தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday, 27 April 2015

இடையிடையே இலக்கியம் பேசுவோம்

என்னைத் துரத்தும் கவிதை                                      

ஓரிரு வாரங்களுக்கு முன்பு, ஒரு தொலைக்காட்சியில் இலக்கியம் பற்றிய விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏதேனும் ஒரு கவிதை உங்களைப் பல ஆண்டுகளாகத் துரத்திக் கொண்டே உள்ளதா என்ற கேள்விக்குப் பலரும் ஆம் என்று விடை சொன்னதோடு, அந்தக் கவிதை பற்றியும் விரித்துரைத்தார்கள். 

நம்மையும் ஏதேனும் ஒரு கவிதை துரத்துவதுண்டா என்று எண்ணிப் பார்த்தபோது, ஒன்றில்லை,பல கவிதைகள் நினைவுக்கு வந்தன. என் இளம் அகவையிலிருந்து இன்று வரை, புரட்சிக் கவிஞரின் பல கவிதை வரிகள் என்னைத் துரத்திக் கொண்டேதான் உள்ளன. என்னை அரசியல் நோக்கி- அதிலும் குறிப்பாகத் திராவிட இயக்க அரசியல் நோக்கி - அவை துரத்தின என்று கூறலாம். அவ்வாறன்றி, வாழ்க்கை பற்றிய ஒரு சிந்தனையை, எனக்குள் உருவாக்கி, மீண்டும் மீண்டும் அதுகுறித்து என்னைச் சிந்திக்க வைத்த கவிதை ஒன்று உண்டு. ஆண்டுகள் பலவாய் அக்கவிதை வரிகள் என்னைத் துரத்தி கொண்டே உள்ளன. 


ஏதோ ஒரு நூலகத்தில், விழா மலர் ஒன்றில், பல ஆண்டுகளுக்கு முன் படித்த கவிதை அது. அந்த இதழின் பெயரையோ, அதனை எழுதிய கவிஞரின் பெயரையோ கவனமாய் நினைவில் வைத்துக் கொள்ளாமல் போனது என் தவறுதான். இப்போதும் அந்தக் கவிஞரின் பெயர் எனக்கு நினைவில் இல்லை. ஆனால் அந்தக் கவிதை அப்படியே என் நினைவில் பதிந்து கிடக்கிறது.  இதோ அக்கவிதை -

                                காலம் பாதியாய்  காமம் பாதியாய் 
                                எரித்து முடித்தபின் மரித்த உடலில் 
                                இந்த மயான நெருப்பு 
                                என்னத்தை எரிக்கிறது?

இவ்வளவுதான் கவிதை. நான்கே வரிகள்! ஆனால் அதனுள் ஆயிரம் வினாக்கள்.

மனிதர்கள் வாழும்போதே எரிந்து போய் விடுகிறார்கள் என்பதுதானே உண்மை. எரிப்பவை இரண்டு. ஒன்று காலம், இன்னொன்று காமம். 

"'பசி, பிணி, மூப்பு, துன்பம் ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே"  என்பார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவை அனைத்தையும் சேர்த்து ஒரே சொல்லில் 'காலம்' என்று குறிப்பிடுகிறது மேலே உள்ள கவிதை. 

ஒரு குழந்தை தூங்குகிறது. "அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்"என்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏன்? "கண்ணை விழித்திந்தக் காசினியைப் பார்க்குங்கால், என்ன துயர் வருமோ , எங்கெங்கு அடி விழுமோ" என்று கவலைப்படுகிறார் அவர். 
வாழ்க்கை துயர் நிறைந்தது. "இன்னா தம்ம இவ்வுலகம்"என்றுதானே புறநானூற்றுப் புலவரும் பாடினார். கால ஓட்டத்தில், நரை,திரை, மூப்பு வருவதும், பலர் பசியில் வாடுவதும், நோய்கள் நம்மை நாடுவதும் இயல்பல்லவா! அவை அனைத்தும் நம்மை எரிக்கத்தானே செய்கின்றன.வாழும்போதே நம் கண்களில் நம் சாம்பல் தெரிவதை இல்லையென்று சொல்ல முடியுமா? 

இவை அனைத்தும் வாழ்வில் ஐம்பது விழுக்காடு என்றால், இன்னொரு ஐம்பது விழுக்காடு காமம் என்று சொல்லலாம்.  அதனால்தான் தமிழர்கள் வாழ்வை அகம் என்றும் புறம் என்றும் இரண்டாகப் பிரித்தார்கள். அகம் என்பது 'உணர்தல்', புறம் என்பது 'பகிர்தல்' என்று இரண்டே சொற்களால் அழகுற விளக்குவார் அறிஞர் அண்ணா. 

வாழ்வில் பாதி காமமா என்று ஐயுற வேண்டாம். உண்மை அதுதான். எவர் ஒருவராலும் காமத்தை வெல்லுதல் அவ்வளவு எளிதன்று. காமம் என்பது உள்ளிருந்தே கொல்லும் புலி. 

மற்ற துயரங்கள் எல்லாம் வெளியிலிருந்து உள்ளே வருவன என்றால், காமம் என்பது உள்ளிருந்து வெளியே செல்வது. இரண்டு போக்குவரத்துகளிலும் இடைப்பட்டு எரிந்து போகிறது நம் உடல்..இப்போது மீண்டும் அக்கவிதையைப் படிப்போம்......ஏற்கனவே எரிந்து போன உடலில் மீண்டும் எதனை எரிக்கிறது இந்த மயான நெருப்பு என்னும் கேள்வி நியாயம்தானே!   

-- 

6 comments:

 1. தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
  விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

  கலைஞர் உரை
  ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் பிரிந்திருக்கும் போது காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுவது போன்ற நிலை நெருப்புக்கு இல்லை; நெருப்பு தொட்டால் சுடும்; இது, பிரிவில் சுடுகிறதே!.

  ReplyDelete
 2. அகம் என்பது 'உணர்தல்', புறம் என்பது 'பகிர்தல்'
  அண்ணா அண்ணாதான்
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. Indru ondrai puthithai katren

  ReplyDelete
 4. மிகவும் அருமை ஐயா.

  Google செய்ததில் அது கவிஞர் வாலி எழுதியது போல் உள்ளது:

  http://www.mayyam.com/talk/showthread.php?10385-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-11&s=564d251a1f9bcd0b47fd9b220071dcfd&p=1060085&viewfull=1#post1060085

  ReplyDelete
 5. Iruppathai vimarsikka tharamaana karuvikaL enrum vENdum

  ReplyDelete
 6. அருமையான பதிவு

  ReplyDelete