தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Thursday 17 March 2016

அரசியல் மேடை - 15

 "வாழும் கலை"


 ஒரு பெரிய விழா நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவதே கடினம். நெரிசல் ஏற்படுமா, சுற்றுச் சூழலுக்குக் கேடு வருமா என்பன போன்ற ஆயிரம் வினாக்கள் எழுப்பப்படும். ஆனால் சாமியார் ரவிசங்கர் 'உலகக் கலாசார விழா' நடத்தினால், இராணுவமே அவருக்கு வாடகைக்கு விடப்படுகிறது.


ஆனால் பசுமைத் தீர்ப்பாயம், சுற்றுச் சூழலுக்கு மாசு உண்டாக்கினார் என்று கூறி 5 கோடி ரூபாய் தண்டம் விதிக்கிறது. ஒரு காசு கூடக் கட்டமாட்டேன் என்கிறார் சாமியார். சரி என்று சொல்லி அவருக்குக் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. (பாவம் ஒரத்தநாடு விவசாயி).

குற்றம் சாற்றப்பட்டுள்ள ஒருவர் நடத்தும் விழாவில், இந்தியாவின் பிரதமரே நேரில் வந்து கலந்து கொள்கிறார். அந்தச்  சாமியாருக்குப் பக்கத்திலேயே அமர்ந்து சிரித்துப் பேசி மகிழ்கிறார். அடடா மோடி எவ்வளவு நல்லவர் என்று நம்மவர்கள் பலர் வியந்து பாராட்டுகின்றனர்.

நடிகர் விஜயகுமார், மோடியால் ஈர்க்கப்பட்டாராம். பா.ஜ.க.வில் உறுப்பினர் ஆகிறார். அவர் உறுப்பினரானவுடன் பா.ஜ.க.விற்குப் பல மடங்கு வலிமை வந்துவிட்டது என்று சொல்லிப் பூரிப்படைகிறார் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். ஏற்கனவே 50 லட்சம் 'மிஸ்டு கால்' உறுப்பினர்கள் இக் கட்சியில் உள்ளனர். இப்போது 50,00,001 ஆவது உறுப்பினராக விஜயகுமார் சேர்ந்துள்ளார். 

ஆனால் இவர்களை எல்லாம் ஈர்க்கும்  மோடியோ சாமியார்களோடு காட்சி தந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே பாபா ராம்தேவ் என்று ஒரு சாமியாருடன் மத்திய  அரசுக்கு மிக நெருக்கம். பணம், பொருள் இவற்றிலெல்லாம் ஆசையே இல்லாத அந்தச் சாமியார், பெரிய பெரிய வணிக நிறுவனங்களை நடத்தி வருகின்றார்.. 

ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி அனைத்து வணிக நிறுவனங்களையும் மிஞ்சி விட்டது. 2014ஆம் ஆண்டில் 1200 கோடி ரூபாய்க்கு வணிகம் செய்துள்ளது. இந்தியா முழுவதிலுமாக பதஞ்சலிக்கு 4000 கடைகள் உள்ளன. 'பிக் பஜார்' போன்ற நிறுவனங்களை நடத்தும் கிஷோர்  பியானி போன்றவர்கள் சாமியாருடன் பங்குதாரர்களாக உள்ளனர்.

சாமியார் ரவிசங்கரும் முழு மூச்சாக இப்போது வணிகம் தொடங்கி விட்டார். ஸ்ரீ ஸ்ரீ ஆயுர்வேத என்பது இவருடைய நிறுவனம். பியானியைத் தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இப்போது ரவிசங்கர் உள்ளார். 

இவர்கள் பேசுவதெல்லாம் ஆன்மிகம். செய்வதெல்லாம் நேர்மையற்ற வணிகம். 

"வாழும் கலை" என்றால் என்னவென்று நம் மர மண்டைக்கு  இப்போதுதான்  புரிகிறது. 


      




6 comments:

  1. இந்தியா போல் படித்தும் விழிப்புணர்வு பெறாத சமுதாயத்தில் கார்பரேட் ஆன்மிக நிறுவனங்களுக்கு சுரண்டி லாபம் பெறுவது ஒரு சிறந்த வணிகம்

    ReplyDelete
  2. ஒரு வேளை சோற்றுக்கே பகல் முழுதும் வெயில்ல வியர்வை கொட்டி உழைக்கிறாங்க மக்கள் நம்ம நாட்ல.ஆனா கோடிக்கணக்கான பணத்தை விரயம் செய்து ஆடம்பர விழா எடுக்கிறாங்க எதுக்கு???அத்தகு ஏழை மக்களுக்காகவா??இல்லை சாமியார்களின் பலத்தை அரசிடமும்/மக்களிடமும் காட்டவா??விளங்கலை எம் போன்ற சாதாரன மனிதனுக்கு.

    ReplyDelete
  3. இந்த டபிள் ஸ்ரீ, ஜாக்கிவாசுதேவ்,பாபா ராம்தேவ்,அம்மா பகவான் மற்றும் நித்தி போன்றர்களின் சாமியார் வர்த்தகத்தில் நஷ்டமே வருவதில்லை. விஜய் மல்லியா போன்றவர்கள் இந்த துறையிலும் கால் பதித்து இருந்திருந்தால் நாட்டை விட்டு ஓடவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருக்காது.வாய்ச்சவடால் விட்டே காலத்தை ஒட்டி இருக்கலாம். மத்திய மாநில அரசுகளும் மந்திரி பிரதானிகளும் சாமரம் வீசியிருப்பார்கள். மேட்டுக்குடி மாமிகளும் மாமாக்களும் கால் கழுவி இருப்பார்கள்.சனாதன தர்மத்தை காக்கும் காரியமாயிற்றே?

    ReplyDelete
  4. These swamiljis are the pillars of Hinduism they keep the block money of Hindutva politicians they are partners in all kinds of frauds cheating and criminal activities in the garb of spiritual enlightenment what was done by reagen in USA in the case of Osho should be done here

    ReplyDelete
  5. கோவை உலகத்தமிழ் மாநாட்டிற்கு 1000க்கும் மேற்பட்ட மரங்கள் கருணாநிதியால் உத்தரவிடப்பட்டு அட்டுழியமாக வெட்டப்பட்டதை எந்த பசுமைத் தீர்ப்பாயமோ சுற்றுச் சூழல் அமைச்சகமோ கண்டுகொள்ளவில்லையே!.நீங்களும் ஊமையாகத்தானே இருந்தீர்கள் இப்போது மட்டும் சுற்றுச் சூழல் பற்றி என்ன அவ்வளவு அக்கறை உங்களுக்கு?. இன்று மோடி பங்கேற்றாலும் அபராதம் விதிக்கும் அளவிற்கு நேர்மை,நீதி,தைரியம் உள்ள சுதந்திரமான துறையாக உள்ளது பசுமைத் தீர்ப்பாயமும் சுற்றுச் சூழல் அமைச்சகமும் ஆனால் அன்று பசுமைத் தீர்ப்பாயமும் சுற்றுச் சூழல் அமைச்சகமும் கருணாநிதியால், சோனியா/மன்மோகன்சிங்கின் நேர்மையற்ற,நீதியற்ற, தைரியம்யற்ற அளுங்கட்சியிகளின் அடிவருடிகளாக இருந்தது என்பதே நிதர்சனம்!.

    ReplyDelete
  6. ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்ற உண்மை, அது கொண்ட பயம் உள்ளது என்ற மனோதத்துவ ரகசியத்தை வைத்துக் கொண்டு சாமியார்களில் பலர் எதிர்கால குறி சொல்கிறார்கள். மனிதனின் சொந்த அறிவாலும் ஆற்றலாலும் நடப்பனவற்றை யாவும் சாமியார்களின் செயல் ஆகி விடும். முற்றும் துறந்த சாமியார்கள் இருக்கலாம். முழுவதும் துறந்த சாமியார்கள் குறைவு.

    ReplyDelete