தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Wednesday, 10 October 2012

வேறு தோட்டத்துப் பூக்கள் (1)


நம் வலைப்பூவில் இது ஒரு புதிய பகுதி. என் எழுத்துகளை மட்டுமின்றி, பிறரின் எழுத்துகளையும், கருத்துகளையும் இதில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற ஆவலின் விளைவே 'வேறு தோட்டத்துப் பூக்கள்'. இப்பகுதியை மூன்று விதமாகக் கையாளலாம் என்று எண்ணியுள்ளேன். நான் படித்தவற்றில் பிடித்தமான சில எழுத்துகளை அப்படியே எடுத்துத் தருவது முதல் வகை. முழுமையாக இல்லாமல், சில குறிப்பிட்ட பகுதிகளையும்,அவை குறித்த என் விமர்சனங்களையும் தருவது இன்னொரு வகை. மற்றவர் எழுதியுள்ள ஒரு செய்தியை எடுத்து வைத்து, அது குறித்து நாம் அனைவரும் ஒரு விவாதத்தைத் தொடங்குவது மூன்றாவது வகை.

ஒரு சூடான மோதல்!
       
வாருங்கள் நண்பர்களே! நாம் முதலில் நுழைய இருக்கும் தோட்டம் 'சமநிலைச் சமுதாயம்'. அம்மாத இதழின் செப்டம்பர் இதழில், சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் அவர்கள், "டெசோ - ஒரு கண்கட்டு வித்தை" என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதற்கு எதிர்வினையாக அதே இதழின் அக்டோபர் வெளியீட்டில், ஷா நவாஸ் அவர்கள் "டெசோ, ஈழ அரசியல், கலைஞர்" என்று கட்டுரை எழுதியுள்ளார்.  ஜப்பாரின் விமர்சனங்கள் மற்றும் அவற்றிற்கு ஷா நவாஸ் தந்துள்ள மறுமொழிகள் இரண்டிலிருந்தும் சில பகுதிகளைக் கீழே தந்துள்ளேன். படியுங்கள் - படித்துவிட்டு நீங்களும் உங்கள் கருத்துகளை  எழுதுங்கள்.  

அப்துல் ஜப்பார்: (தமிழக அரசியலில்) இழந்த செல்வாக்கை மீட்டெடுத்து விட வேண்டாமா? கலைஞர் உபாயம் தேடினார். வசமாகச் சிக்கியது டெசோ. இலங்கை பற்றிய எந்த விஷயத்துக்கும் தமிழ் நாட்டில் நல்ல மார்கெட் உண்டு என்று அவருக்குத் தெரியும்.அதற்குக் கவர்ச்சி ஊட்ட வேண்டாமா? நாடகீயமான ஓர் அறிவிப்பைச் செய்தார்.

ஷா நவாஸ்: ஈழம் தான் தமிழக அரசியலைத் தீர்மானிக்கும் எனில்,தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க. ஏன் ஈழம் கூடாது என்கிறது? ஈழ ஆதரவுக் கட்சிகளான ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை நாடாளுமன்றத்தில் தலா ஒரு உறுப்பினரோடும், சட்டமன்றத்தில்  அது கூட இல்லாமலும் ஏன் சுருங்கி நிற்கின்றன? ஈழத்தை ஆதரிக்கும் பா.ம.க. சட்டமன்றத்தில் சில உறுப்பினர்களோடும், நாடாளுமன்றத்தில் அது கூட இல்லாமலும் ஏன் முடங்கிக் கிடக்கிறது?                  நாடகீயமாகக் கூட அதை (ஈழக் கோரிக்கையை) அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், தே.மு.தி.க. ஆகியவை ஏன் சொல்ல மறுக்கின்றன?

அப்துல் ஜப்பார்   : ஈழத்தை விட்டுவிட்டு (கலைஞர்) தமிழர் வாழ்வுரிமை மாநாடு என்று புதிய நாமகரணம் சூட்டினார்.

ஷா நவாஸ்: ஈழத்திற்காகவே தன்னை அர்ப்பணித்து உள்ளதாகக் கூறி, தமிழ்நாட்டில் களமாடி வரும் பழ.நெடுமாறன் ஈழத் தமிழர்      பாதுகாப்பு இயக்கம் என்று பெயர் சூட்டியதை, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் எனப் பெயர் மாற்றியது ஏன்?

அப்துல் ஜப்பார்: டெசோ ஒரு அபத்தம்..........கண்கட்டு வித்தை 

ஷா நவாஸ்: டெசோவினால் எந்தப் பயனும் இல்லையென்றால்,இந்திய அரசு ஏன் இத்தனை நெருக்கடிகளைத் தர வேண்டும்? தமிழக அரசு ஏன் அதற்குத் தடை மேல் தடை விதிக்க வேண்டும்? ராஜபக்சே ஏன் தமிழ் எம்.பி.க்களை மாநாட்டிற்கு வர விடாமல் தடுக்க வேண்டும்? சிங்களர்கள் ஏன் கருணாநிதியின் உருவ பொம்மையை எரிக்க வேண்டும்?

அப்துல் ஜப்பார்: இந்தியத் தலைவர்கள் பலருக்கு, ஏன் தமிழகத்திலேயே பல தலைவர்களுக்கு, இலங்கைப் பிரச்சினை பற்றி முழுமையாகத் தெரியாது என்பதை மேடையிலேயே பஸ்வான் நிருபித்தார்.

ஷா நவாஸ்: அப்படியானால் அதற்கு நெடுமாறனும், பல ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகத் தில்லியில் வலம் வந்த  வைகோவும் தானே  பொறுப்பேற்க வேண்டும்?

அப்துல் ஜப்பார்: ஒரு கோடி உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க.வினால் தான் ஈழம் சாத்தியம் (என்பது போல் திருமாவளவன் புகழ்ந்து தள்ளினார்.)

ஷா நவாஸ்: ஆயிரக்கணக்கில் தி.மு.க.தொண்டர்கள் கூடியிருக்கும் ஒரு மாநாட்டில் அப்படிப் பேசுவது ஒரு மேடை உத்தி அப்படித்தான் தன் கருத்துகளை உள்ளே கொண்டு போக முடியும். தேர்தல் நேரத்தில் கூட, கூட்டணியை உதறிவிட்டுத் தெருவுக்கு வந்தவர் திருமாவளவன். முள்ளிவாய்க்கால் படுகொலை நேரத்தில் கூடக் கூட்டணியைப் பற்றிக் கவலைப்பட்டுக்  கொண்டிருந்தவர் வைகோ.
                                               
நண்பர்களே, இரண்டு கட்டுரைகளிலிருந்தும் சில துளிகளைத்தான் இங்கு எடுத்து தந்துள்ளேன். படித்துவிட்டு உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள். வாய்ப்பு உள்ளவர்கள் முழுக் கட்டுரைகளையும் படியுங்கள். 
                                                                                                                                                                                (மேலும் மணக்கும் பூக்கள்)

7 comments:

  1. ஆகா, அற்புதம்! அண்ணன் சுபவீ அவர்களின் நல்லெண்ணத் தோட்டத்தில் வேறு தோட்டத்துப் பூக்களும் காணக் கிடைக்கின்றன.!
    எழுத்து வடிவில் ஒரு வழக்காடு மன்றம்! இன்னும் பல விறுவிறுப்பான விவாதங்கள் வரிசை கட்டி நிற்கின்றன என நம்புகிறோம்.ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

    ReplyDelete
  2. அருமையான முயற்சி!

    ReplyDelete
  3. ஆளூர் ஷானவாசின் வாதங்கள் ஆணித்தரமாக நெத்தியில் அறைந்தார் போல் உள்ளது.

    ReplyDelete
  4. டொசோ குறித்து தப்பபிப்பிராயங்களைக் கொண்டிருந்தவர்களுக்கு ஈழ ஆதரவாளன் மற்றும் முத்தமிழறிஞரை நேசிப்பவன் என்ற முறையில் சரியான பதில் சொல்ல முடியாமல் தவித்தேன். இனி அந்த தவிப்பு இருக்காது...

    ReplyDelete
  5. ஐயா சுபவீ அவர்களின் இப்புதியமுயற்சிக்கு நன்றி ஆளூர்ஷாநவாஸின் பதில் சரியாகத்தான் உள்ளது இந்தவிடயத்தில்நாம்கலைஞர் அவ்ர்களை குறை சொல்லமுடியாது ஆனால் அங்குள்ள அனைத்து சமூகதமிழ்மக்களுக்காகவும் குரல்கொடுக்கவேண்டும் வேண்டுமென்பதே என்கருத்து

    ReplyDelete
  6. Annan Suba vee and Alur Shan awas endrum nalla sinthanai udaiyore.

    ReplyDelete
  7. நன்றாகப் பதில் தந்துள்ளார்.
    1.யார் தமிழ்நாட்டை ஆள்வதாகச் சொல்லிக் கொண்டாலும் சிண்டு புது டில்லி.
    2.எதிரி ராஜபக்சேவும்,புது டில்லியும். கலைஞரல்ல.
    3.உலக நாடுகளின் ஆதரவு தேவை,அதற்கு டெசோ போன்ற அமைப்புக்கள் தாம் பயன் படும்.

    ReplyDelete