தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 3 April 2014

நதியோடும் பாதையில்...(37)

ஆணவம் அழியட்டும்
மதவாதம் மறையட்டும்
வாக்களிப்பீர்
தி.மு.க. கூட்டணிக்கே!


நாடாளுமன்றத் தேர்தலுக்கான நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்றும் கூட யாருக்கு வாக்களிக்கலாம் என்பதை முடிவு செய்யாத ஒரு பகுதியினர் மக்கள் திரளில் இருக்கக் கூடும். அவர்களின் சிந்தனைக்காகச் சில செய்திகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் என்பது இந்தியாவை யார் ஆள்வது என்பதை முடிவு செய்யும் தேர்தல்தான். எனவே மாநிலக் கட்சிகளைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம் என்று சிலர் கூறுகின்றனர். அப்பட்டமான திசைதிருப்பும் வாதம் இது. 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு கட்சியின் ஆட்சி மத்தியில் இல்லை என்பதும், இனியும் அப்படி ஏற்பட முடியாது என்பதும் தெளிவான உண்மைகள். மாநிலக் கட்சிகளின் கூட்டுறவிலும், துணையிலும்தான் எந்தக் கட்சியும் இனி மத்தியில் ஆட்சி அமைக்க முடியும். எனவே மாநிலக் கட்சிகளைக் கருத்தில் எடுத்துக் கொள்வது மிகவும் தேவையானது. அது மட்டுமின்றி, எந்தவொரு தேசியக் கட்சியும், மாநில நலனைக் கவனத்தில் கொள்வதில்லை. காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு சிக்கல் முதலான பலவற்றில், காங்கிரஸ், பா.ஜ.க., பொது வு-டைமைக் கட்சிகள் இந்த மாநிலத்தில் ஒரு நிலை யையும், அந்த மாநிலத் தில் இன்னொரு நிலை யையும் எடுத்ததைக் கண்கூடாக நாம் கண்டோம். எனவே வலிமையான மாநிலக் கட்சிகளால்தான் வளமான எதிர் காலத்தை உருவாக்க முடியும்.


தமிழ்நாட்டைப் பொறுத்தளவு இன்று ஐந்து முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, கன்னியாகுமரிப் பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியும் போட்டியிடுகின்றது. எனினும் தி.மு.க., அ.தி.மு.க. என்னும் இரு கட்சிகளுக்கு இடையிலேதான் இங்கு உண்மையான போட்டி நிலவுகின்றது.
பா.ஜ.க. தலைமையில் மூன்றாவது அணி என ஒன்றை உருவாக்கியுள்ளனர் என்றாலும், அது பேருக்குத்தான் ஓர் அணியாக இருக்கிறதே தவிர, உண்மை யில் தனித்தனியாகத்தான்  உள்ளது. நடிகர் ஏறும் மேடையில் நான் ஏற மாட்டேன் என்கிறார் ராமதாஸ். வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய 29ஆம் தேதிவரையில் புதுவைக்கான கூட்டணி வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப் படவில்லை. ஒரு தொகுதியில், ஒரே கூட்டணியைச் சார்ந்த இரண்டு வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். அதன் காரணமாகவே அங்கு நடைபெற விருந்த பொதுக்கூட்டத்தைக் கூட, விஜயகாந்த் தள்ளி வைத்துவிட்டார்.
மோடி அலை வீசுகிறது என்று அவர்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அது தமிழ்நாட்டில் எடுபடவில்லை. உண்மையிலே அலை வீசுகிறது என்றால், நாற்பது தொகுதிகளிலும் அவர்களே போட்டி யிட்டிருக்கலாமே, ஏன் ஒவ்வொருவரை யாகக் கெஞ்சிக் கூத்தா டிக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் மக்கள் கேட்கின்றனர்.
மேலும் தமிழ்நாட்டில் என்றும் மதவாதம் காலூன்ற முடியாது. 1947ஆம் ஆண்டு இந்தியாவே மதவாதக் கலவரங்களில் பற்றி எரிந்தபோதும், தமிழகம் மதநல்லிணக்கத்தோடு இருந் ததை நாம் அறிவோம். இன்றைக்கும் அதேநிலையில் பல்வேறு மதத்தினரும் உறவினர்களாக வாழும் பூமி இது. அதனைக் குலைக்கும் வகையில் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழக மக்கள் ஆதரவை அளித்துவிட மாட்டார்கள்.
ஆதலால் உங்கள் வாக்கு தி.மு.க. அணிக்கா, அ.தி.மு.க. விற்கா என்பதுதான் இப்போது முன் நிற்கும் கேள்வி.
கடந்த மூன்றாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியின் அவலங்களை நாம் அனை வரும் அறிவோம். குறிப்பாக மூன்று செய்திகளை நாம் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.
1. முற்றுமாய்ச் சீரழிந்து போயுள்ள சட்டம், ஒழுங்கு.
2. பாதியில் கைவிடப்பட்ட மின் உற்பத்தி உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள்.
3. முதலமைச்சரை அமைச்சர்கள் உள்பட எவராலும் எளிதில் அணுக முடியாத நிலை.
நான் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் முதல் வரிசை மாநில மாக ஆக்குவேன் என்றார் இன்றைய முதலமைச்சர். ஆனால், கொலை, கொள்ளை ஆகியனவற்றிலேதான் தமிழகம் முதல் வரிசையில் இடம் பிடித்துள்ளது. ஒரு மாதத்தில் 30 நாள்களில், 31 கொலைகள் நடைபெறுகின்றன. அண்மையில் கூட மக்கள் நடமாட்டம் மிகுந்த மைலாப்பூர் லஸ் பகுதியில் பட்டப்பகலில் ஓர் இளைஞன் வெட்டிக் கொல்லப்பட்ட கொடுமையைக் கண்டோம். இது இன்றைய தமிழகத்தின் அன்றாட நிகழ்வு.


ஒவ்வொரு நாளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொள்ளைகள் நடந்து கொண்டே இருக்கின் றன. வீடு, கடை, வங்கி என்று மட்டுமில்லாமல், நெல்லைக்கு அருகில் ஒரு நீதிமன்றத்திலேயே திருட்டுப் போயிருக்கிறது. இந்த அளவுக்குச் சட்டமும் ஒழுங்கும் தமிழ்நாட்டில் தறிகெட்டுக் கிடக்கிறது-.
28.03.2014ஆம் நாளிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா நாளேடு, இந்தியாவிலேயே சுகாதாரச் சீர்கேடு மிகுந்த முதல் மாநகரமாகச் சென்னை அமைந்துள்ளது என்று கூறியுள்ளது. இதுதான் தமிழகத் தலைநகரின் நிலை.
கடந்த மூன்றாண்டுகளில் குறிப்பிடத் தக்க எந்தவொரு புதிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. கலைஞர் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் பலவும் பாதியிலேயே நின்று போயுள்ளன.
எந்த ஒரு முதலமைச்சரும் தான் ஆட்சி செய்யும் மாநிலத்திற்குப் புதிய திட்டங்கள் வேண்டும் என்றுதான் பாடுபடுவார். ஆனால், நம் முதலமைச்சரோ, வரக்கூடிய திட்டங்களைக் கூட வேண்டாம் என்று தடுக்கிறார். அதற்காக நீதிமன்றம் வரை செல்கிறார்.
சேதுக்கால்வாய்த் திட்டம் தமிழ் நாட்டிற்கு வேண்டாம் என்றும், மணல் திட்டை ராமர் பாலம் என்றும் கூறுவதோடு, அந்த மணல் திட்டைப் புனிதச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார் ஜெயலலிதா. 2,427 கோடி ரூபாய்த் திட்டத்தில் தொடங்கப்பட்ட சேதுக்கால் வாய்ப் பணிகள் பாதிக்கு மேல் முடிந்து விட்டன. இந்நிலையில் அதனைத் தடுக்க முயற்சிப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதும், தமிழ்நாட்டின் எதிர்காலப் பொருளாதார வளத்தைப் பாழடிப்பதும் ஆகும்.
19 கிலோமீட்டர் தொலைவுக்கு, துறைமுகம் தொடங்கி மதுரவாயல் வரையில் உருவாக்கப்பட்ட உயர்மட்டச் சாலைப் பணிகள் பாதியிலே நிறுத்தப் பட்டுள்ளன. 1,852 கோடி ரூபாய் அதில் முடங்கிக் கிடக்கிறது.
கூவம் ஆற்றின் ஓட்டத்தைக் கெடுத்துவிடும் என்று கூறி அந்தத் திட்டத்தை நிறைவேற்றத் தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்திற்குப் போயிருக்கும் ஒரே முதலமைச்சர் ஜெயலலிதாவாகத்தான் இருக்க முடியும்.
புதிய தலைமைச் செயலகம் உள்படப் பல்வேறு கட்டிடங்கள் பாழடைந்து கொண்டிருக்கின்றன.
ஆட்சிப் பொறுப்பேற்றதும், இனிமேல் வாரம் ஒருமுறை பத்தி ரிகை நிருபர்களைச் சந்திப்பேன் என்றார் ஜெயலலிதா. இந்த மூன் றாண்டுகளில் எத்தனை முறை அந்த வாரச் சந்திப்பு நடந்துள்ளது என்பதைப் பத்திரிகைகள்தான் கூறவேண்டும். ஆனாலும் அந்த உண்மையைக் கூறி, பத்திரிகையாளர்கள் பலர் தங்களுக்கு வரக்கூடிய முழுப்பக்க விளம்பரத்தைக் கெடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
பத்திரிகையாளர்களையும், மக்களையும் அவர் சந்திப்பதே இல்லை. தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கேட்பதற்குக் கூட, வானத் தில் பறந்துதான் வருகி றாரே தவிர, மக்கள் நடமா டும் சாலைகளின் வழி அவர் பயணிப்பதில்லை.
போகட்டும், கட்சிக்காரர்களையாவது அவர் சந்திப்பதுண்டா? அமைச்சர்களே அவரைப் பார்க்க முடிவதில்லை, அவரோடு அலுவல் தொடர்பான எந்தச் செய்தியையும் பேச முடிவதில்லை என்பதுதான் இன்றைய நடைமுறை உண்மை.
இவ்வாறு பல வகைகளில் தமிழகத்தை முடக்கிப் போட்டிருக்கும், இருளில் மூழ்கடித்திருக்கும் ஜெயலலிதா தலைமை ஏற்றுள்ள அ.தி-.மு.க.விற்கு அளிக்கப்படும் வாக்குகள், இந்தியாவையே சீர்குலைக்கத்தான் உதவும். எவ்விதமான மக்கள் நலத்திட்டங்களையும், கொள்கை உரம் வாய்ந்த திட்டங்களையும் தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதன் மூலம், மேலும் மேலும் நம் நாட்டில் அரசியல் பொருளாதாரச் சூழல்கள் அழிவை நோக்கியே நகரும் என்பதை வாக்காளர் கள் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தியாவின் எதிர்காலம் கருதியும், தமிழகம் ஒளிபெற வேண்டும் என்று விரும்பியும் தமிழக மக்கள் அனைவரும் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்!

(அவ்வப்போது சந்திப்போம்)

2 comments:

  1. If BJP is a communal party, what about MMK?..None of the political parties in TN have any ideology. DMK was earlier part of the NDA alliance led by BJP even after Gujarat riots.

    ReplyDelete
    Replies
    1. Neither MMK has determined to construct a mosque at Ayodhya nor DMK has accepted for one.

      Delete