தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 17 August 2013

நதியோடும் பாதையில்...(9)

ஓங்கிச் சொல்லுதல்


இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட சிந்தனையாளர்  காஞ்சா அய்லையாவின் எழுத்துகளைச் சில   ஆண்டுகளுக்கு முன்புதான் படிக்கத் தொடங்கினேன். தில்லியில் உள்ள என் நண்பர் அண்ணாதுரையும், பேராசிரியர் அரச முருகு பாண்டியனும் அவரை எனக்கு அறிமுகப்படுத்தி,அவருடைய நூல்களையும் கொடுத்தனர். 

அய்லையாவின் நூல்கள்  எனக்குள் சில புதிய பார்வைகளையும், மனக் கிளர்ச்சிகளையும் உருவாக்கின என்று கூறலாம். அவருடைய 'Why i am not a Hindu' என்னும் புத்தகம்தான் நான் முதலில் படித்தது. அடுத்ததாக, ஓராண்டிற்கு முன், 'God as a political philosopher' என்னும் அவரது நூலைப் படிக்கத் தொடங்கினேன். இன்னமும் பாதியில்தான் உள்ளது.முடிக்கவில்லை.


அய்லையா ஆந்திர மாநிலம், வாரங்கல்  மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சாதிய ஒடுக்குமுறைகளுக்கு ஆளானவர். உஸ்மானியா பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்துக் கொண்டிருந்தபோது, இடதுசாரிச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, தீவிரமாக இடதுசாரி இயக்கங்களில் இயங்கியவர். ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தின் (OPDR - Organisation for Protection of Democratic Rights) பொதுச் செயலாளராக 1981 முதல் பணியாற்றியவர். பிறகு, புத்தர்,பூலே, பெரியார், அம்பேத்கர், சாகு மகராஜ் , சாவித்திரி பாய் ஆகியோரை உள்வாங்கியபின், பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் தலைவர் கன்ஷி ராமையும் பின்புலமாகக் கொண்டு சிந்திக்கவும், இயங்கவும் தொடங்கியவர்.

அவருடைய நேர்காணல் ஒன்று 'இந்து ஆன்மிகமே பாசிசம்தான்' என்னும் பெயரில் சிறு நூலாக வெளிவந்துள்ளது. முனைவர் தனபால், ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் அவரை நேர்கண்டுள்ளனர். அதனைக் கவின்மலர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 40 பக்கங்களை மட்டுமே கொண்டுள்ள அந்நூல், சாதி, மதம், மொழி ஆகியனவற்றிற்குள் உள்ள தொடர்புகள் சிலவற்றை  வெளிப்படுத்துகின்றது. அதில், 'அடடா' என வியக்க வைக்கும் செய்திகளும் உள்ளன. 'என்ன இது,இப்படிச் சொல்கின்றாரே' என அதிர வைக்கும் வெடிகளும் உள்ளன.

அந்த நேர்காணலில் மூன்று முதன்மையான செய்திகள் உள்ளன. வர்க்கப் பார்வையிலிருந்து வருணப் பார்வைக்கு அவர் மாறியது எப்படி, ஐரோப்பியப் பாசிசத்திற்கும், இந்தியப் பாசிசத்திற்கும் இடையிலான வேறுபாடு என்ன, மொழி குறித்த நம் பார்வையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ஆகிய மூன்று செய்திகள் இச்சிறு நூலுள் அடங்கியுள்ளன.

1985 ஆம் ஆண்டு நடைபெற்ற காரம்செடு, படுகொலை, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வு என்பதை நாம் அறிவோம். கம்மா சாதியைச் சேர்ந்த நிலப்பிரபுக்கள், தலித்துகளான மாதிகா சாதி மக்களை அங்கு கொன்றுவிட்டனர். அதுதான் காரம்செடு படுகொலை. அதனைக் கண்டித்து அய்லையா விடுத்த அறிக்கையில், கம்மா நிலப்பிரபுக்கள், மாதிகா தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதைக் கண்டித்திருந்தார். சாதி குறிப்பிட்டு அறிக்கை வெளியிட்டதை இடதுசாரித் தலைவர்கள் ஏற்கவில்லை. நிலப் பிரபுக்கள், தொழிலாளர்களைக் கொன்றுவிட்டனர் என்று மட்டுமே இருக்க வேண்டும் என வாதிட்டனர். அய்லையா அதனை மறுத்தார். அவர்கள் கொலை செய்யப்பட்டது, முதலில் மாதிகாக்கள் என்பதால்தான். பிறகுதான் தொழிலாளர்கள் என்பது வருகிறது என்றார் அய்லையா.

அய்லையாவின் நியாயமான வாதம் அங்கு எடுபடவில்லை. அந்த இடத்தில்தான் அவருடைய அரசியல் வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டது. இந்திய சமுதாயத்தில், வர்க்கப் பார்வையுடன், வருணப் பார்வையும் கண்டிப்பான தேவை என்பதை அவர் புரிந்து கொண்டார்.இரண்டாவதாக, அவர் இந்துப் பாசிசத்தை மிகச் சரியான புரிதலோடு விளக்குகின்றார். ஹிட்லரும், முசோலினியும் அரசியல் தளத்தில் பாசிசத்தை நிறுவினர். ஆனால் இந்தியாவின் இந்துமத வெறியர்களோ, ஆன்மிகத்தின் மீது பாசிசத்தை உருவாக்கி வருகின்றனர் என்கின்றார். ஆன்மிகப் பாசிசத்தை எளிதில் அழித்துவிட முடியாது. அதன் முக்கியமான பரிணாமங்களை மக்கள் புரிந்து கொள்வதும் கடினம் என்று அவர் கூறுவது எவ்வளவு  உண்மை! 

மேலே காணப்படும் இரு செய்திகளும் மிகச் சரியானவை என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் அவர் கூறியுள்ள மொழி பற்றிய சிந்தனை நமக்கு அதிர்ச்சி ஊட்டுவதாக உள்ளது. அவர் வரிகளை அப்படியே முதலில் காணலாம்:

"....அறிவுத்தளத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச் செய்ய,
சீராக ஆங்கிலத்திலேயே எழுதவேண்டும் என்று 
நினைத்தேன்............பிறகு, சமஸ்கிருதத்தையும்,
பிராந்திய மொழிகளையும் ஒழிக்க வேண்டும் என்று 
கூறத் தொடங்கினேன். ஏனெனில், எல்லா பிராந்திய 
மொழிகளிலும் சமஸ்கிருதத்தின் வேர்கள் இருந்தன."

சாதி அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒருவர் எப்படி மொழி அடிமைத்தனத்தை மட்டும் ஏற்கின்றார் என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்த் தேசியம் என்ற உணர்வுகளோடு வளர்ந்த என் போன்றோருக்கு இக்கூற்று பெரும் அதிர்ச்சியாய்  இருக்குமென்பதில் வியப்பில்லை. ஆனாலும் அவர் கூறும் ஒரு காரணத்தை ஆழ்ந்தும் பார்க்கவேண்டியுள்ளது.

இந்திய மொழிகள் பலவற்றில் சமஸ்கிருதத்தின் வேர்கள் பதிந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மைதான். தமிழ் தனித்தியங்க வல்லது என்பதை அய்லையா மறுக்க மாட்டார் என நம்பலாம். எனினும், சமஸ்கிருதம் என்பதை ஒரு மொழியாக  மட்டும் நாம் பார்க்க முடியாது. அது ஒரு சமூக, பண்பாட்டு வல்லாண்மை. அதன் வேர்களைத் தமிழ் மொழியிலிருந்து பிரித்து விட முடியும் என்றாலும், தமிழ்ப் பண்பாட்டில் கலந்து போயிருக்கிற அதன் நச்சுத் தன்மையை அவ்வளவு எளிதில் பிரித்து விட முடியாது. அந்தப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றுதான்,மனிதர்களை இழிவுபடுத்தும் சாதியம். அது கண்டே அய்லையா அஞ்சுகின்றார் என்பது  புரிகின்றது.

ஆங்கில மொழியில் எழுதினால் மட்டும் எல்லாம் சரியாகிவிடுமா? ஆங்கில இலக்கியங்களில் கடவுள், மத, மூட நம்பிக்கைகள் எல்லாம் எதுவுமே இல்லையா? கண்டிப்பாக இருக்கின்றது. பேய், பிசாசுகளுக்கெல்லாம் அங்கு பஞ்சமே இல்லை. மொழிகளை அறிவியல் மொழி, மூட மொழி என்றெல்லாம் பிரிப்பது சரியன்று. ஆனாலும் ஒன்றே ஒன்றை நாம் ஏற்றே ஆக வேண்டும். ஆங்கிலம் உட்படப் பல மொழிகளில் உறுதியாகச் 'சாதிய நஞ்சு' இருக்கவே முடியாது.

சாதி என்பதும், அதன் உடன் விளைவாகத் தோன்றிய தீண்டாமை என்பதும், இந்தியாவிலும், இந்தியாவாக இருந்த சில நாடுகளிலும் மட்டுமே உள்ள ஒழிக்கப்பட வேண்டிய தீமைகள். அதனை ஒழிக்க வேண்டும் என்ற  வெளிப்பாடே அய்லையாவின் நேர்காணலில் வெளிவந்துள்ளது என்று கொள்ளலாம்.பல ஆண்டுகளுக்கு முன்பு, அய்யா பெரியார், வீட்டு வேலைக்காரப் பெண்ணிடம்கூட ஆங்கிலத்திலேயே  பேசுவோம் என்று கூறியது இதே கோபத்தின் வெளிப்பாடுதான்.

பெரியாரின் நோக்கமும், அய்லையாவின்  நோக்கமும்  மொழியை ஒழிப்பதன்று; சாதி இழிவை ஒழிப்பதுதான். 'ஓங்கிச் சொல்லுதல்' என்று இவற்றைக் கொள்ளலாம். இது ஒரு 'அறச் சினம்.' இதனைத்தான் சமஸ்கிருதத்தில் 'தார்மீகக் கோபம்' என்று நாம் கூறிப் பழகியுள்ளோம்.

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்) 
4 comments:

 1. அருமையான பதிவு அய்யா! மிக்க நன்றி!
  Why i am not a Hindu மற்றும் God as a political philosopher போன்ற புத்தகங்கள் வாங்கி பயன் பெற வழிகாட்ட வேண்டுகிறேன்.

  தங்கள் அன்புள்ள,
  இனியரசன்

  ReplyDelete
 2. அருமையான பதிவு அய்யா! மிக்க நன்றி!
  Why i am not a Hindu மற்றும் God as a political philosopher போன்ற புத்தகங்கள் வாங்கி பயன் பெற வழிகாட்ட வேண்டுகிறேன்.
  எனது வேண்டுகோளும் இதுவே ஐயா.

  ReplyDelete
 3. இரத்தினவேல்18 August 2013 at 14:54

  பல அறிஞர்கள்கூட மொழி என்பதை ஒரு பேச்சுக் கருவியாகத்தான் கருதுகின்றனர். மொழியின் வழியாகத்தான் ஒரு இனம் அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை அனைவரும் உணரச் செய்ய வேண்டும். இந்தப் பதிவு அதற்குத் துணை செய்கிறது. நன்றி.

  ReplyDelete
 4. If there is a stone in our rice, we just remove it and eat the good part. Just because there is stone, we can't say that "I will not eat rice, but try a new food that won't have stone".

  Similarly, just because many Indian languages including Tamil has "caste poison" in it, we can't and shouldn't say that we will discard them. Humans have the ability to remove them and take only good things.

  அருமையான பதிவு அய்யா! மிக்க நன்றி!

  ReplyDelete