தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Tuesday 8 March 2016

அரசியல் மேடை - 10

தினமலரின் சோதிடம் 
                                       

 தி.மு.க.வைத் தேர்தலில் எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கில், கடைசி ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது  தினமலர். இனிமேல் கருத்துக் கணிப்பு, மக்கள் கருத்து எல்லாம் எடுபடாது என்பது புரிந்து, சோதிடத்திடம் அடைக்கலம் புகுந்துள்ளது அந்த நாளேடு!


2016 மார்ச் 7 ஆம் நாள் ஏட்டில், தேர்தல் களம் பகுதியில், "ஜெயிக்கும் கூட்டணி இதுதான்" என்ற தலைப்பின் கீழ், 5 சோதிடர்களின் 'அபார'க்  கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது.

கலைஞருக்கு  மேஷத்தில் புதன், ரிஷபத்தில் சந்திரன், மிதுனத்தில் சுக்கிரன், சிம்மத்தில் ராகு என்றெல்லாம் அடுக்கிவிட்டு,  இந்தத் தேர்தல் இவருக்குப் பின்னடைவை உண்டாக்கும் என்று முடிக்கும் ஒரு சோதிடர், ஓட்டுப்பதிவு நாளின் கிரக நிலைகளையும் வைத்துப் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு வெற்றி கிடைக்கும் என்று எழுதுகிறார்.

அ.தி.முக. கட்சி ஆரம்பித்த நாள் 17.101972. ஜெயலலிதா பிறந்த நாள் 24.2.1948. இரண்டையும் வைத்துப் பார்க்கும்போது இவரது ஜாதகப்படி வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது இன்னொரு சோதிடரின் கண்டுபிடிப்பு. 

இப்படியாக ஐந்து சோதிடர்களும் ஒரே மாதிரியாக எழுதுகின்றனர் அல்லது எழுத வைக்கப்பட்டுள்ளனர். எனினும், விஜயகாந்த், ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றால் வெற்றி கிடைக்கும் என்கிறார் ஒரு சோதிடர். கலைஞர் தலைமையில் கூட்டணி வந்தால் வெற்றி கிடைக்காதாம். (சுப்பிரமணிய  சாமியின் சீடர் போலிருக்கிறது).

சோதிடமே சுத்தப் பொய் என்பது ஒரு புறமிருக்க, இந்த சோதிடர்களிடம் அல்லது வெளியிட்ட  தினமலரிடம் நாம் கேட்பதற்கு இரண்டு வினாக்கள் இருக்கின்றன. 

1. அ.தி.மு.க. கட்சி உருவான நாளும், ஜெயலலிதா பிறந்த நாளும் எப்போதும் மாறப் போவதில்லை. அப்படியிருக்க அவற்றைக் கொண்டு வெற்றியைத் தீர்மானிக்க முடியும் என்றால், 1996 மற்றும் 2006 சட்டமன்றத்  தேர்தல்களில் அவர் ஏன் தோல்வி அடைந்தார்? அந்தத் தேர்தல்களின் போது அவருடைய பிறந்த நாளை யாராவது மாற்றி விட்டார்களா அல்லது அந்தத் தேர்தல்கள் நேரத்தில் மட்டும் அ.தி.மு.க. தொடங்கியது வேறு நாளில் என்று அறிவித்திருந்தார்களா?

2. 'இன்னாரோடு இன்னார் கூட்டணி வைத்தால்' என்று சந்தேகமாக எழுதும்போதே யார் யாரோடு கூட்டணி வைக்கப் போகின்றனர் என்பது இந்தச் சோதிடருக்குத் தெரியவில்லை என்பது தெளிவாகிறது.  இவர் இவருடன் இந்தத் தேதியில் கூட்டணி வைப்பார், இந்தக் கூட்டணி இத்தனை இடங்களில் வெற்றிபெறும் என்று சொன்னால் அது சோதிடம். பலிக்கிறதா என்று மக்களும் பார்ப்பார்கள். அப்படி இல்லாமல், யார் யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்றே தெரியாத இந்த சோதிடர்களுக்கு, எந்தக் கூட்டணி வெற்றி பெறும்  என்பது மட்டும் துல்லியமாகத் தெரிகிறதே, அது எப்படி?

 விருப்பத்தைச் செய்தியாய்  வெளியிடும் ஏடுகளுக்கு இன்னும் இரண்டரை மாதம் கொண்டாட்டம்தான்!



ஒரு கொசுறு: "அம்மாவின் வெற்றியைப் பார்ப்பதற்காகத்தான் சந்நிதானம் உயிரை வைத்துக் கொண்டிருக்கிறது" என்கிறார் மதுரை ஆதீனம். அடக் கொடுமையே, சைவத்தைப் பரப்புவதற்காக என்றல்லவா நாம் இதுவரை தவறாக எண்ணிக் கொண்டிருந்தோம். போகட்டும், தேர்தல் முடிவு வெளிவரும் மே 19 அன்று சந்நிதானத்துக்கு எதுவும் ஆகிவிடுமோ என்று வேறு கவலையாக உள்ளது. 


6 comments:

  1. இன்னார் வெற்றி பெறுவார் ???என்று சொல்ல தெரிந்த சோதிடத்திற்கு இன்ன இன்ன தொகுதியில் இன்ன இன்ன கூட்டணியின் வேட்பாளர் நிற்பார் என்று சொல்லி இருந்தால் மக்களும் ஆவலுடன் சோதிடம் பலிக்கிறதா என்று பார்ப்பார்கள் அதை விடுத்து தினமலரின் சுய சாதி ஆசையை வெளியிட்டால் அதில் ஒன்றும் இல்லை

    ReplyDelete
  2. கடைசி ஆயூதமாக பயன்படுத்தி பார்கிறார்கள்!! ஆனால், பருப்புதான் வெகமாட்டங்குகுகுகுகுகுகுகுகுகுகுகு!!

    ReplyDelete
  3. Periyar said even if u trust the Vaidega Pap an don't trust the practical Pap an

    ReplyDelete
  4. சென்னை வெள்ளத்திற்கு முன்பும் பின்பும் தினமலர் ஜோதிட சிகாமணிகள் வாய் திறக்கவே இல்லை. 12 ராசிக்காரர்கள் பற்றிய ஜோதிடமும் பொய்யாகிப் போனது. இவர்களின் புளுகு மூட்டைகளை மக்களும் மறந்து விட்டார்கள். மீண்டும் தேர்தலுக்கு தினமலர் எழுத ஆரம்பித்து விட்டது. இன்னும் ஜோதிடத்தை நம்பும் முட்டாள்கள் இருக்கும் வரை தினமலருக்குக் கொண்டாட்டம்தான்.

    ReplyDelete
  5. Ha haa... For these people, election is not to bring a change to people but just an incident to predict Amma's welfare. Are they really astrologers or advisors to Amma? TN People should prove this to be wrong and remove Amma politics. This is like Octopus predictions.

    ReplyDelete
  6. மூடநம்பிக்கைகளின் பரிணாம வளர்ச்சியினை இது எடுத்துக்காட்டுகிறது.

    ReplyDelete