தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 27 July 2013

நதியோடும் பாதையில்...(6)

இடது சாரிகளும் ஈழச்சிக்கலும்


 அண்மையில் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்த ஒரு நண்பரோடு உரையாடிக் கொண்டிருந்தேன்.  எங்கள் பேச்சு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்துத் திரும்பியது. அவர் சொன்ன ஒரு செய்தி, ஓரளவு நாம் அறிந்ததுதான் என்றாலும், கம்யூனிஸ்ட்களின் மீது இருந்த கடைசி நம்பிக்கையையும் போக்கி விடுவதாக இருந்தது.

எத்தனை அவமானங்களுக்கு உள்ளானாலும், வரும் தேர்தலிலும் அ,தி.மு.க.வை ஆதரிப்பதுதான் அவர்களின் மேலிட முடிவாம். காங்கிரஸ், பா.ஜ.க., மம்தா தவிர்த்த மூன்றாவது அணியை ஏற்படுத்துவதும், வெற்றி பெற்றால்(?), முலாயம் சிங் அல்லது ஜெயாவை உயர் பதவிக்கு முன்மொழிவதும் அவர்கள் திட்டமாம். தமிழ்நாட்டில் உள்ள தி.மு.க. எதிர்ப்புக் கட்சிகளும், தமிழ் இயக்கங்களும் மூன்றாவது அணிக்கு ஆதரவு அளிப்பார்களாம்.


 தமிழர் தேசிய இயக்கம், நாம் தமிழர் கட்சி, மே 17 இயக்கம் ஆகியன ஈழச் சிக்கலை, தேர்தல் வரும் நேரத்தில் முழு மூச்சுடன் முன்னெடுக்கப் போகின்றனராம்.  தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளை ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே ஒழித்துக் கட்டிவிடுவது அவர்களின் நோக்கமாம்.

சரி, ஈழப் பிரச்சினையில் உங்கள் நிலை என்ன என்று கேட்டேன். எங்கள் நிலை எப்போதும் போலத்தான் என்றார் நண்பர். 'எப்போதும் போல' என்றால் என்ன என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்தானே? இதோ அவர்களின் கட்சி ஆவணங்களிலிருந்து சில செய்திகளைப் பார்ப்போம்.

2012 ஏப்ரலில் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற சி.பி.எம். கட்சியின் பேரவைக் கூட்டத் தீர்மானம்:
"The CPI(M) stands for a united Sri Lanka in which the Tamil minorities can live in peace and harmony with the majority Sinhala community"

(பெரும்பான்மையான சிங்கள சமூகத்தோடு, சிறுபான்மையினரான தமிழர்கள் அமைதியாகவும், இணக்கமாகவும் சேர்ந்து வாழக் கூடிய ஒன்றுபட்ட ஸ்ரீ லங்கா என்பதே சி.பி.எம். கட்சியின் நிலைபாடு ஆகும்.")

இன்றுவரை, சி.பி.எம். கட்சி அதே நிலைப்பாட்டில்தான் உள்ளது. தனித் தமிழ் ஈழம் என்னும் கோட்பாட்டை அவர்கள் ஒருநாளும் ஏற்பதில்லை.  அது மட்டுமின்றி, ஈழத்தில் நடைபெற்ற இன அழிப்புக் குறித்த சர்வதேச விசாரணை, பொது வாக்கெடுப்பு போன்றனவற்றைக் கூட அவர்கள் மறுக்கின்றனர். 27.03.2013 அன்று வெளியான, தமிழ் மாநில சி.பி.எம். கட்சியின் அறிக்கை கீழ் வருமாறு கூறுகின்றது.

            "Demanding referendum on the demand for a separate eelam or announcing that Sri Lanka is not to be regarded as a friendly country will not only not help solve the Sri Lankan Tamil issue. It will in fact complicate the issue further."

             "The immediate task before us today is not to demand an international inquiry into the war crimes committed by the Sri Lankan forces." 

(தனித் தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பைக் கோருவதோ, ஸ்ரீ லங்காவை நம் நட்பு நாடு இல்லை என்று அறிவிப்பதோ அவர்களின் சிக்கலைத் தீர்க்க உதவாது. உண்மையில், அது மென்மேலும் சிக்கலைக் கூட்டும்.)

(ஸ்ரீ லங்கா ராணுவம் இழைத்த போர்க் குற்றங்களுக்கான சர்வதேச விசாரணையைக் கோருவது, நம் முன் உள்ள உடனடிப் பிரச்சினை அன்று.) 


கட்சியின் அறிக்கை மூன்று செய்திகளைத் தெள்ளத் தெளிவாகக் கூறுகின்றது.
(1) பொது வாக்கெடுப்பு தேவையில்லை
(2) ஸ்ரீ லங்கா நம்முடைய நட்பு நாடுதான்
(3) போர்க் குற்றங்களை விசாரிப்பது உடனடித் தேவை இல்லை.

போர்க் குற்றங்கள் பற்றிக் குறிப்பிடும்போது கூட, அரசு இழைத்த போர்க் குற்றங்கள் என்று கூறாமல், ராணுவம் இழைத்த போர்க் குற்றங்கள் என்று குறிப்பிடும் சி.பி.எம்.மின் 'நேர்மையை' என்னென்பது! (அண்ணன் வைகோ அவர்கள் கூட, தி.மு.க. ஆட்சியில் ஏதேனும் தடை விதிக்கப்பட்டால், அரசைக் கண்டிப்பார்.  அ.தி.மு.க. ஆட்சி தடை விதித்தால், காவல் துறையைக் கண்டிப்பார்.)

இலங்கை நம் நட்பு நாடு என்றும், ஒன்றுபட்ட இலங்கையே எங்கள் நிலைப்பாடு என்றும், பொது வாக்கெடுப்பு கூடத் தேவையில்லை என்றும், சர்வதேச வாக்கெடுப்புக்கு இப்போதென்ன அவசியம் என்றும் அறிக்கை விடும் சி.பி.எம். கட்சியுடன், தமிழ் நாட்டில் உள்ள தமிழீழ ஆதரவாளர்களால் இணக்கமாகச் செல்ல முடிகிறது.அவர்களுக்கு எதிராகவோ, அவர்கள் சார்ந்திருக்கும் கூட்டணிக்கு எதிராகவோ எந்தச் சீமானும் இடி முழக்கம் செய்வதில்லை. 

 1983 தொடங்கி, தனித் தமிழ் ஈழமே தீர்வு என்று மாற்றமில்லாமல் ஒரே குரலில் ஒலித்துவரும் தி.மு.க.வும், போர்க் குற்றங்களின் மீது அனைத்துலக நாடுகளின் புலனாய்வைக் கோரும்,  பொது வாக்கெடுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் கூறும் டெசோவும் மட்டுமே இங்கு எதிரிகளாகக் காட்டப்படுகின்றனர்.

இங்குள்ள தமிழ்த் தேசியத் தலைவர்கள்,  செந்தமிழன்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களும் சி.பி.எம்.மை எதிர்ப்பதில்லை. என்ன நியாயம் இது?    

 இந்தியப் பொதுவுடமைக் கட்சின் (சி.பி.ஐ) நிலைப்பாடும் ஏறத்தாழ அதேதான். அக்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜா, சென்னையில் நடைபெற்ற மாணவர்கள் பட்டினிப் போராட்டத்தின்போது மிக ஆவேசமாகப் பேசினார். தனி ஈழம் என்றெல்லாம் முழங்கினார். ஆனால் அது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு இல்லை. கட்சிக்கு வேறு, மாணவர்கள் முன்னால்  வேறு என்று 'தந்திர உத்தி' (tactics) எல்லாம் தெரிந்தவர்கள் அவர்கள். அதனை இரட்டை நிலை என்று யாரும் சொல்லிவிடக் கூடாது.  கோபப்படுவார்கள் - அது தந்திர உத்தி அவ்வளவுதான்.அதே இந்தியப் பொதுவுடமைக் கட்சியினர்,  20.03.2013 அன்று புது தில்லியில், நாடாளுமன்ற அவைத் தலைவர் மீரா குமார் கூட்டிய கூட்டத்தில் என்ன பேசினார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஈழப் பிரச்சினைக்காகவே கூட்டப்பட்ட கூட்டம் அது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொன்னாரோ அதனையே அவர்களும் வழிமொழிந்தார்கள்!  இதோ அந்தச் செய்தி:

 "Leader of opposition Sushma Swaraj, however questioned why all parties had been called for the meeting to discuss an issue which strictly is between the Government and the DMK. Communist Party of india leader gurudas dasgupta was of the similar view." 

(அரசுக்கும் , தி.மு.க.விற்கும் மட்டுமே உரிய ஒரு சிக்கலைப் பற்றிப் பேசுவதற்கு ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் கேள்வி எழுப்பினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ்குப்தாவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார்.)

தில்லிக்குப் போனவுடன், ஈழப்  பிரச்சினை, தி.மு.க.வின் பிரச்சினை ஆகிவிடுகிறது. மாணவர்களின் முன்பு பேசும் வேளையில், அது தங்கள் பிரச்சினையாக மாறிவிடுகிறது. 

என்ன ஒரு வேடிக்கை என்றால், காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூவரும் நேர் எதிரிகளைப் போல் பலமுறை மோதிக் கொள்வார்கள்.  ஆனால் பல பிரச்சினைகளில் மூவரின் கருத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம்  எனப் பலவற்றிலும் ஒரே கருத்துடைய மூன்று  கட்சிகள் இங்கே அடிக்கடி மோதி கொள்வதுதான் நமக்குப் புரியாத புதிராக உள்ளது! 


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)


6 comments:

 1. வணக்கம் அய்யா,

  மிக அருமையான பதிவு! மிக்க நன்றி!

  காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள் மூன்று கட்சிகலிளும் பார்பனியமும், பார்பனர் ஆதிக்கம் விகிதாசார அடிப்படையில் வேறுபாடு அவ்வளவுதான். எனவே ஈழச் சிக்கலில் மட்டுமன்று, காஷ்மீர், இட ஒதுக்கீடு, கூடங்குளம் எனப் பலவற்றிலும் ஒரே சிந்தனை ஓட்டம் உடையவர்களாக இருகிறார்கள்.

  ReplyDelete
 2. கம்யூனிஸ்ட் களின் முகத்திரையை துகில் உரித்து காட்டி உள்ளீர்கள் அண்ணா. இது எத்தனை பேருக்கு உரைக்கும்.

  ReplyDelete
 3. இடதுசாரிகளின் இரட்டை வேடத்தை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியுள்ளீர்கள் ஐயா...

  ReplyDelete
 4. nalla pathivu..thotarka ayya....

  ReplyDelete
 5. அய்யா அவர்களுக்கு வணக்கம்.தமிழக அரசியல் கட்சிகள் ஈழம் குறித்து காலம் காலமாக கருத்து தெரிவித்துக்கொண்டும், போராட்டங்கள் நடத்திக்கொண்டும் இருக்கிறார்கள். 1983 இல் இருந்து போராட்டங்கள் தீவிரம் பெற்று வருகின்றன .அன்று இருந்த சூழ்நிலை வேறு இன்று இருக்கும் சூழ்நிலை வேறு .கருப்பு ஜூலை சம்பவத்தை யாரும் எளிதில் மறக்க மாட்டார்கள் . இருப்பினும் விடுதலைப்புலிகளுடனான போர் நிறை வுற்ற பிறகு இலங்கையில் உள்ள தமிழ்க்கட்சிகளும் , தமிழ் மக்களும் தனி ஈழம் குறித்த தங்கள் நிலையில் இருந்து இப்பொழுது முற்றிலும் வேறு பட்டு நிற்கிறார்கள் . அங்கு உள்ள அரசியல் கட்சித்தலைவர்கள் 2009 முதல் இன்று வரை வெவ்வேறு சந்தர்பங்களில் இதை உறுதிபடுத்தி வருகிறார்கள்.

  இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 ஆவது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் அர்த்தமுள்ள, நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

  http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2012/10/121007_sambandarindiavisit.shtml

  Sri Lanka's main ethnic Tamil party has dropped its demand for an independent state and said it is ready to accept regional self-rule, following the defeat of separatist Tamil Tigers in a 25-year civil war.

  http://www.aljazeera.com/news/asia/2010/03/2010313215127841206.html

  மேலும் , சுமந்திரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தில் "தமிழர்கள் தவிர மற்ற இன/சமூக மக்களும் வடக்கில் குடியேற வேண்டும் " என்று தெரிவித்தார் .இது குறித்து வாசகர்(ர கே ராதா கிருஷ்ணன் , பத்திரிக்கையாளர் ) ஒருவர் கேட்ட கேள்விக்கு ,தமிழ் தேசிய கூட்டமைப்பு தன்னுடைய ட்விட்டர் இணையத்தில் , சுமித்திரன் கூறிய கருத்துக்கள் தான் எங்கள் கருத்து என்றும் , முன்பு இருந்த சிங்களவர்கள் மீண்டும் அங்கு குடியேற வேண்டும் என்றும் கூறியுள்ளார் .

  R.K.Radhakrishnan : I think other communities – Sinhalese – who lived in the North must come and live: #Sumanthiran in parl. Change of stance? @TNAmediaoffice

  @TNAmediaoffice : No change, consistent stance, New involuntary settlers not welcome

  வடக்குப் பகுதி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதல் அமைச்சர் வேட்பாளர் விக்குநேசுவரன், சென்ற வாரம் என்ன கூறினார் என்றால் , தமிழகத்தில் உள்ள அரசியல் வாதிகள் தங்களுடைய அரசியல் சுய லாபத்திற்காக ஈழ விஷயத்தை கையில் எடுக்கிறார்கள்.எந்த ஒரு அரசியல் கட்சியையும் அவர் விதி விளக்காக குறிப்பிட வில்லை .மேலும் அவர், இங்கு தமிழகத்தில் இருக்கும் தலைவர்கள் , உதவி செய்யாவிட்டாலும் , உபத்திரம் செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார் .இறுதியாக அவர் குறிப்பிடும் போது , "தயவு செய்து எங்களுடைய சிக்கல்களுக்கு நாங்கள் தீர்வு தேடிக் கொள்கிறோம் , ஐக்கிய , ஒன்றுபட்ட இலங்கைக்குள் " என்றும் கூறி யுள்ளார்

  It is natural for friends in Tamil Nadu to show emotions but the Sri Lankan issue is being used there for political gains. To them, I will only say this: You are welcome to give us any other kind of support but please allow us to work out our own solutions to our own problems within a united Sri Lanka.

  http://www.hindustantimes.com/editorial-views-on/InterviewsNews/Sri-Lankan-issue-being-used-by-TN-for-political-gains-says-Justice-CV-Wigneswaran/Article1-1095241.aspx

  இதன் மூலம் ஒன்று தெளிவாக தெரிகிறது , ஆளும் கட்சியாகட்டும் , அதி கட்சிகள் ஆகட்டும் , சட்டபேரவை தீர்மான மாகட்டும் , டெசோ தீர்மான மாகட்டும் வெறும் அரசியல் லாபத்திற்கே என்று தெரிகிறது.

  1983'க்கு பிறகு இருந்த நிலையையும் 2009 க்கு பிறகு இருக்கும் நிலையையும் ஆராய்ந்து , வேற்றுமையை நோக்கின் , இடது சாரி தோழர்கள் கூறுவது போல ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காண்பது தான் தற்போதய, மற்றும் எந்த காலத்திற்கும் ஒத்து வரும் , அங்கு உள்ள மக்களும் ஏற்றுக்கொள்ளும் நிதர்சனமான தீர்வாகும் . தனி ஈழம் என்பது ரஷ்ய மற்றும் சீன நாடுகள் இடத்தில இருக்கும் வீட்டோ அதிகாரம் எனப்படும் ஒன்று இருக்கும் வரையில் சாத்திய மில்லாத ஒன்று.சாத்திய மில்லாத ஒன்று என்பதை விட தேவை இல்லாத ஒன்று என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அங்கு இருக்கும் தமிழர்கள் , தனி நாடு கோர வில்லை, யுத்தம் இல்லாத பூமியில் வாழ விரும்புகிறார்கள்.

  நன்றி
  தே . ரகு

  ReplyDelete
 6. தோழர் ரகு அவர்களுக்கு,

  ஈழத்து மக்கள் தனி ஈழ சிந்தனையிலிருந்து வேறுபட்டு நிற்கிறார்கள் என்ற சிந்தனை எந்த மக்களிடம் இருந்து பெறப்பட்ட சிந்தனை என்று தெரியவில்லை.

  தோழர் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தில் போராடியது மக்கள், ஏனனில் புலிகள் தான் மக்கள்! மக்கள் தான் புலிகள்! விடுதலைப்புலிகள் மக்களுடன் நின்றவர்கள்,மக்களும் அப்படியே.

  எந்த விடுதலைப் போராட்டமும் பின்னடைவுகளால் கைவிடப்பட்டதில்லை. அது பாரிய பின்னடைவானாலும் சரி, சிறியப் பின்னடைவானாலும் சரி.தற்போதுள்ள நமது உறவுகள் உடல் ரீதியாக வேண்டுமானால் விடுதலைப்போராட்டத்தை ஆயுத ரீதிக அனுக தமது சிந்தனையில் மாற்றம் இருக்கலாம். நாம் ஆணித்தனமாக நம்புகிறோம் ஐ.நா பொதுவாக்கெடுப்பு மூலமோ அல்லது வல்லாதிக்கம் மிக்க உலக நாடுகளின் உதவியாலோ அல்லது வேறு வழிகளிலோ தனி ஈழ அமைய வாய்ப்பு ஏற்படுமானால் நிச்சயம் ஈழத்து தமிழ் உறவுகள் அதற்க்கான போராட்டத்தில் களமாடுவார்கள்.

  எனவே அதிகாரமற்ற தமிழர் பிரதிநிதிகளால் (தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றவை),அதிகாரமும் பாதுகாப்பும் அற்ற சூழ்நிலைக்கைதிகளால் தமிழீழத்தை ஆதரிக்கும் கருத்தாக்கம் தற்போது இருக்க வாயிப்பில்லை.

  நமது கடமை ஈழத்து மக்களுக்கும்,அவர்களின் சூழ்நிலைக்கைதிகளாக இருக்கும் பிரதிநிதிகளுக்கும் நம்பிக்கை ஏற்படுத்தக்கூடிய காரியங்களை கடமை உணர்ந்து செய்யவேண்டும். தமிழீழம் வென்றெடுக்க அனைத்து தமிழின உணர்வாளர்களையும் அவர்களின் அமைப்புகளையும் ஒன்றிணைக்க வேண்டும். ஓர் தளத்தில் இல்லாவிட்டாலும் ஒருவர் செயலை மற்றவர்கள் பழிதூற்றாமல்,அவரவரால் இயன்ற சிறிய துரும்பையாவது அசைத்து தமிழீழத்தை வென்றெடுக்க உதவ வேண்டும்.

  பொது எதிரி யார்? ராஜபக்சேவா? இல்லை கலைஞரா? நமது குறிக்கோள் என்ன? தமிழீழமா? அல்லது டேசொவிற்கு ஆதரவு கிடைக்கக்கூடாது என்பதா? நாம் தான் முடிவு செய்யவேண்டும். அம்மையார் ஜெயலலிதா வேண்டுமானால் டெசோ போன்ற அமைப்பை தமிழகத்துக்கு இடதுசாரி தோழர்களுடன் அமைத்து அம்மக்கள் விடுதலைக்காக போராடட்டும்.நாமும் வரவேற்போம்! எங்கள் அய்யா அவர்களும் வரவேற்பார்கள்! அதை விடுத்து அகில இந்திய கட்சிகள் (காங்கிரஸ், பா.ஜ.க., இடதுசாரிகள்) ஒற்றை சிந்தனையில் சிங்களவர்களின் சிந்தனையோடு இசைவதால் ஈழத்து மக்களும் தமிழீழ சிந்தனையிலிருந்து வேறுபடுகிறார்கள் என்று கூறுவது தவறு. கண்டிக்கத்தக்கது.

  குறிப்பு: எமது கருத்துக்களின் நோக்கம் ஈழ மக்களுக்கு ஏதாவது ஒரு தளத்திலிருந்து நன்மை செய்யவேண்டும் என்பதற்காகவே ஒழிய, தோழர் ரகு அவர்களை புண்படுத்துவது இல்லை.

  நன்றி,
  இனியரசன்

  ReplyDelete