அமெரிக்கா நோக்கிய
என் தனிப்பட்ட பயணத்தில், வானத்தில் பறந்தபடியே படித்து முடித்தேன், ""திராவிட
இயக்க ஒவ்வாமை நோயிலிருத்தல்'' என்னும் நூலை. என் நெடுநாள் நண்பரான தோழர் வே.மு. பொதியவெற்பன்
அந்நூலை எழுதியுள்ளார். மிக அண்மையில் வெளிவந்துள்ள (அல்லது இனிமேல்தான் வெளியீட்டு
விழா நடைபெறவுள்ள) அந்நூல், திராவிட இயக்கம் குறித்துத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து
வரும் ஜெயமோகன், தமிழவன் ஆகியோரின் கருத்துகளுக்கு உரிய மறுப்பு ஆதாரங்களை முன்வைக்கிறது.
ஜெயமோகனின் திராவிட
இயக்க ஒவ்வாமை நோய் "குணப்படுத்த இயலாவண்ணம் முற்றிய கையறு நிலை'யில் உள்ளதாகவும்,
தமிழவனிடமோ "விடுபட்டாற்போலத் தோன்றினும், பூரண குணமாகாமல், விட்டுவிட்டு மிச்சசொச்சமாய்த்
தலைநீட்டும் நோய்க்கூற்று எச்சங்களை'க் கொண்டுள்ளதாகவும் நூல் குறிப்பிடுகின்றது.
மேற்குறிக்கப்பெற்றுள்ள
இருவரும் வெறும் குறியீடுகளே. இவ்வகை நோயால் இன்று தமிழகத்தில் மிகப் பலரும், சில அமைப்புகளும்
கூடப் பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் ஆசிரியர் கூறுவதுபோல், "திராவிட இயக்க இருப்பென்பதே
சகிக்கொணா அளவிற்கான ஒன்றாகி, அதன் மீதான ஒவ்வாமையின் மனப்பீடிப்பு, கடும் வெறுப்பாக
(Aversion) வெளிப்படுவதை'க் காண்கின்றோம்.
நூலின்
"மணிப்பிரவாள' மொழிநடை, செய்திகளை உள்வாங்கிக் கொள்வதற்குச் சற்று இடர்தரவே செய்கின்றது.
எனினும், பொதியவெற்பனுக்கே உரிய அங்கதம், நூலைச் சுவைத்துப் படிக்க வழி செய்கிறது.
நூல்
காட்டும் எண்ணற்ற சான்றுகள், நூலாசிரியரின் ஆழ்ந்த படிப்பையும், கடும் உழைப்பையும் நமக்கு உணர்த்துகின்றன. ஒரு பக்கச் சார்புடையனவாக அல்லாமல், எல்லாத்
தரப்பிலிருந்தும், எல்லாக் கோணங்களிலிருந்தும் தரவுகள் தரப்பட்டுள்ளன. இந்த ஒரு
நூலைப் படித்து முடிக்கும்போது, பல நூல்களைப் படித்த உணர்வு நமக்குள் எழுகிறது.
திராவிட இயக்க
ஒவ்வாமை நோயினர் மீது மட்டுமின்றி, திராவிட இயக்கத் தலைவர்கள் மீதும் கூட, அவருடைய
கேலிகளும், கிண்டல்களும் சிலவிடங்களில் தலைநீட்டுகின்றன. கலைஞர் குறித்தும், திராவிடர்
கழகத் தலைவர் கி. வீரமணி குறித்தும் அதுபோன்ற சில குறிப்புகள் காணப்படுகின்றன.
"மானுட வாழ்வின் மதவெளியின் வகிபாகத்தை மறுதலிக்கும் பகுத்தறிவின் பயங்கரவாத மரபு'
போன்ற நமக்கு உடன்பாடில்லாத வரிகளும் நூலுள் இடம் பெற்றுள்ளன. இதனை நூலின் பதிப்பாசிரியர்
நீலகண்டனே தன் பதிப்புரையில் குறிப்பிட்டு மறுத்துள்ளார்.
எவ்வாறாயினும்
விரிந்து பரந்த தளங்களில், உரிய ஆவணங்கள் பலவற்றை முன்வைத்துள்ள, அறிவாளர்கள் படிக்க
வேண்டிய அரிய நூல் இஃதென்பதை எவரும் மறுப்பதற்கில்லை.
பொதுவுடைமைச்
சிந்தனையாளரான பொதியவெற்பன், பொதுவுடைமை இயக்கத் தலைவர் பி. ராமமூர்த்தி தொடங்கிப்
பலரிடமும் காணப்பட்ட திராவிட இயக்க எதிர்ப்புணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவை
"வேதங்களின் நாடு' என்றார் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு. "திராவிட மாயை' என
நூல் எழுதினார் பி. ராமமூர்த்தி. திராவிடச் சிந்தனை என்பதே இனவாதச் சித்தாந்தம் என்ற
கருத்தை வெளியிட்டார் ஆய்வாளர் க. கைலாசபதி. திராவிட மொழி, இனக்கோட்பாட்டின் மாயை என்கிறார்
முத்தையா. இவ்வாறாக திராவிட இயக்கம் பற்றிக் கடிந்து பேசும் பொதுவுடைமையாளர்களை நோக்கி,
""இந்து மாயை பற்றிப் பொதுவுடைமை இயக்கத்தவர் பேசுவதில்லையே, ஏன்? ஆரிய$திராவிட
எதிர்முரண் இருமை எதிர்வை, தத்துவ நோக்கில், மனோன்மணீயம் சுந்தரனார் முன்வைத்ததனைக்
காலனிய மனோபாவம் எனப் பேசுபவர்கள், இந்து மாயை எனும் காலனியக் கொடை பற்றி ஏன் பேசுவதில்லை?''
என்று கேட்கிறார் பொதியவெற்பன்.
கால்டுவெல் குறித்து
முத்தையா எழுதும் செய்தியை அப்படியே எடுத்துத் தருகிறது இந்நூல்.
""வீரமாமுனிவரைப்
போலவே, தமிழகத்தில் கிறிஸ்தவத்தைப் பரப்பவந்த
கால்டுவெல்லுக்கும், தான் மேற்கொண்ட சமயமாற்றப் பணிக்குப் பெரும் இடையூறாக இருந்தது,
பன்னூறு ஆண்டுகளாய்த் தமிழ் மக்களின் செல்வாக்கைப் பெற்று அவர்தம் வாழ்வோடு ஒன்றிவிட்ட
இந்து சமயமாகும்" என்று எழுதுகிறார்
முத்தையா. கால்டுவெல்லின் பணிகளுக்கு உள்நோக்கம் கற்பித்து அவரைக் கொச்சைப்படுத்தும்
முத்தையா, இந்து மதத்தை எப்படித் தாங்கிப் பிடிக்கிறார் என்பதை அவருடைய வரிகள் எடுத்துக்காட்டுகின்றன.
பன்னூறு ஆண்டுகளாய்த் தமிழர்தம் வாழ்வோடு ஒன்றிவிட்டதாம் இந்துமதம். அதே போலத்தான்
பல்லாயிரம் ஆண்டுகளாய், உலக மக்களின் வாழ்வோடு ஒன்றிக் கிடக்கிறது வர்க்க வேறுபாடு.
பிறகு ஏன் அதனை எதிர்க்க வேண்டும்.
திராவிடர் என்பது
எப்படி இனவாதம் ஆகும்? திராவிடர் பற்றிய சொல்விளக்கத்தைப் பொதியவெற்பன் பின்வருமாறு
விளக்குகிறார்:
""சிறுபான்மையினராக
உள்ள பார்ப்பனரை முன்னிறுத்திப் பெரும்பான்மையினராக உள்ளோரைப் பார்ப்பனரல்லாதார் என்பது
என்ன நியாயம் எனக் கேள்வி எழுப்பிய பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே,
ஆரியர் அல்லாதார் திராவிடர் என ஆள வேண்டுமென்று வலியுறுத்து முகமாகவே, இச்சொற்பாட்டை
மீட்டெடுத்து, திராவிட இயக்கமென வரையறுத்தார். எந்த வகையில் நோக்கினாலும், இது ஓர்
எதிர்வினை என்கிற வகையில், முந்தைய செயலைப் பற்றிப் பேசாமல், இதிலிருந்து தொடங்குவது
முரணியக்கப் பார்வையின் பாற்பட்டது''.
பொதியவெற்பன்
கூறுவது போல, திராவிட இயக்கம், இட ஒதுக்கீடு எல்லாம் எதிர்வினைகள்தாமே! பார்ப்பனர்களே கல்வி, தொழில், அரசியல் என அனைத்துத்தளங்களிலும்
ஆளுமை செலுத்திக்கொண்டிருந்த வேளையில், பார்ப்பனர் அல்லாத தமிழர்களாகிய திராவிடர்களுக்கும்
உரிய உரிமைகளைக் கோரிய இயக்கம்தானே திராவிட இயக்கம்.
பார்ப்பானுக்குத்
தொழில் இது, சத்திரியனுக்கும், வைசியனுக்கும் தொழில்கள் இவை, மூவருக்கும் ஏவலனாக இருப்பதே
சூத்ர தருமம் என ஏற்கனவே இருந்த இட ஒதுக்கீட்டை எதிர்த்துத்தானே, புதிய இடஒதுக்கீட்டைத்
திராவிட இயக்கம் கோரியது.
எதிர்வினைகளுக்கு
இனவாதம் என்று பெயர் என்றால், மூல வினைக்கு என்ன பெயர் என்று கூற வேண்டாமா?
""இங்கே வாழும் பிறமக்களை விட நாங்கள் உயர்ந்தவர்கள். நாங்கள் வேறு ‡ நீங்கள்
வேறு என்று ஒரு சாரார் கூறிக்கொள்ளும்போது, அந்த மக்கள், "ஆம் நீங்கள் வேறு. நீங்கள்
ஆரியர்கள், நாங்கள் திராவிடர்கள்' எனக்கூறிக் கொள்வதில் என்ன தவறு?'' என்று எஸ்.வி.ஆர்.
கேட்பதையும் சரியான தருணத்தில் நூல் நினைவுபடுத்துகிறது.
"நாங்கள்
பெரியவர்கள்' என்னும் ஆணவத்தின் வெளிப்பாடாகத்தானே, இன்றும் அவர்கள் பூணூலை அணிகின்றனர்.
""பூணூல்
அணிதல் பார்ப்பனருக்குத் தனது சுயத்தை உறுதிசெய்யும் - அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும்
ஒரு கலாசார நிகழ்வு'' என்று அ. மார்க்ஸ் கூறுவது நடைமுறை உண்மை இல்லையா?
பூணூல் குறித்து,
பார்ப்பனர்களாகப் பிறந்த வ.ரா.வுக்கும், மெளனிக்கும் இடையில் நடைபெற்ற பின்வரும் உரையாடலை,
"சொல்லின் மந்திரமும், சொல் ஓய்ந்த மெளனமும்' என்னும் நூலிலிருந்து பொதியவெற்பன்
எடுத்துக்காட்டுகிறார்.
வ.ரா: உன் பூணூலைக்
கழற்றி ஆணியில் மாட்டேன்.
மெளனி: I
will rather cut my cock and put it there. (வேண்டுமானால் என் ஆண் குறியை நறுக்கி அங்கே
வைப்பேனே தவிர....)
எவ்வளவு ஆணவம்!
மெளனி அய்யர்கள் தங்கள் உயிர்நிலையாகப் பூணூலைப் பேணுகின்றனர் என்பதற்கு இதனை விடச்
சான்று வேறு என்ன தர முடியும்? அந்த மெளனிகளைத் தானே நம்மவர்களே தலையில் தூக்கி வைத்துக்
கொண்டு இலக்கிய உலகில் ஆடுகின்றனர். திராவிடம் பற்றி அவதூறு பேசித்திரியும் "தமிழ்த்தேசியங்கள்'
மெளனிகள் பற்றிய தங்களின் கண்ணோட்டங்களை வெளிப்படுத்துவதில்லையே.
இந்த ஆணவப் பூணூல்களைத்தானே
அய்யா பெரியார் அறுத்தெறியச் சொன்னார். பொதியவெற்பன் எடுத்துக்காட்டுவது போல, அன்று
திருமூலரே சொன்னாரே
""மூடங்கெடா
தோர்சிகை நூல்மேற் கொள்ளின்
ஆடம்பர நூல்சிகை
அறுத்தல் நன்றே''
என்கிறதே திருமந்திரம்.
எனவே திராவிடத்தை
எதிர்ப்போர், பூணூல் போடாத பார்ப்பனர்களே என்பதைத் திராவிட இயக்க நூற்றாண்டிலேனும்
தமிழர்கள் உணரவேண்டும். இந்நூல் எடுத்துக்காட்டுவதைப்போல, ஆத்திகம்$நாத்திகம், வைதிகம்$அவைதிகம்,
பிராமணர்$சிரமணர், பார்ப்பனர்$பார்ப்பனர் அல்லாதார், ஆரியம்$திராவிடம் ஆகிய அனைத்தும்
இருமை எதிர்வுகளே.
ஒன்றை எதிர்ப்போர்,
மற்றொன்றை நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஆதரிக்கின்றார்கள் என்பதே அதன் உட்பொருள்.
No comments:
Post a Comment