ஒருவர் கிழக்கிலும் இன்னொருவர் மேற்கிலும் மாநில முதல்வர்களாக உள்ளனர். குணநலன்களிலும் கூடக் கிழக்கும் மேற்கும்தான். எனினும் இருவருக்கு மிடையே பல ஒற்றுமைகளும் உண்டு. ஒருவர் பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் . மற்றவர் அக்கட்சியின் ஆதரவோடு ஆட்சி நடத்துபவர். பாரதீய ஜனதாவின் ஆதரவு பெற்றிருந்தாலும் இருவருமே பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இருவரும் ஒத்த வயதினரும் கூட. இத்தனை ஒற்றுமைகள் இருந்தபோதிலும் மோடியைத் தூக்கிப் பிடிப்பதைப் போல, நிதிஷ்குமாரை, அக்கட்சியோ அவாளின் ஊடகங்களோ உயர்த்துவதில்லை. குஜராத்தின் பெருமைகளை ஒன்றுக்கு நூறாகப் பேசும் இவர்கள், பீகார் குறித்து உள்ளதைக் கூடச் சொல்லுவதில்லை. என்ன காரணம்? ஒற்றுமைகள் பல இருந்தாலும், முதன்மையான வேற்றுமை ஒன்று இருக்கிறது. அது குறித்துப் பார்ப்பதற்கு முன்பு குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களின் அன்றைய இன்றைய நிலைகளைக் காண்பது பொருத்தமாக இருக்கும்.
மோடியின் ஆட்சிக் காலத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் திரும்பத் திரும்பச் சொல்லப்படுகின்றது. என்றைக்குக் குஜராத் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தது? இந்தியாவின் பொருளாதாரமே ராஜஸ்தான் மார்வாரிகளிடமும், குஜராத் சேட்டுகளிடமும்தானே உள்ளது ! இந்தியாவின் மிகப் பெரிய பஞ்சாலைகள், வணிக நிறுவனங்கள் அங்குதானே உள்ளன. சிமெண்ட் உற்பத்தியிலும் முன்னணியில் இருப்பது குஜராத் தானே? ஜாம் நகரில் உள்ள எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிறுவனம் எவ்வளவு வருமானம் தரக்கூடியது? உலகிலேயே மிகப்பெரியதான கப்பல் உடைக்கும் தளம் பவாநகரில் உள்ளது. கனிம வளங்களிலும் ஏதேனும் குறைவு உண்டா?
இந்தியாவிலேயே கால்சியம், மக்னீசியம், சுண்ணாம்பு ஆகியவை அங்குதானே கூடுதலாகக் கிடைக்கின்றன! அங்கு திரட்டிய பணத்தைக் கொண்டு இந்தியா முழுவதும் சென்று வட்டிக்கு விடுவதும் குஜராத் சேட்டுகள் தானே? இத்தனை செல்வவளம் இந்தியாவில் வேறு எங்கும் இல்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை.
கல்வியிலும் குஜராத் முன் வரிசையில்தான் இருந்து வந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வரும் முன்பே அங்கு கற்றோர் எண்ணிக்கை, ஆண்களில் 80.5, பெண்களில் 58.6 விழுக்காடு என்றுதான் இருந்தது. இப்போது அந்நிலை சற்றுக் கூடி, சராசரி கல்வி அறிவு 79.31 விழுக்காடு என்று ஆகி உள்ளது. மோடியின் ஆட்சியில் வெகுவாகக் கூடி இருப்பது ஒன்றே ஒன்றுதான். பன்னாட்டு மூலதனம் மட்டும் அளவு கடந்து கூடியுள்ளது. அதன் காரணமாகவே வெளிநாட்டு இதழ்கள் உள்பட இந்நாட்டு ஏடுகளும் அவர் ஆட்சியைத் தூக்கிப் பிடிக்கின்றன.
ஆனால் பீகாரின் நிலையோ முற்றிலும் வேறானது. அங்கு பெரிய தொழிற்சாலைகள் ஏதுமில்லை. வேளாண்மை கூட வெறும் 35 விழுக்காடு மட்டும்தான். கூலி வேலை செய்யும் ஏழை மக்கள்தான் 55 விழுக்காடு உள்ளனர். இந்தியாவிலேயே தனி நபர் வருமானம் குறைவாக உள்ள மாநிலம் பீகார்தான். கல்வி நிலையிலும் மிகப் பின்னடைந்த நிலையிலேயே அம்மக்கள் உள்ளனர். நாளந்தா பல்கலைக் கழகம் தோன்றிய மண்ணில், இந்தியா விடுதலை பெற்றபோது படித்தவர்களின் எண்ணிக்கை இருபது விழுக்காட் டிற்கும் குறைவு என்பது எவ்வளவு வேதனையானது. மக்கள் தொகையில் மட்டும் அது இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநிலம்.
ஆனால் நிதிஷ்குமார் பதவி ஏற்ற பிறகு, அம்மாநிலம் பல சிறப்பான மாற்றங்களைக் கண்டுள்ளது. குறிப்பாகத் தனி நபர் வருமானம் 18 விழுக்காடு கூடியுள்ளது என்பது பெரிய சாதனை என்றே கூற வேண்டும். கல்வி அறிவிலும் இன்று பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று அங்கு கற்றோரின் சராசரி எண்ணிக்கை 63 விழுக்காடு ஆகும்.
15 ஆண்டுகாலப் பழைய ஆட்சியை மாற்றி முதல்வர் பொறுப்புக்கு வந்த நிதிஷ், பல கிராமங்களில் சாலை வசதிகளை உருவாக்கியதும், நகரங்களில் பல மேம்பாலங்களைக் கட்டியதும், மக்களிடையே அவருக்குப் பெரும் செல்வாக்கை உருவாக்கின.
குறிப்பாக அவர் செய்த இரண்டு பணிகளை மக்கள் நன்றியுடன் குறிப்பிடுகின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட, மருத்துவ வசதிகளுக்கு ஏற்பாடு செய்தார். பொதுநல மருத்துவ நிலையங்கள் (Public Health Centre)
இல்லாத சிற்றூர்களே இல்லை என்னும் நிலை அங்கு உருவாகியுள்ளதாகக் கூறுகின்றனர்.
அடுத்ததாக, ஒரு லட்சம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், 2005-10 காலகட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள்தாம் பீகார் மாநிலத்தில் நிறைய இருந்தன. இன்று அந்நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கல்வி, மருத்துவம் ஆகிய இரு துறைகளிலும் அவர் காட்டிய அக்கறைதான், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐந்தில் நான்கு பங்கு இடங்களோடு, மீண்டும் வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. அந்த வெற்றியில்தான் பா.ஜ.க.வினர் இன்று குளிர்காய்ந்து கொண்டுள்ளனர்.
நிலைமைகள் இவ்வளவு தெளிவாக இருக்கும்போது, மோடிக்குக் கிடைக்கும் ஆதரவு நிதிஷிக்கு ஏன் கிடைக்கவில்லை என்பதும், ஒரே கூட்டணியில் இருந்தாலும் மோடி பிரதமர் ஆவதை நிதிஷ் ஏன் எதிர்க்கின்றார் என்பதும் சிந்திக்கப்பட வேண்டியவைகள் அல்லவா?
விடை மிக எளியது. இருவரும் முற்றிலும் வேறுபட்ட இருவேறு முகாம்களிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். நரேந்திர மோடி, சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ். அமைப்பினால் ஈர்க்கப்பட்ட, கோல்வால்கரின் சீடர். நிதிஷ்குமாரோ, சமூக நீதிக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட, ராம் மனோகர் லோகியாவின் சீடர்.
லோகியா |
பெரியார், அம்பேத்கரைப் போல, உ.பி., பீகார் பகுதிகளில் சமூக நீதிக்காகப் போராடியவர் லோகியா. தொடக்கத்தில் விடுதலைப் போராட்டத்தில் முழுமையாகப் பங்கேற்றவர். 1942இல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு, லாகூர்ச் சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளானவர்.
விடுதலைக்குப் பிறகு, சமூக நீதியில் அவர் கவனம் சென்றது. வி.பி.சிங், ஜார்ஜ் பெர்னான்டஸ், ராம் விலாஸ் பஸ்வான், லாலுபிரசாத் அனைவருமே அவருடைய தயாரிப்புகள்தான். அவர்களுக்கு அடுத்த தலைமுறையில் வந்தவர் நிதிஷ். அதனால்தான் வி.பி.சிங் அமைச்சரவையில் அவர் இடம் பெற்றார். வடநாட்டில் இடஒதுக்கீட்டை முதன்முதலாக அறிமுகப்படுத்திய கர்ப்பூரிதாக்கூரும் நிதிஷிடம் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
தமிழகத்தில் திராவிட இயக்கச் சிந்தனை ஊறியிருந்த காரணத்தால், 1927ஆம் ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. பிறகு அண்ணல் அம்பேத்கரின் முயற்சியால், இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற்றனர்.
ஆனால் அந்தக் காலகட்டத்தில் வட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எங்குமே இட ஒதுக்கீடு கிடையாது. 1978இல், கர்ப்பூரி தாக்கூர் பீகார் முதலமைச்சரான பிறகே பிற்படுத்தப் பட்டோருக்கு முதன் முதலாக 26% இடஒதுக்கீட்டிற்கு ஆணை வெளிவந்தது.
ஆனால் அதற்கு அங்கு பெரும் எதிர்ப்பு எழுந்தது. அங்குள்ள பார்ப்பனர்கள், பூமிஹார் சாதியினர், தாக்கூர் சாதியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து அதனை எதிர்த்தனர்.
உடனே அப்போது ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த சந்திரசேகர், மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் மத்திய சட்ட அமைச்சராக இருந்த சாந்திபூஷன் தலைமையில் ஒரு குழு அமைத்து அதனை விசாரிக்கச் சொன்னார். இறுதியில் 26 என்பது 20 விழுக்காடாகக் குறைக்கப்பட்டு, அதிலும் சில உட்பிரிவுகள் கொண்டு வரப்பட்டன.
இவ்வாறு அமைந்த சமூகநீதி வரலாற்றில், நிதிஷ் போன்ற அன்றைய இளைஞர்கள் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தனர். எனவேதான் பார்ப்பன ஊடகங்கள் அவரைக் கீழே அழுத்துவதில் கவனமாக உள்ளன.
அதே நேரம், எவ்வளவுதான் உயர்த்திப் பிடித்தாலும், ஜெயலலிதா, சோ போன்றவர்கள் பல முயற்சிகளைச் செய்தாலும், மோடியை அவ்வளவு எளிதில் பிரதமராக ஆக்கிவிட முடியாது.
இன்று குஜராத்திலேயே அவருடைய செல்வாக்கு சரியத் தொடங்கியுள்ளது. 2007 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 127 தொகுதிகளில் (மொத்தம் 182 தொகுதிகள்) வெற்றி பெற்ற மோடி, வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அறிவித்துள்ளார்.
அது வெறும் கனவே என்பதனைப் பல நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. நகர்ப்புறங்களில் ஆதரவு பெற்றுள்ள அவருக்குக் கிராமப்புறங்களில் எதிர்ப்பு மிகுந்துள்ளது. அவருடைய ‘விகாஷ் புருஷ்’ திட்டத்திற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர். செளராஷ்டிரா மக்கள், மீன் பிடிப்போர் ஆகியோரிடம் அவருக்கு எதிர்ப்பு மிகுதியாகி உள்ளது. முன்னாள் முதல்வர்களான சேசுபாய் படேல், சுரேஷ் மேத்தா ஆகியோர் நேரடியாகவே எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற பா.ஜ.க.வின் தொகுதியான மான்சா தொகுதி இடைத்தேர்தலில், 8000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. எல்லாவற்றையும் தாண்டி, விஸ்வ இந்து பரிஷத், பாரதிய கிஸான் சங்கம் ஆகியவையும் கூட இப்போது மோடியை விரும்பவில்லை என்பது குறித்துக்கொள்ள வேண்டிய செய்தி.
எனவே பா.ஜ.க. மற்றும் பார்ப்பனர்களின் கனவு பலிக்கப்போவதில்லை என்பது தெளிவாகிக் கொண்டுள்ளது.
sariyachonneenga ayya.
ReplyDelete