தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 14 March 2016

தலைவிரித்து ஆடுகிறது சாதிவெறி செயலற்றுக் கிடக்கிறது தமிழக அரசு!


தருமபுரியில் இளவரசன் - திருச்செங்கோட்டில் கோகுல்நாத் - இன்று உடுமலை அருகே சங்கர்! இன்னும் எத்தனை எத்தனை  உயிர்கள் போகுமோ, எப்போதுதான் இந்தக் காட்டுவிலங்காண்டித்தனம் நம்மை விட்டு விலகுமோ என்று நெஞ்சம் பதைக்கிறது. 


சங்கரும், கவ்சல்யாவும் பொறியியல் கல்லூரியில் ஒன்றாகப் படித்தனர். மனம் ஒன்றியத்தால் மணம் முடித்தனர். சாதிகள் வேறு என்பதால் பெற்றோர்கள் ஏற்கவில்லை. எட்டு மாதங்களாகத் தனியே வாழ்ந்தனர். இப்போது அந்தப் பெண் கருவுற்றிப்பதாகச் சொல்கின்றனர். 

கருவுற்ற பெண்களிடம் கனிவோடு நடந்து கொள்வது மனிதப் பண்பாடு. ஆனால் மனித நாகரிகம், மனிதப் பண்பாடு ஆகியனவற்றிற்கு நேர் எதிரான சாதி வெறி இருவரையும் பட்டப் பகலில் வெட்டிச் சாய்க்க முயன்றுள்ளது,  சங்கர் கொல்லப்பட்டார். கவ்சல்யா இப்போது மருத்துவமனையில், உயிருக்குப் போராடியபடி!

இந்தப் படுகொலை, உடுமலைப்பேட்டைப் பேருந்து நிலையம் அருகில் பட்டப்பகல் இரண்டு மணிக்கு மிக வெளிப்படையாக நடந்துள்ளது. அங்கேயிருந்த  புகைப்படக் கருவியில் அது பதிவாகியுள்ளது. கொலை செய்து முடித்துவிட்டு, நிதானமாகத் தங்கள் வண்டியில் ஏறி அந்தக் கொலைகாரர்கள் செல்வதை நாம் படத்தில் பார்க்க முடிகிறது.

சாதி வெறியும், செயலற்று இருக்கும் தமிழக அரசின் நிலையம் வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளன.. வெட்கம் ஒருபுறம், வேதனை மறுபுறம்! கடந்த சில ஆண்டுகளாகவே இவை போன்ற கொடூரங்கள் தமிழ் நாட்டில் நடந்தேறிக் கொண்டுள்ளன. கையாலாகாத அரசும் அதற்கு ஒரு காரணம்.

இந்தக் காட்டுவிலங்காண்டித் தனத்தையும், கைகட்டி நிற்கும் தமிழக அரசையும், திராவிட இயக்கத் தமிழர் பேரவை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. கொலையாளிகள் உடனடியாகக் கைது செய்யப் பட வேண்டும் என்னும் தமிழகத்தின் குரலை எதிரொலிக்கிறது!


16 comments:

  1. ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட மக்களுக்கு நான் சொல்வது என்னவெனறால்

    அமெரிக்க நாட்டில் இது போல் நடந்து இருந்தால் பெருங் கலவரத்தில் முடிந்திருக்கும். காரணம் அங்கு மானங்கெட்டவர்கள் குறைவு.

    நாம் இங்கு அதை போல எதிர்பார்க்க்கூடாது. நாம் காந்தி வழி நடக்கும் நாட்டில் வாழ்வது ஞாபகம் இருக்கட்டும் என்று எச்சரிக்கிறேன்.

    ReplyDelete
  2. கணேஷ்குமர்14 March 2016 at 22:47

    சமூகநீதி காவலர் திரு.மு.கருணாநிதி இந்த கொடுரத்தைப் பற்றி வாய்திறப்பாரா? இல்லை தேர்தல் சமயத்தில் இதெல்லாம் எதற்கு என கிடப்பாரா?

    ReplyDelete
    Replies
    1. கேவலம் அரசியல் லாபர்த்திர்காக, அடித்தட்டில் உள்ள உழைக்கும் பாட்டாளிகளின் மனதில் சாதி வெறியை ஊடி, வெள்ளியில் முனேற்றம், மாற்றம் என்று பேசும் அப்பாவும், பிள்ளையும் தான் உண்மையான சமூக நீதி காவலர்கள் போலும்!...
      நேற்று நிருபர்கள் கேவிக்கு பதில் கூர மனம் இல்லாமல், பிறகு யேசித்து, தான் அனைத்து சாதிகுமானவன் போல, இல்லையென்றால் தேர்தலில் எதிரோல்லிகும் என்று நினைத்து இன்று வாய்திறக்கும் வல்லவர்கள்!...

      இவர்களை காட்டிலும், திரு கருணாநிதி ஒன்றும் செய்யாதவர்தான்...

      Delete
  3. தமிழ்நாட்டில் பிறந்தது அவன் செய்த முதல் தப்பு
    தமிழனாக பிறந்தது அவன் செய்த அடுத்த தப்பு
    தீண்டாதவனாக பிறந்ததோ அவன் செய்த பொல்லாத தப்பு காதலித்ததோ அதிலும் ஆதிக்க சாதி பெண்ணை
    காதலித்ததோ அவன் செய்த மன்னிக்க முடியாத தப்பு
    அதனால் தான் மாய்ந்தும் வீழ்ந்தும் போன பிள்ளை!. தனது சாதிக்காரன் நிலத்தில் பெப்ஸி கம்பெனி நீரை உறிஞ்சும் போது துடிக்காத சாதி….தனது சாதிக்காரன் நிலத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது துடிக்காத சாதி…தனது சாதிக்காரன் ஊரில் நியூட்ரினோ, அணு உலை என்று அபாயங்கள் வரும் போது துடிக்காத சாதி…தனது சாதிக்காரன் சாராயம் குடித்துவிட்டு நடுரோட்டில் நிர்வாணமாக படுத்துக் கிடக்கும் போது துடிக்காத சாதி….தனது சாதிப்பெண் வரதட்சணை கொடுமையால் வாழாவெட்டியாகும்போதோ,தற்கொலை செய்யும் போதோ துடிக்காத சாதி…தனது சாதிக்காரன் வேலை வெட்டியில்லாமல் ஊரில் சுற்றும்போது துடிக்காத சாதி…தனது சாதிக்காரன் கல்வி பயில முடியாமல் முறுக்கு விற்க கிளம்ப போது துடிக்காத சாதி….
    ஆதிக்க சாதி பெண்ணை தலித் காதலித்தான் என்றதும் துடிப்பது எப்படி?.இங்கு கற்பழிப்பவன் கூட கொலை செய்யப்படுவதில்லை,ஆனால் ஆதிக்க சாதி பெண்ணை காதலிக்கும் தலித் ஆண்கள் கொலை செய்யப்படுகிறான்.சாதி தீயை அணைக்க இன்னும் எத்தனை அளவு இரத்தம் தேவைப்படுமோ என்பது்தெரியவில்லை!.ஆந்திர மாணவருக்கு போராடிய போராளிகளே..டில்லி JNU மாணவர் தலைவருக்கு அநீதி இணைக்கப்பட்டது என்று போராடிய தமிழர்கள்,திராவிடர்கள் ஏன் உடுமலை சகோதரனுக்கு போராடவில்லை?.திராவிட கட்சிகளே...சமூகநீதிக்கட்சிகளே...ஊடகங்களே..எங்கேபோனீர்கள்....உங்கள் மானம்,வீரம்,போராட்டம் எல்லாம் உங்கள் சாதியனர்,கட்சியினர்க்கு மட்டும் தானா...அப்படி என்றால் இனி நீங்கள் நடுநிலை, சகிப்புதன்மை,தீண்டாமை பற்றி பதியாதீர்கள்..
    தலித் என்ற காரணத்தினால் தான் அந்த சகோதரன் வெட்டப்பட்டான் என்றால்,ஈழத் தமிழன் தொப்புள் கொடி உறவு என்றால் அந்த தலித் இளைஞன் தமிழனுக்கு தொப்புள் கொடி உறவு இல்லையா?. தமிழனுக்கு,திராவிடனுக்கு என்ன கேவலமான வெளி வேஷம் இது?.ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற அறிவு இல்லாத,விருப்பம் இல்லாத அரசுகள் தான் தமிழ்நாட்டை மாறி மாறி ஆள்கின்றன.அதனால் ஜாதிய வேறுபாட்டை பாதுகாக்க வேண்டும் என்று கூட அவர்கள் விரும்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.தூய்மை இந்தியா திட்டம்,கழுதைத் திட்டம் குதிரைத் திட்டம் என்று பல திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதே.இதுவரை ஜாதி ஒழிப்புத் திட்டம் என்று ஒரு திட்டம் ஏன் முன் வைக்கப்படவில்லை. ஜாதியை சமூகத்தில் இருந்து ஒழிப்பதற்க்கான விஞ்ஞானப்பூர்வமான நடவடிக்கைகள் ஏன் முன்னெடுக்கப்படவில்லை?.உண்மைதான்
    யாருமிங்கு ஜாதி பார்ப்பதில்லை மனித ஜாதியென்று
    ... பசியென்று வந்த ஆதிக்க ஜாதிக்கு புசிப்பதற்கு உயிர்கள் தர சேரியென்று ஒன்றுண்டே!.வாக்குபிச்சை சத்தத்திலே இவன் ஓலக்குரல் கேட்பதற்கு அரசியல்வியாதிகளுக்கு வாய்ப்பில்லை தான் ...
    ஜாதியதை ஒழித்து சமத்துவத்தை தூக்கிப்பிடித்து சேரி
    வாசல் வந்திடுவான் பணத்தோடு வாக்கம்மா வாக்கென்றே வார்த்தைகளை கக்கிடுவான் ஜாக்கிரதை...

    ReplyDelete
  4. அந்த ஆணவக் கொலைகள் பற்றிக் கேட்டால் ராமதாஸ் கருத்துச் சொல்லாமல் எழுந்து ஓடுகிறார்!.கலைஞர் கருத்து எதுவும் சொல்லாமல் அதைப் பற்றி பேசாமல் ஊமையாகிவிட்டார்!(தேர்தல் தானே அவர்களுக்கு முக்கியம்!,அதிலும் சாதி ஓட்டுக்கள் தானே அவருக்கு முக்கியம்!!).

    ReplyDelete
  5. சாதியவெறியின் மற்றொரு சம்பவம் இந்த படுபாதக கொலை...
    ஒரு காட்டுமிராண்டி தனம் என்ற ஒற்றை வார்த்தை போதுமானதாக இல்லை...சக மனிதனை மனிதனாக பார்க்காத உணர்வும் ஒருவித மனநோயே. தமிழன் ஒரு காட்டுமிராண்டி... பெரியாரின் கூற்று தான் எவ்வளவு உண்மை.. இந்த வன்முறை மேலும் இன்றைய தலைமுறைக்கு பெரியாரின் தேவையையும் உணர்த்தியுள்ளது.
    நாம் எத்தகைய சமூகத்தில் வாழ்கிறோம் என்ற எண்ணம் பயத்தை கொடுக்கிறது... விலங்கினம் கூட தான் சார்ந்த இனத்தை அளிக்க நினைக்காது..ஆனால் ஆறறிவு கொண்ட மனித இனம் எப்போதோ யாரோ சொல்லிச்சென்ற கூற்றை ஆராயாது, அதை அப்படியே பின்பற்றி நடப்பது எவ்வளவு மடமை???...
    இன்றைய கல்வி முறையும் இதை மாற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது பதின்ம வயது இளைஞர் கூட்டம் இதை நியாயம் என்று கூறுவதை பார்க்கும் போது தெளிவாகிறது... நம் நாட்டின் இன்றைய தேவை முறையான பகுத்தறிவு பாடம் என்று நாம் உணர வேண்டிய மற்றுமொரு தருணம்....
    "இருட்டறையில் உள்ளதடா உலகம்,
    சாதி இருக்கின்றதது என்பானும் இருக்கின்றானே?
    மருட்டுகிற மதத் தலைவர் வாழ்கின்றாரே?
    வாயடியும் கை அடியும் மறைவெதென்னாள்?
    சுருட்டுகிறார் தம் கையில் கிடைத்தவற்றை
    சொத்தெல்லாம் தமக்கு என்று சொல்வார்தம்மை
    வெருட்டுவடுவது பகுத்தறிவே இல்லையாயின்
    விடுதலையும் கெடுதலையும் ஒன்றே ஆகும்" என்ற பாவேந்தரின் கூற்று இப்போது நினைவுக்கு வருகிறது...
    தானா எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா என்ற பட்டுகோட்டையாரின் வரிகளும் நினைவுக்கு வருகிறது...
    இதை நாட்டை ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளும், தமிழ்நாட்டின் எதிர்காலம் நாங்கள் தான் என மார்தட்டும் கட்சிகளும் கூட கண்டிக்காதது எதை முன்னிட்டு என்று ஊகிக்க முடிகிறது.
    இயற்கையாக தோன்றும் காதலின் மீது மனிதற்குள் இருக்கும் துவேசத்தை போக்க முறையான அறிவிப்பை இந்த அரசு நடவடிக்கை இனியேனும் எடுக்க வேண்டும்...
    என்றேனும் இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கை இளைஞர்கள் மத்தியில் எழ இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லையென்றால் இளைஞர்களின் ஒட்டுமொத்த மனதிலும் காட்டுமிராண்டி தனம் குடிபுகும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம்...

    அய்யா, இது நான் எழுதிய கண்டன அறிக்கை இதை படித்து உங்கள் கருத்துகளை சொன்னால் நான் மகிழ்ச்சியடைவேன் திருத்துவதற்கும் எதுவாக இருக்கும்...

    சரவணகுமார்
    அமெட் பல்கலைகழகம்
    சென்னை

    ReplyDelete
  6. ஜாதிவெறியும் வன்முறையும் பிரிக்க முடியாத இரட்டை குழந்தைகள். இந்த சாதிவெறியர்கள் பலரும் தமிழனவாதிகள் என்று தம்மை தாமே வேறு சொல்லிகொள்கிறார்கள்? எவ்வளவு சர்வ சாதரணமாக வெட்டி விட்டு நிதானமாக வாகனத்தில் ஏறி செல்கிறார்கள்? படங்களில் வருவது போலவே இருக்கிறது. இதற்கு தீனி போட்டு இதில் குளிர்காய்வது ஒரு புறம் அரசியல்வாதிகள் என்றால் மறுபுறம் சினிமாகாரர்களும்தான்.சாதிவெறிக்கு பல சினிமாக்கள் மறைமுகமாக தூபம் போட்டுள்ளன, அரிவாள் வெட்டு கொத்து என்று இரத்தத்தை காட்டி பணம் பண்ணும் அத்தனை சினிமா கதாநாயர்களும் கூட இந்த குற்றச்சாட்டில் இருந்து தப்பிவிட முடியாது

    ReplyDelete
  7. ஏன் இதில் திமுகவும் அதிமுகவும் மவுனம் காக்கிறது? சமூக நீதிக் கொள்கையில் திமுக குறிப்பிடத்தக்க பங்காற்றியிருந்தாலும் சாதி ஒழிப்பில் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை என்பது உண்மை.

    ReplyDelete
  8. ஏற்கெனவே நடந்த ஆனவ கொலையில் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து இருந்தால் சாதி வெறியன் களுக்கு ஒரு அச்சம் ஏற்பட்டு இருக்கும் ஆனால் ஓட்டு க்கு அலையும் ஆளும் அரசு மெத்ததனமாய் இருந்ததால் கொலை செய்பவனுக்கு உள்ளத்தில் ஒருவித மதமதப்பு ஏற்பட்டு விட்டது
    இனியும் அரசு செயலற்று இருந்து விட்டால் நம் சமுதாயம் காட்டுமிராண்டி காலத்திற்கு தான் செல்லும்
    செயலற்ற அரசு மட்டுமல்ல கண் முன்னே சக மனிதன் கொலை செய்ய படுவதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த மக்களும் கண்டணத்திற்கு உரியவர்கள்

    ReplyDelete
  9. தமிழ் தேசியம் பேசுபவர்கள்,திராவிடம் பேசும் கட்சி,ஆளும் கட்சி,ஆண்ட கட்சியினர் என எவரும் வாய் திறந்து கண்டிக்கவில்லை.கள்ள மவுனம் காக்கும் ஓட்டு வங்கி அரசியல் செய்யும் அழுகிய மனம் கொண்டோரே இவர்கள்.இந்த கட்சிகளுக்கு நீங்க வேற வக்காளத்து வாங்கிறது மிகுந்த வேதனை அளிக்கிறது.திருமாவை தவிர எவரும் கண்டிக்க முன் வரவில்லை.சமூக நீதி பேசுபவர்களும் சாதிய சாக்கடை ஓட்டு அரசியலை விரும்புகிறார்கள்.போதும் இத்தகைய கபடதாரிகளுக்கு ஓட்டு அளித்தது.

    ReplyDelete
  10. தலித் பணக்காரர் ஒரு சக ஏழைக்கு வசதி இல்லாத ஒரு சக சாதி தலித் இளைஞனுக்கு திருமணம் செய்து கொடுப்பதில்லை . பெரும்பாலும் வசதி வாய்த்த தலித் இளைஞர்கள் வேறு சாதி பெண்ணையே திருமணம் செய்து கொள்கிறார்கள்.கலப்பு திருமணத்தை சில சாதிகள் கண்டு கொள்வது இல்லை. பெரியார் என்று சொல்லி உசுப்பேத்தி விடும் சில சாதிகள், தன் சாதி பெண், தலித் சாதி இளைஞனை திருமணம் செய்தால் எந்த அளவுக்கு அவர்களை ஏற்று கொள்கிறார்கள். ஆனால் நிச்சயம் கொலை செய்வது இல்லை.ஆனால் அவர்களுக்கு சமமாக நடுத்துவது கிடையாது. இங்கே பொருளாதாரம் மிக முக்கியமான வேலை செய்கிறது. எல்லாரும் சமம் என்று என்னும் தளம் இன்றைய கால கட்டத்தில் பணம் மட்டுமே முடிவு செய்கிறது. சாதி வெறி எல்லாம் போய் விட்டது. பெண்ணின் தந்தை உடனே காவல் நிலையத்தில் சரண் அடைகிறார். அந்த இளைஞரை கொலை செய்யும் முடிவு எடுத்தவுடன் அவருக்கு தன வாழ்கை முடிய போவது தெரிகிறது. இது தற்கொலைக்கு சமானது. தன் மகளின் மேல் உள்ள அதிகமான பாசத்தில் கொலை செய்யும் முடிவு எடுக்கிறார்.தலித் இளைஞர்கள் மேல் சாதி பெண்ணை திருமணம் செய்வது தன் வாழ்கை லட்சியம் என்று கொள்ளாமல் பொருளாதரத்தில் முன்னேறுவதும் நல்லவர்களை அடையாளம் கண்டு இணைவதும் உண்மை பேசுவதும் குறிகோளாக கொண்டு வாழ்ந்தால் சாதி வேறுபாடு இயல்பாக ஒழியும். ஒன்றே ஒன்று இது நிச்சய உண்மை , நல்லவர்களோடு இணையுங்கள்.. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. \\\\சிவா, நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். இங்கே யாரும் குறி வைத்து காதலிக்க முடியாது (ஒரு சில விதிவிலக்குகள் இருக்கலாம்). நீங்கள் நினைப்பதைப்போல் பெண்கள் அவ்வளவு அறிவிலிகள் அல்ல. ஆண்கள் பெண்கள் மனதில் இடம்பிடிக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள், அப்படியே இடம்பிடித்தாலும் அவளையே கரம்பிடிக்க எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது facebook பார்த்தாலே விளங்கும்.இதிலே குறி வைத்து எங்கே காதலிப்பது? பொருளாதாரத்தில் உயர்ந்த பெண்களை குறி வைத்து காதலிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் தருமபுரி இளவரசன் அவன் காதலியைவிட பொருளாதாரத்தில் உயர்ந்தவன். அவனை ஏன் கொன்றார்கள்? இந்தியாவைப் பொறுத்தவரை பொருளாதாரம் என்பது இரண்டாம் பட்சம்தான். இங்கே தன் சாதிக்காரன் வசதி இல்லாதவனாக, திருடனாக, குடிகாரனாக, கொலைகாரனாக, பொறுக்கியாக இருந்தாலும் பரவாயில்லையென பெண்தர சம்மதிக்கிறார்கள். ஆனால் வேற்று சாதிக்காரன் அதுவும் தலித்து எவ்வளவு பெரிய உத்தமனாக இருந்தாலும், தன் மகளே அவனை விரும்பினாலும், அவனை வெட்டி வீச வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.
      கலெக்டரே ஆனாலும் ஒரு தலித் குடும்பத்தில் பிறந்தவன், சக ஊழியர்களால் கீழானவன் போல நடத்தப்படுவதை எத்தனையோ கலெக்டர்களே சொல்வதைப் பார்க்கிறோம்./////

      இப்படிக்கு
      ஜகந்நாதன்

      Delete
    2. ஜெகநாதன்

      நீங்கள் கூறும் உண்மை ஏற்றுகொள்ளதக்கது. அதற்காக வருந்துகிறேன். ஆனால் நான் கூறியதிலும் ஓரளவு உண்மை இருப்பதை நீங்கள் ஏற்று கொள்ளவே செய்தீர்கள். இதே போல ஒவ்வொரு தமிழ் இளைஞரும் தன் சாதியில் உள்ள குறைகள் என்ன என்பதனை உணர்ந்து ஒளிவு மறைவு இல்லாமல் வெளிபடுத்த வேண்டும். என் சாதியில் இந்த குறைகள் உள்ளன, இதனை சரி செய்தால் எனக்கும் சமூகத்துக்கும் தமிழின ஒற்றுமைக்கும் திராவிட ஒற்றுமைக்கும் அது பயன் தரும் என்று அடக்கமாக ஒவ்வொரு சாதியினரும் எடுத்துரைக்க வேண்டும். இந்த விவாதம் நம்மை அடுத்த கட்டதிருக்கு எடுத்து செல்லும். நம்மில் உள்ள வேற்றுமைகளை கலையும். இதனை சுபவீ அய்யா போல அறிவில் பெரியோர் முன்னிலையில் ஆரோக்கியமான விவாத நிகழ்ச்சியாக நீயா நானா போல ஒரு விவாத நிகழ்ச்சி ஆகவே நடத்தபடவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

      Delete
  11. இந்த இடுகையின் தலைப்பு அரசை குற்றம் காண்கிறது.அது மெத்த சரிதான்.அதற்கடுத்து அரசை வழி நடத்தும் அதிமுக மற்றும் அதன் தலைமை பற்றியும் எழுதப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு எழுதாமல் கவனமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.இங்கே ஒரு ’நேர்மையான’ சந்தர்ப்பவாதம் தான் வெளிப்படுகிறது.அதிமுக தலைமையை பற்றி எழுதினால் திமுக அதனிலும் மாறுபட்ட நிலையை எடுத்திருப்பதாக வேறுபடுத்தி சொல்லிக் கொள்ள முடியாது.நேற்றுவரை இந்த வன்கொடுமையை நியாயப்படுத்திய பாமக தலைவர் தேர்தல் கால அவசியம்(?!)கருதி ஒரு சடங்குத்தனமான கண்டனத்தை இன்று பதிவு செய்கிறார்.அதே தேர்தல் கால அவசியம் கருதிக்கூட இதுவரை ஒரு சிறு கண்டனத்தையும் திமுக பதிவு செய்யவில்லை.ஒரு தவறை கண்டும்காணாமல் ‘நடுநிலை’ பேணுவது என்பது உண்மையில் தவறுக்கு உடந்தையாக இருப்பது தான்.திமுக தலைவர் கலைஞர் ஆதிக்க சாதி மனப்பான்மை கொண்டிருக்கவில்லை என்பது வெளிப்படை.ஆனால் ஒரு சாதி வெறிச் செயலை கண்டிக்காவிட்டால் அதன் பொருள் என்னவாக இருக்கமுடியும்?திமுகவின் மீது சமூக வலைத்தளங்களின் விமர்சனம் அனலாக தகிக்கிறது.இத்தகைய சூழலில் நான் மதிக்கின்ற ஆளுமை என்கிற வகையில் சுப வீ அவர்களின் நிலை என்னை வருத்தமுற செய்கிறது.

    ReplyDelete
  12. நாம் பிறக்கும் போது நாம் மேல் ஜாதி என்ற ஒன்று கூத்த பாட வில்லை.. நம் குருதியிலும் சாதி ஓட வில்லை.. என்று தான் இந்த சமூகமும் சாதி அரசியலும் திருந்த போகிறதோ..

    ReplyDelete
  13. நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
    நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்

    ReplyDelete