தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 4 March 2016

அரசியல் மேடை – 7

மனித நேயம் மரணிக்கக் கூடாது!


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரையும் விடுவிப்பதாக முடிவு எடுத்துள்ளதாகவும், அது குறித்து மத்திய அரசு தன் கருத்தைத் தெரிவிக்குமாறும் தமிழக அரசு எழுதியுள்ள கடிதம் வரவேற்கத்தக்கது. தமிழக முதல்வருக்கு நம் பாராட்டுகள். அதனை ஆதரித்து அறிக்கை விடுத்துள்ள தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களுக்கும் நம் பாராட்டுகள்!


தேர்தல் நேரத்தில் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளதால் இதற்கு ஓர் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று சிலர் கூறுகின்றனர். அதனை நாம் ஆராய வேண்டியதில்லை. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அரசியல் நோக்கம் இருக்கத்தான் செய்யும். இருந்துவிட்டுப் போகட்டும்.  அந்த நோக்கத்தைத் தாண்டி, நல்லவை அதனால் நடைபெறுமா என்றுதான் நாம் பார்க்க வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்தில், இப்படிக் கடிதம் எழுதியதே தவறு என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர்  மல்லிகார்ஜுன கார்கே பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. கடிதமே எழுதக்கூடாது என்பது என்ன வகை ஜனநாயகம் என்று நமக்குத் தெரியவில்லை. 

எனினும் ஒரு கருத்தை நாம் பதிவு செய்ய வேண்டியுள்ளது. குற்றவியல் சட்டப் பிரிவு 432 என்பதை இன்னொரு பிரிவான 435 உடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்றும். 435 ஆம் பிரிவில் 'மத்திய அரசைக் கலந்து' என்பதற்கு,'மத்திய அரசின் ஒப்புதல் பெற்று' என்றே பொருளாகும் என்றும் கடந்த திசம்பர் மாதம் உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பில் கூறியுள்ளது.  எனவே மீண்டும் அதே பிரிவின் மூலம் விடுதலை செய்ய முயல்வதை விட, சட்டப் பிரிவு 161இன் கீழ் விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு எல்லா உரிமையும் உள்ளது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். தமிழக அரசு ஏன் அந்தப் பிரிவைப் பயன்படுத்தவில்லை என்பது ஓர்  வினாவாகவே உள்ளது.

இடைக்காலத்தில், எழுவருக்கும் பரோல் வழங்குவதில், தமிழக அரசுக்கு எந்தத் தடையும் இல்லை. அதனை உடனே தமிழக அரசு செய்ய வேண்டும்.

தமிழக அரசின் கடிதத்தில் உள்ள நியாயம் மற்றும் மனித நேயத்தை மதித்து, மத்திய அரசு உடனே எழுவருக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்பதும் நம் வேண்டுகோள்!


இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் கட்சி எல்லைகளைக் கடந்து தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்பது நம் அழுத்தமான விண்ணப்பம்!!

3 comments:

 1. ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7பேரை விடுவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அக்கடிதம் எழுதப்பட்டிருந்தால் அது வரவேற்க்கத்தக்கது தான். ஆனால் தமிழக அரசுக்கு அவர்களை விடுவிக்கும் எண்ணம் இல்லை ௭ன்றே எனக்கு தோன்றுகிறது. காரணம் உண்மையிலேயே அவர்களுக்கு அந்த எண்ணம் இருந்திருந்தால் சரத்து 161 ஐ பயன்படுத்தியிருக்க வேண்டும். மேலும் கடிதம் எழுதப்பட்ட நேரமும் விவாதத்திற்க்குரியது. 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவும்(பிப்ரவரி 2014) பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இரண்டு அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதாக நான் பார்க்கிறேன். ஒன்று தனது வாக்கு வங்கியை அதிகபடுத்துவது, இரண்டு திமுக-காங்கிரஸ் இடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்துவது.

  ReplyDelete
 2. ஐயா தங்களது அடுத்த சுற்றுபயண விவரத்தை அனுப்புங்கள்..
  நன்றி..

  ReplyDelete
 3. தமிழக அரசுக்கு, அந்த உணர்வு இல்லை!! உண்மையான அன்பு எல்லாம் கிடையாது! வெறும் நாடகம்! அரசியல் இயக்கங்களுக்கு அரசியல் நோக்கம் இருக்கதான் செய்யும் என்ற வாதம் அரசியல் தான் அனைத்து பிரச்சனைகளையும் கட்சிகள் செய்யும் என்றால், மக்கள் பகடைகாய்களா? கொள்கை அடிப்படையில்லோ, மனிதாபிமானம் என்ற அடிப்படையிலோ, (கடிதத்தில் மட்டுமே இருக்கும் இந்த வார்த்தை) இந்த அரசு செய்வில்லை அனைத்தும் நான்னே, ஏகபிரதிநிதி என்ற பட்டாபிசெகத்துகாக தான்!

  ReplyDelete