தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Saturday 22 November 2014

அறிந்தும் அறியாமலும்…(29)

மானோடும் ஓட்டம்.... புலியோடும் வேட்டை!

ஜோதி ராவ் புலே

1912இல் நடேசனார் தொடங்கிய அந்த இயக்கத்தின் பெயர்தான் 1913இல், அதன் முதல் ஆண்டு விழாவின் போது 'திராவிடர் சங்கம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டும் என்பதே அதன் நோக்கம். அதனால் முதலில், பார்ப்பனர் அல்லாதோர் சங்கம் என்றே பெயரிடக் கருதினர். ஆனால் அது எதிர்மறையான பெயராக உள்ளதால், திராவிடர் சங்கம் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். இங்கே நாம் கூர்மையாகக் கவனிக்க வேண்டிய ஒன்று உள்ளது. திராவிடர் என்பது ஆரியர் அல்லது பார்ப்பனர் என்னும் சொற்களுக்கு எதிர்ச் சொல்லாகத்தான் கருதப்பட்டுள்ளது. கேரள, ஆந்திர, கர்நாடகப் பகுதிகளைச் சார்ந்தோர் என்னும் பொருளில் அன்று.


இதன் தொடர்ச்சியாகவே 1916ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 'தென் இந்திய நல உரிமைச் சங்க'த்தைப் பார்க்க வேண்டும். அச்சங்கம்தான், பொதுவுடமைக் கட்சி அறிக்கை என்பதைப் போல, 'பார்ப்பனர் அல்லாதோர் கொள்கை அறிக்கை' என ஒன்றை வெளியிட்டது. 1916 டிசம்பர் 20ஆம் நாள் வெளியிடப்பட்ட அந்த அறிக்கையின் சாரம், 'சமநீதி, சம வாய்ப்பு, சம மதிப்பு' என்னும் மூன்று கொள்கைகளை வலியுறுத்துவதாக இருந்தது. சமத்துவத்தையும், நீதியையும் கோரிய கட்சியின் கொடி, சிவப்பு வண்ணத்தில் தராசு சின்னத்தைக் கொண்டதாக இருந்தது.

1917 பிப்ரவரியில் ஜஸ்டிஸ் என்னும் ஆங்கில ஏடும், அதே ஆண்டின் மத்தியில், திராவிடன் என்னும் தமிழ் நாள் ஏடும், ஆந்திரப் பிரகாசிகா என்னும் தெலுங்கு ஏடும் அக்கட்சியால் தொடங்கப்பட்டன. ஆங்கில ஏட்டின் பெயரிலேயே, சுருக்கமாக, ஜஸ்டிஸ் பார்ட்டி என்றும், நீதிக் கட்சி என்றும் அக்கட்சி சுருக்கமாக அறியப்பட்டது.

நீதிக் கட்சி, ஆங்கிலேயரை ஆதரித்த கட்சி என ஒரு குற்றச்சாற்று எழுப்பபடுவதுண்டு. பார்ப்பனர்களை எதிர்த்த மராத்தியத்தின் ஜோதி ராவ் புலே, பெரியார், அம்பேத்கர் என அனைவர் மீதும் இந்த விமர்சனம் உண்டு. என்ன வேடிக்கை என்றால், காங்கிரஸ் உள்பட எந்தக் கட்சியுக் அந்தக் காலகட்டத்தில் ஆங்கிலேய ஆட்சியை எதிர்க்கவில்லை. 'வெள்ளையனே வெளியேறு' என்பதெல்லாம் பிற்காலத்தில் எழுந்த முழக்கம். 1885 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, தன் முதல் மாநாட்டில் நிறைவேற்றிய மூன்றாவது தீர்மானம், 'பிரித்தானிய மகாராணி நீண்டநாள் வாழ வேண்டும் என்பதும், இந்தியாவை என்றும் ஆளவேண்டும் என்பதும்தான். அது மட்டுமின்றி, ஆங்கிலேயர்களை அணுகித் தங்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெறுவதில், பார்ப்பனர்களே முன்னணியில் இருந்தனர்.

அந்த நோக்கத்திற்காக மைலாப்பூரில் ஒரு குழுவே இயங்கியது. அவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அல்லது அக்கட்சியின் தீவிர ஆதரவாளர்கள். இது குறித்து, 'தென் இந்திய அரசியல்-1920-1937' என்னும் தன் நூலில், வரலாற்று ஆசிரியர் கிறிஸ்தபர் ஜான் பேக்கர் விரிவாகக் கூறியுள்ளார். அக்குழுவை 'மைலாப்பூர் குழு' என்றே அவர் குறிக்கின்றார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கி, இந்தியா விடுதலை பெறும்வரை அவர்கள் ஆங்கிலேயப் பிரபுக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். வி. பாஷ்யம் அய்யங்கார், எஸ். சுப்பிரமணியம் அய்யர், ஆர். ரகுநாத ராவ், வி. கிருஷ்ணசாமி அய்யர், பி.எஸ். சிவசாமி அய்யர், சி.பி. ராமசாமி அய்யர் என்று அந்தப் பட்டியல் நீள்கிறது.

ஜான் பேக்கர், தன் நூலில், "ஆங்கில அதிகார வர்க்கத்திற்கும், அதன் தயவையும், ஆதரவையும் நாடுகின்ற பிராமணர்களுக்கும் இடையே நடுவராக அல்லது தரகராகச் செயல்பட்டவர்களே இவர்கள்" என்று கூறி, அதற்கான சான்றுகளையும் அடுக்குகின்றார். அவர்களின் மூலமாகவே, ஆங்கிலேய அரசின் அதிகாரிகளாகவும், கல்விமான்களாகவும், நீதிபதிகளாகவும் பார்ப்பனர்கள் அமர முடிந்தது என்கிறார். அவர் சொல்வது உண்மைதான். 1910ஆம் ஆண்டிலிருந்து, ஆளுநர், தன் நிர்வாக அவையில் ஓர் இந்தியரை நியமனம் செய்வது என்னும் முறை ஏற்பட்ட போது, மைலாப்பூர் குழுவினரே அப்பதவியைத் தொடர்ந்து வகித்தனர். முதலில் வி. கிருஷ்ணசாமி அய்யர், பிறகு பி.எஸ். சிவசாமி அய்யர், பி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி இல்லை) என்று அவ்வரிசை தொடர்ந்தது.

ஆனால் இவர்களில் யாரையும் 'ஆங்கிலேயருக்கு வால் பிடித்தவர்கள்' என்று எவரும் விமர்சனம் செய்யவில்லை. தனக்காக எதனையும் செய்து கொள்ளாமல், தாழ்த்தப்பட்ட மக்களையும், பெண்களையும் ஆங்கிலேயர் திறந்து வைத்த கல்விக் கூடங்களுக்குள் அழைத்துச் சென்ற ஜோதி ராவ் புலேயை ஆங்கிலேய விசுவாசி என்றனர். சமூக நீதிக்குக் குரல் கொடுத்த நீதிக் கட்சியை, ஆங்கிலேயருக்கு வால் பிடிக்கும் கட்சி என்றனர்.

ஆங்கிலேயர்களை எதிர்த்த காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலும், ஆங்கிலேயர்களிடம் சலுகைகளைப் பெற்றுத் தந்த மைலாப்பூர் குழவின் தலைமைப் பொறுப்பிலும் என இரண்டிலுமே அவர்கள்தான் இருந்தனர். ஆம், அவர்கள் மான்களோடு சேர்ந்து ஓடவும் செய்தனர், புலிகளோடு சேர்ந்து வேட்டையும் ஆடினர். இரண்டையும் நம்பிய பாமரர்களாகவே மக்கள் இருந்தனர்.

அதனால்தான் சம வாய்ப்புகளைப் பெற்றுத்தர ஒரு நீதிக்கட்சி தோன்ற வேண்டியதாயிற்று. இட ஒதுக்கிடு என்னும் கோரிக்கையை அது முன் வைத்தது. இட ஒதுக்கிடு என்பது மூன்று தளங்களில் தேவைப்பட்டது. கல்வி, வேலை, அரசியல் என மூன்று நிலைகளிலும் இட ஒதுக்கிடு கோரப்பட்டது.

முதன்முதலாக, 1909 அக்டோபர் 1ஆம் தேதி, இஸ்லாமிய மக்களுக்கு அரசியலில் இட ஒதுக்கீட்டை அரசு வழங்கியது. அரசு வழங்கிய முதல் இட ஒதுக்கீடு அதுதான். அதன்பின், மைசூர் அரசும், நீதிக்கட்சி ஆட்சியில் தமிழக அரசும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை 1920களில் வழங்கின. 1940க்குப் பிறகே, கல்வியில் இட ஒதுக்கிடு வந்தது. அண்ணல் அம்பேத்கர் முயற்சியால், 11.08.1943 முதல், இந்தியா முழுவதும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கிடு கிடைத்தது.

இந்திய அளவில் அம்பேத்கராலும், தமிழக அளவில் திராவிட இயக்கத்தாலும் இட ஒதுக்கீடு என்னும் உரிமையைப் பெற முடிந்தது. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குப் பிறகு நம் பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர்.

சோழ சாம்ராஜ்யத்திலும், நாயக்கர் காலத்திலும் மூடப்பட்ட கல்விக் கூடத்தின் கதவுகள் மெதுவாகத் திறந்தன. எனினும், நிர்வாகம் முழுவதிலும் பார்ப்பனர்களே ஆட்சி செலுத்தினர். நாயக்கர்கள் காலம் தொட்டு நிர்வாகத்தில் அவர்கள் பெரும் பங்கு வகித்தனர். விஜய நகர சாம்ராஜ்யம் என்பதும் அவர்களின் சாம்ராஜ்யமாகவே இருந்தது. முதலாம் ஹரிஹரர் காலத்தில் (கி.பி. 1336-1357) கர்ணம் பதவி கூட நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டது. அப்பதவியிலும் அவர்களே நியமிக்கப்பட வேண்டும் என்று ஆணை வெளியாகியது. நாயக்கர்கள் காலத்தில், அவ்வரசின் தளவாய்களாகவும், பிரதானிகளாகவும், ராயசங்களாகவும் அவர்களே இருந்தனர்.

கால காலமாக அடிமைப்பட்டே கிடந்ததால், நீதிக்கட்சி ஆட்சியில் 1920களில் சம வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினாலும், சம மதிப்பு வந்து சேரவில்லை. தன்மான உணர்வு இல்லையென்றால், பெற்ற கல்வியால் பெறப்போகும் பயன் என்னவாக இருக்கும்? தமிழன் தன்மானம் பெற வேண்டும் என்ற என்னத்தை ஊட்ட வேண்டியிருந்தது. வெற்றிடத்தைக் காற்று நிரப்பும் என்பதுதானே இயற்கை. 1926ஆம் ஆண்டு, 'சுயமரியாதை' இயக்கம் தோன்றியது!

 (காரிக்கிழமைதோறும் சந்திப்போம் )

தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com , www.subavee.com)

நன்றி: tamil.oneindia.in


6 comments:

  1. மிக அருமையான பதிப்பு அய்யா.

    ReplyDelete
  2. இனியரசன்22 November 2014 at 11:43

    அருமையான தகவல்கள் அய்யா!

    இருநுறு ஆண்டுகள் அடிமைபடுத்திய ஆங்கிலேயனை விட, இரண்டாயிரம் ஆண்டுகள் அடிமைபடுத்திய ,இன்றும் அடிமையாய் வைத்திருக்க நினைக்கும் ஆதிக்கப் பார்பனர்களை எதிர்த்து போராடியவர்களே நமக்கு தேச பிதா,விடுதலைப் போராளிகள் என உரக்க சொல்ல வேண்டும்......

    ReplyDelete
  3. ல.எழில்மாறன்24 November 2014 at 11:46

    இந்திய அளவில் அம்பேத்கராலும், தமிழக அளவில் திராவிட இயக்கத்தாலும் இட ஒதுக்கீடு என்னும் உரிமையைப் பெற முடிந்தது. ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குப் பிறகு நம் பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு ஐயா .
    அம்பேத்கரை , அரசியல் நிர்ணய சபையில் " வரவிடாமல் செய்த சூழ்ச்சியையும் , பிறகு எப்படி நுழைந்தார் என்பதையும் நேரம் இருந்தால் விளக்குங்கள் அய்யா .

    அப்போது இருந்த தலைவர்களின் உண்மையான உருவத்தை , என்னை போன்ற மாணவர்களுக்கு தெரிந்துகொள்ள உதவும்.

    அல்லது ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யுங்கள் .

    ReplyDelete
  5. மிக முக்கியமான பதிவு. திராவிட இயக்கம் என்ற ஆலமரம் வீழ்ந்து விடாமல் இருக்க இதுபோன்ற தங்களது அரும்பணி தொடர வேண்டும் என்பதே என் போன்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்களது விருப்பம். நன்றி அய்யா.

    ReplyDelete
  6. இப்படி ஒருவர் இருந்தார் என்பது நான்உட்பட நிறைய பேருக்கு தெரியாது பாடப்புத்தகத்தில் கூட இல்லை
    தங்களின் வலைபூ தகவலுக்கு நன்றி.

    நன்றி சுபவீ ஐயா

    ReplyDelete