தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 7 June 2014

அறிந்தும் அறியாமலும்…(6)

ஓதுவது ஒழியேல்!


உலகில் உள்ள எல்லாத் துறைகளையும், சென்ற பகுதியில் கூறப்பட்டுள்ள ஏழு தலைப்புகளின் கீழ் அடக்கிவிட இயலுமா என்று சிலர் கேட்டுள்ளனர். இயலும் என்றுதான் கருதுகின்றேன். விளையாட்டு, சமயம் ஆகியனவற்றிற்கு இடமில்லையா என்று ஒரு நண்பர் கேட்டுள்ளார். கண்டிப்பாக இடம் உண்டு. விளையாட்டுத் துறை, பண்பாடு என்னும் தலைப்பின் கீழும், சமயத் துறை, பண்பாடு, தத்துவம் ஆகிய தலைப்புகளின் கீழும் இடம்பெறக்கூடியன. அடங்காத துறைகள் இருப்பின், எட்டாவது பிரிவை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.


அறிவியல், தொழில்நுட்பம், வணிகம், தொழில், பொருளாதாரம், சட்டம் ஆகியன அன்றாடத் தேவைகளாக இருப்பதால், எவரும் அவற்றை விலக்குவதில்லை. பாட நூல்களிலும் அவற்றுக்கு இடமுண்டு. வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நாம் அவற்றைக் கற்றுக் கொள்கின்றோம்.

அரசியல், வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு, தத்துவம் ஆகியன இன்று மிகுதியாகப் படிக்கப் படுவதில்லை. கலை, அறிவியல் கல்லூரிஎன்று பெயர்ப்பலகை தொங்கும் பல தனியார், சுயநிதிக் கல்லூரிகளில், பெயர்ப்பலகைகளில் மட்டுமே கலைஉள்ளது. உள்ளே இலக்கியம், வரலாறு, தத்துவம் முதலான பாடப்பிரிவுகள் இல்லவே இல்லை. அரசுக் கல்லூரிகளில்தாம் அவை காணப்படுகின்றன.

மாணவர்கள் கலை, இலக்கியப் பிரிவுகளில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்று கூறப்படுகின்றது. அரசுக் கல்லூரிகளிலும் கூட, வேறு எந்தப் பிரிவிலும் இடம் கிடைக்காத மாணவர்களே வரலாறு, இலக்கியப் பிரிவுகளில் சேர்கின்றனர் என்பதும் உண்மைதான்.

ஏன் இந்த நிலை?

கல்விக்குரிய இரண்டு நோக்கங்களில், ஒன்று முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு விட்டதே இதற்கான காரணம். அறிவு வளர்ச்சி, தொழில் கற்றல் என இரு நோக்கங்கள் கல்விக்கு உண்டு. ஆனால், தொழில் படிப்பும், தொழில் (வேலை) பெறுவதற்கான படிப்பும் மட்டுமே கல்வி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. அறிவு வளர்ச்சி என்னும் நோக்கம் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது. வரும் காலங்களில் அதற்கு இடமே இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில்தான், “இலக்கியம் கற்பது பயனற்றது, அது புலவர்களின் வேலை, வேறு வேலை ஏதும் இல்லாதவர்கள் இலக்கியம் படித்துக் கொண்டிருக்கலாம்என்பன போன்ற எண்ணங்கள் எழுந்து, வலுப்பெற்று, இளைஞர்களின் பொதுப்புத்தியில் ஆழமாகப் படிந்து விட்டன.

இந்நிலையில் இது குறித்து இரண்டு கோணங்களில் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. படித்து முடித்த பின்னும், அந்தப் படிப்புக்கு வேலை கிடைக்காது என்றால், அதனைப் படிப்பதால் என்ன பயன் என்ற வினாவில் உள்ள நியாயத்தை உணர வேண்டும். கலை சார்ந்த படிப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், அவ்வேலைகளுக்கு நல்ல ஊதியம் வழங்குவதும் அரசின் கடமைகளில் ஒன்றே ஆகும். ஆனால் அது உடனடியாக நடைபெறக்கூடியது அன்று. எனவே கல்லூரிகளில் கலைப்பிரிவுப் பாடங்களுக்கு மாணவர்கள் கூடுதல் எண்ணிக்கையில் வரவில்லையே என்று கவலைப்பட்டுப் பயனில்லை.

எனினும் இது குறித்து ஆராயப்பட வேண்டிய இன்னொரு கோணம் உள்ளது. கல்வியின் முதல் நோக்கமாகிய அறிவு வளர்ச்சி குறித்து நாம் கவலைப்படவே வேண்டாமா என்பதுதான் இரண்டாவது கோணம்.

வாழ்க்கைக்குத் தொழிலும், வேலை வாய்ப்பும், பணம், பதவிகளும் கண்டிப்பான தேவைகளே. எனினும் இவை வாழ்க்கை வட்டத்திற்குள் அடங்கக்கூடிய ஒரு பகுதியே அல்லாமல், இவை மட்டுமே வாழ்க்கை ஆகிவிட முடியாது. இன்னும் பல முகங்களையும், பகுதிகளையும் கொண்டது வாழ்க்கை. அவை குறித்தெல்லாம் இலக்கிய நூல்கள் எடுத்துச் சொல்கின்றன.

இலக்கியம் என்பது மன மகிழ்ச்சிக்காகவோ, தன் மொழித் திறனைக் காட்டுவதற்காகவோ புனையப்படும் சொற்கோலங்கள் இல்லை. அவை வாழ்வின் அனுபவப் பதிவுகள். நம் எதிர்காலத்திற்கான வழிகாட்டிகள்.

உலகில் மனிதர்கள் மட்டும் வாழவில்லை. செடி, கொடிகள், பறவைகள், விலங்கினங்கள் என எத்தனையோ கோடிக்கணக்கான உயிரினங்களும் வாழ்கின்றன. அவை அனைத்தும் கல்வி கற்காத காரணத்தால், அறிவற்றவை என்று நாம் அவசர முடிவுக்கு வந்துவிடக் கூடாது. அவைகளுள், நம்மைப் போன்ற அறிவுடையனவும், நம்மை விஞ்சிய அறிவுடையனவும் உள்ளன.

ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களைத் தாண்டி, வேடந்தாங்கல் வந்து சேரும் பறவைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியுமா? மிக நெடுந்தூரம் கடற்பரப்பின் மீதே அவை பறந்து வருகின்றன. ஓய்வெடுக்க இடையில் மரங்களோ, கட்டிடங்களோ இல்லை. இரவு பகலாய்ப் பறந்து வருகின்றன. அந்தத் துன்பத்தை முன்னுணர்ந்து, கடல்கடந்து பறப்பதற்குச் சில மாதங்கள் முன்பு தொடங்கி, கொழுப்புச் சத்துள்ள, புரதம் மிகுந்த உணவுகளை அவை உண்ணத் தொடங்கிவிடுமாம். பகலில் கதிர்  ஒளியாலும், இரவில் நிலவொளியாலும் அவை வழிநடத்தப்படுகின்றன. சில வேளைகளில், மின்காந்தக் கோடுகளால் திசை உணர்ந்தும் அவை பறக்கும் தகையன என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

மிகச்சிறிய உருவம் கொண்ட எறும்புக்கும், மிகப்பெரிய உருவம் கொண்ட யானைக்கும், நாம் வியக்கத்தக்க அளவிலான மோப்பசக்தி உண்டு.

இவைகளையெல்லாம் அறிவுக்குறைவானவை என்று ஒதுக்கிவிட முடியுமா? ஆனாலும், மனிதர்களுக்கும், விலங்குகள், பறவைகளுக்கும் இடையில் ஒரு பெரிய வேற்றுமை உள்ளது. அந்த வேற்றுமையே அவற்றிலிருந்து நம்மை வேறுபடுத்தி உயர்த்தி வைத்துள்ளது.

வரலாற்றிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் கற்றுக்கொள்ளல் என்பதே அந்த மாபெரும் வேறுபாடு!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குருவி எப்படிக் கூடு கட்டியதோ, அப்படித்தான் இன்றும் கட்டுகின்றது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு புலி எப்படி உணவுண்டதோ, எதனை உணவாக உண்டதோ அதனைத்தான், அப்படித்தான் இன்றும் உண்ணுகின்றது.

ஆனால் மானுட வாழ்க்கையில்தான் எவ்வளவு மாற்றங்கள்! உணவில், உடையில், போக்குவரத்தில், தொலைத் தொடர்பில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்! அனைத்தும் அறிவியல், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாகத்தானே வந்தன, இங்கே இலக்கியத்திற்கு ஏது இடம் என்று கேட்டு, மனித குல வளர்ச்சியை மிக எளிமைப்படுத்திவிட முடியாது. ஒரு தலைமுறையின் அறிவையும், அனுபவத்தையும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்றதில் இலக்கியத்திற்கும், மொழிக்கும் ஏராளமான பங்கு உண்டு.

ஓர் இனம் தன் புன்னகை, கண்ணீர் எல்லாவற்றையும் எழுதப்படாத கதைப்பாடல்கள், தாலாட்டு, ஒப்பாரி, கூத்து என்ற பல்வகைகளில் பதிவு செய்யும். செவி வழிச் செய்தியாக, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்தடுத்த தலைமுறைக்கு அந்த வாய்மொழி இலக்கியங்கள் பரவும். தன் முன்னோர்கள் வென்றதும், வீழ்ந்ததும் எங்கே என்பதையும், எப்படி என்பதையும் அவைதாம் உணர்த்தும்.

காலஓட்டத்தில், ஓவியங்கள் பிறந்தன. அவையே எழுத்துகளாக உருமாறின. பதிவு என்பது மேலும் எளிதாயிற்று. அந்தப் பதிவுகள் மூலம், மனித இனம் தொடர்ந்து கற்றுக்கொண்டே வந்தது. அதன் காரணமாக வளர்ச்சியை நோக்கிய மாற்றமும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.

எனவே எல்லாத் துறை அறிவும், ஓரளவிற்கேனும் நமக்குத் தேவை என்பது உறுதியாகின்றது. அதனைப் பெறுவதற்கு அகன்று செல்லும் படிப்பு நமக்குத் தேவையாகின்றது. மனித வாழ்வின் எல்லாப் பருவங்களிலும் படிப்பு தேவையாக உள்ளது. அது ஒரு தொடர் முயற்சி. பிறப்பில் தொடங்கி, இறப்பு வரை தொடரும் ஒரு தொடர் நிகழ்வு.



இளமையில் கல்என்பதற்கு முதுமையில் கற்க வேண்டாம் என்று பொருளாகாது. கல்வியை இளமையில் தொடங்கு என்பதே அதன் உண்மைப் பொருள். தொடர்ந்தும் படித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதைத்தான்,

ஓதுவது ஒழியேல்
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா

ஆகிய தொடர்கள் நமக்கு உணர்த்துகின்றன.

நேற்று உண்டோம் என்பதற்காக, இன்று உண்ணாமல் இருப்பதில்லை. சென்ற வாரம் முழுவதும் குளித்தோம் என்பதால், இந்தவாரம் முழுவதும் குளிக்க வேண்டாம் என்று பொருள் ஆகாது.

உண்ணல், உடுத்தல், உறங்கல் போன்று கற்றல் என்பதும் வாழ்வின் ஒரு பகுதி! பிரிக்க முடியாத ஒரு பகுதி!

(சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com

நன்றி: tamil.oneindia.in


3 comments:

  1. படிப்பு என்பதே சம்பாதிப்பதற்குத்தான் என்று ஆகிவிட்ட இன்றைய நிலை வருந்துதற்கு உரியதுதான் ஐயா

    ReplyDelete
  2. Sir,
    I am a big fan of you; I am inspiring by your thought provoking message which pickles my mind to act socially for the benefit of people. Thanking you Sir.—Er. Senthilkumar , Tambaram, Chennai.

    ReplyDelete
  3. மயக்கும் சொல்லாடலும்
    மந்திரமில்ல யதாரத்தங்களும்
    அரிவுப்பெட்டகமான சிந்தனைகளும்
    தினம் தினம் சுப.வீயை ‘’அண்ணா’’(என்று)ர்ந்து பார்க்க வைக்கின்றது
    உங்கள் உயரிய சிந்தனையின் அடுத்த வரவு??????? நன்றி…
    அருண்.க

    ReplyDelete