கலைஞர் செய்தது என்ன?
பேரிடியாக வந்த அந்தச் செய்தி குறித்தும்,
அதிலிருந்து நாங்கள் எப்படி மீண்டோம் என்பது குறித்தும் நான் என் 'அது ஒரு பொடா
காலம்' என்னும் நூலில் எழுதியுள்ளேன். எனினும் தேவை கருதி அதனை இங்கும் பதிவு
செய்ய விரும்புகின்றேன்.
30.03.2003 ஆம் நாளிட்ட 'தி இந்து' நாளேடு,
முதல் பக்கத்திலேயே, 'Vaiko speech, an act of Terrorism : Centre' என்னும் செய்தியை வெளியிட்டிருந்தது.
(Ref: http://www.hindu.com/2003/03/30/stories/2003033005420100.htm)
ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் செயலில்
தங்களுக்கு உடன்பாடு இல்லை என்று பா.ஜ.க வின் அன்றையத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலர் கூறி வந்தனர். ஆனால் உச்ச
நீதிமன்றத்தில் நடுவண் அரசு சமர்ப்பித்த அறிக்கையில் வைகோவின் பேச்சும் ஒரு
பயங்கரவாதச் செயல்தான் என்று அரசு கூறிவிட்டது.
தடை செய்யப்பட ஒரு இயக்கத்திற்கு வழங்கப்படும்
வாய்மொழி ஆதரவு கூட பயங்கரவாதச் செயலுக்கு இணையானது தான் என்று கூறியது அந்த வாக்குமூலம்.
சிறைக் கதவுகள் அடித்து மூடப்படுவது போன்ற ஒரு
பேரொலி எங்கள் செவிகளைத் தாக்கியது.
பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ் எங்கள்
மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அப்பிரிவில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால்
பத்து ஆண்டுகள் வரை நாங்கள் சிறையில் இருந்தாக வேண்டும் நடுவண் அரசு
உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் ஏறத்தாழ எங்கள் சிறைவாசத்தை உறுதி செய்து விட்டது. ஜெயலலிதாவின்
விருப்பத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துவிட்டது என்பதுதான் அன்றைய நிலை
என்பதைப் புரிந்து கொண்டோம்.
ஈழத்தமிழர்களையோ, விடுதலைப்புலிகளையோ ஆதரித்துப்
பேசவில்லை என்று நீதிமன்றத்தில் ஒருநாளும் நாங்கள் கூறவில்லை. அப்படிப் பேசுவது
எங்கள் கருத்துரிமையே தவிர, அது பயங்கரவாதமன்று என்றே வாதிட்டோம். இப்போது கருத்துரிமை காலில் மிதிபடத்
தொடங்கி விட்டது.
ஆனால் மறுநாள் காலையில் அதிரடியாக இன்னொரு
செய்தி வெளிவந்திருந்தது. நேற்றைய செய்திக்கு முற்றிலும் நேர் மாறான செய்தியாக அது
இருந்தது.
முதல் நாள் உச்சநீதிமன்றத்தில் நடுவண் அரசு
கொடுத்த வாக்குமூலத்தில் சில பிழைகள் ஏற்பட்டுவிட்டதாகவும் அவை பிறகு திருத்தப்பட்டதாகவும்
அன்றைய சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்தார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு
அளிக்கப்படும் வாய்மொழி ஆதரவும் கூட பயங்கவாதம்தான் என்று இளைய வழக்கறிஞர்கள்
சிலர் தவறுதலாக வாக்குமூலம் கொடுத்துவிட்டனர் என்றும், நடுவண் அரசு அப்படிக்
கருதவில்லை என்றும் ஜெட்லி விளக்கம் கொடுத்திருந்தார். பழைய வாக்குமூலத்தில் 12, 13
ஆம் பத்திகளை நீக்கி விட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஏதோ ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில்
மறைக்கிறார்கள் என்று மட்டும் புரிந்தது., சிறையை விட்டு வெளியே வந்த பின் 2004ஆம்
ஆண்டு அன்றைய அமைச்சர் டி.ஆர். பாலுவைச் சந்தித்தேன். அவர்தான் நடந்த உண்மையை
விளக்கிச் சொன்னார்.
மார்ச் 30ஆம் தேதி டெல்லியில் வீட்டுல தூங்கிக்
கொண்டிருந்தேன். காலை 5.30 மணிக்கு டெலிபோன் மணி அடிச்சது. இந்த அதிகாலையில் யார் பேசுறாங்கன்னு நெனைச்சிட்டு
போனை எடுத்தா, தலைவர், 'இன்னிக்கு இந்து பாத்தியா?' - குரலில் ஒரு கோபம். 'நீ என்ன செய்வியோ எது
செய்வியோ எனக்குத் தெரியாது. மத்திய அரசு கொடுத்த வாக்குமூலத்தை உடனடியா மாத்தணும்
இல்லேன்னா, கூட்டணியை விட்டே நாம் வெளியேறும் நெலமை வந்துடும்னு சொல்லிடு' என்றார்
தலைவர்.
இப்படித்தான் அந்த தலைகீழ் மாற்றம் தொடங்கியிருக்கிறது. அரிய வாய்ப்பாக அன்றைய தினம் (30.03.2003) புது டில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்தில் மத்திய அரசின் வாக்குமூலம் பற்றி அமைச்சர் பாலு மிகக் கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் துணைத் தலைமை அமைச்சர் அத்வானி, சட்ட அமைச்சர் அருண் ஜெட்லி
ஆகியோரையும் தனியாகச் சந்தித்து தலைவர் கலைஞரின் கருத்தையும், வருத்தத்தையும்
சொல்லியிருக்கிறார்.
இத்தனைக்கும் பிறகு தான் அன்றைய மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொண்டுள்ளது. மாற்றி
அளிக்கப்பட்ட வாக்குமூலத்தின்
அடிப்படையில்தான் ஆறு மாதங்களுக்குப் பிறகாவது எங்களுக்குப் பிணை (ஜாமீன்)
கிடைத்தது. இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன், அன்றைய தினம் உடனடியாக அப்படி ஒரு
நடவடிக்கையை கலைஞர் எடுக்காதிருந்தால், இப்போது தான் சிறை விட்டு நாங்கள் அனைவரும்
வெளி வந்திருப்போம். வைகோ, அய்யா நெடுமாறன், நான் அனைவருமே 2004 ஆம் ஆண்டே
வெளிவந்ததற்கு முழுக் காரணமே கலைஞர்தான். அத்துடன் மட்டுமின்றி, 2006ஆம் ஆண்டு ஆட்சிக்கு
வந்தபின் எங்கள் மீதான வழக்குகளையும் கலைஞர் நீக்கி விட்டார். வைகோ வழக்கு உச்ச
நீதி மன்றத்தில் இருந்ததால் அது மட்டும் தொடர்ந்தது. இத்தனை உதவிகளையும் செய்த
காரணத்திற்காகவோ என்னவோ நெடுமாறன்
அய்யா போன்றவர்கள் அவர் மீது பல்வேறு பழிகளைச் சுமத்திக் கொண்டே உள்ளனர். ,
ஆனால் அன்று (22.12.2003) சிறை விட்டு
வெளிவந்தவுடன் நானும், நண்பர் மருத்துவர் தாயப்பனும் நேராக அறிவாலயம் சென்று
தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து நன்றி கூறினோம். தமிழர் தேசிய இயக்க உறுப்பினர்கள்
சிலர் அதனை விரும்பவில்லை. நீங்கள் ஏன் கலைஞரைப் போய்ச் சந்தித்தீர்கள் எனக்
கேட்டவர்கள் உண்டு.
யாரும் எதிர்பாராத வண்ணம், நெடுமாறன் அய்யா
வெளிவந்த மறுநாள் (09.01.2004) அவரும் கலைஞரைச் சென்று சந்தித்து தன் நன்றியினைக்
கூறினார். நானும் உடன் சென்றிருந்தேன். நாங்கள் அனைவரும் வெளிவருவதற்குக் காரணமாக
இருந்தவர் கலைஞர் என்ற அடிப்படையில்தான் அந்த சந்திப்புகள் நடந்தன.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற
நாடாளுமன்றத் தேர்தலிலும், நானும் அய்யாவும் தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று
தி.மு.க. கூட்டணிக்கு வாக்குகள் கேட்டோம்.
ஆனால் 2006இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில் தி.மு.க. அணிக்கு ஆதரவாக வாக்கு கேட்க தமிழர் தேசிய இயக்கம்
மறுத்துவிட்டது. அதனை எதிர்த்தே நான், 2006 ஏப்ரல் 15ஆம் நாள், தமிழர் தேசிய
இயக்கப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர்
நிலையிலிருந்தும் விலகினேன். ஏப்ரல் 17 அன்று காலை, நக்கீரன் கோபால் அவர்களின்
உதவியால் கலைஞரை அவர் வீட்டில் சந்தித்துப் பேசும் வாய்ப்பைப் பெற்றேன். 19ஆம்
தேதி முதல் தி.மு.க. ஆதரவுக் கூட்டங்களில் பேசத் தொடங்கினேன்.
2006ஆம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்று
தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தது. கலைஞர் மீண்டும் முதல்வரானார். அவர் முதல்வராக
இருந்த அந்த ஐந்து ஆண்டுகளிலும் ஈழம் குறித்த பல செய்திகளை நேரடியாக அவர்
கவனத்திற்குக் கொண்டுபோகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
அதே ஆண்டின் இறுதியில், இலங்கைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல்வரைச் சந்திக்க விரும்பினர். அவர்கள் விருப்பப்படி, டிசம்பர் 20ஆம் நாள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தேன். தலைவர், தளபதி மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் அவர்களோடு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உரையாடினர். பின்பு பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்னும் தங்கள் விருப்பத்தை அவர்கள் வெளிப்படுத்தினர். உடனே முதல்வர் கலைஞர் அவர்களே அதற்கான வழிமுறைகளைச் செய்து கொடுத்தார். அதன்படி, 22.12.2006 அன்று தில்லி சென்று பிரதமரை அந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்தனர். அவர்களுடன் கலைஞர் என்னையும் அனுப்பி வைத்தார்.
இது தொடர்பாக நக்கீரனில் வெளிவந்த செய்தியைப் படிக்க இங்கே அழுத்தவும்
சந்தித்ததால் என்ன பயன் விளைந்துவிட்டது எனச் சிலர் கேட்டனர். இந்திய
அரசின் நிலைப்பாடு நமக்கு எதிராக இருந்ததால் பயன் ஏதும் இல்லாமல் போயிற்று என்பது
உண்மைதான். ஆனால் தன்னால் இயன்றதைக் கலைஞர் செய்தார் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே இதனை இங்கு
குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்தும் தன ஆட்சிக் காலத்தில் தன்னால் முடிந்தவைகளைக்
கலைஞர் செய்து கொண்டிருந்தார் என்பதே உண்மை. அதனைத் திட்டமிட்டுப் பலர் இங்கே
மறைக்கின்றனர். ஒரு மாநில அரசு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் அவர்
செய்தார் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. சிலவற்றைக் கீழே காணலாம்.
ஈழத்தில் போர் கடுமை பெறத்
தொடங்கிய 2008 முதலே, தமிழக முதல்வர் கலைஞர் அது குறித்துத் தன் கவனத்தைச் செலுத்தினார்.
முதலில் அறிக்கைகள், அவற்றைத் தொடர்ந்து மத்திய அரசுக்குக் கடிதங்கள் என்று ஈழம் தொடர்பாகத்
தமிழக அரசு தன் பணியைத் தொடங்கியது. கடிதம்தானே எழுதினார், வேறு என்ன செய்தார் என்று
சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு மாநில முதல் அமைச்சரால் முப்படைகளையும் அழைத்துக்
கொண்டு போருக்குப் போய் விட முடியாது
என்பதை எல்லோரும் அறிவோம்.
பிறகு 2008 இறுதியில் அனைத்துக்
கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். சென்னையில் கொட்டும் மழையில் மனிதச் சங்கிலி நடைபெற்றது.
சென்னை பாரிமுனையில் தொடங்கிய சங்கிலி செங்கல்பட்டு வரை நீண்டதை அனைவரும் அறிவோம்.
இவை அனைத்தையும் தாண்டி, தமிழ்நாடு சட்டப் பேரவையில் மூன்று முறை போர் நிறுத்தம் கோரும்
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிறகு பல்வேறு காட்சித் தலைவர்களையும் அழைத்துக்கொண்டு தில்லி சென்று,
பிரதமர் மன்மோகன் சிங் அவர்களைச் சந்தித்துத் தமிழ் நாட்டின் கொதிநிலை விளக்கப்பட்டது.
இந்நடவடிக்கை அனைத்தையும்
ஜெயலலிதா எதிர்த்தார், கேலி பேசினார். போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள்
என்றார். ஆனால் அது குறித்து ஈழ ஆதரவுத் தலைவர்கள் எவரும் சினம் கொள்ளவில்லை. ஆதரவுப்
பணியில் ஈடுபட்டிருந்த கலைஞரை குறை கூறுவதிலேயே அவர்களின் முழுக் கவனமும் இருந்தது.
இறுதியாக ஒரு சமரசத் திட்டமும் தயாரானது. அது குறித்து
திரு கஸ்பர் என்னிடம் பேசினார்.
கஸ்பர் சொன்ன செய்திகளை புலிகளின் செய்தித்
தொடர்பாளர் திரு நடேசன் அவர்களிடம் நான் தெரிவித்தேன். தலைவரோடு கலந்துகொண்டு சில நாள்களில்
மீண்டும் தொடர்புக்கு வருவதாக அவர் கூறினார். ஆனால் பிறகு அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை.
இடையில் வைகோ அவர்களும், மதுரை கண் மருத்துவமனையில் இருந்த அய்யா நெடுமாறனும் புலிகளின்
தலைவர்களைத் தொடர்பு கொண்டு, எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க வேண்டாம் என்றும்,விரைவில்
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி வந்துவிடும் என்றும், வந்ததும் இந்தியாவின் போக்கை மாற்றி
விடலாம் என்றும் கூறியதாக நண்பர்கள் சிலர் மூலம் அறிந்தேன். அது எவ்வளவு தூரம் உண்மை
என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்களின் தலையீடு இருந்திருக்க உறுதியாக வாய்ப்புண்டு.
அவர்கள் இருவரையும் பொருத்தமட்டில், ஈழத்தின் மீது அக்கறை இருந்ததெனினும், கலைஞர் ஆட்சியில்
எந்த நன்மையையும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கூடுதல் கவனம் இருந்தது.
மேற்காணும் உண்மைகள் எவற்றையும்
கணக்கில் கொள்ளாமல், சில குறிப்பிட்ட வினாக்களைச் சிலர் எழுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.
(1) என்ன செய்து
என்ன பயன்? 2009 மே மாதம் நம் தமிழீழ உறவுகள் கொல்லப்பட்டபோது கலைஞர் என்ன செய்தார்?
ஏன் அம்மக்களை அவர் காப்பாற்றவில்லை?
(2) அனைத்துக் கட்சிக் கூட்டத்தில்
முடிவெடுத்தது போல ஏன் தி.மு.க. எம்.பி.க்கள் பதவி விலகவில்லை?
(3) மேதகு பிரபாகரன் அவர்களின்
தாயார் சென்னை வந்தபின் திருப்பி அனுப்பப்பட்டாரே, கலைஞர் ஏன் அதனைத் தடுக்கவில்லை?
மேலே காணப்படும் மூன்று வினாக்களுக்கும்
உரிய விடையை நாம் கூறியே ஆக வேண்டும்.
(அடுத்த வாரம் இத்தொடர் நிறைவடையும்)
miga nalla pathivu...
ReplyDelete