தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday, 4 February 2016

ஒரு கடிதம், ஒரு விளக்கம்

அய்யா சுப.வீ அவர்களுக்கு மனம் திறந்த மடல்!

மதிப்பிற்குறிய பேராசிரியர் அய்யா சுப.வீ அவர்களுக்கு வணக்கம். நீங்கள் என்றும் நலமாய் இருப்பீர்கள் என்று நம்புகிறேன், விரும்புகிறேன்.

என்னுடைய 17 வது வயதில் உங்களை அறிந்தேன், உங்களது பேச்சும், போராட்டக்ககளங்களுமே என்னைப்போன்ற மாணவர்களுக்குள் திராவிட இயக்கச்சிந்தனையை கொண்டு வந்தது.

தலித்துகளாய் பிறந்தாலும் ஒரு தலித் தலைமையை ஏற்காமல் திராவிட கட்சியில் என்னைப்போன்றோரை இணைக்க வைத்ததும் உங்களின் சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் தான். உங்களின் சாதி ஒழிப்பு பிரச்சாரங்களை எப்போதும் நான் குறைந்து மதிப்பிட்டவன் அல்ல மாறாக தூக்கி வைத்து கொண்டாடியவன்.

தருமபுரி கலவரத்தில் தாங்கள் முதலில் நின்று எம்மக்களுக்காக நின்றதை எண்ணி மெய் சிலிர்த்தவன். கலவரத்திற்கு காரணமான சாதிவெறியர்களை வெளிப்படையாய் கண்டித்தும், தங்களின் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் அவர்களின் போலி முகத்தை கிழித்தீர்கள் என்பதையும் நாம் அறிவோம்.

சாதிய கொடுமைகளுக்கு உங்களைப்போன்ற ஒரு சிலர் மட்டுமே வீதிக்கு வருவதை உணர்ந்து தலித்துகளை ஓரணியாய் இனைக்க போராடும் விடுதலை சிறுத்தைகளோடு சிறுத்தைகளாய் இணைத்துக்கொண்டு உங்களோடு பயணித்தோம்
.
எப்போதும் எங்களுக்கு நீங்கள் ஆதரவாகவும், சாதி வெறியர்களுக்கு எதிர்ப்பாகவும் இருந்திருக்கிறீர்கள் என்பதை இன்றும் எம்மால் மார் தட்டி சொல்ல முடியும். ஆனால் சில தினங்களுக்கு முன்னால் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நீங்கள் எழுப்பிய இரு கேள்விகள் என்னை கொடூர ஆயுத்தால் தாக்கியதாய் உணர்ந்தேன்.

ஆம், தோழர் இரவிக்குமார் அவர்கள், 2014 ஆம் ஆண்டு, 'நிறப்பிரிகை' என்னும் தனது இணையப்பக்கத்தில் “தலித் ஒருவர் ஏன் தமிழகத்தின் முதல்வராகக் கூடாது?" என எழுதியதைஅடிப்படையாக வைத்து, நீங்கள் தற்போதைய சூழலில் கிளறியிருப்பதும் அதுவும் இக்கருத்தை ஏன் மக்கள் நலக்கூட்டணி முதலில் அறிவித்திருக்கக்கூடாது என்ற முதல் கேள்வி.

ஆக நீங்கள் தலித் முதல்வர் கருத்தை ஏற்கிறீர்களா இல்லையா என்ற வினா எழும் அதே வேளையில் மக்கள் நலக்கூட்டணி ஏன் அறிவிக்கவில்லையென்று கேட்கும் நீங்கள் இதே கேள்வியை உங்கள் ஆதரவு கட்சியான திமுக வினரிடம் கேட்பீர்களா. திமுகவில் யாருக்கும் சளைக்காத ராசா, துரைசாமி போன்ற தலித்துகளை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க சொல்லி கருணாநிதியிடம் கேட்பீர்களா?. 

இரண்டாவது கேள்வி, கொடுமை என்னவென்றால் சிறுத்தைகள் அருந்ததியர்களுக்கு தேர்தலில் இடம் தருவதில்லை என்று அப்பட்டமாக ஒரு பொய்யான கருத்தை முன் வைத்தீர்கள். இதை எதனடிப்படையில் நீங்கள் முன் வைத்தீர்கள்.

எல்லா வரலாறும் தெறிந்த உங்களுக்கு இந்த வரலாறு ஏன் தெரியாமல் போனது.  திமுக கூட்டணியில் இருந்த போது கோவை மண்டலத்தில் அருந்ததியரை நிறுத்த வேண்டும் என்ற தேவையில் விசிக ஒரு தொகுதியை கேட்டபோது, உங்கள் கட்சிக்கு வலுவில்லாத இடத்தை ஏன் கேட்கிறீர்கள் என்று திமுக தரப்பில் கேட்கப்பட்டது உங்களுக்கு தெரியாதா?. உங்கள் மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் அதன் பின்னர் திமுகவிடம் எம் அருந்ததிய சொந்தங்களுக்காக அவினாசி தொகுதியை எவ்வாறு  போராடிப் பெற்று அங்கே அருந்ததிய சொந்தத்தை போட்டியிட வைத்தோம் என்பதும் உங்களுக்கு தெரியாதா?.

இப்படி தவறாக கருத்தை சொன்னதன் மூலம் தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், சிறுத்தைகள் சாதி பார்த்து போட்டியிடுகிறது என்று சொல்லவருகிறீர்களா?. இத்தனை காலம் சிறுத்தைகளை மேடைகளை அலங்கரித்தவர் நீங்கள், சாதி ஒழிப்பை சிறுத்தைகளோடு இணைந்து களமிறங்கிய நீங்கள் இன்று இவ்வாறு பேசுவது உங்களின் மீதான நம்பகத்தன்மையையும் சந்தேகிக்கத்தோன்றுகிறது.

இத்தனை தேர்தல்களில் கூட்டணி அமைத்து குறைந்த இடங்களை பெற்று போட்டியிட்ட போதும், காங்கிரஸ் தூக்கியெறிந்த அய்யா கக்கனின் அவர்களின் பேத்தி கஸ்தூரிக்கு சமயநல்லூர் தொகுதியையும், அருந்ததிய பெண்ணான ராதாமணிக்கு அவினாசி தொகுதியையும், முனியம்மாள் கனியமுதனுக்கு தொகுதியையும், முகமது யூசுப் என்ற இஸ்லாமியருக்கு உளுந்தூர்பேட்டை தொகுதியையும், எஸ்.எஸ்.பாலாஜி என்ற வன்னியருக்கு சோழிங்கநல்லூர் தொகுதியையும் தந்து போட்டியிட வைத்தார். ( சாதியை வெளிப்படுத்தும் எண்ணம் எமக்கு இல்லை ஆனால் உங்களின் கேள்விக்கு பதில் தர வேண்டியமையால் சொல்ல வேண்டிய சூழல் அதற்காக வருந்துகிறேன்).

காலம் காலமாக தமிழக அரசியலில் தொடரும் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும் தலித்துக்களின் மீதான அரசியல் சுரண்டலுக்கு எதிராகவும் உரையாட வேண்டிய உங்களைப் போன்ற சனநாயக சக்திகள் இப்படி தவறான விவாதங்களாலும், சர்ச்சைகளாலும் தலித்துக்களுக்கு எதிராகவே திருப்பிவிட துடிப்பது அதிர்ச்சியாகவுள்ளது. இதிலிருந்து, இன்னும் தமிழகத்தில் சாதியத்தைச் சாடுவதற்கும் கூட சனநாயகக் கூறுகள் வலிமை பெறவில்லை என்பது தெளிவாகிறது.

இதற்கு விளக்கம் தருவது உங்களின் கடமை. இல்லையேல் நீங்கள் எப்போதும் சொல்லும், இந்த மண் பெரியார் மண் என்பதை மறுபரிசீலனை செய்யவேண்டி வரும்.

- பொறியாளர் கீழ்.கா.அன்புச்செல்வன்

சுபவீ விளக்கம்
01.02.2016 அன்று புதிய தலைமுறைத் தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு விவாதத்தில் (நேர்படப் பேசு), நான் சொன்ன ஒரு செய்தியினை எதிர்த்தும், கண்டித்தும் நண்பர்கள் பலர் முக நூலிலும், கட்செவி ஊடகத்திலும் (வாட்ஸ் அப்), பதிவுகளை இட்டு வருகின்றனர்.

"2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 8 இடங்களில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ஓரிடத்தில் கூட அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரை நிறுத்தியதாக எனக்குத் தெரியவில்லை" என்ற என் கூற்றுக்கு எதிராகவே கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அது தவறான செய்தி என்றும், அவினாசியில் ராதா மணி என்னும் அருந்ததியர் வகுப்புப்  பெண் ஒருவரே  வேட்பாளராக நிறுத்தப்பட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. 

நான் அக்கருத்தை எந்த உள்நோக்கத்துடனும் கூறவில்லை. அருந்ததியருக்கு எதிராகச் சிறுத்தைகள் கட்சியை நிறுத்தவும் நான் முயற்சிக்கவில்லை. இருப்பினும் உண்மையைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல் ஒரு கருத்தை முன்வைத்தது தவறுதான் என்பதை ஏற்கிறேன். அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கோருகின்றேன். 

அன்று அரங்கில் என்னுடன் இருந்த, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஷா நவாஸ் அங்கு அதனை மறுக்கவில்லை. அந்தச் செய்தி அந்த நிமிடம்  அவருக்குக் கவனத்தில் வராமல் இருந்திருக்கலாம். எனக்கும் அப்படித்தான். வேறு நோக்கம் இல்லை. 


எனினும் ஒன்றே ஒன்றை இங்கு குறிப்பிட வேண்டுகின்றேன். சாதி  ஒழிப்புக் கோட்பாட்டிலும், சமூக நீதிச் சிந்தனையிலும் என் போக்கு எத்தகையது என்பதை வேறு எவரையும் விட, விடுதலைச் சிறுத்தைகள் அறிவார்கள். ஆனாலும் ஒரு விவரப் பிழை நேர்ந்து விட்டதைச் சற்றும் பொறுத்துக் கொள்ள இயலாமல், என்னைச் சாதி வெறியன் என்கிற அளவிற்குச் சில எழுத முற்படுகின்றனர் என்றால்,  அவர்களின் சகிப்புத் தன்மை குறித்து நான் என்ன கூறுவது?  அவர்களின் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். 

15 comments:

 1. நன்றி அய்யா சுபவீ அவர்களே. எங்களுக்காக கொஞ்சம் கை தூக்கி விடுங்கள்.

  ReplyDelete
 2. விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் புதிய தமிழகம் கட்சியினருக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
  இருவரும் வெவ்வேறு ஜாதிகள்.இரண்டு கட்சிகளில் உண்மை அதிகம் இருப்பது புதிய தமிழகம் கட்சி. திருமாவளவன் தைரியசாலி. அதனால் பிரபலமாகி விட்டார். உண்மை என்பது அதிகம் விரும்பப்படும் விசயமாகி விட்டதை அவர் உணர வேண்டும். உண்மைகள் யோசித்தால் தெரியாது. உணர வேண்டும். நல்லவர் கெட்டவர் அறிய வேண்டும்.அதிகாரம் வைத்து சாதிப்பதை விட அன்பாலும் உண்மையாலும் அதிகம் சாதிக்கலாம் . திருமாவளவன் செய்யும் வேலைகள்தான் தலித் ஒருவராலே மெட்ராஸ் படத்தில் படமாக்கப்பட்டது.

  ReplyDelete
  Replies
  1. தங்களை ஜாதிய வெறியனாக யாரேனும் சித்தரித்தால் அது முழுக்க முழுக்க தவறான செயல்.
   உங்களை இழிவுபடுத்தும் நிலை உருவானால், முதலில் உங்களுக்காகவும் உங்களைப் போன்ற சமூக நீதியை கொள்கையாக கொண்டவர்களையும் - காக்க வேண்டிய கடமையை முதலில் நின்று செய்பவர்கள் விசிகவினராக தான் இருப்பார்கள் ஐயா.

   ஆயினும் அரசியலில் தாங்கள் கலைஞரின் பார்வையையோ, திமுகவின் பார்வையையோ விசிகவினர் மீது தவறியும் வெளிப்படுத்தும் பொழுது அது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
   இது தனிப்பட்ட அதிர்ச்சியாக மட்டும் இல்லாமல், 'ஒட்டுமொத்த' ஒடுக்கப்பட்ட சமூகத்தின் நம்பிக்கையாகவும், அரசியலில் தங்களுக்கான உரிமையை மீட்கும் இயக்கமாகவும் வளர்ந்து வரும் விசிகவினைப் பற்றிய மக்களின் நல்பார்வையை கெடுக்கும் சூழ்நிலையும் உருவாகிவிடுகிறதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துவிடுகிறது.

   இன்றைய காலத்தில் சமூக நீதிக்காக போராட கூடிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் எவை எவை என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய காலகட்டம் இது. கால ஓட்டத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

   Delete
  2. அய்யா சுபவீ அவர்களே,மக்கள்நலக்கூட்டணியை நீங்கள் ஆதரிக்கவில்லை,உங்கள் ஆதரவு எப்போதும் திமுகவிற்கே என்ற நிலையில் திமுகவிடம் தான் முதலில் தலீத் முதல்வர் கோரிக்கையை நீங்கள் எழுப்பி இருக்க வேண்டும்

   Delete
 3. இரத்தினவேல்4 February 2016 at 11:53

  சாதி ஒழிப்பு, சமூக நீதிக்காக உண்மையில் குரல் கொடுக்கும் தலைவர்கள் அருகிவரும் நிலையில், அவைகளுக்காகப் போராடி வரும் பேராசிரியர் சுபவீ போன்றவர்களிடம் குறைகாணாமல் அவர்களை அரவணைத்துச் செல்வதுதான் தலித் இயக்கங்களுக்கு வலிமை சேர்க்கும்.

  ReplyDelete
 4. நன்றி அய்யா

  ReplyDelete
 5. சான்றாண்மை மிக்க பதில்..தெளிவான விளக்கம்....இதுவே சுப.வீயின் அடையாளம்

  ReplyDelete
 6. இ.ஜெயக்குமார் .4 February 2016 at 14:44

  சுப.வீ அய்யாவுக்கு ,
  உங்கள சாதி வெறியன்னு யாராவது சொன்னாங்கனா அவங்க கண்மூடித்தனமா உணர்ச்சி வயப்பட்டவங்களா இருப்பாங்க இல்லாட்டி தாழ்த்தபட்ட மக்களோட அரசியல அடையாளம வெச்சுகிட்டு வேற உள்நோக்கம் கொண்டவங்களா இருப்பாங்க . உண்மயாவே அதிர்ச்சியானவங்க( வருத்தப்படுறவங்க ) -ளுக்கு காரணம் , இப்ப மட்டுமில்ல எப்பவுமே பல நேரங்கள்ல திமுக உட்பட பொதுவுடம கட்சிங்க கூட அடையாள அரசியலத்தான் பண்ணுறாங்கறது தான் , இதுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஈழம் , இன்னைக்கும் தொடரும் தருமபுரி , கோகுல்ராஜ்க்கள்...... இந்த மாதிரியான நேரத்தல நாங்க பாக்கற முகம் உங்கள மாதிரி சிலரத்தான் ( ஈழ விசயத்துல தப்பானவங்களோட ஏச்சுகங்க பேச்சுங்க சத்தமா எல்லா பக்கமும் இருந்ததெல்லாத்தையும் எதிர்த்து இன்ன வரைக்கும் சரியா இருக்கீங்க . ) . ஆனா திமுக மாவட்ட பொறுப்பாளங்க பண்ற அலப்பறங்கள ,அத அந்த கட்சி தலம கட்டுபடுத்த முடியாம இருக்கறத , பொதுவுடம கட்சிங்க கொள்க , அரசியல் குழுவோட முடிவுன்னு பல நேரங்கள்ல playing to the gallery- ன்னு தொடக்க காலத்தல இருந்தே இருந்து வர நழுவல் போக்குகள இன்னும் உரக்க சொல்லனும்கிறது தான் .( ஆதிமுக - ஆரிய திமிலங்கள முன்னேற்ற கட்சி , இத கணக்கல எடுத்துக்க வேண்டாம் ) . மத்தபடி உங்க வேலைங்கள செம்மயா எப்பவும் மாதிரி தொடரட்டும் .

  ReplyDelete
 7. Pala jaathigalaaga pirinthirukkamal ore jaathiyai ungallale vara mudiyathu, mudiyumaa?

  ReplyDelete
 8. மதிப்புமிகு அய்யா சுப.வீ.அவர்களுக்கு வணக்கம்.
  என்னுடைய மடலுக்கு விளக்கம் தந்தமைக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகள்.

  மேலும் எந்த இடத்திலும் உங்களை சாதி பார்ப்பவராக நான் எழுதவில்லை, மாறாக உங்களின் போராட்டக்களத்தை பிரதிபலித்திருக்கிறேன். நீங்கள் எழுப்பிய கருத்து சற்று வேதனையை தந்தது அந்த காரனத்தினால் மட்டுமே இக்கேள்விகளை எழுப்பினேன்.

  என் கடிதம் உங்களை சங்கடத்தில் ஆழ்த்தியிருக்குமானல் என்னுடைய வருத்தத்தை தெறிவித்துக்கொள்கிறேன்.

  என்றும் எங்களுக்கு உங்களைப்போன்ற ஜனநாயக சக்திகள் துனை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

  வருத்தங்களுடன்
  பொறியாளர் கீழ்.கா.அன்புச்செல்வன்.
  er.anbuselvan@gmail.com

  ReplyDelete
 9. சாதியத்திற்கு எதிராக போராடும் உங்களை சாதிவெறியன் என்று கூறுபவர்கள் மனமறிந்து பொய் சொல்லி உங்களை இதன் மூலம் சிறுமை படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள் ஆனால் அவர்கள் எண்ணம் நிறைவேறாது
  தற்போது சாதி ஒழிப்பிறகு எதிராக போராடுபவர்களில் முன்னணியில் நிற்பவர்களில் நீங்களும் ஒருவர் ( அரசியல் ஆதாயம் கருதாமல் )

  ReplyDelete
 10. "தலித் முதல்வர்' என்கிற கோரிக்கையை "தேர்தலுக்காக மட்டும் முன் வைக்காதீர்கள் . தொடர்ந்து முன் வையுங்கள் நான் ( "சுப.வீ) அதை என்றும் ஆதரிப்பேன் என நீங்கள் சொன்னது எல்லாம் "வி.சி.க' தோழர்கள் காதில் விழவில்லை போலும். அப்புறம் உங்களை "வி.சி.க' தோழர்கள் விமர்சிப்பதைப் பார்க்கும் போது அது "கருத்தின்' அடிப்படையில் வருகிற விமர்சனமாய் தெரியவில்லை. "கலைஞர்' ஆதரிக்கின்ற நிலைப்பாட்டின் எதிர்ப்பாய்த் தான் தெரிகிறது என்பதை நடுநிலையாளர்களும் உண்மையான "வி.சி.க' தொண்டர்களும் உணர்ந்து கொண்டுள்ளனர்

  ReplyDelete
 11. AYYA SUBAVEE AVAIKALUKKU
  UNGAL KARUTHUKKALODU EDUPADU UDAYAYAVAN NAAN.ORUPUTHAKAM ORU THIRAIPADAM KATTURAYIL KURIPITTA RAM PUNANIYIN PUTHAKAM PEYAR ENNA?TAMIL MOZHIYAKKAM ANTHA PUTHAKATHIRKKU ULLATHA?
  DARBENCMR@GMAIL.COM
  VANAKKATHUDAN
  AADHIMUUGAN

  ReplyDelete
 12. அய்யா சுபவீ அவர்களே பல முறை ஆட்சியில் இருந்த உங்கள் ஆதரவுக்கட்சியான திமுகவிடம் தலீத் முதல்வர் என்ற கோரிக்கையை வைக்காமல் மநகூட்டணியிடம் வைத்ததை உள்நோக்கம் என்று தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

  அதற்காக உங்களை சாதிவெறியர் என்று விமர்சித்துவிட மாட்டேன்.சாதிக்கு எதிரான உங்கள் குரலை தமிழகமே அறியும்.
  ஆனால் நீங்கள் ஆதரிக்கும் திமுகவால் அதன் ஆட்சியில் ஜாதிவெறியர்கள் ஊக்கத்தோடு செயல்படுகிறார்கள்.எனவே திமுக ஆதரவு நிலைப்பாட்டை பரிசீலனை செய்யுங்கள்

  ReplyDelete
 13. இவர்கள் சொல்வதே நினைத்து தாங்கள் வீனாக கவலை கொள்ளதேவை இல்லை!உங்களின் தன்னலம் அற்ற அறபனியினை அன்று புகழ்ந்தவர்கள் இன்று விமர்சிக்கின்றனர்! "கண்டிப்பாக சிறுத்தைகள் இதனை அனைத்தும் அறுவடை செய்யும் காலம் மிக அருகில் உள்ளது

  ReplyDelete