தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 2 March 2015

மக்கள் தலைவராய் மலரும் தளபதி


(தளபதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பிப்.28, மார்ச் 1 ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெற்ற பாராட்டு அரங்குகளில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்  ஆற்றிய உரைகளின் சாரம்)

ஒரு கட்சியின் தலைவர்களை அக்கட்சியின் தொண்டர்களும், ஆதரவாளர்களும் பாராட்டுவது இயல்பான ஒன்றுதான். அந்த மனநிலையோடும், மகிழ்வோடும்தான் நாம் அனைவரும் இங்கு கூடியுள்ளோம். எனினும், ஒரு கட்சி அல்லது அதன் தலைவரின் பெருமை எங்கு இருக்கிறது என்றால், கட்சிக்கு வெளியில் அவர்கள் எப்படிப் பார்க்கபடுகின்றனர் என்பதில்தான் உள்ளது. 


2010 நவம்பரில் இந்தியா டுடே இதழ் ஸ்டாலின் குறித்து ஒரு சிறப்பிதழ் வெளியிட்டது. தி.மு.க. அல்லாத தலைவர்கள் பலர் அதில் அவர் குறித்துக் கட்டுரைகள் எழுதியிருந்தனர். இந்தியா டுடே தி.மு.க சார்பான இதழ் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.ஆனால் அந்த ஏடு  அவரைப் பாராட்டிச் சிறப்பிதழ் வெளியிட்டதோடு, அம்மலருக்குப் 'பொன்னியின் செல்வன்' என்று பெயர் கொடுத்திருந்தது. அப்பெயர், எழுத்தாளர் கல்கி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை ஆண்ட ராஜராஜ சோழனுக்குக் கொடுத்த பெயர் என்பது உலகறிந்த உண்மை. 

எனக்கே கூடத் தனிப்பட்ட முறையில் அப்படி ஓர் அனுபவம் உண்டு. 17,18 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற நிகழ்வு அது. அப்போது நான் தி.மு.க. ஆதரவாளன் இல்லை. மாறாக, தி.மு.க.வை, தலைவர் கலைஞரை எல்லாம் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருந்த ஒரு 'தமிழ்த் தேசியவாதி.'  தமிழ்த் தேசியவாதிக்கு அடையாளமே, திராவிட இயக்கத்தைச் சாடுவதுதானே! அந்த நேரத்தில், வெளியூரிலிருந்து ஒரு நாள் அதிகாலை நேரம் சென்னையில் வந்து இறங்குகிறேன். மிகக் கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. ஒரு ஆட்டோ பிடித்து வீட்டிற்குச் செல்லும் வழியில் ஒரு காட்சியைப் பார்க்கிறேன். மழையில் நனைந்தபடி, வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒருவர் அதிகாரிகளுக்குச் சில ஆணைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். ஆட்டோவிற்குள் இருந்தபடியே அவரை யாரென்று பார்க்கிறேன். அவர்தான் அன்றைய சென்னை மேயர், இன்றைய தளபதி ஸ்டாலின். அப்போது என் நெஞ்சுக்குள் ஓர் எண்ணம் தோன்றியது - "இந்த மனிதர் நாட்டுக்கு நல்லது செய்வார்" என்று!

அவர் மேயராக இருந்த காலத்தில் பல நன்மைகளைச் செய்தார். குறிப்பாக நான்கினைச் சொல்லலாம். மழை நீர் வடிகால்களை அமைத்தார். முன்பெல்லாம் சிறு மழைக்குக் கூடச் சென்னை திணறும். இன்று ஓரளவு அந்நிலை மாறியுள்ளதென்றால்  அதற்கு அவரே காரணம். இரண்டாவதாகக் குடிநீர்ச் சிக்கலில் கவனம் செலுத்தினார். மிக முக்கியமாக, மூன்றாவதாக, மாநகராட்சிப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தியதில் அவருடைய பங்கு மிகப் பெரியது. நான்காவது, அவர் காலத்தில் கட்டப்பெற்ற மேம்பாலங்கள்.

மாநகராட்சிப் பள்ளிகளுக்கு அவரே அவ்வப்போது சென்று பார்வையிட்டார். அவருக்குப் பின் மேயராக வந்த நண்பர் மா. சுப்ரமணியமும் அப்பழக்கத்தைத் தொடர்ந்தார். ஆனால் இன்று மீண்டும் அப்பள்ளிகள் பழைய நிலைக்கே திரும்பிக் கொண்டுள்ளன. தளபதி ஸ்டாலின் பிற்காலத்திலும் மாநகராட்சிப் பள்ளிகளுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

2010 மார்ச் 1 ஆம் நாள், அவருடைய பிறந்தநாள் ஒன்றில் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தார். அப்போது பெனா என்றொரு பெண் - அப்பள்ளி மாணவி - இரண்டு கண்களும் தெரியாத ஒரு மாற்றுத் திறனாளி, தன் பள்ளிக்கு வந்திருக்கும் தமிழ்நாடு துணை முதல்வரான ஸ்டாலினிடம் ஒரு மனுவைக் கொடுத்தார். பெனா எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் நிறைந்த ஒரு பெண். பல விருதுகளையும் பெற்றிருந்தார். அவருக்கு அந்த ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவில் நடைபெறவிருக்கும், 'உலக இளைய தலைவர்களுக்கான மாநாட்டில்' கலந்து கொள்ள அழைப்பு  வந்திருந்தது. ஆனால் ஓர் ஏழை ரயில்வேத் தொழிலாளியின் மகளான அவரால் அங்கு செல்ல வழியில்லை. அதற்கு அரசு உதவ வேண்டும் என்பதே, அம்மனுவில் அவரது வேண்டுகோள். மனுவைப் படித்துப் பார்த்த நம் தளபதி, அந்தப் பெண்ணைத் தட்டிக் கொடுத்து, 'கவலைப்படாதே, நீ அமெரிக்கா செல்வாய்' என்றார். சொன்னபடியே அதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். 

அதனை விடக் குறிப்பிடத்தக்க இன்னொன்றையும் அவர் செய்தார். அந்த ஆண்டு ஏப்ரல் 17 அந்தப் பெண்ணின் பிறந்த நாள். அவள் மனுவில் இருந்த அந்த நாளைக்  கவனத்தில் கொண்ட தளபதி, சரியாக அந்த நாளில் அப்பெண்ணின் வீட்டிற்கே சென்றார். அந்த ஏழையின் வீடு அவர் வரவைக் கொண்டாடி மகிழ்ந்தது. பிறகு அந்தப் பெண் அமெரிக்கா சென்று வந்தார். இன்று ஐ. ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற ஒரு பெண்ணாக இருக்கிறார். 

கட்சி வட்டத்திற்கு வெளியிலும் மக்களிடம் அன்பு காட்டுகின்ற மனிதராக அவர் இருக்கின்றார். கட்சித் தலைவர் என்ற நிலையிலிருந்து  உயர்ந்து மக்கள் தலைவர் என்னும் இடம் நோக்கி அவர் வளர்ந்து கொண்டுள்ளார்.

பெனா  போன்ற இளம் பிள்ளையை மட்டுமின்றி, சுயமரியாதை இயக்கத்தின் மூத்த முன்னோடிகளையும்  அவர் சென்று கண்டு வருகிறார். அண்மையில், திருவானைக்காவில் வாழ்ந்து வரும், 92 வயதான சம்பூர்ணத்தம்மாள் என்னும் பெரியவரை அவர் வீட்டிற்குச் சென்று சந்தித்துள்ளார். அவர் 1941ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா தலைமையில் சுயமரியாதைத்  திருமணம் செய்து கொண்டவர். அவரைத்  தளபதி சென்று கண்டு நலம் கேட்டது குறித்து, 'தி இந்து' நாளிதழ், "அந்த இருண்ட வீட்டிற்குள் ஒரு வெளிச்சம் நுழைந்தது" என்று குறிப்பிட்டு எழுதியுள்ளது. 

இவ்வாறு பொதுவான ஏடுகளாலும், பொதுவான மனிதர்களாலும் பாராட்டப்படுகின்ற தலைவராக நம் தளபதி உயர்ந்து வருகின்றார் என்பதே நமக்குப் பெருமை. 

இன்றைய அவருடைய பிறந்த நாள் செய்தியில் கூட அவர் கூறியிருப்பது,  இந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக மட்டுமின்றி, ஐக்கிய நாடுகள் அவை கூறியிருப்பது போல், பாகுபாடு ஒழிப்பு நாளாகவும் கொண்டாடுங்கள் என்பதுதான். பாகுபாடுகளை ஒழிக்கப் பிறந்த இயக்கம்தானே திராவிட இயக்கம். பணக்காரன், ஏழை - மேல்சாதி, கீழ்ச்சாதி - ஆண்  பெண் என்னும் எல்லாப் பாகுபாடுகளும் ஒழிந்து , அனைவரும் சமத்துவத்தோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பெற்றது தானே திராவிட இயக்கம்! அதனால்தான் அவர் மிகச் சரியாகக் குறிப்பிடுகின்றார். இந்த ஒரு மாதத்திற்குள் ஒரு லட்சம் யூனிட் ரத்தம் கொடையாகக் கொடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

எதற்காகக் குருதிக் கொடை? மனித நேய அடிப்படையில் மட்டுமில்லை. தளபதி சொல்கிறார், "குருதியைக் கொடுங்கள். ஏழையின் ரத்தம் பணக்காரன் உடம்பில் ஓடட்டும். கீழ்ச்சாதி என்று சொல்லப் படுபவனின் ரத்தம் மேல்சாதி என்று நினைத்துக் கொண்டிருப்பவனின் உடலில் ஓடட்டும்." எனவே குருதிக்கொடைக்குள் ஒரு கொள்கைக் கொடையும் இருக்கிறது. 

திருமணத்தின்போது சாதி பார்க்கும் எவரும், அடிபட்டு மருத்துவ மனையில் இருக்கும்போது, சாதி பார்ப்பதில்லை. தன் சாதியைச் சேர்ந்த மருத்துவர்தான் தன்னைப் பார்க்க வேண்டும் என்றோ, தன் சாதிக்காரனின் ரத்தம்தான் தனக்கு ஏற்றப்பட வேண்டும் என்றோ ஏன் எவரும் கூறுவதில்லை? சாதி பொய் என்பதற்கு இதனை விட வேறு என்ன காரணம் வேண்டும்? இவை அனைத்தையும் நெஞ்சில் நிறுத்தித்தான், குருதிக் கொடையை  முன் மொழிகிறார் நம் தளபதி. 

சொல்லில் மட்டுமின்றி அதனைச் செயலிலும் நிறைவேற்றிய பெருமை அவருக்குண்டு.தென் மாவட்டத்தில் மூன்று ஊர்கள் உள்ளன. அங்கே பஞ்சாயத்துத் தேர்தலே நடைபெறவில்லை. தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கிடு பெற்றுள்ள அத்தொகுதிகளில் தேர்தல் நடத்த அங்குள்ள ஆதிக்கச் சாதியினர் அனுமதிக்கவில்லை. இறுதியில் தேர்தல் எப்போது நடந்தது?நம் தலைவர் கலைஞர் முதல்வராகவும், நம் தளபதி உள்ளாட்சித் துறை அமைச்சராகவும்  பொறுப்பேற்ற 2006 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நடந்தது. கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாங்கச்சியேந்தல் ஆகிய அம்மூன்று ஊர்களை யார் மறக்க முடியும்?

நாட்டிலே மட்டுமா, வீட்டிலும்தான் பாகுபாடு உள்ளது. ஆணும், பெண்ணும் சமமாகவா மதிக்கப்படுகின்றனர்? அந்தப் பாகுபாட்டை எப்படிப் போக்குவது? சுயமரியாதை வேண்டும், விழிப்புணர்ச்சி வேண்டும், பொருளாதார தற்சார்பு வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்குக் கொண்டுவரப் பாடுபட்ட இயக்கமான திராவிட இயக்கத்தின் அடுத்த தலைமுறைத் தலைவரல்லவோ  தளபதி! எனவே தலைவரின் வழியில் அவரும் தன்னால் இயன்றதைச் செய்தார். . பெண்களுக்குச் சொத்துரிமை வேண்டும் என்று 1929 ஆம் ஆண்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அதனைச் சட்டமாக ஆக்கினார் நம் கலைஞர்.

பெண்கள் பொருளாதார தற்சார்பு பெற மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் சுயநிதி குழுத் திட்டத்தை மிகப் பெரிய அளவில் நடத்திக் காட்டினார், அன்று துணை முதல்வராக இருந்த நம் தளபதி. தமிழ்நாட்டில் மட்டும் 4.75 லட்சம் சுயநிதிக் குழுக்கள் இயங்கின. அவற்றுக்குத் தமிழக அரசு பெற்றுத்தந்த தொகை 2791 கோடி. அந்தத் தொகையைப் பலமணி நேரம் மேடையில் நின்றபடியே தளபதி வழங்கினார்.இந்தியா முழுமைக்கும் மகளிர் சுயநிதிக் குழுக்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 13000 கோடி அளவிலானதுதான். அப்போது இந்தியாவில் 28 மாநிலங்கள். இன்று தெலுங்கானா வந்தபிறகு 29 ஆகியுள்ளது. அன்று  28இல் ஒரு பங்குதான் தமிழகத்திற்கு வந்திருக்கும். ஆனால் தலைவர், தளபதி முயற்சியால் 6இல் ஒரு பங்குத் தொகை தமிழ்நாட்டுப் பெண்களுக்குக் கிடைத்தது. 

இத்தனை சிறப்புகளுக்கும் உரிய நம் தளபதி இன்று மக்கள் தலைவராக மலர்ந்து கொண்டிருக்கிறார் என்பது வெறும் பாராட்டு அன்று, உண்மையின் வெளிப்பாடு.

இவைகளையெல்லாம் மறுக்க முடியாதவர்கள், வேறு வழியில் நம்மை மடக்க முடியுமா என்று பார்க்கின்றனர். என்னை எதிர்த்து ஒருவர் வலைத்தளத்தில் எழுதியுள்ளார். பெயரைக்  குறிப்பிட்டுப் பேசாமல்,கலைஞர் என்றும் தளபதி என்றும் பேசுகின்ற நீயெல்லாம் ஒரு பகுத்தறிவாளனா என்று ஏளனம் செய்துள்ளார். மேலை நாடுகளில் யாரேனும் பட்டம் சூட்டி அழைக்கின்றார்களா? பெயருக்கு முன்னாள் மிஸ்டர் என்று போடுவதோடு சரி, இங்கேதான் இந்த அநாகரிகம் நடைபெறுகிறது அன்று அந்த 'நாகரிக விரும்பி' எழுதியுள்ளார். அவர் காஞ்சிபுரம் போனால், 'பெரியவாளுக்கு நமஸ்காரம்' என்று சொல்வாரா அல்லது 'என்ன மிஸ்டர் சங்கரன்' என்று அழைப்பாரா என்று தெரியவில்லை.

அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் சிறப்புப் பட்டம் உண்டா என்று கேட்கும் நண்பரிடம் நாமும் சில கேள்விகளைக் கேட்க வேண்டியுள்ளது. அந்த மேலை நாடுகளில் எங்கேனும் சூத்திரன் உண்டா, பஞ்சமன் உண்டா, சாதியின் பெயரால், தொழிலின் அடிப்படையில் இழிவுகள் சுமத்தப்படுவதுண்டா? பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், நாங்கள் யாருக்கும் தாழ்ந்தவர்கள் இல்லை, எங்களின்  தலைவர்கள் எல்லாச் சிறப்புப் பட்டங்களுக்கும் உரியவர்கள்தாம் என்னும் பெருமித உணர்ச்சியே இத்தகைய பட்டங்கள் என்பதை அவர்களுக்கு நம்மால் உணர்த்த முடியாது! 


5 comments:

 1. கணேஷ்வேல் மணிகாந்தி2 March 2015 at 19:53

  அருமை அய்யா !

  திராவிடக் கொள்கைகள் அனைத்துக்கும், செயல்வடிவம் கொடுத்து நிறைவேற்றும் மிகப்பெரிய பணி தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளது, இதுவே தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்.

  ReplyDelete
 2. அருமையான பேச்சு ,தளபதியை பற்றிய அற்புதமான விளக்கம் .2016 இல் விடியலை நோக்கி காத்திருப்போம்

  ReplyDelete
 3. ரவிக்குமார்3 March 2015 at 23:43

  கீழ்ச்சாதி என்று சொல்லப் படுபவனின் ரத்தம் மேல்சாதி என்று நினைத்துக் கொண்டிருப்பவனின் உடலில் ஓடட்டும் என குருதிக்கொடைக்குப் புதிய தத்து விளக்கம் தந்தும்,தாழ்த்தப்பட்டவர்களை பஞ்சாயத்துத் தலைவராக்கியதற்கு பிரமிப்படைந்தும்,பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியதற்கு மகிழ்ச்சியடைந்தும் வியக்கும் சுப.வீரபாண்டியனார்,அடுத்த தேர்தலில் ஒரு தாழ்த்தப்பட்டவரை முதல்வரானால்,அதை விட ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணை அடுத்த தேர்தலில் திமுக முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தால் இதை எல்லாம் தாண்டிய சிறப்பாக இருக்குமே.ஏன் பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்குதான் தாழ்த்தப்பட்டவரா?முதல்வர் பதவிக்கு வரத்தகுதி இல்லையா?.முதல்வர் பதவிக்கு திமுகவில் தளபதியார் தாழ்த்தப்பட்ட பெண்மணியை பரிந்துரைத்து ஒரு சமுகநீதி சாதனையை தளபதியார் செய்யலாமே. அதோடு திமுக தலைவர்,பொருளாளர்,பொதுச் செலாளர் பதவிகளிலும் தாழ்த்தப்பட்டவர்களை, பழங்குடியினரை,இழி சாதிகள் என்று கூறப்படுகின்ற நாவிதர்,வண்ணார்,குறவர் போன்றவர்களை நியமித்து'சமூகநீதி சாம்ராட்'டாக தளபதியார் வலம்வரலாமே.அதைப்பற்றி சுப.வீரபாண்டியனார் அடுத்து கட்டுரை தீட்டுவார் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அடேங்கப்பா ரவிக்குமார் !

   தற்போது நீங்க என்ன சொல்லுறீங்க?

   யாரை விமர்சனம் செய்யுறீங்க?

   சுபவீ அவர்களையா அல்லது ஸ்டாலின் அவர்களையா ?

   அல்லது

   ஒடுக்கப்பட்ட மக்களையா ?

   உங்கள் கருத்தில் உங்களுக்கு கவனம் இருக்கிறதா ? நீங்கள் சுபவீயின் கருத்தை விமர்சனம் செய்யுங்க ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களை நையாண்டி செய்யாதிங்க !

   ஒடுக்கப்பட்ட மக்கள் பெரும்போராட்டம் நடத்தி எப்படியோ படித்து பட்டம் பெற்று ஏதோ இப்போதுதான் கொஞ்சமாக பதவிகளுக்கு வந்துக்கிட்டு இருக்காங்க உங்களுக்கு அதுலத்தான் முக்கியமா எரிச்சல் இருக்கிறது என்று தெரிகிறது. அதை நேரிடையா சொல்லாம சுத்தி வளைச்சி சொல்லுறீங்க என்பது புரிகிறது !

   இப்போ என்ன விஷயம்னா ஸ்டாலின் குலம் கோத்திரம் பார்த்தல் அவரும் பிற்படுத்தப்பட்ட சமுதாயம் தானே ! அவர் என்ன ஜாதி ஹிந்துக்கள் என்று அடையாளம் காணப்படுகிற உயர்சாதி சமுதாயமா ?

   நிலைமை அப்படி இருக்கும் போது ஏறிவரும் நேரத்துல ஏணியை எட்டி உதைக்காதீங்க ரவிகுமார் அவர்களே ! நான் ஏறி வரும்போது என்று சொன்னது ஒடுக்கப்பட்ட மக்களை. என்னை கருத்து சொல்ல தூண்டியதற்கு மிக்க நன்றி ரவிகுமார் அவர்களே !

   Delete
  2. ரவிக்குமார்6 March 2015 at 14:57

   ஒடுக்கப்பட்ட மக்களை நையாண்டி செய்யாதிங்க என்று கூறியதோடு நின்றிருந்தால் கூட யோசிக்க வைத்திருக்கும், ஆனால் 50 வருடமாக திமுகவை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்துருப்பவரின்,5 முறை முதல்வராக இருந்தவரின் மகனான சகல வசதி,வாய்ப்பு,அதிகாரமுடைய முன்னாள் மந்திரி தான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் திமுக பிரதிநிதி என்பது நயவஞ்சக வாதமாகும்!.ஏன் வேறு ஒரு சாமனியம் கூடவா இல்லை திமுகவில்?. என்னமோ இப்போது தான் தலித் ஏறிவருவது போல பேசுவதும் போலி வாதமாகும். பிற்படுத்தப்பட்டோர் அரசியல் விழிப்புணர்வு பெறுவதற்கு முன்பே தலித்துகள் அமைப்பாகத் திரண்டு போராடிய நீண்ட வரலாறு கொண்ட மாநிலம் தமிழ்நாடு!.ஆனால் ஆந்திராவிலும், உத்தரப்பிரதேசத்திலும்,மஹராஷ்டிராவிலும், ஏன் வெறும் 16% தலித் மக்கள்தொகை கொண்ட பீஹாரிலும் கூட தலித் ஒருவர் முதலமைச்சராக முடிந்திருக்கிறது.ஆனால் பெரியார் வாழ்ந்ததாகப் நீங்களெல்லாம் பீற்றிக்கொள்ளும் தமிழ்நாட்டில் அதைப்பற்றிப் பேசக்கூட முடியாத அவலநிலை&இதுபோன்று நயவஞ்சக வாதங்கள்!.இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்த இழிநிலைத் தொடர்வது?

   Delete