தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 17 November 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (12)

தளபதி கிட்டுவின் மரணம்

ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில்  (1991-95) நான்கு முறை சிறைப் படுத்தபட்டவன் நான். புலிகள் இயக்கம் தடை செய்யப்படுவதற்கு முன்பே 1992 மார்ச் மாதம் நான் கைது செய்யப்பட்டேன். நான் பொதுச் செயலாளராக இருந்த விடுதலைக் குயில்கள் அமைப்பின் சார்பில், ,தமிழர் ஒற்றுமை மாநாடு' என ஒன்று நடத்த நாங்கள் முயற்சி செய்தோம். அந்த மாபெரும் குற்றத்திற்காகத்தான் அரசு என்னைக் கைது செய்தது.

1992 மார்ச் 8 அன்று நடைபெறவிருந்த அந்த மாநாடு குறித்து 'தி இந்து' நாளேடும், தினமலரும் 5 ஆம் தேதியே கவலை தெரிவித்துச் செய்தி வெளியிட்டன  'குயில் பாட்டுக் கேட்கப் புலிக் கூட்டம் வருமா?' என்று முதல் பக்கச் செய்தி வெளியிட்டது தினமலர். 6ஆம் தேதி நள்ளிரவு நான் கைது செய்யப் பட்டேன். 8ஆம் தேதி மாநாடு நடைபெறவிருந்த பெரியார் திடலுக்கு வந்த அய்யா நெடுமாறன் உள்ளிட்ட 86 பேரும் கைது செய்யப்பட்டு சென்னை மத்திய சிறையில் என்னுடன் அடைக்கப்பட்டனர். தமிழர்களின் ஒற்றுமைக்கான எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படக் கூடாது என்பதில் ஜெயலலிதா மிகக் கவனமாக இருந்தார்.

மீண்டும் 1992 செப்டம்பர், 1993 ஜனவரி. 1994 ஜூன் ஆகிய மாதங்களிலும் நான் கைது செய்யப்பட்டேன். அனைத்துக் கைது நடவடிக்கைகளும், புலிகளை ஆதரித்து மேடைகளில் பேசினேன் என்பதற்காகத் தான்.  அப்போது நான் சென்னைக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். கைது நடவடிக்கைகளால் பணி பறிபோய்விடும்  நிலையில் தான் இருந்தேன். இன்று தோன்றியிருக்கும் திடீர் ஈழ ஆதரவாளர்கள் பலர் அன்றைக்கு எங்கிருந்தார்கள் என்பதைத் தேடித்தான் அறிந்துகொள்ள வேண்டும்.

ஜெ. ஆட்சியில் நான் மட்டுமில்லை, ஈழ ஆதரவாளர்கள் அனைவருமே பல்வேறு கொடுமைகளுக்கு ஆளானார்கள். அது ஒரு நீண்ட பட்டியல். மிகச் சிலவற்றைக் கீழே காண்போம்:

14.07.91 அன்று பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. 'ஈழ அகதிகளை வெளியேற்றாதே ' என்று சுவர்களில் எழுதிய மக்கள் ஜனநாயக இளைஞர்கள் கழகத் தோழர்கள் 16.08.91 அன்று சென்னையிலும், ஜோலார்ப்பேட்டையிலும் கைது செய்யப்பட்டனர். அதே ஆண்டு செப்டம்பர் முதல் தேதி, வேலூரில் 'ஈழ விடுதலை அங்கீகரிப்பு மாநாடு' நடத்த முற்பட்ட பொழிலன் தலைமையிலான தமிழ்நாடு இளைஞர் பேரவை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

02.09.91 அன்று, ஒரே நாளில். அலை ஓசை, நக்கீரன், சிவப்பு நாடா ஆகிய மூன்று இதழ்களின் அலுவலகங்களும் காவல் துறையினரால் அமர்க்களப்பட்டன. நக்கீரன் ஆசிரியர், பொறுப்பாசிரியர், நிருபர் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

13.09.91 அன்று, மக்கள் உரிமைக் கழகத் தலைவர் பி.வி.பக்தவத்சலம் செய்தியாளர்களைச் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டது. தடை மீறி அவர்களைச் சந்திக்க முயன்றபோது, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார், 'தமிழர் பாதுகாப்புக்' கூட்டத்தில் தேச விரோதமாகப் பேசினார் என்று குற்றம் சாற்றி, 23.09.91 அன்று கைது செய்யப்பட்டார்.

இவ்வளவு கைது நடவடிக்கைகளும் புலிகளுக்குத் தடை விதிக்கப்படுவதற்கும் முன்பே நடந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தடையும், தடா சட்டமும் வந்தபின், ம் என்றால் சிறைவாசம் என்னும் நிலை வந்துவிட்டது.

தடா வந்தபின், கோவை ராமகிருஷ்ணன், ஆறுச்சாமி இருவருக்கும் விலங்கு பூட்டி, அச் சட்டத்தின் கீழ்க் கைது செய்தனர். 250 ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாற்றினர். 1992 மே மாதம் முதல் வாரத்த்தில் கோவை ராமகிருஷ்ணனின் தாயார் இறந்துவிட்டார்கள். அதற்குக் கூட ஜெ .அரசு அவருக்குப் பரோல் கொடுக்கவில்லை. ஈழ மக்களுக்காக இத்தனை துன்பங்களை ஏற்ற அவரைப் பின்னால் வந்த சில 'தூய தமிழர்கள்' திராவிடர், தெலுங்கர் என்று முத்திரை குத்தித் தமிழ்த் தேசிய அரங்கில் இருந்து வெளியேற்ற முயன்றனர்.
                     
தி.மு. வைச் சேர்ந்த சுப்புலட்சுமி ஜெகதீசன், வைகோவின் தம்பி வை.ரவிச்சந்திரன் ஆகியோர் தடா சட்டத்தைச் சந்திக்க நேர்ந்தது.

தடை கண்டு அஞ்சாமல் "7 ஆண்டு என்ன, 70 ஆண்டு சிறை என்றாலும் புலிகளை ஆதரிப்போம்" என்றார் மருத்துவர் ராமதாஸ். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மட்டுமே இருந்த ஈழ ஆதரவை, லட்சக் கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சென்றார் திருமாவளவன். 
இச் சூழலில்தான், விடுதலைப் புலிகளின் தளபதி கிட்டு இந்தியக் கடற்பரப்பில் எந்த நியாயமும் இன்றிக் கொல்லப்பட்டார்.

பெங்களூரில், தோழர் கலைச்செல்வி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டுவிட்டு, 17.01.1993 அன்று காலை சென்னை திரும்பியபோது, அந்தத் துயரச் செய்தி  என்னையும்உலகத் தமிழர்கள் அனைவரையும் தாக்கியது. அன்று காலையே, மயிலாப்பூரில் இருந்த நெடுமாறன் வீட்டில் ஒரு கூட்டம் நடைபெற்றது. பண்ருட்டி ராமச்சந்திரன், கலி.பூங்குன்றன், பெ.மணியரசன், பேரா.சரசுவதி உள்ளிட்ட பலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். நானும் பங்கேற்றேன். கிட்டுவின் கொலையைக் கண்டித்து 20ஆம் தேதி கண்டனப் பேரணி நடத்துவது என முடிவானது. கூட்டம் முடிந்து அனைவரும் கலைந்து  சென்றபின், என்ன நடந்தது என்று அறிந்து கொள்ளப் புலவர் புலமைப்பித்தன் அங்கு வந்தார். அப்போது உதவி ஆணையர் தலைமையில் அங்கு வந்த காவல் படை, நெடுமாறன் அவர்களையும், புலவரையும், என்னையும் கைது செய்து அழைத்துச் சென்றது. (அண்மையில் அரசியல் இதழில் தொடர் எழுதிவரும் புலமைப்பித்தன், அவரையும், நெடுமாறனையும் கைது செய்ததாக எழுதியுள்ளார். என் பெயர் அவருக்கு வசதியாக மறந்து போய் விட்டது. நான் கலைஞர் ஆதரவாளன் ஆயிற்றே, என் பெயரை எப்படிச் சொல்வார்?)
                     
பிறகு, அப்போது திறக்கப்படவிருந்த நேரு விளையாட்டு அரங்கைத் தகர்க்க நாங்கள் மூவரும், பேரா.சரசுவதியும் சேர்ந்து சதி செய்ததாகக் குற்றம் சாற்றி எங்கள் மூவரையும் சென்னை மத்திய சிறையில் அடைத்தனர். சரசுவதி அம்மாவிற்கு மட்டும் பிணை வழங்கினர். 


கப்பலுக்கு வெடி வைத்துக் கிட்டு தற்கொலை முயற்சி செய்ததாக அரசு பத்திரிகைச் செய்தி கொடுத்தது. மத்திய அரசு செய்த அனைத்துக்கும் அன்று முதல்வராக இருந்த 'ஈழத் தாய்' துணை போனார்.

 கிட்டு கொலை தொடர்பாக,  இந்திய அரசு கொடுத்த செய்தியை விட்டுவிட்டு, புலிகளின் வானொலிச் செய்தியை முரசொலி மட்டுமே வெளியிட்டிருந்தது.
                       
1993 ஜனவரி 21 ஆம் நாள், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த கலைஞர்,

"கிட்டுவைப் பொறுத்தவரை, 1983 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள பல தலைவர்களுக்குப் பழக்கமானவரும், அறிமுமானவரும் ஆவார். அவருடைய மறைவிற்கு நான் மிகவும் வருந்துகிறேன்"

என்று கூறினார்(முரசொலி - 22.01.1993 - பக்.1)

எனவே இந்தக் கட்டம் வரையிலும் கூட, கலைஞரும், தி.மு..வும் ஈழத்திற்கு மட்டுமின்றி, புலிகள் அமைப்புக்கும் ஆதரவாகவே பேசி வந்ததைப் பார்க்க முடிகிறது. ஆனால் இந்த நிலையிலும் தி.மு..விற்கும், புலிகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்த நெடுமாறனோ, வைகோவோ முயலவில்லை. ஈழ ஆதரவு தங்களுக்கு மட்டுமே உரியதாக இருக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருந்தனர். அதனால் ஈழ ஆதரவு வெகு மக்களை எட்டாமலே போய்விட்டது.
                         
கிட்டுவின் கொலையைக் கண்டித்து ஊர்வலம் நடத்த விடாமல் எங்கள் மூவரையும் கைது செய்தபோது நாட்டில் எந்த எதிர்ப்பும் எழவில்லை. பல ஏடுகள் அதனைச் செய்தியாகக் கூட வெளியிடவில்லை. தினமணி (18.01.93) பத்தாவது பக்கத்தில் ஒரு சிறிய செய்தியாக அதனை வெளியிட்டிருந்தது. அவ்வளவு தான்.
                           
எனினும் புலிகள் நெடுமாறன் அவர்கள் மீதே பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். அதனால் நெடுமாறன்  அவர்கள் சிறப்புப் பெற்றாரே அன்றி, விடுதலைப் புலிகள் ஆதரவு வெகு மக்கள் இயக்கமாக வராமலே போய்விட்டது.புலிகள் ஆதரவாளர்கள் பயங்கரவாதிகள் என்னும் பரப்புரையைத்தான் ஏடுகள் செய்து வந்தன.

இதன் பிறகு, தி.மு..வும், புலிகளும் ஒருவரையொருவர் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை. தி.மு..வைப் பற்றிய தவறான கருத்துகளே இங்கிருந்து புலிகளுக்குச் சொல்லப்பட்டன.
                             
உச்ச கட்டமாகப் புலிகளைக் காரணம் காட்டி, வைகோ தி.மு..விலிருந்து பிரிந்து, தனிக் கட்சியை உருவாக்கினார்.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 1 comment:

  1. முரசொலி கிட்டு இராணுவத்துடன் ஏற்பட்ட போரில் காலை இழந்துவிட்டதாக கூறி இருக்கிறது. வேறொரு தமிழ் அமைப்பு வீசிய வெடிகுண்டில் காலை இழந்தார் என்று படித்திருக்கிறேன். ஆனால் இவர் நிச்சயமாக போரில் காலை இழக்கவில்லை.

    ReplyDelete