சிறப்பு மலர் வெளியீடு
திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பில், திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மன்றத்தில் நடைபெற்ற விழாவுக்கு திராவிட இயக்க தமிழர் பேரவையின் அவைத்தலைவர் கயல் தினகரன் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டார். அவரிடம் இருந்து சிறப்பு மலரை முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பெற்றுக்கொண்டார்.
அறிமுக உரை
திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் குறித்து, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் அறிமுக உரையாற்றினார். விழாவில், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், கவிஞர் மு.மேத்தா, வக்கீல் அ.அருள்மொழி, டி.ஆர்.பாலு எம்.பி., வசந்தி ஸ்டான்லி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜெ.அன்பழகன், கம்பம் ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் காசி முத்துமாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலரை வெளியிட்டு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:–
திராவிட இயக்க வரலாறு
திராவிட இயக்க வரலாறு குறித்து எத்தனையோ நூல்கள் வந்தாலும், இன்று வெளியிடப்பட்ட திராவிட இயக்க நூற்றாண்டு சிறப்பு மலர் வரலாற்று நிகழ்வின் தொகுப்பாக வந்துள்ளது. திராவிட இயக்கம் பற்றி வருங்கால சந்ததிகளும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சுப.வீரபாண்டியன் முயன்று அதிலும் வெற்றி பெற்றுள்ளார்.அவர் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் நெருங்கி பழகியதுடன், இணைந்து பணியாற்றியும் வருகிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி பயிற்சி பாசறை நடைபெற்று வருகிறது. அதில் சுப.வீரபாண்டியன் பங்குபெற்று திராவிட இயக்க வரலாறு குறித்து பேசிவருகிறார்.திராவிட இயக்கமானது, மறுக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட உரிமையை பெற தோன்றியது. இன்று தமிழ் மொழிக்கு உரிய இடம் கிடைத்துள்ளது. தமிழ் இனம் இன்று படித்து உலக அளவில் புகழ்பெற திராவிட இயக்கம்தான் காரணம்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.
திராவிட இயக்க நூற்றண்டு சிறப்பு மலர் மின் இதழாக வெளியிடப்பட வேண்டும்.
ReplyDelete