தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday, 21 September 2013

நதியோடும் பாதையில்...(14)

மோடியா... முகமூடியா?


மோடி வித்தை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். மோடி அரசியல் இன்று நம் நாட்டில் நடந்து கொண்டுள்ளது.

பிரதமருக்கான தேர்தலே நடைபெறாத ஒரு நாட்டில், பிரதமருக்கான வேட்பாளரை பா.ஜ.க., அறிவித்துள்ளது. காங்கிரசும் அதே மனநிலையில்தான் உள்ளது. இடது சாரிகள் கூட தங்கள் சார்பில் ஒரு பிரதமர் வேட்பாளரை அறிவித்தால் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை.

இதனை வெறும் வேட்பாளர் அறிவிப்பாக மட்டும் பார்க்க முடியாது. இதற்குள் ஆழமான அரசியல் ஒன்று உள்ளது. நெடுநாட்களாகவே அந்த முயற்சியில் பா.ஜ.க., இருந்து வருகிறது. இப்போது மோடியை முன்னிறுத்தி அதனை நடைமுறைப்படுத்த முயற்சிக்கிறது.

உலகில், மக்களவைத் தேர்தல், அதிபர் தேர்தல் என இரண்டு வகைத் தேர்தல் முறைகள் உள்ளன. பெரும்பாலும் ஓரின நாடுகள், அல்லது மிகக் குறைந்த தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் அதிபர் தேர்தல் முறையைப் பின்பற்றும். பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு மதங்கள், பல்வேறு பண்பாடுகளைக் கொண்ட நாடுகள் மக்களவைத் தேர்தல் முறையைப் பின்பற்றும். ஒருமுறையிலிருந்து இன்னொரு முறைக்கு மாறிக்கொண்ட நாடுகளும் உண்டு. எடுத்துக்காட்டாக, சிறீலங்காவைக் கூறலாம். மக்களவைத் தேர்தல் முறையைப் பின்பற்றி வந்த அந்நாடு 70களுக்குப் பிறகு அதிபர் தேர்தல் முறைக்கு மாறியது. அதன் காரணமாக அங்கு பல்வேறு எதிர்ப்புப் போராட்டங்களும் கிளர்ச்சிகளும் நடைபெற்றதை நாம் அறிவோம். பொதுவாக, மக்களவைத் தேர்தல் முறை என்பது குடியாட்சி சார்ந்ததாகவும், மற்றொன்று முடியாட்சி சார்ந்ததாகவும் தோற்றம் தரும்.

இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தச் சிக்கலை உலகம் கண்டது. மக்களிடம் மிகப்பெரிய செல்வாக்கைப் பெற்றிருந்த ஜுலியஸ் சீசர், தன் நாட்டுத் தேர்தல் முறையை மாற்றிக்கொண்டு, தன்னையே நிரந்தரத் தலைவனாக ஆக்கிக் கொள்ள முயன்ற போதுதான், அந்த மாமன்னனை, ரோமாபுரியில் அவனுடைய நண்பர்களே கத்தியால் குத்திக் கொன்றார்கள்.

உலகிலேயே மிகுதியான தேசிய இனங்களையும், வெவ்வேறு மொழிகளையும், ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்ட பண்பாடுகளையும் கொண்ட நாடு இந்தியா என்பதையும் எல்லோரும் அறிவர். குறிப்பாகச் சொன்னால், இந்தியாவை ஒரு நாடு என்பதைக் காட்டிலும், துணைக் கண்டம் என்று அழைப்பதுதான் பொருத்தமானது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள். இந்நிலையில், இந்தியா போன்ற பன்மைச் சமூகத்தை உள்ளடக்கியுள்ள ஒரு நாட்டுக்கு அதிபர் தேர்தல் முறை என்பது எவ்வகையிலும் பொருந்தாது. அதனால்தான் மக்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாகப் பிரதமரை நாம் தேர்ந்து கொள்கிறோம். எனவே பிரதமராக வரக்கூடிய ஒருவரின் கட்சி இந்தியா முழுவதும் பரவியிருக்க வேண்டும் என்ற தேவை கூட இல்லை. கூடுதல் மக்களவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற யார் வேண்டுமானாலும் பிரதமராகலாம் என்னும் ஜனநாயகத் தன்மை நம் நாட்டில் உள்ளது-. அதன் அடிப்படையில்தான் கர்நாடகாவில் மட்டுமே செல்வாக்கைப் பெற்றுள்ள தேவகவுடா போன்றவர்கள் கூட நாட்டின் பிரதமர்ஆக முடிந்தது.

இந்தியாவில் அதிபர் தேர்தல் முறையைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்கிற எண்ணம் பா.ஜ.க.விடம் இருந்து கொண்டே இருக்கிறது-. தாங்கள் ஆட்சியில் இருந்தபோதே, அதனை உள்நோக்கமாக வைத்துக்கொண்டுதான், இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். ஆனால், அப்போது அதற்கான பெரும்பான்மை அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இப்போது வரை அவர்கள் அதே எண்ணத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை மோடியின் தேர்வு நமக்குக் காட்டுகிறது. அதாவது, சட்டத்தைத் திருத்தாமல், பிரதமர் தேர்தலையே அதிபர் தேர்தலைப் போல நடத்திவிடப் பார்க்கிறார்கள்.
அதிபர் தேர்தல் முறை என்றால், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைச் செலுத்தி, தங்களுக்கான அதிபரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக, காங்கிரஸ் தன் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்துகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மோடியா, ராகுலா அல்லது பா.ஜ.க.,வா, காங்கிரசா என்னும் ஒற்றைக் கேள்வி மட்டுமே மக்கள் முன்னால் வைக்கப்படும். தி.மு.க., அ.தி.மு.க., தெலுங்குதேசம், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான, உண்மையில் மக்கள் செல்வாக்கு உடைய கட்சிகள் பலவும் தங்களின் முக்கியத்துவத்தை இழந்து போகும். பல மாநிலங்களில் மக்கள் செல்வாக்கே இல்லாமல் இருக்கும் காங்கிரசும், பா.ஜ.க.,வும் நாடு முழுவதும் அதிகாரம் செலுத்தும்.

அதிகாரம் என்னும் சொல்லையும் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமர் அனைத்து அதிகாரங்களையும் உடையவர் அல்லர். குடியரசுத் தலைவரும் கூட, ஏட்டளவில் மட்டுமே அதிகாரம் பெற்றவர். உண்மையான அதிகாரம் மத்திய அமைச்சரவைக்கும், மக்களவைக்கும் மட்டுமே உள்ளது. இந்த ஜனநாயகத் தன்மையை, கூட்டுத் தலைமையை அதிபர் தேர்தல் முறை அடியோடு மாற்றிவிடும். அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறவரின் கட்சி, மக்களவையில் குறைந்த இடங்களையே பெற்றாலும், அனைத்து அதிகாரங்களும் அதிபரிடத்திலேயே தங்கி இருக்கும். ஏறத்தாழ மீண்டும் ஒரு முடியாட்சியைக் கொண்டு வரும் திட்டம்தான் இது.

இதில் பா.ஜ.க.,விற்கு என்ன பெரும்பயன் என்பதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. இந்திய சமூகத்தின் பன்மைத் தன்மையை மறுப்பதே பா.ஜ.க.,வின் அடிப்படைக் கோட்பாடு. ஒரே நாடு, ஒரே பண்பாடு என்பதே அவர்களின் முழக்கம். கேரளாவின் பண்பாடு வேறு, பஞ்சாபின் பண்பாடு வேறு. மராட்டியத்தின் பண்பாடு வேறு, வங்காளத்தின் பண்பாடு வேறு. இப்படி ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் பிரிந்து கிடக்கும் பண்பாடுகளை பா.ஜ.க., எப்படி ஒரே பண்பாடு என்று கூறுகிறது-? எல்லாப் பண்பாடுகளையும் எந்தக் கயிற்றினால் கட்ட விரும்புகிறது? விடை எளிதுதான். இந்துத்துவா என்னும் ஒரு கற்பனைப் பண்பாட்டின் மூலம் இந்தியா முழுவதையும் ஒன்றாக்க  வேண்டும் என்பதுதான் பா.ஜ.க.,வின் நோக்கம்.

ஒன்றாக்குதல் என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் இந்தியாவில், வேற்றுமையிலும் ஒற்றுமையைக் (Unity in Diversity) கொண்டுவர விரும்பவில்லை. வேற்றுமையே இல்லாத ஒற்றுமைதான் (Uniformity) அவர்களின் கனவாக உள்ளது. இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. சர்வாதிகாரம் என்பதைவிட, பாசிசத்திற்கு வழிவகுக்கக் கூடியது. சிறுபான்மையினர் நலன்களை முற்றிலுமாக அழித்தொழிப்பது. இன்னமும் கூர்மையாய்க் கூறவேண்டுமானால், பார்ப்பனியத்திற்கு மீண்டும் உயிரூட்டும் வேலைதான் இது.

இந்த உண்மைகளை எல்லாம் பா.ஜ.க., வெளிப்படையாகக் கூற முடியாது. கூறினால் இருக்கும் வாக்குகளையும் இழக்க நேரிடும். அதனால்தான் கொள்கைகளை முன்னிறுத்தாமல், குறிப்பிட்ட நபர்களை முன்னிறுத்தும் போக்கினை அக்கட்சி மேற்கொள்கிறது. அன்று முன்னிறுத்தப்பட்டவர் வாஜ்பாய். இன்று மோடி. வாஜ்பாயிக்கு  அவர்கள் கொடுத்த தோற்றம், அவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்பது. இன்று மோடியின் உருவத்தை அவர்கள் உருவாக்கி இருக்கும் விதம், அவர் மிகப்பெரிய திறமைசாலி என்பது. பாவம், அத்வானிக்கு இரண்டுமே பொருந்தவில்லை போலும்!.

பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதில் அவர்கள் இரண்டு செய்திகளில் கவனமாக இருந்துள்ளனர். அவர் பார்ப்பனர் அல்லாதவராக இருக்க வேண்டும் என்பது ஒன்று. அவர்கள் எப்போதும் பார்ப்பனர்களைவிட, பார்ப்பன அடிவருடிகளையே அதிகம் முன்னிறுத்துவார்கள். பின்னால் இருந்து இயக்குவதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் இயல்பு. இரண்டாவதாக, ஊடகங்களால் உயர்த்திப் பிடிக்கப்படுகிற ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்பது. பன்னாட்டு நிறுவனங்களுடன் மிக நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கும் மோடியை, ஊடகங்கள் ஊதிப்பெருக்கிப் பன்மடங்கு பெரிதாகக் காட்டிக் கொண்டுள்ளன. மோடி ஆட்சிக்கு வந்துவிட்டால், வறுமை ஒழிந்து வளம் கொழிக்கும், தொழில் பெருகும், வணிகம் சிறக்கும் என்றெல்லாம் புகழ் மாலைகள் அவர் கழுத்தில் போடப்படுகின்றன.


இதோ மோடி தயாராகிவிட்டார். இந்துத்துவாவிற்கு இவரைவிடச் சிறந்த இன்னொரு முகமூடி இப்போதைக்கு இல்லைதானே!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)

4 comments:

 1. பயனுள்ள பதிவு தகவலுக்கு நன்றி .

  ReplyDelete
 2. Sorry for not registeringin tamil.
  Our Arivu Aasaan Ayya used to say'give me a lakh-"I shall make even a donkey,a worshipful being by a thorough campaign".
  NAMO (Narendra Modi as he is called),is now the mask of hindutva and the campaign is on from their quarters in full swing. Our masses are falling prey of such campaigns without realing the venom in such things.Gujarat isthe state where hindutuva outfits test their strategies,that was proved correct.

  ReplyDelete
 3. நல்ல பதிவு ஐயா .

  1. முதலில் "தி இந்து" தமிழ் இதழில் ஒரு செய்தி:

  "பிரதமர் வேட்பாளர் என்று ஒருவரை அறிவிப்பது என்பதே இந்திய பாராளுமன்ற ஜனநாயக முறைக்கும் இந்திய அரசியல் சட்டத்துக்கும் விரோதமானதாகும்."

  ஆதாரம்: http://tamil.thehindu.com/opinion/columns/பிரதமர்-வேட்பாளர்-என்று-உண்டா/article5135919.ece


  2. அடுத்தது - ப. ஜ. க. வின் நோக்கம் சரியானது அல்ல என்பது என் கருத்தும்.


  3. ஆனால் சில நடைமுறை உண்மைகளை பார்க்கலாம்:

  தமிழ்நாட்டில் - மக்கள் தங்கள் தொகுதியில் யார் வேட்பாளராக நின்றாலும் - முதலமைச்சர் யாராக வருவார்கள் என்பதைப் பொறுத்துத்தான் வாக்கு அளிப்பார்கள்.

  i) தி.மு.க வெற்றி பெற்றால் - கலைஞர் அல்லது ஸ்டாலின் தான் முதல்வர் ஆகா முடியும்.

  ii) அ.தி.மு.க வெற்றி பெற்றால் - ஜெயலலிதா தான் முதல்வர் ஆகா முடியும்

  iii) ப.ம.க வெற்றி பெற்றால் - ராமதாஸ் அல்லது அன்புமணி தான் முதல்வர் ஆகா முடியும்

  iv) தே.மு.தி.க வெற்றி பெற்றால் - விஜயகாந்த் அல்லது அவர் துணைவியார் தான் முதல்வர் ஆகா முடியும்

  இதற்கு பெயர் "மாய" ஜனநாயகம் (Pseudo Democracy). இது அழிந்து உண்மை ஜனநாயகம் பிறந்தால்தான் நம் நாடு முன்னேறும்.


  முதலில் தமிழ்நாட்டில் / நம் நாட்டில் எந்த கட்சி தனி நபரை முன் நிறுத்தாமல் - நேர்மையான உட்கட்சி தேர்தல் நடத்தி முதல் அமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்கிறதோ - அந்த கட்சி உண்மையான ஜனநாயக கட்சி.


  ஆனால் நடைமுறையில் இது இயலாது. இது "காலத்தின் கட்டாயம்".


  ------------------------


  வாழ்க நல்ல மனிதர்கள்
  வாழ்க மனித நேயம்
  வாழ்க தமிழ்


  Thanks to: http://translate.google.com for enabling me to type in Tamil.

  ReplyDelete