தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.
Showing posts with label ஒரு நிமிடச் செய்திகள். Show all posts
Showing posts with label ஒரு நிமிடச் செய்திகள். Show all posts

Saturday, 16 January 2016

ஆஷ்டுக்குஷ்டி


ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால், ரூபாய், அணா என்று கணக்கு இருந்தது. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். பிறகு ஒரு அணா, அரையணா, காலணா என்று வரும். அணாவிற்கும் குறைந்தது சல்லி எனப்படும். இரண்டு சல்லிக் காசுகள் சேர்ந்தால் காலனாவிற்குச் சமம். அதனால்தான், 'சல்லிக் காசுக்கும் பயனில்லாதவன்' என்னும் சொலவடை இன்றும் உள்ளது. அந்தச் சல்லிக் காசுகளை எல்லாம் ஒரு கட்டாகக் கட்டிக் காளைகளின் கொம்புகளில் கோத்து விடுவார்கள். காளையை அடக்குபவர்கள் அந்தச்  சல்லிக்கட்டை எடுத்துக் கொள்ளலாம். அதனையொட்டியே அந்த விளையாட்டிற்குச் சல்லிக் கட்டு என்று பெயர் வந்தது. ஆனால் இன்று அதனை நாம் 'ஜல்லிக்கட்டு' என்று தவறாக அழைக்கின்றோம். 

Thursday, 14 January 2016

சுயமரியாதை


1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் நாள், நாக்பூரில், இலட்சக்கணக்கான மக்களுடன், அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவினார். அப்போது அவர் ஆற்றிய உரையில் குறிப்பிடத்தக்க பல செய்திகள் உள்ளன. ஓரிடத்தில், சமூக விடுதலை குறித்தும், பொருளாதார விடுதலை குறித்தும் அவர் பேசுகின்றார். இரண்டில் எது முதன்மையான தேவை என்று சிலர் கேட்கின்றனர். இப்படியெல்லாம் வரிசைப்படுத்த வேண்டியதில்லை. மானுட சமூகத்திற்கு எல்லா விடுதலைகளும் தேவையானவைதாம். எனினும், இவை இரண்டையும் வரிசைப்படுத்த வேண்டிய தேவை எழுமானால், அப்போது என் கருத்து தெளிவானது. சுயமரியாதைக்குப் பின்பே பொருளாதார முன்னேற்றம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் அவர். அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் சந்திக்கின்ற புள்ளி இது!

Friday, 8 January 2016

கி.பி., கி.மு



இயன்ற வரையில், மதச் சார்பற்ற சொற்களை நாம் பொதுத்தளங்களில் பயன்படுத்த முயற்சிக்கலாம். வரலாற்றில் ஆண்டுகளைக் குறிக்கும்போது கி.மு., கி.பி. என்னும் குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம். கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்ததற்குப் பின் என்னும் இவை மதச் சார்புடையவை.இதே போலத்தான் ஆங்கிலத்திலும் B.C., A.D., என்று குறித்துக் கொண்டிருந்தார்கள். அதாவது, Before Christ, Amno Domni என அவை விரியும். Amno Domni என்றால் after death, இயேசு இறந்ததற்குப் பின் என்று பொருள். இன்றைக்கு அந்தக் குறியீடுகளை அவர்கள் BCE, CE என்று மாற்றிவிட்டார்கள். Before Common Era, Common Era என அவை ஆகி விட்டன. நாமும் அது போலவே, தொடர் ஆண்டுகளின் முன், தொடர் ஆண்டுகளில் என்று குறிப்பிடலாம். சுருக்கக் குறியீடுகளில், தொ.ஆ.மு., என்றும், தொ.ஆ., என்றும் ஏன் எழுதிப் பழகக் கூடாது? 

Thursday, 31 December 2015

வரவும் செலவும்


2015ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று! இந்த ஆண்டின் வரவு, செலவு என்ன என்று நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கலாம்.

வரவு என்பது, பிறரிடமிருந்து நாம் பெற்ற உண்மையான பாராட்டுகளும், உண்மையான வாழ்த்துகளும். சென்ற ஆண்டை விட இந்த  ஆண்டில் நாம் பெற்ற கூடுதல் அறிவு. நமக்குக் கிடைத்த  புதிய நண்பர்களும், புதிய உறவுகளும். நெஞ்சில் அமைதி நிறைந்திருந்த நேரங்கள்!

Tuesday, 8 December 2015

மழை வெள்ளம்


மழையும் வெள்ளமும் கொண்டுவந்த துயரங்கள் கொஞ்சமென்று சொல்ல முடியாது. ஆனாலும், இந்த மண்ணில் மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை இம்மழை எடுத்துக் காட்டியுள்ளது. தண்ணீரில் தத்தளித்தவன் கையைப் பிடித்துக் காப்பாற்றியவன் எந்த சாதி என்று காப்பற்றப்பட்டவனுக்குத் தெரியாது. கைக் குழந்தைகள் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டிக் காலையில் பால் பாக்கெட்களைக் கொடுத்த இளைஞர்கள்  எந்த மதம் என்று அந்தக் குழந்தைகளுக்குத் தெரியாது. சாதி, மதத்தை மட்டுமன்று, மொழி, மாநில எல்லைகளைக் கடந்தெல்லாம் உதவிகள் ஓடோடி வருகின்றன. இந்த மழையும், வெள்ளமும் ஆயிரம் அழிவுகளைக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால் இந்த மழையும் வெள்ளமும்தான் மனிதர்களையும் அடையாளம் காட்டிச் சென்றுள்ளது!

Saturday, 28 November 2015

கடவுளும் விதியும்

பெரிய விபத்துகள் நடைபெறும்போது அதில் பலர் இறந்து விடுவதையும், அதிலிருந்தும் சிலர் தப்பிப் பிழைத்து விடுவதையும் பார்க்கிறோம். பிழைத்துக் கொள்கிறவர்கள், எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், உடனடியாகச் சொல்வது, "கடவுள் கருணையால் நாங்கள் பிழைத்துக் கொண்டோம்" என்பதுதான். உங்களை எல்லாம் கடவுள்தான் காப்பாற்றினார் என்றால், விபத்தில் இறந்து போனார்களே அவர்களை எல்லாம் யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கும், சற்றும் தயங்காமல், "இல்லையில்லை, அவர்களின் விதி முடிந்து பொய் விட்டது, அதனால் இறந்து போய்  விட்டார்கள்"  என்று விடை சொல்வார்கள்.


பிழைத்துக் கொண்டால் அது கடவுளின் கருணை, இறந்து போய் விட்டால் அது விதியின் விளையாட்டு. கடவுள் இவர்களைக் காப்பாற்றுகிறாரோ இல்லையோ, கடவுளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று மக்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்!

Monday, 23 November 2015

முதல் கஞ்சா யுத்தம்


19ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில், சீனப் பேரரசைப் பிரித்திஷ் சாம்ராஜ்யத்தால் கூட நெருங்க முடியவில்லை.ஆனால் இந்தியாவில் வணிகம் செய்துவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியார், வங்கத்தின் பருத்திக் காடுகளில் கஞ்சா செடி வளர்த்து, அதனைச் சீனாவில் கொண்டுபோய் விற்பனை செய்தனர். ஒரே ஆண்டில், 1400 டன் கஞ்சாவை அவர்களால், சீனத்தில்  விற்பனை செய்ய முடிந்தது அதற்குப்  பிறகு, சீனப் பேரரசே குலைந்து போயிற்று. 1839-42 ஆண்டுக் காலகட்டத்தை, முதல் கஞ்சா யுத்தம் (First opium war) என்று வரலாறு குறிக்கிறது. 1850களின் இறுதியில் இரண்டாவது கஞ்சா யுத்தம் நடைபெற்றது.அப்போதுதான் ஐந்து துறைமுகங்களைச் சீனா, இங்கிலாந்துக்குத் திறந்துவிட்டது. அவற்றுள் ஒன்றுதான் ஹாங்காங். அதனையும் சீனா தாரை வார்த்துக் கொடுத்தது. அந்தத் தீவை 99 ஆண்டுகள் இங்கிலாந்து நாடு குத்தகையில் வைத்திருந்தது, 1997இல்தான்  அது விடுவிக்கப்பட்டது. 

எந்த தேசம் போதைக்கு அடிமைப்படுகிறதோ, அந்த தேசம் அந்நியருக்கும் அடிமைப்படும் என்பதையே ஹாங்காங் நமக்கு உணர்த்துகிறது.


Thursday, 19 November 2015

இரு துருவங்கள்


1972 அக்டோபர் மாதம் , எம்.ஜி.ஆர்., தி.மு.க.விலிருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கினார். அதற்கு முன்னால் , தந்தை பெரியாரைச் சந்தித்தார். "வேண்டாம், நீங்கள் தி.மு.க. வை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டாம். தொடர்ந்து கட்சியிலேயே பணியாற்றுங்கள்" என்று அவரைப் பெரியார் கேட்டுக்கொண்டார்.  அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் முடிவுக்கு ஆதரவாக, வலிமையாக ஒரு குரல் கேட்டது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் ராஜாஜி. "எம்.ஜி.ஆர் தனியாகப் போராடுகிறார். அவரைக் கைவிட்டு விடாதீர்கள். அர்ஜூணனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்" என்றார் ராஜாஜி.

தி.மு.க.வும், எம்.ஜி.ஆரும் பிரிந்துவிடக் கூடாது என்று கருதினார் பெரியார். எம்.ஜி.ஆர் பிரிந்து போகட்டும் என்று கருதினார் ராஜாஜி. இரண்டும் வெறுமனே இரண்டு கருத்துகள் மட்டுமில்லை. அவற்றுக்குள், தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் அடங்கியிருந்தது.


Sunday, 18 October 2015

வ.உ.சி என்னும் போராளி!

1920ஆம் ஆண்டு அமிர்தசரசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு, பல வகைகளில் முதன்மை வாய்ந்தது. நேரு அவர்களின் நூலிலிருந்து கூற வேண்டுமானால், திலகரின் சகாப்தம் நிறைவடைந்ததும், காந்தியின் சகாப்தம் தொடங்கியதும் அந்த மாநாட்டில்தான்! தமிழகத்திலும் அம்மாநாடு சில சலசலப்புகளை ஏற்படுத்தியது. அம்மாநாட்டில் கலந்துகொண்டு அன்னி பெசன்ட் அம்மையார் 1920 ஜனவரி 11 அன்று சென்னை திரும்பினார். அப்போது அவரை வரவேற்க ஓர்  அணியும், எதிர்க்க ஓர் அணியும் காங்கிரஸ் சார்பிலேயே காத்திருந்தன. வரவேற்புக் குழுவிற்குத் தலைமை தாங்கியவர் திரு.வி.க அவர்கள். எதிர்ப்பு அணிக்குத் தலைமையேற்று முழக்கமிட்டவர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்கள்.

பெசன்ட் அம்மையாரை ஏன் வ.உ.சி எதிர்த்தார்? அன்னி பெசன்ட் இந்திய  விடுதலைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தாலும், இந்தியாவில் பார்ப்பன வேதங்களையும், பார்ப்பன ஆதிக்கத்தையும் மிகவும் தூக்கிப் பிடித்தார். அதனால்தான் அவரை எதிர்த்து முழக்கமிட்டதோடு, அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் மிகக் கடுமையாக அவர்  பேசினார். 


அரசியல், சமூகம் என இரண்டு தளத்திலும் சரியான பாதையில் நடைபோட்டவர் வ.உ.சி.

Tuesday, 13 October 2015

தமிழுக்கும்(?) அமுதென்று பேர்


"தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத் 
 தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்"

என்று பாடினார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். "தமிழுக்கு அமுதென்று பேர் என்றுதான் அவர் பாடியிருக்கக் கூடும், இடையில் யாரோ 'ம்' சேர்த்து விட்டார்கள், தமிழுக்கும் அமுதென்று பேர் என்று சொன்னால், வேறு எது எதற்கோ அமுதென்று பெயர், போனால் போகிறது தமிழுக்கும் அமுதென்று பெயர் என ஆகிவிடாதா" என்று நடுவில் சிலர் வினா எழுப்பினர். பிறகு, பாரதிதாசன் ஆய்வாளர்கள், முதல் பதிப்பு வரையில் தேடிப்  பிடித்துப் பார்த்தபோது, அதில் 'தமிழுக்கும்' என்றுதான் இருந்தது.

வேறொன்றுமில்லை....புரட்சிக்கவிஞர் இப்படிக் கருதியிருக்கக் கூடும். 'அமுதுக்கு அமுதென்று பேர், தமிழுக்கும் அமுதென்று பேர்' என்று எண்ணி அவர் பாடியிருக்கலாம்!


Saturday, 10 October 2015

பாண்டவர் அணி


ஐந்து பேர் ஒன்றாகச் சேர்ந்தால், அவர்களைப் பாண்டவர் அணி என்று அழைக்கும் பழக்கம் நம்மிடையே உள்ளது. என்ன வேடிக்கை என்றால், மகா பாரதத்திலேயே அந்தப் பெயர் எவருக்கும் பொருந்தவில்லை என்பதுதான். 'பஞ்ச' என்றால் (பாஞ்ச்) ஐந்து என்று பொருள். பாண்டவர் என்றால், பாண்டுவிற்குப் பிறந்தவர்கள் என்று பொருள். ஆனால் தருமரோடு பிறந்தவர்கள் ஐவரல்லர், கர்ணனையும் சேர்த்து அறுவர். எனவே பஞ்ச என்பது பொருந்தாது. அந்த அறுவரில் ஒருவர் கூடப் பாண்டுவிற்குப் பிறக்கவில்லை. பாண்டுவிற்கு இரண்டு மனைவியர் இருந்தபோதும், மனைவியரைத் தீண்டக்கூடாது என்று அவருக்குச் சாபம் இருந்ததால், சூரியன், எமன், வாயு, இந்திரன், இரட்டைத் தேவர்கள் ஆகியோர் மூலமே அறுவரும் பிறந்தனர் என்று மகா பாரதத்தின் ஆதி பருவம் சொல்கிறது. ஆகவே அவர்கள் ஐவரும் இல்லை, பாண்டவர்களும் இல்லை. பஞ்ச பாண்டவர் என்னும் பெயர் அவர்களுக்கே பொருந்தாது. அவர்களுக்கே பொருந்தாத பெயர், மற்றவர்களுக்கு எப்படிப் பொருந்தும்?

(குறிப்பு: இந்தச் செய்திக்கும், இன்று நடிகர் சங்கத் தேர்தலையொட்டிப் பேசப்படும் பாண்டவர் அணிக்கும் எந்தத் தொடர்புமில்லை. அந்தத் தேர்தலில் நம் நிலைப்பாடு என்ன என்பதைப் பகிர்வு பகுதியில் காணலாம்). 

Monday, 5 October 2015

கொடிதினும் கொடிது சாதியே!




சில நாள்களுக்கு முன்பு, காட்டுமன்னார்குடிக்கு அருகில், ஆண்டிப்பாளையம் என்னும் ஊரில், வீராசாமி என்பவர் தன் சொந்தப் பேத்தியைக் கொலை செய்திருக்கிறார். அவருடைய பேத்தி ரமணி, கல்லூரியில்  தன் உடன் படிக்கும், வேறு சாதியைச் சேர்ந்த ஓர் இளைஞனைக் காதலித்ததற்காக, பெற்றோர்கள் தடுத்தும்  கேளாமல், கழுத்தை அறுத்துக் கதறக் கதறக் கொலை செய்திருக்கிறார். காவல் நிலையத்தில் சரண் அடைந்த அவர், 'நான் இந்த ஊரின் நாட்டாண்மை, என் பேத்தியே வேறு சாதியில் ஒருவனைக் காதலிப்பதை என்னால் எப்படிப்  பொறுத்துக் கொள்ள முடியும், இந்தக் கொலை எல்லோருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று ஆணவத்தோடு கூறியிருக்கிறார். 

சாதி என்பது வெறும் ரத்த உறவுதான் என்கின்றனர். உறவுகளையே கொல்லும்  சாதி, யாரைக் காப்பாற்றப் போகிறது? சாதி வெறி பாறையை விடக் கடியது, ராஜபக்ஷேவை விடக் கொடியது! 

Sunday, 4 October 2015

சமூக நீதிக்குச் சவக்குழி!


கர்நாடகாவில், இந்தியத் தொல்லியல் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர், சான்றுகளோடு ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். மைசூருவில், சதஹள்ளிக்கு அருகில், மகாதேவபுரம் சாலையில், குடியிருப்புகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அரசு ஒப்புதலோடு உருவாகிக் கொண்டிருக்கும் அந்தப் பகுதிக்கு, Exclusively Brahmin Residential Layout என்றே அவர்கள் வெளிப்படையாக விளம்பரம் செய்துள்ளனர். இந்தக் குடியிருப்புப் பகுதியில் வீடு வாங்குவதற்குப் பிராமணர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அந்த விளம்பரம் கூறுகிறது.அதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இது மதச் சார்பின்மைக்கும், சமத்துவத்திற்கும் முற்றிலும் எதிரானதாக இருக்கிறது. தமிழ்நாட்டில், தலைவர் கலைஞர் தலைமையிலான அரசு, பெரியார் சமத்துவபுரங்களை உருவாக்கியது.இன்று தமிழ்நாட்டில் அந்த சமத்துவபுரங்களும் நின்று போய்விட்டன.கர்நாடக அரசோ, ஒரு ஜாதியினருக்கு மட்டும் கட்டப்படும் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கிறது. நாமும், நாடும் எங்கே போய்க் கொண்ட்டிருக்கிறோம் என்ற வினா நம்முன் எழுகிறது. 

Saturday, 3 October 2015

கறுப்புத் தோலும், வெள்ளை முகமூடியும்


ஆப்பிரிக்கக் கண்டத்தில், பிரான்சு நாட்டின் காலனியாக இருந்த கரிபியன் தீவில் பிறந்தவர் பிரான்ஸ் பனான் (Frantz Fanon - 1925-1961). ஓர் உளவியல் மருத்துவராகப் படித்து உயர்ந்த போதும், வாழ்நாள் முழுவதும் ஆப்பிரிக்க மக்களின் விடுதலைக்காகவே எழுதியவர், போராடியவர். 1952ஆம் ஆண்டு, Black Skin and White Mask - கறுப்புத் தோலும் வெள்ளை முகமூடியும் - என்று ஒரு நூலை அவர் வெளியிட்டார். ஒடுக்கப்பட்ட ஆப்பிரிக்க மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்று அந்த நூல் சொல்லும்.சற்று, பொருளாதாரத்தில் அல்லது சமூகத் தளத்தில் உயர்ந்துவிட்டாலும், உடனே அம்மக்கள் தங்களை வெள்ளைக்காரர்களாகவே கருதிக்கொண்டு, அவர்களைப்  போலவே  நடக்கவும் தொடங்கி விடுகிறார்கள் என்கிறார் அவர்.  இந்தக் குணம், கறுப்புத் தோலுக்குப் பொருந்தாத வெள்ளை முகமூடி என்றார் பனான்.இந்த முகமூடி அங்கு மட்டுமில்லை, ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் இங்கும் இருக்கிறது.


(Frantz Fanon எழுதியுள்ள இன்னொரு புகழ் பெற்ற நூல் 'The Wretched of the Earth - இந்நூலின் தமிழ் மொழி பெயர்ப்பு, கோவை, விடியல் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது).

Sunday, 27 September 2015

குமுதத்தின் ஆடை விலகுகிறது



தங்கள் கால்களை ஒட்டிப் பெண்கள் அணியும் 'லெகின்ஸ் ' உடை ஆபாசம் என்று கூறி, அதனை எதிர்க்கப் புறப்பட்ட  'குமுதம்' , அந்த  உடை  அணிந்துள்ள  பெண்களின்  பின்னாலேயே போய், காற்றிலோ, அவர்கள் அமரும்போதோ உடை  விலகும்வரை காத்துக் கிடந்து, அவர்களைப் படம் பிடித்து, 'குமுதம் ரிப்போர்டர்' வார இதழின்   அட்டைப்படத்தில் வெளியிட்டுள்ளது.  இப்படியெல்லாம் படம் போட்டுத்தான் பிழைக்க வேண்டும் என்கிற அளவுக்கு அதன் விற்பனை குறைந்து போயிருக்கிறதா  என்பது  நமக்குத் தெரியவில்லை. ஆனாலும் ஆபாச எதிர்ப்பு எனும் பெயரில், இப்படிப் படங்களை வெளியிடுவது மிகப் பெரிய ஆபாசம், அநாகரிகம், அருவெறுப்பு. எப்படியாவது பிழைப்பு நடத்தினால் போதும் என்று நினைக்கிரவர்களைப் பற்றி, பாரதியார் மிகக் கடுமையாக ஒரு பாட்டில் எழுதியுள்ளார். 'சீச்சீ....' என்று அந்தப் பாட்டின் வரி தொடங்கும்!  




Tuesday, 22 September 2015

தாமஸ் ஆல்வா எடிசனும் ஒரு மீனும்


உலகப் புகழ் பெற்ற, ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை உலகுக்குத் தந்த அறிவியல் அறிஞர் தாமஸ் ஆல்வா எடிசன், 1910 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி, நியுயார்க் டைம்ஸ் என்னும் இதழுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். கடவுளின் கருணை பற்றி அவரிடம் கேட்கப்பட்ட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே சொன்னார், "இன்று மதியம் எனக்கு நல்ல மீன் உணவு எனக்குக் கிடைத்தது. அது கடவுளின் கருணை என்று கொண்டால், நான் உண்ட மீனையம் கடவுள்தான் படைத்திருக்க வேண்டும். அந்த மீனிடம் கடவுள் காட்டிய கருணை என்ன" என்று கேட்டுச் சிரித்தார். பிறகு அவரே சொன்னார். கடவுள் என்று ஒன்றும் இல்லை. எல்லாம் இயற்கைதான். இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ கிடையாது. இயற்கை தன் போக்கில் செயல்களைச் செய்து முடிக்கிறது என்றார் எடிசன்.

Thursday, 17 September 2015

டான்யூப் நதி


தென் கிழக்கு ஐரோப்பா முழுவதும் வளைந்து வளைந்து ஓடுகிறது டான்யூப் நதி. ஜெர்மனியின் இருண்ட காடுகளில் உற்பத்தியாகி,  ஒன்பது நாடுகளைக்கடந்து, 2680 கிலோ மீட்டர் ஓடி, பிளாக் சீ  எனப்படும் கருங்கடலில் போய்க் கலக்கிறது. ஆஸ்ட்ரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, குரோஷியா, செர்பியா, ரொமேனியா, பல்கேரியா, மோல்டோவா, உக்ரைன் என்று பல்வேறு நாடுகளுக்கும் நீர்வளம் சேர்க்கிறது அந்நதி.  ஹங்கேரியின் தலைநகரான புடாபெஸ்ட் நகருக்கு அழகு சேர்ப்பதும் டான்யூப் நதிதான்.ஜெர்மனியில் உற்பத்தி ஆனாலும், ரொமேனியாதான் 29% தண்ணீரைப்  பெறுகிறது. ஜெர்மனிக்குக் கிடைப்பது வெறும் 7% தண்ணீர் மட்டுமே!

ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்குள் நதியால் எந்தச் சிக்கலும்  எழவில்லை. எந்த நாடும் நதியைக் கட்டிப் போடவில்லை. இங்குதான், காவிரியும், முல்லைப் பெரியாறும் கர்நாடகத்தையும், கேரளாவையும் தாண்டி வருவதற்குள் எத்தனையோ சிக்கல்கள் எழுகின்றன!


Wednesday, 9 September 2015

ரமா பாய்


1858 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்து, பார்ப்பனீயத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, சூத்திரன் என்று சொல்லப்பட்ட ஓர் இளைஞனைக் கைப்பிடித்து, வடநாடு முழுவதும் சுற்றித் திரிந்து, பெண் கல்வி, பெண் விடுதலைக்காகத் தன் வாழ்வையே அர்பணித்துக் கொண்டவர் ரமா பாய். 20ஆவது வயதில் தன் பெற்றோரையும், 25 ஆவது வதில் தன் கணவனையும் இழந்த பின்னும், நெஞ்சில் துணிவை இழக்காமல், அதற்குப் பிறகு 40 ஆண்டுகள் தன் இலட்சியத்திற்காகப் போராடி மறைந்தவர் அவர். ரிப்பன் பிரபுவுக்கு முன்னால்  அவர் பெண் கல்வி குறித்து ஆற்றிய உரையால் ஈர்க்கப்பட்டு, இங்கிலாந்தும் அமெரிக்காவும் அவரை அரவணைத்தன. அவர் இந்தியாவில்கணவனை இழந்த இளம் பெண்களுக்காக ஓர் இல்லம் நிறுவி, அவர்களுக்குக் கல்வி கொடுத்து, ஊக்கம் கொடுத்து,  அவர்களைச் சுய மரியாதையோடு வாழ வைத்தார். ஆனால் இவையெல்லாம், இந்து மதத்திற்கு எதிரானவை என்று கூறி திலகர் அவரைக் கண்டித்தார். 

நமக்கெல்லாம் திலகரைத்தான் தெரியும். ரமா பாயைத்  தெரியாது!


நல்ல கெட்டவர்கள்

உலகில் வஞ்சனையும் வன்முறையும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆனாலும் ஒட்டுமொத்தமாகக் கணக்கெடுத்துப் பார்த்தால், மக்களில் தீயவர்களை விட நல்லவர்களே கூடுதலாக உள்ளனர். பன்மடங்கு கூடுதலாக உள்ளனர். ஆனால் அந்த நல்லவர்களில் பலர், தீமை கண்டு அஞ்சுகின்ற நல்லவர்களாக, தீமைகளைக் கண்டும் காணாமல் இருக்கின்ற நல்லவர்களாக, சில வேளைகளில், வேறு வழியின்றித் தீமைக்குத் துணை போய்  விடுகிற நல்லவர்கலாக இருக்கின்றனர். தீயவர்களின் செயல்களை விட நல்லவர்களின் மௌனமே மிகுந்த ஆபத்தானது. எனவே எல்லோரும் நல்லவர்கள் இல்லை.தீமைகளை எதிர்த்துப் போராடுகின்றவர்களே நல்லவர்கள். மற்றவர்கள்  இரண்டு வகையினர். ஒரு சாரார்  கெட்டவர்கள். மற்றவர்கள்  'நல்ல கெட்டவர்கள்.'