன்றோர் பார்ப்பனர் குறித்து இந்த ஐயத்தை எழுப்புவதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. 


Saturday, 10 October 2015

பகிர்வு - 18


நடிகர் சங்கத் தேர்தலில், நீங்கள் எந்தப் பக்கம்?
-         பூவிழியன், சென்னை-10

விடை: அது அவர்களின் தேர்தல். நமக்கு நேரடித் தொடர்பு ஏதுமில்லை. எனினும் நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதில் பிழையில்லை. நடப்புகளைக் கொண்டு பார்க்கும்போது, சரத்குமார், ராதாரவி பக்கம் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. நாசர், விஷால் அணியினர் வெல்வதே நடிகர் சங்கத்திற்கு எதிர்காலத்தில் நன்மை பயக்கும் என்று தோன்றுகிறது. 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' அங்கு இன்றையத் தேவையாகக்  காணப்படுகிறது. 


அது 'விஷால் ரெட்டி அணி' என்கிறார் ராதிகா, அருகில் ஊர்வசி சேச்சியை வைத்துக்கொண்டு!

Wednesday, 7 October 2015

பகிர்வு - 17

ஏன் திராவிடக் கொள்கைகளால் பயன் அடைந்தவர்கள் கூட அதை உணர்வதில்லை? இந்த இடத்தில் நாம் என்ன செய்யத் தவறிவிட்டோம்?
- என்.என்.ராஜன், தூத்துக்குடி 

விடை: 1950, 60 களில் 'மேடை'தான் மிகப் பெரிய ஊடகமாக இருந்தது.அந்த ஊடகத்தைத் திராவிட இயக்கத்தினர் மிகச் சரியாகக் கையாண்டோம். மக்களிடம் நம் கருத்துகள் உரிய முறையில் சென்று சேர்ந்தன. காலப் போக்கில் பல்வேறு ஊடகங்கள் எழுந்தன. மேடை ஊடகம் பின்னுக்குப் போய்விட்டது. நாள், வார ஏடுகள் பெரும்பான்மையாக அவாளிடம் இருந்தன. பிறகு வந்த தொலைகாட்சி ஊடகமும் நம் கருத்துகளைப் பரப்பவில்லை. நம்மவர்களின் ஊடகங்களும் கொள்கையை விட்டுவிட்டு, வணிகத்தையே முன்னிறுத்தின. முரசொலி,  விடுதலை போன்ற ஏடுகள் கட்சி, இயக்க உணர்வாளர்களிடம்  மட்டுமே சென்றன. பொதுமக்களை எட்டவில்லை. 

திராவிட இயக்கத்தால் பயன் பெற்றவர்கள் கூட அதனை உணராமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு. என்றாலும், நான் முதன்மையானதாகக் கருதுவது, வெகு மக்களைச் சென்றடையக்கூடிய பொதுவான ஊடகங்களை நாம் 15, 20 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்காமல் விட்டதுதான் என்று தோன்றுகிறது. 

Sunday, 4 October 2015

பகிர்வு - 16



தி.மு.க. அழைத்தாலும் அந்தக் கூட்டணியில் சேர மாட்டேன் என்று டி. ராஜேந்தர் கூறியுள்ளாரே.....?
-         ஏ. சேஷாசலம் 


விடை:  அப்பாடா...!நெஞ்சுக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கிறது தெரியுமா!! 

பகிர்வு - 15


பாரதி பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்பது உண்மை என்றால், கண்ணன் பாட்டு பாடியது ஏன்?
-         சிறீ. கார்த்திக் கவ்தம்


விடை: உங்கள் வினாவே எனக்கு விந்தையாய் இருக்கிறது. பாரதியைப் பார்ப்பனீய எதிர்ப்புப் போராளி என்று யார் சொன்னது? பாராதியாரே தன்னை அப்படிச் சொல்லிக் கொண்டதில்லை. அவரின் எழுத்துகளில், 'தண்டச் சோறுண்ணும் பார்ப்பு' என்பது போன்ற சில வரிகள் உள்ளன.அதே நேரம்,  பார்ப்பன ஆதரவு வரிகள் பல உள்ளன. எனவே, பாரதி பற்றிய எந்த ஆய்வும் அவரை ஒரு பார்ப்பனீய எதிர்ப்புப் போராளியாகக் காட்டவில்லை, காட்டவும் முடியாது!

Saturday, 3 October 2015

பகிர்வு - 14


தந்தை பெரியார் பிறப்பிற்குப் பின் திராவிடம் மிக வெளிப்படையாக பிராமணியம் உள்ளிட்ட ஆரியத்தை கடுமையாக வெகு சொற்களால் சாடியுள்ளது, சாடிக்கொண்டும் வருகிறது. ஆனால் தன் நிலையை நியாயப்படுத்தி திராவிடத்தை சுடு சொற்களால் சாடியதாக ஒரு சான்றும் இருப்பதாகத் தெரியவில்லை.இவ்வகையான ஆரியத்தின் போக்கு, திராவிடத்திற்கு பலமா, பலவீனமா?
-         க. சீனிவாசன் 


விடை: அடிபடுகிறவன் மட்டுமே அலறும் சத்தம் கேட்கிறது. அடிக்கிறவன் எந்த ஒலியும எழுப்பவில்லையே, ஏன் என்பது போல்  உங்கள் கேள்வி உள்ளது. திராவிடம் ஆரியத்தைச் சொற்களால் தாக்குகிறது. ஆரியமோ திராவிடத்தைத் தன் செயல்களால் அழிக்க முயல்கிறது.

Friday, 2 October 2015

பகிர்வு - 13

திராவிடன் என்ற வார்த்தை  சங்க இலக்கியத்தில்  எங்கும் இல்லை என்கின்றார்களே, உண்மையா?
- முருகவேள்


விடை: உண்மைதான். தமிழன் என்ற சொல்லும் இல்லை. அம்மா என்ற சொல்லும் இல்லை. சங்கம் என்ற சொல்லே சங்க இலக்கியத்தில் இல்லை. என்ன செய்யலாம்இந்தச் சொற்களுக்கும், தமிழுக்கும் தொடர்பில்லை என்று சொல்லிவிடலாமா?

Wednesday, 23 September 2015

பகிர்வு - 12

1938ல் இந்திக்கு எதிரான நிலைப்பாட்டில் பெரியார் முன்னால் நின்று களமாடினார் என்றும், 1965ல் பெரியாரை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் வரலாறு எதிர்நிலையில் காட்டுகிறதே ஏன். ? இதை பற்றி உங்கள் கருத்துகளை கேட்க ஆவலுடன் இருக்கிறேன்.
-    க ல அபிலாசு நாராயண்
 விடை:  நீங்கள் சொல்லும் செய்தி உண்மைதான். 1938இல் இந்தியைத்  திணித்தவர் ராஜாஜி. எதிர்த்தவர் தந்தை பெரியார். 1965இல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ராஜாஜி ஆதரித்தார். பெரியார் எதிர்த்தார்.
வரலாற்றில் இப்படிச் சில முரண்கள் ஏற்படுவதுண்டு. அன்றைய தமிழ்நாட்டு அரசியலில் காங்கிரஸ் கட்சியை, குறிப்பாக, காமராஜரைப் பெரியார் ஆதரித்தார். காமராஜர்தான் தொடக்கக் கல்வியை மக்களுக்குக் கொடுத்தவர் என்பதால், அவரிடம் இறுதிவரையில் பெரியார் மதிப்பு வைத்திருந்தார். 1965 இந்தி எதிர்ப்புப் போர் காங்கிரசுக்கு எதிரானது என்று பெரியார் கருதினார். மேலும் அறிஞர் அண்ணா தலைமையிலான தி.மு.கழகத்தின் மீது அவருக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. இந்த இரண்டு காரணங்களால் அவர் அப்போராட்டத்தை எதிர்த்திருக்கக் கூடும்! எனினும் அன்றைய பெரியாரின் நிலைப்பாடு எனக்கு உடன்பாடு இல்லாததே! அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ் உணர்வு மிக்க பல்லாயிரம் இளைஞர்களை உருவாக்கியது என்பதே வரலாறு.  


Monday, 21 September 2015

பகிர்வு - 11


வணக்கம் சார். நீங்க திமுக வோட ஆதரவாளர் நானும் தான் .ஆனா ஒரு சந்தேகம் .ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு மட்டும் வர்றாரு ஆனா இம்மானுவேல் சேகரன் குருபூஜைக்கு வருவதில்லை .நான் ஸ்டாலின் தேவர் குருபூஜைக்கு போறத தப்பா சொல்லல ஆனா சமூகத்தில தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் மற்ற எல்லாரையும் போல முக்கியத்துவம் வேணும் இல்லையா .அதிமுக இததான் செய்றாங்க .அப்போ திமுக வும் அதிமுக போல அதிக எண்ணிக்கை உள்ள மக்களுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்குமா .உங்களோட பதில் .
--
  அருண் பிரசாத் 


 விடை: நீங்கள்  சொல்வது சரிதான். தேர்தல் கட்சிகள் அனைத்துக் குரு பூஜைக்கும் சென்றுதான் ஆக வேண்டும். அதுதான் முறை. நான் எந்தக் குரு பூஜைக்கும் செல்வதில்லை.ஒருவேளை போவதென்று முடிவெடுத்தால் இம்மானுவேல் குரு பூஜைக்கு மட்டும்தான் செல்வேன்.


Saturday, 19 September 2015

பகிர்வு - 10


வரும் 2016 சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சி 234 இடங்களிலும் தனித்துப் போட்டியிடுவதாக முடிவேடுத்துள்ளதே?
- பரமேஸ்வர் 


விடை: மிக அருமையான முடிவு. அந்த முடிவிலிருந்து அவர்கள் என்றும் நழுவி விடாமல் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். அதுதான் அவர்களுக்கு நல்லது, நாட்டுக்கும் நல்லது!

பகிர்வு - 9


ம.தி.மு.க.வின் சரிவு உங்களைப் போன்றவர்களுக்கு மகிழ்ச்சி தந்திருக்குமே?
- அருள் மகிமை, டல்லஸ் (அமெ ரிக்கா)


விடை: கண்டிப்பாக இல்லை. ம.தி.மு.க. அடியோடு வீழ்ச்சி அடைய வேண்டிய கட்சி என்று நான் ஒருநாளும் எண்ணியதில்லை.அதே நேரம், தேர்தல் நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதில், வைகோவிற்கு நிகர் எவரும் இல்லை என்றும் நான் கருதுகிறேன். 2004 நாடாளுமன்றத் தேர்தலைத் தவிர மற்ற எல்லாத் தேர்தல்களிலும் அவர் எடுத்த முடிவு தவறாகவே இருந்துள்ளது. இம்முறை அவருக்கும், அவர் கட்சிக்கும் ஏற்பட்டுள்ள பெரும் சரிவுக்கு, அவர் சி.பி.எம். கட்சியை நம்பியதுதான் முதன்மையான காரணம். காரணம் எதுவாக இருந்தாலும், காரியம் தவறு. இன்றைய சூழலில், ம.தி.மு.க.வின் எதிர்காலம் இருண்டே  தெரிகிறது என்பது கசப்பான உண்மை.

பகிர்வு - 8

துட்டனைக் கண்டால் தூர விலகு என்பது சரியானதா?
-    பழனியப்பன் கந்தசாமி, கோவை      
                     


விடை: பாதுகாப்புக் கருதிச் சொல்லப்பட்ட எச்சரிக்கையாக அது இருக்கலாம். தன் வலியும், துணை வலியும், மாற்றான் வலியும் கருதிச் செயல்பட வேண்டும் என்பதே சரி. ஆனாலும் துட்டனைக் கண்டு தூர விலகிக் கொண்டே இருப்பது, துட்டனுக்குத்தான் நல்லது. உரிய வலிமையை உரிய வழியில் இணைத்துக் கொண்டு, தீயவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்று முடிவெடுப்பதே சரியானது. 'பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது' என்பது பாரதியின் பாட்டு வரி! இந்த இடத்தில் பழமொழியை நினைவில் கொள்வோம், பாரதியின் வழி நடப்போம்!! 

Wednesday, 16 September 2015

பகிர்வு - 7


பெரியாரிடம் உங்களுக்கு மிகவும் பிடித்த குணம் அல்லது செயல் எது?
           -அனானிமஸ் 86

விடை:  அவருடைய குணம் அல்லது செயல்களில் ஒன்றே ஒன்றைப் பிரித்தெடுத்துச் சொல்வது சற்றுக் கடினம்தான். இருப்பினும்,நான்  எழுதியுள்ள,பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்' நூலில் குறிப்பிட்டுள்ள ஒன்றை நினைவு கூலாம்  என்று நினைக்கிறேன்.

அவருடைய 'சுய மறுப்பு' மிகப் பெரிய செய்தியாகப் படுகின்றது. அவர், பெரும் செல்வக் குடும்பத்தில் பிறந்தார். ஆனால் காலம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவே போராடினார். உயர் ஜாதி என்று சொல்லப்படும் ஜாதியில் பிறந்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட ஜாதி மக்களுக்காகவே தன் வாழ்வை ஒப்படைத்தார். ஆணாகப் பிறந்தார். பெண்களுக்காகவே விடுதலை இயக்கம் கண்டார். இன்றும் அவரைக் கன்னடர் என்று சொல்வோர் நம்மிடையே உண்டு. அவரோ, தன் இறுதி மூச்சு வரையில் தமிழர்களுக்காகவும், தமிழ் இனத்திற்காகவுமே தொண்டாற்றினார்.

இன்னொரு புகழும் அவருக்கு  உண்டு - அவர் இறந்து 40ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இன்னமும் அவரோடு பலர் முட்டி மோதிக்கொண்டே இருக்கிறார்கள். அதனாலும் அவர் புகழ் வளர்கிறதே அன்றி, குறையவே இல்லை.  


Saturday, 12 September 2015

பகிர்வு - 6

எங்கள் ஊரில் கோயில்களில் நாதஸ்வரம், தவில் வாசிக்கும் குடும்பங்கள் உள்ளது. அவர்கள் தாய் மொழி தமிழ். அவர்கள் யாரும் தங்கள் வீடுகளில் வேறு மொழி பேசுவது கிடையாது.

ஆனால் கலைஞர் அவர்களை ஏன் தெலுங்கு என்று சில எதிரிகள் எப்போதும் வசைபாடுகிறார்கள்.

இது பற்றி தாங்கள் விளக்கமுடியுமா?

அன்புடன்
வி.பி.தயாளன் 


விடை:  சில பேர் ரத்தப் பரிசோதனை நிலையம் வைத்துக் கொண்டு அலைகின்றனர். அதில் சோதித்துப் பார்த்து, இவர்கள் தமிழர்கள், இவர்கள் தெலுங்கர்கள்,இவர்கள் கன்னடர்கள் என்று 'சான்றிதழ்' வழங்குவார்கள். அறிவியல் பூர்வமான சான்று எதுவும் அவர்களுக்குத் தேவையில்லை. இது ஒரு விதமான இனவாதம். கவனித்துப் பாருங்கள் , பார்ப்பனர்கள் எல்லோரும் தமிழர்கள் என்று அவர்கள் கூறிவிடுவார்கள். எனவே இது ஒரு வகையான பார்ப்பனீயமும் கூட! இது போன்ற இனவாதக் கூற்றுகளை அலட்சியப் படுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பதே நமக்கும், நாட்டுக்கும் நல்லது!


Wednesday, 9 September 2015

பகிர்வு - 5


வைகோ தலைமையில் உருவாகியுள்ள மக்கள் நலக் கூட்டணி குறித்த உங்கள் கருத்து என்ன?
- வைதேகி 

விடை : அது இன்னும் தேர்தல் கூட்டணியாக உருப்பெற்றுவிடவில்லை. ஒரு வேளை அப்படி ஆகலாம். மாறியும் போகலாம். அக்கூட்டணியில் உள்ள எல்லாக் கட்சிகளும், கொள்கை, சித்தாந்தம் உடையன என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சாதி ஒழிப்பு, ஜனநாயக உரிமைகள், சிறுபான்மையினர் நலன் ஆகியனவற்றிற்காக அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கிப் போராட வேண்டிய சூழலில்தான் நாடு உள்ளது. அந்த வகையில் இந்தக் கூட்டணி நல்லதுதான்.