தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 13 September 2014

அறிந்தும் அறியாமலும்…(19)

மை கொண்டு எழுத இயலாது


எல்லா மதங்களும் இரண்டு தளங்களில் இயங்குகின்றன. ஒன்று, கோட்பாடு (concept), இன்னொன்று நிறுவனம் (Institution). கோட்பாடுகளில் வேறுபட்ட தன்மைகளும், ஏற்கவியலாத போக்குகளும் காணப்பட்டாலும், பொதுவாக எல்லா மதங்களும் அறநெறிகளையே (Ethics) போதிக்கின்றன. அன்பு, அருள், ஒப்புரவு, ஒழுக்கம் ஆகியன அனைத்து மதங்களும் அறிவுரைக்கும் பொதுக்கோட்பாடுகள் என்று கொள்ளலாம். ஆனால், அன்பைப் பறைசாற்றும் மதங்கள், ஏன் ஆயுதங்கள் ஏந்திப் போராடுகின்றன? அங்குதான் நிறுவனங்களின் பெரும்பங்கு உள்ளது.

மதங்கள் நிறுவனமயமாகும்போது, அதற்கேயுரிய வலிமையும், பலவீனமும் வந்து சேருகின்றன. நிறுவனங்கள் இன்றிக் கோட்பாடுகளைக் காப்பாற்ற முடியாது. ஆனால் நிறுவனங்களே கோட்பாடுகளைக் கொன்று, நீர்த்துப் போகவும் செய்கின்றன. இந்நிலையை, மதங்களோடு மட்டுமின்றி, இன்றையக் கட்சிகளோடும் நாம் பொருத்திப் பார்க்கலாம். குறிப்பிட்ட சில கொள்கைகளுக்காகக் கட்சி தொடங்கி, பிற்காலத்தில் கட்சியைக் காப்பாற்றுவதற்காகக் கொள்கைகளில் சமரசம் செய்து கொண்டும், கொள்கைகளையே கைவிட்டும் பணிகளைத் தொடரும் நிலை ஏற்படுகின்றது. அன்றைய மதங்களின் நிலையும் அவ்வாறே இருந்தது.
கோட்பாடுகள் எப்படியோ போய் ஒழியட்டும், மத நிறுவனத்தை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் காலப்போக்கில் மேலோங்கி விடுகிறது. எண்ணிக்கையாலும் தங்கள் மதமே பெரிய மதம் என்று சொல்லிக் கொள்ளும் பேராவல், ஒவ்வொரு மதத்தினரையும் உந்தித் தள்ளுகின்றது. அதன் விளைவாக, ஒரு பிரிவினரின் மதமாற்ற முயற்சிகள் தொடங்குகின்றன. தங்கள் கடவுளை விட்டுவிட்டு, இன்னொரு கடவுளிடம் எவரும் போய்விடக் கூடாது என்று மறு பிரிவினர் கருதுகின்றனர். இறுதியில் கடவுளைக் காப்பாற்ற மனிதர்கள் சண்டையிட்டு மடிகின்றனர்.
மதங்கள் தொடங்கிய நாளிலிருந்து, இன்று வரை, மதங்களுக்கிடையிலான போர்களும், ஒரே மதத்திற்குள்ளான குழுச் சண்டைகளும் ஓயாமல் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அண்மையில், இரண்டு சீக்கியக் குழுக்கள், வாள்களை உருவிக்கொண்டு, ஒருவரையொருவர் வெட்டிக் கொண்ட காட்சிகளை, அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் நாம் கண்டோம்.
ஒவ்வொரு மதச் சண்டையிலும், ஏதேனும் ஒரு மதம் அல்லது ஒரு குழு வெற்றி பெறுகிறது. ஆனால் எல்லாச் சண்டைகளிலும் அன்பும், அறமும் தோற்றுப்போகின்றன.
இவ்வாறு, உலகச் சமூகப் பண்பாட்டு வரலாற்றில், மதம் ஒரு பேரிடத்தைக் கைப்பற்றிக் கொண்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை நெறியை ஆக்கவந்த மதங்கள், அவர்களின் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டுள்ளன.
ஆனாலும், உலகப் போர்கள், பேரழிவுகள் எல்லாவற்றிற்கும் மதங்கள் மட்டுமே காரணம் என்னும் தவறான முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது. உலகை ஒரு குடையின் கீழ்க் கட்டியாளும் அதிகார வெறி, பொருளாதாரப் பேராசைகள் ஆகியனவும் உலகின் போக்கில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றன.
அலெக்சாண்டர் தொடங்கி, நெப்போலியன், இட்லர் வரையில் ‘ஒற்றை உலக’க் கனவு நீண்டுகொண்டேதான் இருந்தது. உலகெங்கும் ஒரே கொடி, ஒரேயொரு பேரரசர் என்னும் நிறைவேறவே முடியாத ஆசைக் கனவுகளைத் தூக்கிச் சுமந்து அல்லலுற்றவர் பலர். அந்தக் கனவு இன்று வரை மெய்ப்படவில்லை. இனிமேலும் அதற்கு வாய்ப்பில்லை.
ஆனாலும், அடுத்தவன் நாட்டைச் சுரண்டி, அடுத்தடுத்த நாடுகளை அடிமைப்படுத்தி, பொருளாதாரத்திலும், இராணுவத்திலும் வலிமைபெற்று, வல்லரசாக விளங்க வேண்டும் என்னும் வேட்கை, இன்றும் பரவலாகக் காணப்படுகின்றது. ஆளும் வர்க்கத்தின் அந்தப் பேராசை, அன்றாட வாழ்வுக்கே அவதிப்படும் அடித்தட்டு மக்களின் சிந்தனையிலும் திணிக்கப்பட்டுள்ளது. எனவேதான், அன்றாடங் காய்ச்சிகள் கூட, இந்தியா 2020இல் வல்லரசாகிவிடும் என்று  கனவு காண்கின்றனர்.
கிரேக்க, ரோமானியப் பேரரசுகளின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள், வேறு எந்தப் பேரரசும் தோன்றவில்லை. பிறகு பிரான்சும், ஜெர்மனியும் அந்த முயற்சிகளில் ஈடுபட்டாலும் இறுதி வெற்றியை எட்ட முடியவில்லை. இங்கிலாந்துதான் அந்த இடத்தை எட்டிப் பிடித்தது. ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளை இணைத்துக் கொண்டு, உலகின் பல நாடுகளைத் தன் காலனி நாடுகளாக ஆக்கிக் கொண்டு, தன் பெயரையும் ‘பிரித்தானியப் பேரரசு’ என்று மாற்றிக் கொண்டது. “எங்கள் சாம்ராஜ்யத்தில் கதிரவன் உதிப்பதுமில்லை, மறைவதும் இல்லை” என்று மார்தட்டியது.
உண்மைதான், உலகின் மாபெரும் வல்லரசாக, ஒரு பெரும் பேரரசாக, ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகள் உலகைக் கட்டியாண்டது பிரிட்டன்.



இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதி, இரு பெரும் உலகப் போர்களைக் கண்டது. இரண்டு போர்களிலும், ஜெர்மனியே வெல்லும் என்பது போன்ற நம்பிக்கை ஏற்பட்டாலும், இறுதி வெற்றி பிரிட்டன் அணிக்கே வந்து சேர்ந்தது. பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய நான்கு பெரும் நாடுகள் ஓர் அணியில் நின்றே, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றன என்றாலும், பிரிட்டன்தான் மைய இணைப்புப் புள்ளியாக இருந்தது.
இராணுவ வெற்றியோடு மட்டும் நிறைவடைய முடியாமல், பொருளாதார வெற்றியையும் பெற வேண்டும் என்று உலகநாடுகள் விரும்பின. இராணுவ வலிமைக்கும், பொருளாதாரம்தானே அடிப்படை!. அந்தப் பொருளாதார வலிமையோ, மத்தியக் கிழக்கு நாடுகளின் எண்ணெய்க் கிணறுகளில் பதுங்கிக் கிடந்தது.
கி.பி.1600களில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்குப் பிறகு, தொழில் வளர்ச்சிக்குப் பெட்ரோலிய எண்ணையின் தேவை, பெரும் அடித்தளமாகியது. எரிபொருள் இல்லாமல், தொழில் வளர்ச்சியில் எந்த ஓர் அடியையும் எடுத்து வைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உற்பத்தி முறைகள் மாறின. அவை அனைத்தும், எரிபொருளின் தேவையை மிகுதியாகக் கொண்டிருந்தன.
உலகை வெற்றிகொள்ள இராணுவம் மட்டும் போதுமானதன்று, வணிகமும் தேவை என்ற உண்மையை வல்லரசுகள் உணர்ந்தன. போரைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, வணிகத்தில் இறங்கின. பிறகு, வணிகத்திற்காகவே போரிலும் இறங்கின.
இருபதாம் நூற்றாண்டின் மையத்தில் எண்ணெய்க்கான போர் தொடங்கிற்று. தண்ணீரைவிடக் குருதி(இரத்தம்) கனமானது என்பார்கள். குருதியை விட, எண்ணெய்தான் கனமானது என்ற முடிவுக்கு உலக நாடுகள் வந்துவிட்டன.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதி உலக வரலாற்றை, மை கொண்டு எழுத இயலாது. எண்ணெய் கொண்டுதான் எழுத முடியும். அந்த வரலாற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டால்தான், இன்றைய உலக அரசியலை எளிதில் நம்மால் உணர முடியும்.
இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற தருணத்தில், பிரிட்டனின் வெற்றிக்குள்ளேயே, அதன் அடுத்த தோல்விக்கான காரணங்களும் ஒளிந்திருந்தன. உலகில் எந்த ஒன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட விலை உள்ளது என்பார்கள். இரண்டாம் உலகப் போர் வெற்றிக்குப் பிரிட்டன் கொடுத்த விலை அதிகம். இராணுவ வெற்றியும், பொருளாதாரத் தோல்வியுமாக அந்தப் போர் பிரிட்டனுக்கு முடிந்தது.
தன் தேசத்தின் பொருளாதாரத்திலேயே தடுமாறிக் கொண்டிருந்த பிரிட்டன், தன் காலனி நாடுகளை எல்லாம் இனிமேல் கட்டிக் காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்தது. தன் பிடியில் இருந்த ஆசிய, ஆப்பிரிக்கக் காலனி நாடுகளை ஒவ்வொன்றாகக் கழற்றிவிட வேண்டிய கட்டாயத்திற்கு அது உள்ளானது. அந்த வகையில்தான், இந்தியா உள்ளிட்ட, பல காலனி நாடுகளின் விடுதலை சாத்தியமானது.
இந்திய விடுதலைப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவது நம் நோக்கமன்று. ஆனால், பிரிட்டனின் பொருளாதாரத் தடுமாற்றம், நம் விடுதலைக்கான பெரும் காரணி என்பதை மறைத்துவிட்டு, வரலாற்றை எழுத முடியாது.
ஈழத்தைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் மு.திருநாவுக்கரசு, தன் நூலொன்றில், “சந்தை ஆதிக்கத்தை விளங்கிக் கொள்ளாமல், அதன் நிதி ஆதிக்கச் சந்தையை விளங்காமல் பூகோள ஆதிபத்தியத்தை விளங்கிக் கொள்ள முடியாது. அத்தகைய பூகோள வர்த்தக ஆதிபத்திய பிரகிருதிகளாய், பூச்சிப் புழுக்களாய், நடமாடும் முண்டங்களாய், ஒடுக்கப்படும் மக்களும், தேசங்களும் ஆக்கப்பட்டுள்ள யுகம் இது” என்கிறார். இதனைப் புரிந்துகொள்ளும் போதுதான், உலக வல்லரசுகளின் ஆதிக்கத்தையும், அவை சிந்தும் முதலைக் கண்ணீரையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும். உலகை அழிக்கின்ற குண்டுகளையும், அணைக்கின்ற கைகளையும் ஒரே நேரத்தில், ஒரு சேர அவர்களால் எப்படிப் பயன்படுத்த முடிகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.
இவற்றையெல்லாம் மேலும் விரிவாகத் தெரிந்து கொள்வதற்கு, நாம் 1956ஆம் ஆண்டிற்குச் செல்ல வேண்டும். அந்த ஆண்டில்தான், சூயஸ் கால்வாயை அடிப்படையாகக் கொண்டு எழுந்த போரில், எண்ணெய்க் கிணறுகளையொட்டி, உலக ஒழுங்கு முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டது.
(காரிக்கிழமைதோறும் சந்திப்போம் )

தொடர்புகளுக்கு:subavee11@gmail.com

நன்றி: tamil.oneindia.in


1 comment:

  1. ஒவ்வொரு மதச் சண்டையிலும், ஏதேனும் ஒரு மதம் அல்லது ஒரு குழு வெற்றி பெறுகிறது. ஆனால் எல்லாச் சண்டைகளிலும் அன்பும், அறமும் தோற்றுப்போகின்றன. அருமை.

    ReplyDelete