தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 3 August 2013

நதியோடும் பாதையில்...(7)

மாணவர்கள் போராட்டமும் பின்புலச் சக்திகளும்


 தாங்கள் உண்டு, தங்கள் படிப்பு உண்டு என்று இருந்து விடாமல், நம் மாணவர்கள் சமூக அக்கறையோடு தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஈழ மக்களுக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் தெருக்களில் இறங்கினர். இப்போது இரண்டு தளங்களில் தங்கள் ஈடுபாட்டை அவர்கள் காட்டத் தொடங்கியுள்ளனர்.

மதுரை சட்டக் கல்லூரியைச் சேர்ந்த நந்தினி என்னும் மாணவி, முழுமையான மதுவிலக்கைக் கோரி, காலவரையற்ற பட்டினிப் போரைத் தொடங்கி, ஐந்தாவது நாள் கைது செய்யப்பட்டுள்ளார். 29.07.2013 அன்று, 'சாதியத்திற்கு எதிரான மாணவர்கள்' என்னும் பெயரில், மாணவர்கள் சென்னையில் ஒரு கருத்தரங்கினை நடத்தியுள்ளனர்.


அறிவியல், தொழில்நுட்ப அறிவில் முன்னேறியுள்ள நம் பிள்ளைகள்  அதற்கு இணையாகச் சமூகப் பார்வையும் உடையவர்களாக இல்லையோ என்ற கவலை இருக்கவே செய்கிறது. அந்த ஆதங்கத்தை முறியடிக்கும் வகையில், ஈழ ஆதரவு, மது எதிர்ப்பு, சாதி ஒழிப்பு முதலான சமூகச் சிக்கல்களில் தங்கள் பங்கினை மாணவர்கள் ஆற்ற முன்வந்திருப்பது மிகுந்த ஊக்கம் தருவதாக உள்ளது. அதே வேளையில் இப்போராட்டங்கள் குறித்த நம் பார்வைகள் சிலவற்றையும் நாம் பதிவு செய்வதில் தவறில்லை.

எந்தப் போராட்டத்திற்குப் பின்னும் சில பின்புலங்கள் இருக்கவே செய்யும். 1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் பின்புலத்தில் தி.மு.க. ஊட்டிய உணர்வும், காட்டிய ஆதரவும் இருந்தன. அதனைப் போல இன்றைய மாணவர்களின் போராட்டத்திற்குப் பின்னாலும் சில அரசியல் கட்சிகள் இருக்கலாம். அதில் ஒன்றும் பெரிய பிழையில்லை. ஆனால் அவ்வாறு பின்னால் நின்று மாணவர்களை இயக்கும் சக்திகளின் நோக்கம், போராட்டக் காரணத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும். அவ்வாறன்றி வேறு மறைக்கப்பட்ட உள்  நோக்கங்களுக்காக அச்செயல் அமைந்துவிடக் கூடாது.

மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவுப் போராட்டத்தின் பின்புலத்தில் இருந்த கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், மறைக்கப்பட்ட ஓர் உள்நோக்கம் இருந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தி.மு.கவைச் சேர்ந்த அல்லது தி.மு.க.வை ஆதரிக்கக் கூடிய எவரும் மாணவர்களை நெருங்கிவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகக் கவனமாக இருந்தனர்.

அதன் காரணமாக, ஈழ ஆதரவுப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அவர்கள் பெரும் ஆர்வத்தைக் காட்டவில்லை. மாணவர்கள் ஒருங்கிணைக்கப்  படவில்லை. ஈழ வரலாறு குறித்தோ, உலக நாடுகளின் அழுத்தத்தை எவ்வாறு கொண்டுவர வேண்டும் என்பது குறித்தோ எல்லாம் விளக்கமாக எடுத்துச் சொல்லப்படவில்லை.

பின்னால் நின்று இயக்கியவர்களின் உண்மையான நோக்கம் ஈழ ஆதரவு என்பதாக அல்லாமல், தி.மு.க. எதிர்ப்பு என்பதாக இருந்தது என்பதுதான் அதற்கான காரணம்.  இவ்வாறு உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்கின்றவர்கள் ஈழத்திற்கும் நல்லது செய்யவில்லை, மாணவர்களுக்கும் நல்லது செய்யவில்லை என்பதைக் காலம் உணர்த்தும்.

இன்று, மாணவி நந்தினி, மதுவிலக்கிற்காகப்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வேளையிலும் சில எண்ணங்களைப் பதிவு செய்ய வேண்டியுள்ளது.    

எந்த ஒரு போராட்டமானாலும், அதன் நோக்கம், வழிமுறை ஆகிய இரண்டும் கவனிக்கப்பட வேண்டும். நந்தினியின் போராட்ட நோக்கம் சரியானதே. குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் பல இங்கே சீரழிந்து போகின்றன. எனவே அத்தீமையை  எதிர்த்து மக்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஆனால் அதற்காக அம்மாணவி தேர்ந்தெடுத்துள்ள வழிமுறை நடைமுறைக்கு உகந்ததாகத் தோன்றவில்லை.

அறவழிப் போர் என்பது சரிதான். ஒருநாள் பட்டினிப்போர் என்பது கூட, கவன ஈர்ப்பு என்ற முறையில் தவறில்லை. ஆனால் வாழ வேண்டிய பிள்ளைகள் காலவரையற்ற பட்டினிப்போரை மேற்கொள்ள வேண்டியதில்லை. இப்படிச் சொன்னவுடன், போராட்டத்தை மழுங்கடிக்கின்றோம் என விமர்சனம் எழும் என்பதை அறிந்தே இதனை எழுதுகின்றேன்.

ராஜீவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் தமிழர்கள் மூவர் உயிர்களைக் காக்க அன்று நடைபெற்ற காலவரையற்ற பட்டினிப் போரை நாம் அனைவரும் ஆதரிக்கவே செய்தோம். ஈழத்தில் ஓர் இன அழிப்பு நடைபெறவிருந்த நேரத்தில் அதனைத் தடுத்து நிறுத்துவதற்காக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் மேற்கொண்ட காலவரையற்ற பட்டினிப்போரையும் ஏற்கவே செய்தோம். அவையெல்லாம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டியவை என்ற காரணத்திற்காக அப்படி ஒரு போராட்டம் தேவைப்பட்டிருக்கலாம்.

மதுவிற்கு எதிரான போராட்டத்தை அப்படிச் சொல்ல முடியாது. 2000 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ள ஒரு தீய பழக்கத்தை இரண்டு மூன்று நாள்களில் நிறுத்திவிட முடியாது. நீண்ட தொடர் இயக்கங்களின் மூலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சிறிது சிறிதாக மாற்றவேண்டிய பழக்கம் இது.நெடுநாள் சிக்கல்களுக்கு எல்லாம் இப்போராட்ட முறை பயன் தராது. இவற்றை எதிர்த்து நாம் வாழ்ந்து போராட வேண்டுமே அல்லாமல், மாண்டு மடிந்துவிடக் கூடாது.

இந்த உண்மைகளை எல்லாம் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லாமல், போராட்டப் பந்தலில் நின்று நாங்கள் இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கின்றோம் என்று தலைவர்கள் பேசுவது ஏற்புடையது அன்று. காலவரையற்ற பட்டினிப் போரில் ஈடுபட்டுள்ள 20 வயது மாணவியை ஊக்கப்படுத்தும் எந்தத் தலைவரும், அதுபோன்ற ஒரு போராட்டத்தை அதே காரணத்திற்காக மேற்கொள்ளவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.


பெரியவர் சசி பெருமாள் அத்தகைய போராட்டத்தில் ஈடுபட்ட போதும் கூட, பூரண மதுவிலக்கைத் தன் கோரிக்கையாக வைக்கவில்லை என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. பூரண மதுவிலக்கு உடனடியான நடைமுறைச் சாத்தியம் அற்றது.

இவையெல்லாம் எல்லோருக்கும் தெரியும். எனினும் இங்கே ஒரு திசை திருப்பும் நாடகம் நடந்து கொண்டுள்ளது. அரசியலற்ற போராட்டங்களை முன்னெடுப்பதன் மூலம் அரசியல் போராட்டங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட முடியும். இன்று தமிழ்நாட்டில் சாதி வெறி திட்டமிட்டு வளர்க்கப் படுகின்றது. சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுக்கிடக்கின்றது. விலைவாசி விண்ணைத் தொடுகின்றது. இவைகளுக்கு எதிரான போராட்டத்தில் மக்களும், மாணவர்களும் இறங்கிவிடாமல் பார்த்துக் கொள்வதற்கும் மதுவிலக்கு போன்ற கோரிக்கைகளை முன்வைப்பது நல்ல வாய்ப்பாக அமையும். இந்த உள் அரசியலை எல்லாம் புரிந்து கொள்ளாமல் மாணவர்கள் உணர்ச்சி வயப்பட்டு போராட்டங்களில் இறங்கிவிடக் கூடாது என்பதே நம் வேண்டுகோள்!

சாதியத்திற்கு எதிரான மாணவர்கள் என்னும் அமைப்பு இன்றைய காலத்தின் தேவை. இந்த அமைப்பிற்குப் பின்னும் ஒரு கட்சி - விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - இருப்பதை உணர முடிந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ஒரு மனநிலையும் அக்கருத்தரங்கில் இருந்தது. இந்த உண்மைகளை நாம் மறைக்க வேண்டியதில்லை. ஆனால் அது தனி ஒரு கட்சிக்கு எதிரானது இல்லை. அக்கட்சி ஊட்டிவரும் சாதி வெறிக்கு மட்டுமே எதிரானது. எனவே அந்த அமைப்பு தேவையான ஒன்று என்றே நான் கருதுகின்றேன்.

எனினும் அவ்வமைப்பின் பொறுப்பாளர்களாக இருக்கும் மாணவர்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். தலித்துகளுக்கும், வன்னியர்களுக்கும் மோதலை உருவாக்கும் ஓர் அமைப்பாக அது ஆகி விடாமல், ஜனநாயக வாதிகளுக்கும், சாதி வெறியர்களுக்கும் இடைப்பட்ட முரண்பாட்டை வெளிப்படுத்தும் அமைப்பாக அதனை வளர்த்திட வேண்டும். அப்படிச் செய்தால், சரியான காலகட்டத்தில், மாணவர்கள் செய்திருக்கும் சரியான செயலாக அது வரலாற்றில் நிலைக்கும்.


(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

4 comments:

  1. An outstanding share! I have just forwarded this onto a coworker who has been doing a
    little research on this. And he in fact ordered me dinner because I discovered it for
    him... lol. So let me reword this.... Thank YOU for the
    meal!! But yeah, thanx for spending time to discuss this subject here on your web page.

    ReplyDelete
  2. மாணவர்கள் இயல்பாகவே உணர்ச்சி வயபடுவார்கள். அறிவுவயப்படமாட்டார்கள். எனவே, வழிநடத்துபவர்களின் தாக்கம் அதிகமிருக்கிறது. அவர்களின் புரிதலும் சார்பு நிலையிலே தான் இருக்கும். திராவிட இயக்கத்தை விமர்சிக்கும் முன் தங்களின் தீர்வாக இவர்கள் எதையாவது சொல்கிறார்களா என்றால் ஒன்றும் இல்லை. மாணவர்களை தெளிவடைய செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. These students are misguided by wrong intentions. Its our responsibilities to propagate these thoughts to the young masses. We are driven by time tested ideologies that are beneficial for the whole mankind. Thank you sir for this article.

    ReplyDelete
  3. நடு நிலையில் இருந்து மிகுந்த பொறுப்போடு எழுதப்பட்ட கட்டுரை.நடு நிலைமை என்று நான் குறிப்பிட காரணம்,சமீப காலங்களில் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் அது இல்லை என நான் கருதுவதால். மாறுபட்ட கருத்துகளை நான் கொண்டிருந்தாலும் உங்கள் பேச்சுக்கும்,எழுத்துக்கும் பரம ரசிகன் நான்.தொலைக்காட்சியில் நீங்கள் பங்குபெறும் விவாதங்களை நான் தவற விடுவதே இல்லை.நன்றி.

    ReplyDelete
  4. காலத்திற்கேற்ற தேவையான பதிவு

    ReplyDelete