கைகோத்துக் கொள்ளும்
காவியும் சிவப்பும்
13.10.2013ஆம் நாளிட்ட ‘தி இந்து’ தமிழ் நாளிதழில், இந்தியப் பொதுவுடைமைக்
கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியனின் நேர்காணல் ஒன்று
வெளியாகியுள்ளது. “பா.ஜ.க., ஆதரவோடு
ஜெ. பிரதமரானால் சந்தோஷம்” என்பது அப்பேட்டிக்கு இந்து
அளித்துள்ள தலைப்பு.
இப்படியாகத்
தோழர் தா. பாண்டியன், ‘பாண்டியன்ஜீ அவதாரம்’
எடுத்துள்ளார். அவருடைய அண்மைக்காலப் பேச்சுகளையும், பேட்டிகளையும் தொடர்ந்து படித்து வருகின்றவர்களுக்கு இப்பேட்டி பெரிய
வியப்பைத் தர வாய்ப்பில்லை. அ.தி.மு.க.வின் வட்டச் செயலாளரைப் போலவே அவருடைய
பேச்சுகள் அமைந்துள்ளன. “ஜெயலலிதாவைப் பாராட்டுவதில்
அவருக்கும், அமைச்சர் ஓ.பன்னீர்ச் செல்வத்திற்கும் ஏதோ
போட்டி வச்சிருக்காங்க போல” என்று ஒரு நண்பர் முகநூலில்
எழுதியுள்ளது உண்மையாகத்தான் தெரிகிறது.
ஜெயலலிதாவைப்
பாராட்டுவது என்பதைக் கடந்து, பா.ஜ.க.,விற்கும் ஆதரவாகப் பேசியுள்ளதுதான் இன்றைய புதிய வளர்ச்சி.
அப்பேட்டியில் நாம் கவனம் செலுத்த வேண்டிய வேறு சில கூறுகளும் உள்ளன.
தான்
ஏன் அ.தி.மு.க. ஆட்சியைப் பாராட்டுகிறேன் என்பதற்குச் சில காரணங்களை அவர் கூறியுள்ளார். அவற்றுள் ஒன்று, “ வெளியில் 20 ரூபாய்க்குத் தண்ணீர் விற்கிறது.
தமிழக அரசாங்கமோ 10 ரூபாய்க்குத் தருகிறது. இப்படிப் பல
நல்ல காரியங்கள் நடக்கின்றன; பாராட்டாமல் இருக்க
முடியவில்லை.”
பாதுகாப்பான
குடிநீரைத் தன் மக்களுக்கு அளிக்க வேண்டிய கடமையிலிருந்து தமிழக அரசு தவறியுள்ளதைக்
கண்டிக்க வேண்டிய ஒரு ‘பொதுவுடைமையாளர்’, வெளியில் 20 ரூபாய்க்கு விற்பனையாகும்போது,
அரசு 10 ரூபாய்க்குக் கொடுக்கிறதே என்று
எண்ணி இறுமாந்து போகின்றார். பாவம், அவரால் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.
10 ரூபாய்த் தண்ணீர் எப்படித் தயாரிக்கப்படுகிறது என்பதையாவது அவர்
அறிவாரா என்று தெரியவில்லை. கும்மிடிப்பூண்டியில் சுத்திகரிக்கப்படும் தண்ணீரின்
நிலை குறித்து, ஜுனியர் விகடன் வெளியிட்டிருந்த
அட்டைப்படக் கட்டுரையை நம் ‘பாண்டியன்ஜீ’ படிக்கத் தவறியிருப்பார். படித்திருந்தாலும் வெளியில் சொல்லமாட்டார்.
பேருந்து
ஓட்டுனர் பயிற்சியில் தேறி, வேலைக்கு
வந்துள்ளவர்கள்தாம், தண்ணீர்ச் சுத்திகரிப்புப் பணியில்
அங்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனராம். தண்ணீர் சுத்திகரிப்பு என்பதற்குத்
தனிப்படிப்பும், பயிற்சியும் தேவை. யார் வேண்டுமானாலும்
அத்தகைய பணிகளைச் செய்துவிட முடியாது. அதற்கான அறிவியல் திறன் இல்லாதவர்கள்
அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டால், என்னென்ன விளைவுகள்
உண்டாகும் என்பதை எண்ணிப் பார்த்தால் அச்சமாக உள்ளது. இன்று நம்மைச் சூழ்ந்துள்ள
நோய்களில், பெரும்பாலானவை குடிதண்ணீர் மூலமே ஏற்படுவதாக
மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், ‘அம்மா தண்ணீர்’
என்னென்ன நோய்களைக் கொண்டுவரப் போகிறதோ தெரியவில்லை.
இதைத்தான்
தன்னால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை என்கிறார் அவர்.
பிறகு, அடுத்த பிரதமரைப் பற்றி அவரிடம் கேட்கின்றனர். “மூன்றாவது அணியின் சார்பில் ஜெயலலிதா பிரதமரானால், தமிழ்நாட்டுக்கு நல்ல செய்திதானே...நடக்கட்டும்” என்கிறார் தா.பா.
மூன்றாவது
அணியே உருவாகவில்லை. ‘தவளைகளைத் தராசில் நிறுப்பது’
அப்படி ஒன்றும் எளிதானது இல்லை. முலாயம்சிங் யாதவ், ஜெயலலிதா, நவீன் பட்நாயக், தேவகவுடா என்று ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு, பொதுவுடைமைக் கட்சிகள், மூன்றாவது அணிக்
கனவில் மிதக்கின்றனர். இவர்கள்
எல்லோரையும் ஒன்று சேர்க்கும் அந்த ‘எளிய செயலே’ இன்னும் நிறைவடையவில்லை. அதற்கான தொடக்கநிலை முயற்சிகள் கூட
முற்றுப்பெறவில்லை. அதற்குள் அந்த அணியின் சார்பில், ஜெயலலிதாதான்
அடுத்த பிரதமர் என்று கூறுவது, அந்தக் கூட்டணிக்கே வேட்டு
வைக்கும் வேலையாய்த்தான் முடியும்.
ஏற்கனவே
ஒரு பேட்டியில் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியிருந்த தா.பா., அதற்கான ஒரு காரணத்தையும் கூறியிருந்தார். ஜெயலலிதாவிற்கு நான்கைந்து
மொழிகள் தெரியுமாம். ஆகவே, அவர் பிரதமர் பதவிக்குத்
தகுதியானவராம்.
பிரதமர்
பதவிக்கான தகுதி, இத்தனை எளியது என்பது நமக்கெல்லாம்
தெரியாமல் போய்விட்டது. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னைக்கு
அருகில் உள்ள மாமல்லபுரத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஓர் இளைஞன், வழிகாட்டியாக(‘கைடு’) இருக்கிறான். தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு,
கன்னடம் என்று ஏழெட்டு மொழிகளைச் சரளமாகப் பேசுகின்றான். நல்ல
வாய்ப்பாகத் தா.பா. அந்த இளைஞனைச் சந்திக்கவில்லை போலிருக்கிறது.
சந்தித்திருந்தால் அவனையே பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருப்பார்.
சரி
போகட்டும்,
அந்தப் பேட்டியின் கடைசிக் கேள்விக்கு வருவோம். அதுதான்
முதன்மையானது. அந்தக் கேள்வி - பதிலை அப்படியே கீழே
தருகின்றேன்: -
கேள்வி
: நீங்கள் மூன்றாவது அணியை மையமாக வைத்து
யோசிக்கிறீர்கள். ஆனால், மோடி பிரதமராக முடியாத
சூழலில், பா.ஜ.க., ஆதரவோடு
ஜெயலலிதாவைப் பிரதமர் பதவியை நோக்கி நகர்த்தும் வியூகமும் தில்லியில் அடிபடுகிறதே?
விடை
: சந்தோஷம் என்று போட்டுக்கொள்ளுங்கள். ஜெயலலிதா எப்படிப் பிரதமரானாலும்
சந்தோஷம்தான்!
அப்பாடா, எல்லாப் போட்டிகளிலும், ஓ.பன்னீர்ச்செல்வத்தைத்
தா.பாண்டியன் வென்றுவிட்டார் என்றே தோன்றுகிறது. பா.ஜ.க., ஒரு மதவாதக் கட்சி என்னும் தன் கருத்தையெல்லாம் தா.பா. மறந்துவிட்டார்.
எது வேண்டுமானாலும் நடக்கட்டும், நாடு எக்கேடோ கெட்டுத்
தொலையட்டும், ஜெயலலிதா பிரதமரானால் போதும் என்ற
முடிவுக்கு வந்துவிட்டார்.
ஜெயலலிதா
பிரதமர் ஆவதில், தா.பா.வுக்-கு அப்படி என்ன அடங்காத
ஆர்வம் என்று சிலருக்குத் தோன்றலாம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஜெயலலிதாவைக்
குளிர்விப்பதன் மூலம்தான், வரவிருக்கும் நாடாளுமன்றத்
தேர்தலில், தனக்கு ஓர் இடம் கிடைக்கும் என்பது அவர்
கணக்கு. இந்த உண்மையை நாடே அறியும். நாடே அறிந்துள்ள உண்மையை, நல்லகண்ணு அய்யாவும், நண்பர் மகேந்திரனும்
அறியாமலா இருப்பார்கள்? அறிந்துகொண்டும் ‘அடக்கமாக’ இருக்கிறார்கள் போலிருக்கிறது!
‘சிவப்புத்’ தோழர்கள் நிலை இதுவென்றால்,
‘காவி’ நண்பர்களின் நிலை இதனைவிட மோசமாக
உள்ளது.
ஒரு
மாதத்திற்கு முன்னால், “டாக்டர் மன்மோகன்சிங்,
சீரழிந்த பத்து ஆண்டுகள்” (“ Dr.MANMOHAN SINGH: A DECADE
OF DECAY”) என்று ஓர் ஆங்கில நூல், சென்னையில்
வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஆர். வெங்கடேஷ் என்னும் ‘ஆடிட்டர்’
எழுதியுள்ள அந்நூலுக்கு, சுப்பிரமணியன்
சுவாமி முன்னுரை வழங்கியுள்ளார். வெளியீட்டு விழாவில் எஸ். குருமூர்த்தி
போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
ஆக
மொத்தம்,
அது ஒரு பா.ஜ.க., சார்பு நூல். கடந்த 10 ஆண்டுகாலக் காங்கிரஸ் கட்சியைச் சாடுவதுதான் அந்நூலின் நோக்கம். ஆனால்
அந்நூலில், ஓர் இயல், “ Why
Jayalalitha will lead the national discourse” என்னும்
தலைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. அந்நூலின் இயல்பான போக்கிற்கு எவ்விதத் தொடர்பும்
இன்றி, ஜெயலலிதாவைப் புகழ்வதற்காகவே அந்த இயல்
எழுதப்பட்டுள்ளது.
“அமெரிக்காவின் வெளியுறவுச் செயலர் ஹில்லாரி கிளிண்டன், சென்னை வந்தபோது, ஜெயலலிதாவைச் சந்தித்ததன்
மூலம், ஜெயின் மதிப்பு இந்திய அளவிலும், உலக அளவிலும் உயர்ந்துவிட்டதாம்” - அந்த நூல்
சொல்கிறது. அதைவிடப் பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், இந்தியாவின்
தேசிய கீதத்தில் உள்ள “ஜெய ஹே ஜெய ஹே” என்று வருகிறதே, அந்த இந்தியாவின் ‘ஜெயபாக்கியமே’
ஜெயலலிதாதானாம்! (பக்-.471).
அந்த
வரிகளைப் படித்தபோது, ‘யாருக்குப் பைத்தியம் -
நமக்கா, அவர்களுக்கா?’ என்று புரியவில்லை.
இப்படிக்
காவியும்,
சிவப்பும் கைகோத்துக் கொண்டு, ‘ஜெயலலிதா
போற்றி’ பாடுவதை, இனப்பாசம்
என்பதா, பணப்பாசம் என்பதா என்பதும் புரியவில்லை.
(சனிக்கிழமைதோறும் சந்திப்போம்)
பாண்டியன் அம்மாவை பாராட்டுவது ஒருபக்கம் இருக்கட்டும்.நீங்கள் தி.மு.க.தலைவரையும் அவர் வாரிசுகளையும் பாராட்டி அடிக்கும் ஜால்ரா சத்ததில்
ReplyDeleteஎங்கள் காதில் ரத்தம் வடிகிறதே.உங்கள் சொம்பொலிக்குக் காரணம் பணமா?பாசமா?.ஆக பான்டியனை குறை சொல்லும் தகுதி உங்களுக்கு இல்லை என்பதே உண்மை.என் கருத்து உங்களை காயப்படுத்தியிருன்தால் மன்னிக்கவும்.
அருள்மொழி அவர்களுக்கு,
Deleteஎன்னை விமர்சனம் செய்ய உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு. எனக்கு அதில் எந்த வருத்தமும் இல்லை. ஆனால், தோழர் தா.பாண்டியன் அவர்கள் குறித்த என் பதிவுகளுக்கு உங்களின் எதிர் விமர்சனம் விடையாகாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகின்றேன். எவ்வாறாயினும், என்னை மதித்து என் வலைப்பூவைப் படிப்பதற்கும், வினாக்கள் தொடுப்பதற்கும் நன்றி.
அய்யா சுபவீ அவர்கள் வெளிப்படையாகவே தி.மு.க வை ஆதரிக்கிறார். அதனை அய்யா அவர்களே பல மேடைகளில் அறிவித்தும் இருக்கிறார்.
Deleteஏன் எனில் எங்கள் திராவிட இயக்க கொள்கைகளுக்கு ( 1.சமத்துவம் (அனைவருக்கும் அனைத்தும்) 2.சமூகநீதி 3.தமிழீழம் ) எந்த காலகட்டத்திலும் ஒத்துப்போகக்கூடிய இயக்கமாக தி.மு கழகமும் அதன் தலைவர் கலைஞர் அவர்களும் இருப்பதினால் நாங்கள் அவர்கள் பக்கமே நிற்கிறோம்.
எனவே இது கொள்கைப்பாசம் மட்டுமே வேறில்லை.
கீழ் காணும் பட்டியலுக்கு அய்யா தா.பா அவர்களின் நிலையை எனக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1.சமசீர் கல்வி
2.தமிழ்ப்புத்தாண்டு மாற்றம்
3.தலைமைச்செயலகம் மாற்றம்
4.அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றம்
5.நிகழ்கால நீரா மன்னன் மோடி ஆதரவு( தம்பிதுறை தூது )
6.உழவர் சந்தை முடக்கம்
7.பெரியார் நினைவு சமத்துவபுரம் முடக்கம்
8. 90% பால் விலையேற்றம்
9.பெருந்துக்கட்டணம் இரண்டு மடங்கு உயர்வு
10.இல்லாத மின்சாரத்திற்கு கட்டண உயர்வு
ஆகிவைகளுக்கு அய்யா தா.பா ஜெயலலிதா வின் செயல்பாட்டிற்கு ஊமையாக இருக்கிறாரே ஏன்? பணப்பாசமா? அல்லது பதவிப்பாசமா?
தா.பா.அவர்களின் நிலைப்பாடு சரி என்பது என் வாதம் அல்ல.எங்கள் மரியாதைக்குரிய சுபவீ அவர்களும் நடுவு நிலையிலிருந்து விலகுகிராறே என்றுதான் விமர்சித்தேன்.மேலும் நான் பெண் அல்ல.ஆண்.
Deleteசில ஆண்டுகளுக்கு முன்னால் கி.வீரமணி அவர்கள் இதே அம்மையாருக்கு சமூக நீதி காத்த வீரங்கனை என்று பட்டம் சூட்டி புளங்காகிதம் அடைந்தாரே அதற்கு காரணம் என்ன?இனப்பாசமாக இருக்க முடியாது.பணப்பாசமாக இருக்குமோ?நீங்கள்தான் சொல்லவேண்டும்.
ReplyDeleteஅவரவர்க்கு உரிய வினாக்களை அவரவரிடம் கேட்பதே சரியானது
Deleteஅம்மையார் அருள்மொழி அவர்களுக்கு,
Deleteவணக்கம்! கி.வீரமணி அவர்கள் எதையும் அம்மையார் ஜெயலலிதா விற்கு சமூகநீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் அளித்தது. இந்தியாவிலேயே 69 சதவீத இட ஒதுக்கீடிற்காக மட்டுமே. வேண்டுமானால் தா.பா விடம் கேட்டுப்பாருங்கள் அவர் அம்மையாரிடம் கேட்டு சொலுவார்.
பணப்பாசமாக இருக்குமேயானால் தற்போது நிகழ்கால நீரா மன்னன் மோடியை ஆதரிக்க செயய்லாமே!
அதற்கெல்லாம் ஆசைப்பட்டவராக இருந்தால் அவர் என்றோ தனது வாதத்திறமைக்கு மிகப்பெரிய வழக்குரைஞர் ஆகவோ அல்லது அரசியலிலோ பங்கேற்ற்று பதவி சுகம் அடைந்திருப்பார்.
நான் பெண் அல்ல.ஆண்.
Delete