காமன்வெல்த் நாடுகள் என்று
அழைக்கப்படும் பொதுநல ஆய நாடுகளின் அடுத்த
அமர்வு, வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கூட்டத்தின் போது இம் முடிவு
எடுக்கப்பட்டது.
எந்த நாட்டில் கூட்டம் நடைபெறுகின்றதோ,
அந்த நாட்டின் அதிபரே, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பொதுநல ஆய நாடுகளின்
தலைவராகவும் இருப்பார் என்பது விதி. ஆதலால், வரும் அமர்வு இலங்கையில்
நடைபெறுமானால், 2015ஆம் ஆண்டு வரை, அந்த அமைப்பிற்குக் கொலைகாரன் ராஜபக்சேதான்
தலைவர் என்ற அவமானமும் நிகழ்ந்துவிடும்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே, 25.03.2013இல் நடைபெற்ற தி.மு.கழகச் செயற்குழுவில், கூட்டம் நடைபெறும் இடத்தை
மாற்ற வேண்டும் என்றும், மீறி நடந்தால், இந்தியா அதில் கலந்து கொள்ளக் கூடாது
என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போருக்கு முன்பாகவே,
பிரிட்டனின் முன் முயற்சியில், அன்று காலனி நாடுகளாக இருந்த பல நாடுகளை
ஒருங்கிணைத்துப் பொதுநல ஆய நாடுகள் மன்றம் உருவாக்கப்பட்டது. இரண்டாம் உலகப்
போருக்குப் பின் அம் மன்றம் சீரமைக்கப்பட்டது. இன்றைய நிலையில், இந்தியா உள்பட 54
நாடுகள் அம்மன்றத்தின் உறுப்பு நாடுகளாக உள்ளன.
1971ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற
மன்றத்தின் மாநாட்டில், மனித உரிமைகளை மீறும் நாடுகளை இடைநீக்கம்(சஸ்பென்ட்)
செய்யலாம் என்று முடிவாகியது. அதற்கு 1971ஆம் ஆண்டு, சிங்கப்பூர் பிரகடனம் என்று
பெயர்.
அதன் அடிப்படையில் 1995ஆம் ஆண்டு,
நைஜீரியா நாடு முதன் முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகள் அது நீடித்தது.
அதன்பின்பு, பாகிஸ்தான், ஃபிஜு,
சிம்பாப்வே ஆகிய நாடுகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன. பாகிஸ்தானும, ஃபிஜுயும்
இரண்டு முறை அந்த நடவடிக்கைக்கு உள்ளாகியுள்ளன.
ஆனால் மேற்குறிக்கப்பட்டுள்ள நாடுகளை
எல்லாம் விடக் கூடுதலாக, மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனப்படுகொலை ஆகிய
அனைத்தையும் செய்துள்ள நாடு சிறீலங்காதான். அந்நாட்டில் அடுத்த கூட்டத்தை
நடத்துவது, பொதுநல ஆய நாடுகளின் அடிப்படை நோக்கங்களுக்கே அவமானத்தை ஏற்படுத்தும்.
கனடா நாட்டு அதிபர் ஸ்டீபன் ஹுவர்,
அடுத்த அமர்வு இலங்கையில் நடைபெறுவதற்குத் தன் எதிர்ப்பை ஏற்கனவே
தெரிவித்துள்ளார். எதிர்ப்புகள் உலக அரங்கில் இன்று வலுத்துக் கொண்டுள்ளன.
இத்தருணத்தில், இலங்கையில் மாநாடு
நடத்தக் கூடாது என்பதையும் தாண்டி, பொதுநல ஆய நாடுகளே, இலங்கை அரசை இடைநீக்கம்
செய்யுங்கள் என்னும் முழக்கத்தை எழுப்புவது மேலும் பொருத்தமானதாக இருக்கும்.
No comments:
Post a Comment