தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 5 May 2013

ராஜபக்சேவை தண்டிக்கவே முடியாதா?





           ம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள் ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் இணைந்து "தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு' என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். அமைப்பின் ஒருங் கிணைப்பாளர்களான இளங்கோ, நெப்போலியன், சிவக் குமார் ஆகியோர் ""ஈழச்சிக்கலில் நடைமுறை சாத்தியங் களையொட்டி என்ன மாதிரி முன்னெடுப்புகளை நகர்த்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்புத் துவங்கப் பட்டிருக்கிறது''’ ’என்றனர். ஈழம் தொடர்பான முதல் கருத் தரங்கத்தை இந்த அமைப்பினர் சென்னையில் நடத்தினர்.


"ஈழச் சிக்கலும் ஒப்பந்தங்களும்' என்ற தலைப்பில் பேசிய முன்னாள் துணைவேந்தர் ராமசாமி, ""ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காக ஈழத்தமிழர்களிடமும் இந்திய அரசிடமும் பல்வேறு உடன்படிக்கைகளை செய் திருக்கிறது இலங்கை அரசு. ஆனால், எந்த ஒரு ஒப்பந் தத்தையும் இலங்கை அரசு நிறைவேற்றியதே இல்லை. சில ஒப்பந்தங்களின் கதியைப் பார்ப்போம். இந்தியாவும் இலங்கையும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தன. 1947-ல் இந்தியாவுக்கும் 48-ல் இலங்கைக்கும் விடுதலை கொடுத்தது பிரிட்டிஷ் அரசு. இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுத்த போது "இந்துக்களோடு முஸ்லிம்கள் ஒன்றாக பாதுகாப்பாக இருக்க முடியாது. முஸ்லிம்களுக்கு தனி நாடு கொடுத்துவிடு' என்று ஜின்னா கோரிக்கை வைத்தபோது அப்படியே செய்தனர் ஆங்கிலேயர்கள். 

அதேபோல, இலங்கைக்கு விடுதலை கொடுக்கப்பட்டபோது தந்தை செல்வா போன்றவர்கள், "தனி நாடு கேட்பதற்கு பதிலாக சம உரிமைகள் வேண்டும்' என்றுதான் கேட்டார்கள். சரி என்று ஒப்புக்கொண்டது சிங்களம். ஆனால், விடுதலை பெற்றதும் அந்த உடன்படிக்கையை தூக்கி எறிந்தது சிங்கள அரசு.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இருப்பதுபோல இலங்கையில் ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திரா கட்சி என இரண்டு கட்சிகள் இருக்கு. இந்த இரண்டு கட்சிகளுமே தமிழர் பிரச்சினைகள் குறித்து வாக்குறுதிகள் தந்திருக்கின்றன, உடன்படிக்கைகளும் செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதன் கதி? ""நான் வெற்றி பெற்றால் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவேன்'' என்றார் பண்டாரநாயக்க. இதற்காக தமிழர் களோடு ஒரு ஒப்பந்தமும் போட்டுக்கொண்டார். வெற்றி பெற்றார். அப்போ, தமிழை ஆட்சிமொழியாக்கக் கூடாது என்று புத்த சாமியார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். உடனே ஆட்சி மொழியாக்கமாட்டேன் என்று சொல்லி அந்த ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார். 1965 தேர்தலில், ""எனக்கு ஆதரவு தாருங்கள். உங்களுக்கான சம  உரிமைகள் தருவேன்'' என்று வாக்குறுதி தந்தார் சேனநாயக. அதற்காக ஒரு உடன்படிக்கையும் போடப்பட்டது. ஜெயித்து ஆட்சிக்கு வந்த சேனநாயக, சிங்களவர்களின் எதிர்ப்பினால் அந்த உடன்படிக்கையை கிழித்து குப்பையில் வீசினார். ஒப்பந்தங்களுக்கும் உடன்படிக்கைகளுக்கும் சிங்கள ஆட்சியாளர்கள் கொடுக்கும் மரியாதையின் லட்சணம் இப்படித்தான். இந்திய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி- பண்டாரநாயகவிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின் நிலையும் இப்படியே. ராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1974-ல் அதை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்தியா. 



அப்போது அதை எதிர்த்தது தி.மு.க. நாஞ்சில் மனோகரன், இரா.செழியன் போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் கடுமையாக வாதம் செய்தார்கள். அதையும் மீறி தாரை வார்த்த இந்தியா, இலங்கையோடு போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தில், "கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும் வலைகளை காய வைக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை உண்டு' என குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள் மீறப்பட்டால் அந்த ஒப்பந்தத்தை ரத்து
செய்யலாம் என்பதும் கச்சத்தீவு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். ஆனால், ஒப்பந்தத்தின்படிதமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவும் முடிவதில்லை. வலைகளை காயவைக்கவும் முடிவதில்லை. 
"இரண்டு நாடுகள் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக்கொள்ளும்போது ஒப்பந்தத்தின் படி ஒரு நாடு நடந்து கொள்ளாது போனால் அந்த ஒப்பந்தத்தை கேன்சல் பண்ணலாம்' என்று சர்வதேச நாடுகளுக்கான ஒரு உடன்படிக்கை சொல்கிறது. அப்படியிருக்கும்போது கச்சத்தீவு ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய முடியும். செய்யுமா? 

ஆக, ஒப்பந்தங்களால் எந்த தீர்வும் ஈழத்தமிழர்களுக்கு கிடைக்கப்போவ தில்லை. அதனால் தனித்தமிழீழம் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர தீர்வாக இருக்க முடியும். இந்தியாவும் இனி இதை மெல்ல மெல்ல உணரும்’’என்று சுட்டிக்காட்டினார்.

"ஈழச்சிக்கலும் உலக நாடுகளும்' என்கிற தலைப்பில் பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன்,’""இன்றைக்கு ஈழச்சிக்கல் சர்வதேச சிக்கலாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், உணர்வாளர்கள் எல்லோருமே இரண்டு விஷயங்களுக்காக போராடுகிறோம். ஒன்று, சர்வதேச குற்றவாளியாக ராஜபக்சே அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். மற்றொன்று, ஐ.நா.சபை பொது வாக்கெடுப்பு நடத்தி தமிழீழத்தை அங்கீகரிக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் எந்த வகையில் சாத்தியமானவை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். 

அப்போதுதான் ஈழச்சிக்கலின் நீளம் -அகலம் புரியும். ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும். இதில் மாற்று கருத்து யாருக்கும் இல்லை. தண்டிக்க வேண்டுமானால் எப்படி தண்டிப்பது? யார் தண்டிப்பது? தண்டனை கொடுக்க யார் உரிமை பெற்றவர்கள்? என்கிற கேள்வி எழுவது இயல்பு. சர்வதேச நீதிமன்றம்தான் தண்டிக்க முடியும். அப்படியானால் யார் வழக்குப் போடுவது? தமிழக அரசா? இந்தியாவா? இல்லை... அமெரிக்காவா?

ம்ஹூம்... யாரும் போட முடியாது. ஐ.நா.பாதுகாப்பு சபை (செக்யூரிட்டி கவுன்சில்) மட்டுமே வழக்குப் போட முடியும். வழக்குப் போட செக்யூரிட்டி கவுன்சிலை யார் நிர்பந்திக்க முடியும்? ஐ.நா.மனித உரிமை கவுன்சில்தான் நிர்பந்திக்க அதிகாரம் பெற்றவை. ஒரு நாட்டின் மீது போர்க்குற்றச் சாட்டுகளின் அடிப்படையில் மனித உரிமை மீறல்கள் குறித்த புகார்கள் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் தீர்மானமாக கொண்டுவரும் போது விசாரணை, புலனாய்வு என இரண்டு விசயங்களில்தான் கவனிக்கப்படும். அதில் விசாரணை என்பது முதலில் குற்றச்சாட்டு களுக்கு ஆளான நாடே விசாரணை நடத் துவது, அடுத்து சுதந்திரமான சர்வதேச விசாரணை. அதன் அடிப்படையில் புலனாய்வு நடத்தப்பட வேண்டும். புலனாய்வு செய்த பிறகு தரப்படும் அறிக்கை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டு அங்கு ஏற் கப்படும் பட்சத்தில்... அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும். ஆக, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கே இவ்வளவு நடைமுறைகள் இருக்கிறது.

இந்த நிலையில் ராஜ பக்சேவை தண்டிப்பதற் கான ஸ்டேஜ் எதுவரை வந்திருக்கிறது? ராஜபக் சேவை தண்டிப்பதான விவகாரத்தில் புலனாய்வு ஸ்டேஜ் முடிந்திருக்கிறது. இந்த அறிக்கை மனித உரிமை சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதத் திற்கு எடுத்துக்கொள்ளப் படும். அங்கு நிறைவேற்றப் பட்ட பிறகு அது பாது காப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்படும். ஓ.கே. அந்த ஸ்டேஜ் வரை வந்துவிட் டது என வைத்துக்கொள் வோம். பாதுகாப்பு கவுன்சிலில் நமது எதிர்பார்ப்புகள் நிறை வேறுமா? என்றால் அது கடினம் தான். ஏனெனில், பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இருக்கிறது. இதில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய 5-ம் நிரந்தர நாடுகள். மற்ற 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் உள்ளே நுழையும். இப்படியிருக்கும் நிலையில், ராஜபக்சேவை தண்டிப்பதற் கான தீர்மானத்தை பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் ஒப்புக்கொள்ளுமா? நாம், இந்தியா துரோகமிழைத்து விட்டதாக நினைக்கிறோம். அது உண்மைதான். 

ஆனால், இந்தியாவை விட 100 மடங்கு துரோக நாடாக இருப்பது சீனாதான். இந்தியாவை விட சீனா வைத்தான் இலங்கை அதிகம் நம்புகிறது. நட்பு நாடாக வும் நினைக்கிறது. அந்த சீனா, கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடாக இருப்பது நமக்குப் பெரிய முட்டுக்கட்டை. கார ணம், கவுன்சிலில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒரு நாடு ஏற்க மறுத்தாலும் தீர்மானம் நிறைவேறாது. இதற்கு வீட்டோ பவர் என்று அர்த்தம். இங்கு மெஜாரிட்டி, மைனாரிட்டி என்கிற விதி யெல்லாம் கிடையாது. அந்த வீட்டோ பவர் கொண்டுள்ள நாடாக சீனா இருப்பதால்தான்... ரொம்ப தெம்பாக இருக்கிறார் ராஜபக்சே. அதனால்தான் இந்தியாவைவிட சீனாவை கைக்குள் வைத்துக்கொள்ள ராஜபக்சே விரும்புவது. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேறினால்தானே சர்வதேச நீதிமன்றத்துக்கு வழக்குப் போகும். வழக்கே போக முடியாதபோது ராஜபக்சேவை எப்படி தண்டிக்க முடியும்?

அப்படியானால், ராஜபக்சேவை தண்டிக்கவே முடி யாதா? முடியும். எப்படி? புலனாய்வு குழுவின் விசாரணை ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என தெரிவித்து அறிக் கை தாக்கல் செய்தால் போதும். அப்படி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால் ராஜபக்சே உடனே அதிபர் பதவியை இழப்பார். ஒரு நொடி கூட அதிபராக அவர் நீடிக்க முடி யாது. அப்போது அவருக்குரிய ராணுவ பாதுகாப்பு உள் ளிட்ட அனைத்து அதிகாரங்களும் பறிபோகும். அப் போது அதிகாரமற்ற ராஜபக்சேவை ஆதரிக்க சீனா முன் வருமா என்பது கேள்வி. அந்த காலம் வரும். வந்தே தீரும். அதனால் இந்த அளவில் புரிந்து கொள்ளுங்கள். போதும். அடுத்தடுத்த சந்திப்புகளில் நான் மற்றவைகளை விவரிக்கி றேன். அது வரை உணர்வுமிக்க உங்களது போராட்டங்கள் தொடரட்டும். வீழ்ந்து கிடப்பது இழிவு அல்ல. வீழ்ந்தே கிடப்பதுதான் இழிவு. தமிழீழம் நிச்சயம் வெல்லும்'' என்று ஈழச்சிக்கலை மிக எளிமையாக விவரித்தார் சுப.வீ! உணர்வுகளால் மாணவர்களிடம் எதிரொலித்த கைத்தட் டல் நிற்க நெடுநேரம் ஆனது.     

-இரா.இளையசெல்வன்
படங்கள் : அசோக்

நன்றி : நக்கீரன் 

2 comments:

  1. ஆழ்ந்த ஆழமான அர்த்தமுள்ள பேச்சு மாணவர்கள் புரிந்து தெளிந்து செயல்படவேண்டும்.

    ReplyDelete
  2. Now only i Understand the Meaning of "Veto Power" clearly.. Mikka Nandri .... Ungal karuthukalai migavum mathippavan naan.. Thodarattum ungal pagutharivu sinthanai...

    ReplyDelete