தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 6 November 2015

பகிர்வு - 22


முன்னாள் வெளியுறவுத் துறை ஆலோசகர் எம்.கே. நாராயணன் மீது சென்னையில் நடத்தப்பெற்றுள்ள தாக்குதல் குறித்து உங்கள் கருத்து என்ன?                
- ஏ . செல்வகுமாரன் 

விடை: 4ஆம் தேதி இரவிலிருந்தே வாட்ஸ் அப் தளத்தில் அந்தச் செய்தி வரத் தொடங்கியது. அடுத்த நாள் காலை வந்த நாளேடுகள் அதனை உறுதிப்படுத்தின. ஈழத் தமிழ் ஆதரவாளர்கள், தமிழ் உணர்வாளர்கள் பலரும் அதனைப் பாராட்டியும், வரவேற்றும் செய்திகள் அனுப்பிக் கொண்டே இருந்தனர். ஒரு லட்சத்திற்கும் கூடுதலான நம் ஈழ உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கு அந்த எம்.கே. நாராயணனும் ஒரு விதத்தில் காரணம் என்பதால், தமிழ் உணர்வாளர்களிடையே அவர் மீதான ஒரு கடுங் கோபம் நீண்ட நாளாகவே இருந்து வந்தது. நம் கோபம் நியாயம்! அதன் வெளிப்பாடாகவே, அந்தக் கருத்தரங்கம் நடைபெற்ற இடத்தில், நாம் தமிழர் கட்சியினர் , மே 17 இயக்கத் தோழர்கள் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். தமிழர்களின் உணர்வுகளை எதிரொலித்த அவர்கள் நம் பாராட்டுக்குரியவர்கள்!


 ஆனாலும், எம். கே. நாராயணன் நேரடியாகத் தாக்கப்பட்டதில் எனக்கு உடன்பாடில்லை. இப்படி நான் எழுதுவதால், நான் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தோழர்கள் சிலர் கூட வருத்தப்படக் கூடும். தமிழ் ஆர்வலர்கள் பலர் என் மீது சினம் கொள்ளவும் கூடும்.எனினும் என் கருத்தை மறைக்காமல் பதிவு செய்ய வேண்டும் என்றே கருதுகின்றேன்.

மக்கள் வெகுண்டெழுந்து போராடும் புரட்சிக் காலத்தைத் தவிர, மற்ற நேரங்களில் எப்போதும் வன்முறையை நாம் ஆதரிக்க முடியாது. வன்முறை என்பது, இரண்டு பக்கமும் கூர்மையுடைய ஆபத்தான ஆயுதம். தன்னலம் ஏதுமின்றி, தான் கொடுமைகளுக்கு ஆளாவோம் என்று நன்கு தெரிந்து, தான் நம்பும் ஒரு கருத்தின் அடிப்படையில் அந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க கூடிய அந்த இளைஞனின் நோக்கமும், தியாகமும் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனாலும் அந்த வழிமுறை தவறானதே! 

நமக்கு எதிரான கருத்துடையவர்களும், நம்மைத் தாக்கும் போதெல்லாம், தங்களின் செயல்களை நியாயப்படுத்தவே  செய்கின்றனர். இது நியாயம் என்றால், பிறகு அதுவும் நியாயம் என்றாகிவிடும். 

என்றும் உணர்ச்சிகளை நாம் ஆள வேண்டுமேயன்றி, உணர்ச்சிகள் நம்மை ஆள்வதற்கு இடம் அளித்துவிடக் கூடாது! ஆதலால், நடந்து முடிந்த அந்தச் செயல், எனக்கு உவப்பானதாக இல்லை. வருத்தத்தையே தருகிறது! 


4 comments:

  1. கணேஷ்வேல்14 November 2015 at 14:37

    அருமை அய்யா !!!

    ReplyDelete
  2. Nanri Ayya... Idhu pola ilaignarkalai nerippaduthavum

    ReplyDelete