உலகெலாம் வாழ நாமும் வாழ்வோம்!
தந்தை பெரியாரின் இந்துமத
எதிர்ப்பு கடவுள் மறுப்பாகவும் மாறியது. அதனை மட்டுமே பெரிதுபடுத்தி,அவரை வெகு
மக்களின் எதிரியாகக் காட்டும் முயற்சி தொடங்கியது. அது இன்று வரையில் கூடத்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அவர் இறந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
ஆனால் அவர் குறித்த பாராட்டுகளும், விமர்சனங்களும் ஓயவே இல்லை. அவர் இன்னமும்
வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அதுவே பெரும் சான்றாக உள்ளது.
சாதியை எதிர்க்கப் புறப்பட்ட
அவர், சாதியின் வேர் இந்து மதத்திற்குள் இருப்பதை உணர்ந்தார். மூட நம்பிக்கைகளின்
வேர் எல்லா மதங்களுக்குள்ளும் இருப்பதை
உணர்ந்தார். எனவே மதங்களை எதிர்த்தார். அனைத்து மதங்களின் வேர்களும் கடவுளுக்குள்
இருப்பதை எண்ணித் தெளிந்தபோது, கடவுளை எதிர்க்காமல், கடவுளை மறுக்காமல் தன் சமூகப்
பணி நிறைவடையாது என்னும் முடிவுக்கு வந்தார். அதனால் தன் காலம் முழுவதும் கடவுள்
மறுப்புக் கொள்கையைப் பரப்பி வந்தார். கடவுளின் பெயரால் மக்கள் மனங்களில்
விதிக்கப்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவே 1950களில் பிள்ளையார் சிலையை உடைத்தார்.
கடவுள் மறுப்போடு மட்டும்
பெரியார் நின்றுவிடவில்லை. இந்தி எதிர்ப்புப் போரில் களம் கண்டு சிறை சென்றார்.
தமிழ்நாட்டில் மார்வாரிகளின் பொருளாதார ஆதிக்கத்தை எதிர்த்துப் போராட்டம்
நடத்தினார். சாதி காப்பாற்றும் சட்டமாக உள்ளது என்று கூறி, இந்திய அரசியல்
சட்டத்தை எரித்துச் சிறை சென்றார்.
எல்லாவற்றிற்கும் மேலாக,
வாழ்நாள் முழுவதும் பெண் விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்டார். பெரியாருக்கு
முன்பே பெண் விடுதலைக் குரல்கள் இங்கு ஒலித்தன என்பது உண்மை. மாயூரம் வேதநாயகம்,
பாரதியார் போன்றவர்கள் பெரியாருக்கு முன்பும்,திரு.வி.க. போன்றவர்கள் பெரியாரின்
காலத்திலும், பாரதிதாசன் தொடங்கி மிகப் பலர் பெரியாருக்குப் பின்பும், பெண்
விடுதலைக்காக எழுதியும் பேசியும் வந்துள்ளனர். ஆனால் அந்த நோக்கத்திற்காகத் தமிழ்நாடு எங்கும் ஓர் இயக்கம் நடத்தியவர்
பெரியார் மட்டுமே!
அவருடைய போராட்டங்கள்
இவ்வாறு வெவ்வேறு தளங்களில்
நடைபெற்றிருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் ஒரே நோக்குடையவை. அடிமைத்தனத்திற்கு
எதிரானவையாகவும், சமத்துவத்தை நோக்கியவையாகவும் அவை இருந்தன. அடிமைத்தனம் மிகுந்த
ஒரு சமூகத்தில் எத்தனை அறிவாளிகள் தோன்றினாலும், எத்தனை செல்வர்கள் தோன்றினாலும்
பெரும் பயன் ஏற்பட்டு விடாது என்பதே அப் போராட்டங்களின் நோக்கம்.
சமத்துவம், ஜனநாயகம், சகோதரத்துவம் ஆகியவைதாம் என்றும் நம் இலக்காக இருக்க
வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி
நகர்வதற்கு வெறும் கல்வி அறிவும், பொது அறிவும் மட்டும் போதுமானவைகள் அல்ல. அவை
அந்த முயற்சிக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சமூக அக்கறை
ஒன்றுதான் நம்மை அந்த இடம் நோக்கி உந்தித் தள்ளும். ஆதலால் அறிவு, சமூகப் பார்வை
இரண்டும் உடையவர்களாக நம் இளைய தலைமுறை, தங்களைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் சிந்தனையோடுதான் நாம்
இந்தத் தொடரைத் தொடங்கினோம். மீண்டும் அதே இடத்திற்கு இப்போது வந்துள்ளோம்.
இரண்டையும் ஒருசேரப்
பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? படிப்பு, அதன் மூலம் பெறக்கூடிய வேலை,
அதிலிருந்து ஈட்டும் பொருள், பொருளின் வழிக் கிடைக்கும் வாழ்க்கை வசதி, வாய்ப்புகள்
- இவைதான் வாழ்க்கை வட்டம் என்னும் சுழலிலிருந்து முதலில் வெளிவர வேண்டும்.
இவ்வட்டம் வேண்டாம் என்று
கூறவில்லை. வாழ்க்கை இங்கிருந்து தொடங்க வேண்டுமே அன்றி, இதிலேயே முடிந்துவிடக்
கூடாது. இவ்வட்டம் ஓர் உள்வட்டம். மேலும் பல வெளி வட்டங்கள் விரிந்திட வேண்டும்.
தனி வாழ்க்கை என்னும் உள்வட்டத்திலிருந்து பொது வாழ்க்கை என்னும் வெளி வட்டம்
நோக்கி நம் மனங்களும், வாழ்வும் நகர்ந்திட வேண்டும்.
பொது வாழ்க்கை என்றால்
என்ன?' ஊனை உருக்கி, உள்ளொளி பெருக்கி' என்பார் மாணிக்கவாசகர். அதுபோல், தன்னலம்
சுருக்கி, பொதுநலம் பெருக்குதலே பொது வாழ்க்கை.
மனிதன் தானாகப் பிறக்கவுமில்லை, தனக்காக மட்டும் பிறக்கவுமில்லை என்பதை
உணர்ந்து, தன் அறிவை, தன் உழைப்பை, தன் செல்வத்தைத் தான் வாழும் இந்த
சமூகத்திற்காகவும், இந்த உலகத்திற்காகவும்
வழங்குதலே பொதுநலம் பெருக்குதல்!
நாம் ஒவ்வொருவரும் தனி
மனிதர்கள்தாம்.ஆனாலும், தனித்தனியாக யாருடைய உதவியும் இன்றி எவர் ஒருவராலும் இங்கு
வாழ்ந்துவிட முடியாது. நம்முடைய ஒவ்வொரு அசைவிற்கும் இந்த உலகின் உதவி
தேவைப்படுகிறது. தாயிடம் பால் குடித்தோம். பிறரின் கைபிடித்தே நடக்கப் பழகினோம். நம்
வாழ்வின் ஒவ்வொரு அடியையும் பிறரின் உதவியோடுதான் எடுத்து வைத்தோம். வளர்ந்த
பின்னும், நம்மால் தனித்து வாழ முடிவதில்லை. நாம் குடிக்கும் தேநீரில் கூட
எத்தனையோ பேரின் உழைப்பு இருக்கிறது. நாம் போட்டிருக்கும் உடை, நாம் வாழும் வீடு
என எதனை எடுத்துக் கொண்டாலும், கண்ணுக்குத் தெரிந்த, தெரியாத பல்லாயிரக்
கணக்கானவர்களின் வியர்வையும், ரத்தமும் அவற்றுள் இருக்கிறது.
நாம் நன்றி உடையவர்களாக
இருக்க வேண்டாமா? எல்லாவற்றையும் பெற்றோம்.இவ்வுலகை விட்டுப் போவதற்குள் எதையேனும்
உலகிற்குக் கொடுத்துவிட்டுப் போக
வேண்டாமா? எத்தனையோ பழங்களை உண்டோம், சில மரக்
கன்றுகளையாவது நட்டுவிட்டுப் போக வேண்டாமா? யார் யாரோ நமக்குக் கற்றுக்
கொடுத்தார்கள், யாருக்காவது நாம் கற்றுக் கொடுக்க வேண்டாமா? நாம் நூலகத்தில்
அமர்ந்து படிக்கும்போது, தெருவைச் சுத்தம் செய்யும் மனிதர்கள் நமக்காகவும் சேர்த்தே அதனைச்
செய்கிறார்கள் என்கிறபோது, அவர்களுக்காகவும் சேர்த்தே நாம் படிக்க வேண்டாமா?
வாருங்கள் என் இளைய தோழர்களே, நம் அறிவை விரிவு செய்து கொள்வதோடு,மற்றவர்கள்
அறிவையும் விரிவு செய்யப் படிப்போம்! நம்
எதிர்காலத்திற்காக மட்டுமின்றி,நாட்டின் எதிர்காலத்திற்காகவும் உழைப்போம். நம்மை
ஒழுங்குபடுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி லஞ்சம், ஊழலை
ஒழிக்க ஒன்றுபடுவோம்! நாம் தெளிவாக இருப்பதோடு மட்டுமின்றி, மூளையையும்,
வாழ்வையும் மயங்கச் செய்யும் மது போதைக்கு
எதிராக மாபெரும் போர் தொடுப்போம்! மனிதர்
கழிவை மனிதர் சுமக்கும் கொடுமையை நம்
தலைமுறையிலாவது ஒழிப்போம்!
உலகெலாம் வாழ, நாமும்
வாழ்வோம்!!
(நிறைந்தது)
(ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் சந்திப்போம்)
தொடர்புகளுக்கு: (subavee11@gmail.com ,
www.subavee.com)
நன்றி: tamil.oneindia.in
நம் அறிவை விரிவு செய்து கொள்வதோடு,மற்றவர்கள் அறிவையும் விரிவு செய்யப் படிப்போம்! நம் எதிர்காலத்திற்காக மட்டுமின்றி,நாட்டின் எதிர்காலத்திற்காகவும் உழைப்போம். நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி லஞ்சம், ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்! நாம் தெளிவாக இருப்பதோடு மட்டுமின்றி, மூளையையும், வாழ்வையும் மயங்கச் செய்யும் மது போதைக்கு எதிராக மாபெரும் போர் தொடுப்போம்! மனிதர் கழிவை மனிதர் சுமக்கும் கொடுமையை நம் தலைமுறையிலாவது ஒழிப்போம்!
ReplyDeleteஇன்றே உறுதியேற்போம்
நன்றி ஐயா
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஅய்யா ,
ReplyDelete// வாருங்கள் என் இளைய தோழர்களே, நம் அறிவை விரிவு செய்து கொள்வதோடு,மற்றவர்கள் அறிவையும் விரிவு செய்யப் படிப்போம்! நம் எதிர்காலத்திற்காக மட்டுமின்றி,நாட்டின் எதிர்காலத்திற்காகவும் உழைப்போம். நம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வதோடு மட்டுமின்றி, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி லஞ்சம், ஊழலை ஒழிக்க ஒன்றுபடுவோம்! நாம் தெளிவாக இருப்பதோடு மட்டுமின்றி, மூளையையும், வாழ்வையும் மயங்கச் செய்யும் மது போதைக்கு எதிராக மாபெரும் போர் தொடுப்போம்! மனிதர் கழிவை மனிதர் சுமக்கும் கொடுமையை நம் தலைமுறையிலாவது ஒழிப்போம்!
உலகெலாம் வாழ, நாமும் வாழ்வோம்!! //
சரியான முதல் அடி ( எட்டு) ....
அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ,புரிந்தும் புரியாமலும். இருந்த எமக்கு நல்ல புரிதலை கொடுத்தது...மீண்டும் தொடரட்டும் அறிவூட்டும் இக்கல்விப்பணி.
ReplyDeleteஇத்தொடரின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
ReplyDeleteசமத்துவ சமுதாயத்தை அமைக்கும் தந்தை பெரியாரின் கனவை நனவாக்கும் சுபவீ அய்யாவின் சீரிய முயற்சிக்கு என்றும் துணை நிற்போம்.
இத் தொடரில் மீண்டும் விரைவில் சந்திக்க ஆவல்.
ReplyDelete