தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 12 October 2013

நதியோடும் பாதையில்...(16)

மெய்யாலும்தான் தினமணியே
மெய்யாலும்தான்!




ஒருவிதமான ஊடக அரசியல் இங்கே நடந்து கொண்டுள்ளது. எல்லாவற்றையும் தீர்மானிப்பவர்களாகவும், திசைமாற்றுகின்றவர்களாகவும் தாங்களே இருக்க வேண்டும் என்று ஊடகங்கள் சில ஆசைப்படுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பெரும்பாலான ஊடகங்கள் தி.மு.க., எதிர்ப்புஎன்னும் நிலைப்பாட்டில், காலூன்றி நிற்கின்றன. குறிப்பாக தினமணி’, ‘துக்ளக்ஆகிய இரு ஏடுகளின் முழுநேரப்பணியே அதுதான். தினமலர் கூட, சில வேளைகளில் அ.தி.மு.க., அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுகின்றது. அம்மா தண்ணீர்ஆபத்துக் குறித்து, ஜுனியர் விகடன் அட்டைப் படக்கட்டுரை வெளியிட்டது. ஆனால் தினமணிக்கோ எப்போதும் தி.மு.க., வசை புராணம்தான்.
அண்மையில், அந்த ஏடு மெய்யாலுமாஎன்னும் பகுதியில் உண்மைக்கு முற்றிலும் மாறானவஞ்சகமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. தி.மு.க., பொருளாளரும், இளைஞர் அணியின் மாநிலச் செயலாளருமான, தளபதி ஸ்டாலின், கடந்த செப்டம்பர் 26 - 30 ஆகிய ஐந்து நாள்களில் இளைஞர் அணி சார்பில், தமிழகமெங்கும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துமாறு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அ.தி.மு.க., அரசின் அவலங்களை விளக்கித் தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் கூட்டங்கள் நடைபெற்றன. ஐந்தே நாள்களில் ஐந்தாயிரம் தெருமுனைக் கூட்டங்களை நடத்தித் தமிழகத்தையே கலக்கினர் தி-.மு.க., இளைஞர் அணியினர். மக்களும் பெருவாரியாகக் கூடினர். எதிர்பார்த்ததைவிடக் கூடுதலாகத் தாக்கத்தை அக்கூட்டங்கள் ஏற்படுத்தின.

பொறுக்க முடியவில்லை தினமணியால். உடனே மெய்யாலுமாஎன்ற பகுதியில் ஒரு நச்சுச் செய்தியை வெளியிட்டது. ஐயாயிரம் கூட்டங்கள் நடந்ததாகச் சொல்கின்றனர். ஆனால் ஐநூறு கூட்டங்கள் கூட நடக்கவில்லை என்று சொல்கிறார்களே....மெய்யாலுமா?” என்று எழுதியது.
உண்மையை நாடறியும்... மக்கள் அறிவார்கள். தூங்குவது போல நடிக்கும் தினமணியை நம்மால் எழுப்ப முடியாது. தினமணிக்கு நம் பக்கத்து உண்மையை மெய்ப்பிக்க வேண்டிய தேவையும் நமக்கு இல்லை. எனினும், பெரம்பலூரில் உரையாற்றிய தளபதி ஸ்டாலின், “ஐயாயிரம் கூட்டங்கள் நடந்தமைக்கான சான்றுகளை நான் தருகிறேன். ஐநூறு கூட்டங்கள்கூட நடைபெற வில்லை என்பதற்கு உங்களிடம் சான்றுகள் உள்ளனவா?” என்று வெளிப்படையாகக் கூட்டத்திலேயே கேட்டார். தினமணியின் மௌனம் இன்னும் கலையவில்லை. உண்மையற்றவர்களின் வாய்கள் ஊமைகளாய்த்தானே இருக்கும்.
கோவைப் புறநகர் மாவட்டத்தில் மட்டுமே, நூற்றுக்கணக்கான கூட்டங்கள் நடந்துள்ளன. அம்மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராசேந்திரன், அத்தனைக் கூட்டங்களையும் படங்களுடன் பதிவு செய்துள்ளார். அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரேடுகளில் கையெழுத்துகளைப் பெற்றும், படங்களை ஒட்டியும் அமைப்பாளர்கள் முறைப்படி பதிவு செய்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற கூட்டங்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், ஐயாயிரத்துக்கும் கூடுதலாக இருக்குமே அல்லாமல், குறைந்திட வாய்ப்பில்லை.
இந்த உண்மைகள் எல்லாம் தினமணிக்கும் தெரியும். ஆனால், ‘தன் நெஞ்சறிந்து பொய்யுரைக்கும் மனிதர்களை என்னவென்பது? ‘படித்தவன் சூதும் வாதும் செய்தால் அய்யோ என்று போவான்என்னும் பாரதியாரின் வரிகளை அடிக்கடி மேடையில் குறிப்பிடும் தினமணி ஆசிரியர் எழுதும்போது மட்டும் அவ்வரிகளை மறந்து விடுகிறார்.
திருச்சியில் மோடியின் கூட்டத்தைப் பன்மடங்கு ஊதிப் பெருக்கிக் காட்டும் தினமணிகள், தி.மு.க.,வின் கூட்டமென்றால் பன்மடங்கு சுருக்கிக் காட்ட முயல்கின்றன-.
தளபதி ஸ்டாலினுக்குத் தமிழகமெங்கும் பெருகிக்கொண்டிருக்கும் செல்வாக்கை எப்படியேனும் இருட்டடிப்புச் செய்துவிட வேண்டும் என்ற முயற்சிதான் இது. கடந்த 6ஆம் தேதி பெரம்பலூரில் இருந்து, மலையாளப்பட்டி என்னும் சிற்றூர் நோக்கி, அவர் பயணம் செய்தபோது, நாற்பது கிலோ மீட்டர் தொலைவுக்கும், சாலையின் இருமடங்கிலும் மக்கள் கூட்டம்.
வழிநெடுக, கோனேரிப்பாளையம், எசனை, வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வெங்கலம், தழுதாளை, அரும்பாவூர், மேட்டூர், வெட்டுமேடு என எதிர்ப்பட்ட அனைத்துப் பேரூர், சிற்றூர்களிலும், ஆண்களும், பெண்களும் குழுமி நின்று வரவேற்றனர். ஐம்பதடிக்கு ஒருமுறையேனும் மகிழுந்து நின்று நின்றே போக வேண்டியிருந்ததை, அவருடன் அதே வண்டியில் பயணம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவும், குமரி மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர் ஆஸ்டினும், நானும் நன்கறிவோம்.
சுருக்கமாய்ச் சொன்னால், கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்னும் நிலையிலிருந்து, மக்களின் தலைவர் என்னும் நிலைக்கு அவர் உயர்ந்திருக்கும் காட்சியை அன்று நேரில் கண்டோம்.
கண்டு நாங்கள் மகிழ்ந்தோம். தினமணியோ பொருமுகிறது. இதைக்கூட மெய்யாலுமா?’ என்று தினமணி கேட்டுப்பார்க்கலாம். மெய்யாலும்தான் தினமணியே மெய்யாலும்தான்என்று மக்கள் கூறுவார்கள்.
வேறு சில ஊடகங்களும், அவ்வப்போது தங்கள் கைவரிசையைக் காட்டத் தவறுவதில்லை. 06.10.2013 ஆம் நாளிட்ட ஜுனியர் விகடனில், ‘கழுகார் பதில்கள்பகுதியில், “ கருணாநிதியின் செம்மொழி மாநாடு, ஜெயலலிதாவின் சினிமா நூற்றாண்டு விழா - ஒப்பிடுகஎன்று ஒரு கேள்வி. அதற்குக் கழுகார், “ இரண்டுமே அரசுப் பணத்தில் தங்களுக்குத் தாங்களே நடத்திக் கொண்ட ஆராதனைகள்என்று விடை சொல்கிறார்.
இவ்விடை, செம்மொழி மாநாட்டைச் சிறுமைப்படுத்துவதோடு, முற்றிலும் தவறான ஒரு தகவலையும் தருகிறது. திரைப்பட நூற்றாண்டு விழாவில் நடைபெற்றதைப் போல, ‘ அழைக்கப்பட்டுப் பலரும், அழைப்பின்றிப் பலரும்அவமதிக்கப்பட்டார்களா? முனைவர் சிவத்தம்பி உள்ளிட்ட தமிழறிஞர்கள் தொடங்கி, இல.கணேசன் உள்ளிட்ட மாற்றுக் கட்சி அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் அழைக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டனரே! அனைவரது கருத்துகளுக்கும் அம்மாநாட்டின் மேடை இடம் தந்ததே! கலைஞர் தலைவர் அவர்கள் கொடுத்த, “போரைப் புறந்தள்ளிப் பொருளைப் பொதுவாக்குவோம்!என்னும் தலைப்பை, அவர் முன்னிலையிலேயே வழக்கறிஞர் அருள்மொழி மறுத்துப் பேசினாரே-... யாராவது எதிர்த்தார்களா? கலைஞரே அருகில் அழைத்துப் பாராட்டினாரே! அந்த ஜனநாயகமும், திரைப்பட நூற்றாண்டு விழாவில் அம்மையார் காட்டிய சர்வாதிகாரமும் ஒரே மாதிரியாகத்தான் கழுகுப்பார்வையில் படுகின்றதா?
செம்மொழி மாநாட்டில் எத்தனை ஆய்வுக் கட்டுரைகள்...எத்தனை விவாதங்கள். எதுவுமே ஜுனியர் விகடனின் பார்வைக்கு வரவில்லையா-?
சென்ற இதழில் திரைப்பட நூற்றாண்டு விழாவைத் தாக்கி எழுதிவிட்ட ஜுனியர் விகடன், ‘அம்மாவின்கோபத்திற்கு ஆளாகிவிடக்கூடாதே என்று அஞ்சி, இப்படிச் சமன்படுத்தும்முயற்சியில் இறங்குவதுதான், ‘பத்திரிகை தர்மமா?’.
இந்த ஆட்சியில் பேசப்பட வேண்டிய மக்களின் சிக்கல்கள் எவ்வளவோ உள்ளன. அவற்றை எல்லாம் கண்டுகொள்ளாமல், அரசுதரும் விளம்பரத்திலேயே ஊடகங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கலாமா?
ஆளும்கட்சியை ஆதரித்துவிட்டுப் போங்கள். அதற்காக உண்மைச் செய்திகளை மறைப்பதும், திரிப்பதும் நாணயமான செயல்கள்தானா? ஒன்றை மறந்துவிடாதீர்கள்...எவ்வளவு பஞ்சை அள்ளிக் கொட்டினாலும், நெருப்பின் கொழுந்துகள் நீண்டு கொண்டேதான் இருக்கும்!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)


3 comments:

  1. பார்பன ஊடகங்கள் அனைத்தும் வரிந்து கட்டி கொண்டு எப்படியாவது திமுக வை அழித்து விட வேண்டும் என்று துடிக்கின்றன. அதிலும் குறிப்பாக விகடன் பத்திரிகை நடுநிலை வேஷம் போட்டு கொண்டு ஊரை ஏமாற்ற கிளம்பி விட்டது. ஆளும் கட்சியை மயிலிறகால் வருடி விட்டு திமுக வை தாக்குகிறது. நாம் நமகென்று ஒரு நாடு நிலையான பத்திரிகை தொடங்க வேண்டிய நேரம் இது.

    ReplyDelete
  2. இரத்தினவேல்14 October 2013 at 13:15

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?

    ReplyDelete