தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 22 December 2012

ஈழம் - தமிழகம் - நான் - சில பதிவுகள்! (16)

 ஈழச் சிக்கலும் உலக நாடுகளும் 

தமிழக முதலமைச்சராகக் கலைஞர் பொறுப்பில் இருந்த காலத்தில்தான் 2009 மே மாதம் தமிழினப் படுகொலை ஈழத்தில் நடந்தது என்பதால், அதைக் கலைஞர் தடுக்கவில்லையே என்று அவர் மீது பலரும் சினம் கொண்டனர். அவரை ஆதரித்ததால் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் மீதும், என் மீதும் கூடப் பலர் சினம் கொண்டனர். கலைஞரைப் பிடிக்காதவர்கள் அந்தக் கோபத்தை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர். ஈழ ஆதரவு எப்போதும் அவர்களுக்கு இரண்டாம் இடத்திலும், கலைஞர் எதிர்ப்பு முதல் இடத்திலும் இருந்தது. எனவே ஈழ மக்கள் கொல்லப்பட்ட துயரத்தைக் காட்டிலும், கலைஞருக்குக் கெட்ட  பெயர் ஏற்பட்டதில் மிக மகிழ்ந்தனர். 

கலைஞர் நினைத்திருந்தால் ஈழப் படுகொலைகளைத் தடுத்திருக்க முடியும் என்றும், போரை நிறுத்தியிருக்க முடியும் என்றும் பலர் கருதினர். இப்போதும் கருதுகின்றனர். அது குறித்த உண்மைகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை உள்ளது.


2001 செப்டம்பர் 11 இரட்டைக் கோபுரத் தகர்ப்புக்குப் பின்னர் உலக ஒழுங்கே பேரளவுக்கு மாறிவிட்டது என்பதை அறியாதவர்கள்  அல்லர் நாம். அன்றிலிருந்து உலக விடுதலைப் போராளிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை உலக நாடுகள் பல மறந்து போய்  விட்டன. தங்கள் மண்ணின் உரிமைகளுக்காகப் போராடிய அனைவரையும் பயங்கரவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் நாடுகள் கணித்தன. பயங்கரவாத ஒழிப்பில் ஓர் அணியில் நிற்பதாக எண்ணிக்கொண்டு, அரசுகள் ஒன்றுக்கொன்று உதவின. 

அந்தச் சூழலை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட அன்றைய இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உலக நாடுகள் முழுவதும் பயணம் செய்து, புலிகளுக்கு எதிரான கருத்தை உருவாக்குவதில் வெற்றி கண்டார். அதனால்தான் பல நாடுகள் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்தன. ஆதலால் 2002 தொடக்கம், ஈழச் சிக்கல் என்பது சர்வ தேசியச் சிக்கலாக மாறிவிட்டது என்னும் செய்தியை நாம் முதலில் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஓர் அனைத்து நாடுகளின் சிக்கலை, ஒரு நாட்டின் ஒரு பகுதியின் முதலமைச்சர் தீர்த்து விட முடியும் என்று நம்புவது மூட நம்பிக்கையை விட மோசமானது.

கார்ல் பில்ட்
உலக நாடுகளால், குறிப்பாகச்,  சில வல்லரசுகளால் கூட ஈழச் சிக்கலுக்குத்  தீர்வு காண இயலாமல்  போயிற்று என்பதுதான் வேதனைக்குரிய உண்மை. 2009 ஜனவரியில் கிளிநொச்சி வீழ்ந்த பிறகு,சில நாடுகள் ஈழச் சிக்கலில் தலையிட்டன. ஐக்கிய நாடுகள் அவையில் முதலில் தீர்மானம் கொண்டுவந்த நாடு மெக்ஸிகோ  என்பதை நன்றியுடன் நாம் நினைவு கூ வேண்டும். அடுத்ததாக பெப்ருவரியில் ஸ்வீடன் தலையிட்டது. தன் நாட்டின் முன்னாள் பிரதமர் கார்ல் பில்ட்டை  (Carl Bildt) நேரடியாக இலங்கைக்கு அனுப்பி ஈழ மக்களின் உண்மை நிலையை அறிய விரும்புவதாக அறிவித்தது. கார்ல் பில்ட் 1991 முதல் 94 ஆம் ஆண்டு வரை ஸ்வீடனில் பிரதமராக இருந்தவர். ஆனால் அவருக்கே விசா தருவதற்கு இலங்கை மறுத்துவிட்டது. தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்று கூறி விட்டது.

மிலிபாண்ட்
அடுத்ததாக இரு வல்லரசுகள் மார்ச் மாதம் அதே முயற்சியைத் தொடங்கின. பிரிட்டன் , பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் தலையீட்டை இலங்கை அரசினால் தடுக்க முடியவில்லை. இரு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களான மிலிபாண்ட் (David Wright Miliband - Secretary of State for Foreign and commonwealth affairs of UK - 2007-10), கூச்சனர் (Bernard Kouchner - Minister of Foreign and European affairs of France - 2007-10) ஆகிய இருவரும் 2009 மார்ச்சில் இலங்கை சென்றடைந்தனர்.  

கூச்சனர்

கூச்சனரைப் பொருத்தமட்டில் அவர் வெறும் அமைச்சர் மட்டுமன்று. உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்ற உயர் நோக்குடன், 'எல்லைகள் கடந்த மருத்துவம்' (Medicines sans frontiers) என்னும் நிறுவனத்தையும் நடத்தி வருபவர். ஆனால் அப்படிப்பட்ட இருவரும் இலங்கை சென்று கூட ஏதும் நடக்கவில்லை. கொண்டுவந்த மருந்துப் பொருட்களை எங்களிடம் தந்துவிட்டுப் போய்விடுங்கள் , நாங்கள் பார்த்துக்க் கொள்கிறோம் என்று கூறி விட்டனர்.

அவ்வளவு துணிச்சல் ஒரு சிறிய நாட்டிற்கு எப்படி வர முடியும் என்பது நியாமான வினா. இந்தியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகள் பல அதற்குப் பின்புலமாய் இருந்ததுதான் காரணம். ராஜீவ் கொலைக்குப் பழி வாங்க வேண்டும் என்பது இந்திய அரசின் ஒரே நோக்கம். புத்தளம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் சிலர் காட்டிக் கொடுத்ததை வைத்து, 1990 ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள்  அனைவரும் யாழ்ப்பாணத்தை விட்டே வெளியேற வேண்டும் எனப் புலிகள் ஆணையிட்டனர். அதற்காக 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து நாடுகளின் இதழாளர் சந்திப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இஸ்லாமிய நாடுகள் பழைய நிகழ்வை மறக்கவில்லை. அதனால் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகள் பகைமை பாராட்டின. 

சீனாவிற்கு இலங்கையைத் தன் தொங்கு சதையாக ஆக்கிக் கொள்ள விருப்பம். மேலும் இலங்கையில் கால் வைப்பதன் மூலம் இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தலையும் தர முடியும். ஆகவே சீனாவும் இலங்கை அரசை முழுமையாக ஆதரித்தது. 1976ஆம் ஆண்டே சீனாவிடம் இலங்கை ஆயுத உதவி கோரியது.ஆனால் அன்றைய பிரதமர் டெங் சியோ பிங் மறுத்துவிட்டார். இப்போது நிலைமை தலை கீழாக மாறிவிட்டது. 2007இல் சீனாவிற்கு ராஜபக்ஷே பயணம் செய்தபோது, இரு நாடுகளுக்குமிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத உதவி செய்யச் சீனம் இசைந்தது. அந்த அடிப்படையில்தான் 2008, 09 ஆம் ஆண்டுகளில் ஏராளமான ஆயுதங்களை இலங்கைக்குச் சீனா கொடுத்தது. அது மட்டுமின்றி, மெக்ஸிகோ  கொண்டுவந்த தீர்மானத்தையும், நவநீதம் பிள்ளை கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்தையும் தன் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது. ரஷ்யா, கியுபா போன்ற நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு இருந்தது. 

கலைஞரைப் பற்றி நீட்டி முழக்கிப் பேசும் தா. பாண்டியன்கள் சீனா, ருஷ்யாவைப் பற்றிப் பேசுவதில்லை.

இப்படி உலக நாடுகள் பல பின்னணியில் நிற்க, ஈழ மக்களைக் கொன்றொழித்தது இலங்கை  அரசு. இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்டு, கலைஞர் நினைத்திருந்தால் ஈழ மக்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்று கூறுவது எந்த விதத்தில் பொருந்தும்?

சரி, அப்படியானால், அப்படிப்பட்ட மத்திய அரசுடன் ட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு வெளியில் வந்திருக்க வேண்டியதுதானே? அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுத்தது  போல அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்   பதவி விலகி இருக்க வேண்டியதுதானே?  - இந்த வினாக்கள் இன்றும் எதிரொலிக்கின்றன.

தி.மு.க. உறுப்பினர்கள் ஏன் பதவி விலகவில்லை என்று கேட்கும் எவரும் தங்கள் பதவிகளை விட்டு விலகியபின் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை. ம.தி.மு.க.வோ, பா.ம.க.வோ, பொதுவுடமைக் கட்சிகளோ தங்கள் கட்சி உறுப்பினர்களைப் பதவி விலகுமாறு பணிக்கவில்லை. நாம் முன்பே எடுத்துக் காட்டியுள்ளபடி, 1983ஆம் ஆண்டு அங்கு மிகப் பெரிய கலவரம் நடந்தபோது, கலைஞரும், பேராசிரியரும் பதவி விலகினார்களே  அன்று சட்டமன்ற உறுப்பினராக இருந்த அய்யா நெடுமாறன் தன் பதவியை விட்டு விலகி வெளியே வரவில்லை. தி.மு.க. மட்டுமே பதவி விலக வேண்டும் என எல்லோரும் விரும்பினார்கள். அதற்கு ஈழம் காரணமன்று. தி.மு.க. அந்த இடத்தை விட்டு வெளியே வந்தால்தான், அம்மையார் அந்த இடத்தில் போய்  அமர முடியும். அதற்காகவே அவர்கள் குரல் கொடுத்தனர்.

சரி, போய்  உட்காரட்டும், பதவியா பெரிது என்று கேட்கலாம். பதவி பெரிதில்லைதான். அதற்காக எதிரியிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு, தாங்கள் பேசாமல் இருப்பதற்கு ஒரு கட்சி நடத்த வேண்டிய தேவை இல்லை. தி.மு.க. என்பது, புலிகள் அமைப்பைப் போல ஒரு விடுதலைப் போராட்ட இயக்கமன்று. அது ஒரு தேர்தல் கட்சி. அதனை நம்பிக் கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர். அதற்குச் சில எல்லைகள்  உண்டு. அந்த எல்லைக்குள் நின்றுதான் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.

அய்யா நெடுமாறன் அவர்களும் தேர்தல், பதவி எவையும் வேண்டாமென்று முடிவெடுத்து விட்டவர் அல்ர். தி.மு.க., அ .தி.மு.க., பொதுவுடமைக் கட்சிகள், பா.ம.க. என்று பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டவர்தான். 1984ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒரு முறை கூட, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்ட பின்பே, தேர்தலை விட்டுத் 'தற்காலிகமாக' விலகியுள்ளார். சீச்சீ.....அந்தப் பழம் புளிக்கும் கதைதான் இது.  


தமிழ்நாட்டில் உள்ள எல்லாக் கட்சிகளும், எல்லா அமைப்புகளும், தங்கள் வேலைகளையும் பார்த்துக் கொண்டுதான், ஈழ ஆதரவுப் பணியிலும் ஈடுபடுகின்றன. அப்படித்தான் செய்ய முடியும். அதுதான் இயற்கை. ஆனால் தி.மு.க. மட்டும் ஆட்சி உட்பட அனைத்தையும் விட்டுவிட்டு வெளியில் வந்துவிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

திட்டமிட்டே தி.மு.க. மீதான அவதூறுகள் பரப்பப்படுகின்றன. ஈழத்திற்கும், புலிகளுக்கும் தி.மு.க. எதிரான கட்சி என்பது போன்ற செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. அண்மையில் நெடுமாறன் அவர்கள் எழுதி, "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்" என்னும் பெரிய நூல் ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தி.மு.க.விற்கு எதிரான பல செய்திப் பிழைகளைக் காண முடிகிறது. எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்க்கலாம்:


மே 2012இல் வெளிவந்துள்ள அந்நூலின் மூன்றாம் பதிப்பின் 583-84ஆம் பக்கங்களில் கீழ்க்காணும் செய்தி இடம் பெற்றுள்ளது.

 "1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியிடமிருந்து ஒரு அவசரச் செய்தி பாலசிங்கம் அவர்களுக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் அப்போது ரகசியமாக இயங்கிக் கொண்டிருந்த புலிகள் மூலமாக இந்தச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பாலசிங்கத்தை சென்னையில் தனது அலுவலகத்திலோ,  வீட்டிலோ சந்திக்க கருணாநிதி விரும்பவில்லை. சேலத்தில் சந்திக்கும்படி கூறினார். அதற்கு இணங்க சேலத்தில் ஒரு விடுதியில் நள்ளிரவில் யாரும் அறியாத வண்ணம் மிக ரகசியமாக நடந்த இந்த சந்திப்பில் கருணாநிதியுடன், அவருடைய மருமகன் முரசொலி மாறனும் கூட இருந்தார்.
...................வலிமை வாய்ந்த இந்திய இராணுவத்துடன் மோதி அழிந்து போவதை விட ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைவது நல்லது என்றும், தமிழீழத் தனிநாடு கோரிக்கையை கைவிட்டு மாகாண அரசுத் திட்டத்தை ஏற்றுக் கொள்வதே சிறந்ததாகும் என்றும் அறிவுரை கூறினார்."

அதற்குப் பாலசிங்கம் அவர்கள், வீரம் செறிந்த புலிகளின் போராட்டத்தில் சரணாகதி என்பதற்கு இடமே இல்லை என்று கூறிவிட்டதாகவும் அந்நூல் கூறுகின்றது.

மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய நூல் என்பதால், உலகம் முழுவதும் படிக்கப்படுகின்ற ஒரு நூலில் உண்மைக்கு மாறான செய்தி இடம்பெற்றுள்ளதே என்பதுதான் நம் கவலை. ஒரு முதலமைச்சர், யாருக்கும் தெரியாமல். ஒரு நள்ளிரவில் பாலசிங்கத்தைச் சந்த்தித்திருக்க வாய்ப்பு உண்டா? முதலமைச்சரும், முரசொலி மாறனும் முக்காடு போட்டுக்கொண்டா போயிருப்பார்கள்? எவ்வளவு காவல் துறையினர் உடன் சென்றிருப்பார்ள்? அவர்களுக்கும், உளவுத் துறைக்கும் தெரியாமல் எப்படி இருக்க முடியும்?

இன்னொரு பக்கத்தில் பார்த்தால், 1988இல் கலைஞர் இந்திய அமைதிப்படையை மிகக் கடுமையாகக் கண்டித்துக் கொண்டிருந்தார். புலிகளுக்கு ஆதராவகப் பொதுக்கூட்டங்களில் பேசிக்  கொண்டிருந்தார். அவற்றிற்கான சான்றுகளை எல்லாம் முன்பகுதியில் நாம் பார்த்தோம்.

இவை எல்லாவற்றையும் கூட நாம் விட்டு விடலாம். ஒரே ஒரு உண்மையை நாம் கணக்கில் கொண்டாலே போதுமானது. 1988 ஏப்ரலில், கலைஞர் முதலமைச்சராகவே இல்லை. 1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர் இறந்த பின்பு, அவர் மனைவி ஜானகி அம்மையார் முதல்வரானார். ஒரு மாத காலத்திற்குள் அவரது ஆட்சி கவிழ்ந்து போயிற்று. பிறகு 1988ஆம் ஆண்டு முழுவதும் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சிதான் நடைபெற்றது.

இத்தனை பெரிய செய்திப் பிழையைத் தாங்கி அத்தனை பெரிய நூல் வெளிவந்துள்ளது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

இப்படி வாரி இறைக்கப்பட்ட அவதூறுகளில் ஒன்றுதான், பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கும் கலைஞர்தான் காரணம் என்பது. அந்நிகழ்ச்சி தொடர்பான சிலவற்றில் நேரடியாகத் தொடர்பு கொண்டிருந்தவன் என்னும் முறையில் சில உண்மைகளை விளக்க வேண்டிய கடப்பாடு உள்ளது.

ஒரு நள்ளிரவில், தோழர் தியாகு என்னைத் தொடர்புகொண்டு, தேசியத் தலைவரின் அம்மா மலேசியாவிலிருந்து சென்னை வந்துள்ளதாகவும், நுழைவிசைவுச் சீட்டு (விசா)இருந்தும் அனுமதி மறுக்கின்றனர் என்றும் கூறினார்.'முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு  ஏதேனும் செய்ய முடியுமா?' என்று கேட்டார். 'கண்டிப்பாக முடியும் தியாகு, ஆனால் இந்த நள்ளிரவில் அவரை எப்படித் தொடர்பு கொள்வது? எனக் கேட்டேன். வரப்போகும் செய்தியை மாலையாவது சொல்லியிருக்கக் கூடாதா என்றேன். தனக்கும் இப்போதுதான் தெரியும் என்றார். செய்தியறிந்த  வைகோவும், நெடுமாறனும் விமான நிலையத்தில் உள்ளனர் என்றும் கூறினார். நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தொடர்பு கொள்ள எண்ணினேன். அதற்குள்ளாக, இரவிலேயே அம்மாவை மலேசியாவிற்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.


மறுநாள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள், நான் மூவரும் கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். தனக்கு ஏன் நேற்றே செய்தி சொல்லவில்லை என்று கேட்டார். எங்களுக்கும் தெரியாது எனக் கூறினோம். மறுமுறை வரச் சொல்லலாமா என்று கேட்டோம். தாரளமாக வரச் சொல்லுங்கள், மத்திய அரசிடம் நான் பேசுகிறேன் என்றார். முசிறி நண்பர் மூலமாக மலேசியாவிற்குத் தொடர்பு கொண்டு, அம்மாவைத் திரும்ப வரும்படி கூறினோம்.  முதல் அமைச்சரும் தான் சொன்னபடி, மத்திய அரசிடம் பேசி ஒப்புதல் பெற்றார். அதனைச் சட்டமன்றத்திலும் அறிவித்தார். அம்மாவின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்றும் அறிவிப்புச் செய்தார். அதே நேரத்தில், மருத்துவ சிகிச்சைக்காக இங்கு தங்கியுள்ள நாள்களில் அரசியல்வாதிகள் யாரும் அவரைச் சந்திக்க அனுமதியில்லை  என்றார். 

அம்மாவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தன் மகிழ்வையும், நன்றியையும் தெரிவித்து முதல்வருக்கு ஒரு மடல் எழுதியிருந்தார். அதில் 'உங்களின் உடன்பிறப்புகளில் ஒருவர்' என்று எழுதிக் கீழே கைரேகை வைக்கப்பட்டிருந்தது. அதனை நான்தான் கொண்டுபோய்க் கொடுத்தேன்.

ஆனாலும் அதற்குப் பின் அம்மா இங்கே வரவில்லை. ஏன்? அரசியல் தலைவர்கள் அம்மாவைச் சந்திப்பதற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்பு  இங்குள்ள தலைவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. அம்மா உடல்நலம் பெறவில்லை என்றாலும் குற்றமில்லை, சிகிச்சை அளித்தவர் கலைஞர் என்ற நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அவர்கள் எண்ணினர். அதனால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை மலேசியா அனுப்பி, அம்மாவைக் கிளிநொச்சியில் கொண்டுபோய் விட்டுவிட்டனர். 

நடந்த உண்மைகள் அனைத்தையும் அப்படியே நான் பதிவு செய்துள்ளேன். அம்மாவின் மரணத்திற்கு யார் காரணம் என்பதை இனிக் காலம் முடிவு செய்யட்டும்.  

நல்லது நண்பர்களே! நடந்து முடிந்த பல நிகழ்வுகளை நான் அறிந்த வரையில் உண்மையாகப் பதிவு செய்துள்ளேன். இந்நூலிலும் செய்திப்பிழைகளோ, தவறான பார்வைகளோ இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கின்றேன். இனியேனும் உள்ளூர் அரசியலைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு, ஈழ மக்களுக்காக இணைந்து குரல் கொடுப்போம்.

ஈழப் போராட்டம் இன்று மூன்றாவது கட்டத்தை எட்டியுள்ளது. அறப்போராட்டம் பயனின்றிப் போனபிறகு, ஆயுதப்போராட்டம் தொடங்கியது. அதுவும் ஒரு பின்னடைவிற்கு உள்ளாகிவிட்டதை அறிவோம். இனி, உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமே ஈழச் சிக்கலுக்கு ஒரு தீர்வு காண முடியும் என்ற நிலை வந்துள்ளது. அந்த நோக்கிலேயே 'டெசோ' அமைப்பு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஐ.நா. முன்னிலையில் பொது வாக்கெடுப்பு என்னும் கோரிக்கையும், போர்க் குற்றவாளிகளான ராஜபக்ஷே உள்ளிட்ட அனைவரும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்னும் கோரிக்கையும் டெசோவால் முன்வைக்கப்பட்டுள்ளன. இவ்விரு கோரிக்கைகளையும் உலக அரங்கிற்குக் கொண்டு செல்வோம்.  

ஈழ மக்களுக்கு என்றும் துணை நிற்போம்!

                                                                                          (முற்றும்)


   

5 comments:

  1. ஈழம் குறித்த தங்களின் தொடர் தமிழர்களுக்கு, குறிப்பாக திராவிட இயக்கத்தவருக்கு ஒரு ஆவணத் தொகுப்பு.
    தொடர் முற்று பெறவில்லை என்பதே என் போன்றவர்களின் கருத்து. வேண்டுமானால், முதல் தொகுதி நிறைவு பெற்று, இரண்டாம் தொகுதிக்கு முன்னதான ஒரு சிறு இடைவேளை என்று கருதிக் கொள்ளலாம். இத்தொடர் நூலாக வரும் நாளை ஆவலோடு எதிர் நோக்கி இருக்கிறோம். பொதுவாகவே கலைஞருக்கு எதிரான பரப்புரைகளை மறுத்து நாம் சொல்லும் செய்திகளையும், அந்தச் செய்திகளில் உள்ள நியாயத்தையும் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி நமக்கு கவலை இல்லை. ஆனால் அவர்களை நம்பிக் கொண்டு உண்மை நிலை அறியாமல் இருக்கும் இளைய சமுதாயம் தெளிவு பெற இத்தொகுப்பு பெரிதும் உதவும். இத்தொடரில் சொல்லப்பட்டுள்ள செய்திகளை சுமந்து விரைவில் வெளிவரவுள்ள இந்த நூலை எதிர் காலத்தில் ஈழப் போராட்டம் குறித்து ஆய்வு செய்யும் எவரும் தவிர்க்க முடியாது.

    ReplyDelete
  2. நேற்று உங்களை இக்ஸா மையத்தில் சந்தித்ததில் மகிழ்ச்சி. என்னுடன் சில மணித்துளிகள் இந்த தொடரைப் பற்றி உரையாட நேரம் அளித்தமைக்கு நன்றி.

    நன்றி,
    ராஜ் மோகன்.

    ReplyDelete
  3. வணக்கம். விரைவில் இத் தொடரை தனியொரு நூலாக எதிர்பார்க்கின்றோம் அய்யா.

    ReplyDelete
  4. GREETINGS FROM NORWAY! TRUTH IS LIKE THE SUN!THANKS FOR EXPLANATION! DR.MK/DMK HAS THE KEY TO HELP TAMILS IN SL!
    LET HIS VOICE ARISE FOR ALL WHO ARE IN DETENTION FOR LONG,INCLUDING JU STUDENT LEADERS! LET ALL TAMIL PROPERTIES BE RETURNED TO OWNERS! LET UN/SC RESOLUTION/REFERENDUM LIKE S.SUDAN+UN-ENVOY+UN-POLICE COME AND HELP TAMILS FOR JUSTICE+POLITICAL SOLUTION+REBUILDING ECONOMY IN NESL/+ HELP UC TAMILS TOO!!

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்...

    தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது, அங்கு வெளியில் காத்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான உணர்வாளர்களுள் நானும் ஒருவன் என்பதால் இந்தச் செய்தியைப் பகிர்கிறேன்.

    தேசியத் தலைவரின் தாயார் வருவது தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கேத் தெரியாது என சொல்கின்றீர். அவருக்கேத் தெரியாமல், சென்னை புறநகர் காவல் ஆணையர் திரு. ஜாங்கிட் எப்பேர்பட்ட காவல்துறை பட்டாளத்தைக் குவித்திருந்தார் தெரியுமா? அவரால் அங்கு விரட்டப்பட்டவன் என்ற முறையில் இதைச் சொல்கிறேன்.

    முதல்வருக்கேத் தெரியாமல் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் விமான நிலையத்தில் குவிக்கப்பட்டதை வாய்க்கூசாமல் எப்படி நம்பச் சொல்லுகின்றீர்?

    அவ்வாறெனில், மறுநாள் ஜாங்கிட்டை வேறு பதவிக்கு மாற்றியோ அல்லது கண்டித்தோ இருக்கலாம் அல்லவா தமிழக முதல்வர்?

    துரோகத்திற்கு விளக்கம் கொடுப்பதைச் சகிக்க முடியவில்லை.

    தோழமையுடன்,
    க.அருணபாரதி,

    தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
    தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

    ReplyDelete