தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday, 20 July 2014

அறிந்தும் அறியாமலும்…(12)

முடிவற்ற முரண்


இலக்கியங்களில் எவற்றைப் படிக்க வேண்டும், ஏன் படிக்க வேண்டும், எப்படிப் படிக்க வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளை இதுவரை பகிர்ந்து கொண்டோம். இலக்கியம் என்பது வாழ்க்கையோடு தொடர்புடையது; வாழ்விலிருந்து பிறப்பது. எனவே இலக்கியம் பயில்வது என்பதன் பொருள், வாழ்வை அறிவது என்பதே ஆகும்!

வாழ்தல் எப்படி என்று அறிந்து கொள்வதற்கு முன், வாழ்க்கை என்றால் என்ன என்னும் ஒரு வினா நம்முன் விரிகிறது. வாழ்க்கை, உலகம், இயற்கை ஆகிய மூன்றினையும், அவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகளையும் விளங்கிக்கொள்ள, அறிஞர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக முயல்கின்றனர். இன்றுவரை இறுதியான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அது தொடர்பான, முடிவற்ற ஆய்வையும், படிப்பையும்தாம் தத்துவம்” (Philosophy) என்று கூறுகின்றோம்.

தத்துவம் என்று சொன்னவுடனேயே, அது நடைமுறை வாழ்க்கைக்குத் தொடர்பற்றது என்றும், அன்றாட வாழ்க்கைக்குப் பயனற்றது என்றும் பலர் கருதுகின்றனர். இப்போதும், தெளிவின்றிப் பேசுகின்றவர்களைப் பார்த்து, “பெரிய தத்துவம் மாதிரிப் பேசிக் கொண்டிருக்கிறான்என்று கூறுவதுண்டு. தத்துவம் நம்மைப் போன்ற எளிய மக்களுக்கெல்லாம் புரியாது என்பதே அதன் பொருள்.

தத்துவம் என்றால் மெய்யறிவு’. ஒன்றைப் பற்றிய உண்மைகளைத் தேடுவதே மெய்யறிவு. அது எப்படிப் புரியாததாகவும், பயனற்றதாகவும் ஆகும்? ஒவ்வொரு துறை அறிவின் எல்லையும் உண்மையறிதலே! அதனால்தான், அறிவியல், வரலாறு, வணிகம், மருத்துவம் என எந்தத் துறையில் பட்டம் பெற்றாலும், அத்துறையின் உயர்ந்த கல்விக்கான பட்டம், Doctor of Philosophy(Ph.D) என்றே உள்ளது. இலக்கியம், அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறை ஆய்வாளர்களும் தத்துவாசிரியர்கள்(Theoreticians) என்றே அழைக்கப்படுகின்றனர்.

எனவே, உலகில் உள்ள பல்வேறு தத்துவங்களையும் அறிந்து கொள்வது, அறிவாளிகளுக்கான இன்றைய அடிப்படைத் தேவையாக உள்ளது. அத்துறையில், பல்வேறு மொழிகளில், ஆயிரக்கணக்கான நூல்கள் குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் சிலவற்றையேனும் நாம் கற்றே ஆக வேண்டும். உலக அறங்கள், உலக மதங்கள், உலக வாழ்க்கை பற்றிய அனைத்து அறிவும், தத்துவ நூல்களுக்குள்ளேதான் பொதிந்து கிடக்கின்றன.

தத்துவத்தை மேலைத் தத்துவம், கீழைத் தத்துவம் என்று இரண்டாகப் பிரிப்பர். தத்துவங்கள் கூடவா, மேலை நாடுகளுக்கு உரியனவென்றும், கீழை நாடுகளுக்கு உரியனவென்றும் பிரிந்து நிற்கும் என்று கேட்டால், ஆம் என்பதே விடை. நம் வாழ்க்கையை மரபு, மனம் போன்ற அகக் காரணிகளும், தட்பவெப்பம், புவி அமைப்பு போன்ற புறக் காரணிகளும்தாம் தீர்மானிக்கின்றன. அகப் புறக் காரணிகள் இரண்டுமே, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளிலும், இந்தியா, சீனா, ஐப்பான் போன்ற கீழை நாடுகளிலும் வேறுவேறாகவே உள்ளன. ஆதலால் இரு பகுதிகளுக்குமான தத்துவங்களும், பல நுட்பமான செய்திகளில் வேறுபட்டு நிற்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

கால வரிசையில் நோக்கும் போது, கிரேக்க, ரோமானியத் தத்துவங்களும், இந்திய, சீனத் தத்துவங்களும் தொன்மையானவை. ஐரோப்பியத் தத்துவங்கள் நவீனத் தன்மை உடையவை.


ஐரோப்பியத் தத்துவாசிரியர்கள், “தங்களுக்கு முன்னால் இருந்தவர்களுடைய தத்துவத்தை விமர்சனம் செய்து, மறுத்து, முற்றிலும் மாறான தத்துவத்தை உருவாக்கினர்என்றும், “இந்தியாவில் பல்வேறு வேறுபட்ட மாற்றுத் தத்துவங்கள் தங்கள் தோற்றத்தைப் பழையதிலிருந்தே பெற்றன. பின்னால் வந்த தத்துவங்கள், கருத்தளவிலாவது, பழையனவற்றின் கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனஎன்றும் தன் நூலில் குறிப்பிடுகின்றார், இந்தியத் தத்துவ வரலாற்று ஆசிரியர்களில் புகழ்பெற்றவரான, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா.

இஃதே அடிப்படை உண்மை. மேலைப் பண்பாடு, புதுமையில் கிளை விரிக்கும். கீழைப் பண்பாடோ, மரபில் காலூன்றும். மரபு, புதுமை ஆகிய இரண்டினையும் அறிந்து கொள்வதே தத்துவப் படிப்பு.

உலகின் தொடக்கநிலைத் தத்துவாசிரியர்களில் புகழ் பெற்றவர்களாக, மகாவீரர்(கி.மு. 540 - 468), கன்பூசியஸ்(கி.மு. 551 - 479), கௌதமபுத்தர்(கி.மு.560 - 480), சாக்ரடீஸ் (கி.மு.470 - 399), எபி கூரஸ் (கி.மு. 341 - 270), சாணக்கியர் (கி.மு. 370 - 283) ஆகியோர் அறியப்படுகின்றனர். சாக்ரடீஸைத் தொடர்ந்து, பிளேட்டோவும், அரிஸ்டாடிலும் இடம் பெறுகின்றனர். ஆசிவகம் என்னும் சமயத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலரும் மகாவீரர், புத்தர் காலத்தைச் சேர்ந்தவரே என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சீனத்தின் தாவ் நெறித் தத்துவமும் (Taoism) மிகப் பழைமையானதே!

உலகிலேயே மிகத் தொன்மையான தத்துவங்கள், இந்து மதத்தின் வேதங்கள்தாம் என்று கூறுவோர் உண்டு. இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன், தன்னுடைய இந்தியத் தத்துவம்நூலில், வேதங்கள் குறித்து மிகப் பெருமையாகப் பேசுகின்றார். ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் காலத்தால் மிகவும் முற்பட்டவை என்பதை எந்த ஓர் ஆய்வாளரும் மறுக்கவில்லை. கி.மு. 1500 - 1000 என்னும் காலகட்டத்தைச் சேர்ந்தவையாக அவை இருக்கக் கூடும். அவை புனிதமானவை என இன்றும் இந்து மதத்தினர் கருதுகின்றனர்.

நான்கு வேதங்களும் சமற்கிருத மொழியல் இருந்தமையால், அவற்றுள் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பிறமொழியினர் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் வேதங்களைச் சூத்திரர்கள், பெண்கள் (பார்ப்பனப் பெண்கள் உள்பட), குழந்தைகள் படிக்கக் கூடாது என்று கடுமையான விதிகள் இருந்தமையால், அவற்றை முழுமையாகத் தெரிந்துகொள்ள வெகுமக்களால் இயலவில்லை.

இன்றைக்கும் இந்தியாவில், வெகுமக்களால் வேதங்கள் பாராட்டப்படுகின்றனவேயன்றிப் படிக்கப்படவில்லை. வேதம் என்றால் மிக உயர்ந்தது, புனிதமானது என்று இந்துக்களில் மிகப் பெரும்பான்மையினர் நம்புகின்றனர். ஆனால் அவர்களுக்கும் வேதங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பது தெரியாது.

18ஆம் நூற்றாண்டின் இறுதியில், நிலைமைகள் மாறின. வேதங்கள், ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மொழிகளிலும் அவை இன்று காணப்படுகின்றன. அவற்றைப் படித்த ஆய்வாளர்கள் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தத்தைத்தான் வெளிப்படுத்தி உள்ளனர். மனிதர்கள் தங்களின் அன்றாடத் தேவைகளைக் கடவுளின் முன் வைக்கும் இசைப்பாடல்களின் தொகுப்புகளேயன்றி, வேதங்களில் தத்துவங்கள் என எவையும் காணப்படவில்லைஎன்பதே அவர்களின் கருத்து.

வேத ஆய்வுகளில் புகழ்பெற்ற, வைதீகப் பற்றுடைய, வங்காள அறிஞர் எச்.வி.சாஸ்திரி,
வேதம் என்ற சொல்லே, ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும், பயபக்தி மிக்க ஓர் உணர்வைத் தோற்றுவிக்கும். வேதத்தைப் படிப்பவன் அதிசயப் பிறவியாகக் கருதப்படுவான். வேதத்தைப் புரிந்து கொள்ளும் சக்தி படைத்தவன் சிவன் அல்லது விஷ்ணுவின் மறு அவதாரமாகவே கருதப்படுவான்என்று கூறுகின்றார். அதே நேரத்தில், வேதங்கள் என்பவை, “ சில செய்யுள்கள், இசைப் பாடல்கள் ஆகியவை அடங்கிய ஒரு பாடல் திரட்டுதானே அன்றி, அது ஒரு தத்துவ நூல் இல்லைஎன்கிறார்.

எனினும், வேத காலத்திற்குப் பிறகு தோன்றிய உபநிடதங்கள் சிலவற்றில், சில தத்துவக் கருத்துகள் காணப்படுகின்றன. வேதங்களின் இறுதிக் காலத்தில் தோன்றியவை என்பதால், உபநிடதங்களுக்கு வேதாந்தங்கள் (அந்தம் - இறுதி) என்ற பெயரும் உண்டு. உபநிடதங்களில் பல, புத்தர் காலத்திற்கு முந்தியவை. மைத்ரீயம், மண்டூக்யம் போன்ற உபநிடதங்கள் புத்தருக்குப் பிந்தியவை.

108 உபநிடதங்கள் என்று கூறப்பட்டாலும், பத்துக்கும் சற்றுக் கூடுதலான உபநிடதங்களே இன்று உள்ளன. அவற்றுள் பிர்ஹதரண்யம், சாண்டோக்கியம், தைத்ரீயம், ஐதரோயம், கௌசீதகி ஆகியன புகழ்ந்து பேசப்படுகின்றன.

அனைத்து உபநிடதங்களும் ஆத்மாவையும் பிரம்மத்தையும் பற்றித்தான் பேசுகின்றன. எனினும் அவற்றை அவை விளக்கவில்லை. விளக்கவே முடியாததுதான் பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள். வானம், பூமி, வெளி என ஒவ்வொன்றோடும் ஒப்பிட்டு, அவை பிரம்மமா எனக் கேட்டு, இல்லை, இல்லை (நேதி, நேதி) என்று கூறுகின்றன. அதனால், உபநிடதங்கள்  நேதித் தத்துவத்தைமுன்வைக்கின்றன என்னும் கருத்து எழுந்தது.

உபநிடதங்களில் லோகாயுதம், சாங்கியம் போன்ற தத்துவங்களுக்கு மறுப்புகள் கூறப்பட்டுள்ளன. எனவே பொருள்முதல் வாதத்தை எடுத்துக் கூறும் லோகாயுதா போன்ற தத்துவங்கள், உபநிடதங்களுக்கு முந்தியவை என்பது புரிகிறது.

எல்லாத் தத்துவங்களுக்கும் அடிப்படையான கேள்வி, இருத்தலுக்கும், சிந்தனைக்கும் இடையேயான உறவு பற்றியதுதான்என்று சுருக்கமாகச் சொல்வார் எங்கெல்ஸ்.

அதாவது, கருத்து முதல்வாதத்திற்கும், பொருள் முதல் வாதத்திற்கும் இடையேயான முடிவற்ற முரணிலிருந்தே தத்துவங்கள் தோன்றுகின்றன என்று கூறலாம்.

அது சரி, கருத்து முதல் வாதம் (சிந்தனை), பொருள் முதல் வாதம்(இருத்தல்) என்றால் என்ன, ஏன் அவற்றுக்கிடையே மோதல் நிகழ்கிறது என்னும் வினாக்கள் நம்மில் பலருக்கு எழலாம்.

அவ்வினாக்களுக்கான விடையே, தத்துவத் துறையின் முதல் பாடம். அப்பாடத்தை இனி நாம் படிக்கலாம்.

 (சனிக்கிழமைதோறும் சந்திப்போம் ) 

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com


நன்றி: tamil.oneindia.in

2 comments:

  1. அன்புள்ள சு.ப.வீரபாண்டியன் அவர்களுக்கு வணக்கம்
    தங்களுடைய தத்துவம் பற்றிய இந்தக் கட்டுரையை நான் படித்தேன். இலக்கியங்கள் படிப்பது என்பது வாழ்வியலுக்கான தத்துவங்களை படிப்பது என்ற தங்களுடைய கருத்து மிகவும் அருமை. அது உண்மையும் கூட, வேதங்கள் என்பவை அனைவராலும் பாரட்டப்படுகின்ற அளவுக்கு தெரிந்து வைத்துக் கொள்ளப் படவில்லை என்பதும் மிகச் சரியானது. வேதங்களில் இருப்பவை மனிதர்கள் தங்களின் தேவைகளை கடவுளின் முன் சொல்லுகிற செய்யுள்கள் என்று சொன்னது புதுமை. கருத்து முதலா? பொருள் முதலா? என்ற கட்டுரைக்காக நான் அடுத்த காரிக்கிழமையை நோக்கி எதிா்ப்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    நன்றி

    ReplyDelete
  2. சம்ஸ்கிருதத்தை கடவுளின் மொழியாக காண்பது முட்டாள்தனமானது.தமிழ் தெரியாத தமிழ் புரியாத கடவுள் இருக்கிறராரா என்ன.? திருக்குறளையும் திருவாசகத்தையும் மிஞ்சிய வேதங்கள் எதுவும் இல்லை.பார்ப்பானை வைத்து திருமணம் செய்பவன் முட்டாள்.

    ReplyDelete