தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 1 April 2016

அரசியல் மேடை - 21

2ஜி வழக்கும் சில கணக்கும் 


தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் - அது 2ஜி வழக்கு!

தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள். இப்போது அந்த 'சீசன்' தொடங்கியுள்ளது. 


2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள்.  அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள். அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர். 

பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித்  தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி  இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப்  போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி. 

தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார். அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். 'முதலில் வருபவருக்கு முதலில்' என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு  ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.

இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம்  நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம்  கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர். 

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், அன்று தணிக்கையாளர் கூறியது போல் ஏலத்துக்கே  விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க  வேண்டுமென்றால்,6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க  வேண்டும்? ஆனால் 340.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது. அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய்.அவ்வளவுதான்.

ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால் கூட, 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஓர் ஆயிரம் கோடிதான். அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா?மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 148(4) விதியின்படி தலைமைத் தணிக்கைக் கணக்காளர் (CAG) போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின் வேறு அரசு பதவிகளில் அமர்த்தப்படக் கூடாது. ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார்.

புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்!

    


14 comments:

 1. பாரதியார் கூறியது: கணக்கு, பிணக்கு, ஆமணக்கு.

  ReplyDelete
 2. என்ன செய்வது எல்லாம் குமாரசாமிகளாகவே இருக்கிறார்கள்..

  ReplyDelete
 3. இந்த வினோத் ராயிற்கு பதவி மட்டுமல்ல பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது!!!.... அப்படி என்ன செய்து கிழித்தார்? நேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு இந்த வழக்கை சிபிஐ கையிலடுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதென்பது வெளிப்படை. ஆனால் இந்த வழக்கில் நீரா ராடியாவின் பங்கு என்ன? கலைஞர. தொலைக்காட்சியும் அதன் இயக்குனரும் பங்குதார்ர்களும் எப்படி இந்த வழக்கில.் தொடர்புபடுத்தப்படுகிறார்கள் என்பதை விளக்கி எழுதுங்கள் ஐயா

  ReplyDelete
 4. Thanks a lot sir! Really informative and explains everything in layman term!

  ReplyDelete
 5. காலம் கருதி தாங்கள் சொன்ன இந்த கருத்துகள் கவணத்தில் கொள்ளதக்கவை!! இன்னும் சந்தேகம் எனக்கு உள்ளது, தவறு இல்லை என்றால் ஆ.ராசாவை கைது செய்ததும் கனிமொழியை கைது செய்ததும் ஏன்? திரு.பான்டே போன்றவர்கள் மாட்சிமை பொருந்திய நீதிபதி போன்று முடிவை செய்துவிடுகிறார் ஊழல் என்று, விவாதங்களில் அதனை ஊழல் அல்ல இழப்புதான் என சொல்லவரும் விருந்தினர்களுக்கு அதனை அனுமதிப்பது கூட இல்லை! பத்திரிகை எல்லாம் என்னதான் கருனாநிதி இவங்க குடிய கெடுத்தாரோ தெரியவில்லை, அழித்துவிட வேண்டும் என சபதம் புரிந்து வேலை பார்கின்றனர்,!! தேர்தல் நேரத்தில் மீன்டும் 2G நாடகம்!! பலே பலே நடத்தட்டும் இதற்க்கு பெயர்தான் பார்பனியம்மோ!!?

  ReplyDelete
 6. அப்போ அந்த 200 கோடி எதற்கு?

  ReplyDelete
 7. அன்புள்ள ஐயா உங்களிடம் இரு கேள்விகள் :

  1. 'முதலில் வருபவருக்கு முதலில்' என்ற பழைய முறை தொடர்ந்து பின் பற்ற பட்டது எதனால்? முதலில் வந்த ஒரே காரணத்திற்காக, தொலைதொடர்புதுரையில் எந்த வித முன் அனுபவமும் இல்லாத நிறுவனங்கள் பயன் பெற்றது ஏன் ? Vetting எனப்படும் எந்த வித திறன் ஆராய்வுகளை அரசோ, அமைச்சரோ மேற்கொள்ளாதது ஏன் ? இப்படி பயன் பெற்ற நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை உடனே வாங்கி, உடனே வேறு ஒரு அயல்நாட்டு தொலைதொடர்பு நிறுவனத்துக்கு விற்று பல நூறு கோடி லாபத்தை சில நாட்களில் பெற்றனவே. இது அரசுக்கு வருவாய் இழப்பு என்பதை எப்படி மறுப்பது ?

  2. "2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால்,6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்?" - இது சரியான வாதம் இல்லை என்றே கருதுகிறேன். 2014 ஆம் ஆண்டின் போது 2G அலைக்கற்றை (Voice only) ஒரு பழைய தொழில்நுட்பம் (grandfathered technology) அதன் காரணமே அந்த விலை வீழ்ச்சி. சுருக்கமாக 2014 என்பது 3G அலைக்கற்றை (Voice + Data) காலம். அதை மறுப்பீர்களா?

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாதத்தூக்கே வந்தால் கூட நீங்கள் தந்த வாக்குமூலம் அரசுக்கு வருவாய் இழப்பு என்று இது எவ்வாறு ஊழல் ஆகும்? நீங்கள் சொல்வதுபோல் முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற கொள்கையில் சிக்கல் இருக்கலாமே? தவிர அதன் வழி நடந்த ஆ.ராசா குற்றவாளி ஆக முடியுமா? இரண்டாவதாக, 2014 2G காலம் அல்ல 3G காலம் என்றே வைத்துகொள்வோம்? என் சந்தேகம் இந்த 2014ல் 2Gயினை முன்னுரிமை என்ற கொள்கையில் அளித்தால் இந்த நட்டம் வந்திருக்காது,ஏலமுறையால் ஏற்பப்பட்ட இழப்பு என்ற வாதத்தை முன்வைக்கலாம் அல்லவா!

   Delete
 8. நன்று

  ReplyDelete
 9. Nowhere in the world such an atrocity has happened. That is, the arrest of a cabinet rank minister on the charge of a notional loss. For these people, the perpetrators of this crime and the gullible masses who were forced to believe that the minister is guilty, ...still the earth is at the centre of the solar system and... not the sun.

  ReplyDelete
 10. ஆணித்தரமான விளக்கம்
  இருந்தும் இங்கு புரிந்தும் புரியாத மாரி நடிப்பவர்கள் ஏராளம் அவர்களின் திரை கிழியும் நேரம் விரைவில்

  ReplyDelete
 11. 2G வழக்கு ஒரு சினிமாப்பட கதை வசனம் போல எழுதி தயாரித்து திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடி பாஜகவுக்கும் அதைவிட அதிமுகவுக்கும் பெரும் வசூலை கொடுத்த முழு கற்பனை கதை என்பது உலகமே அறிந்த உண்மையாகும் . விஜய மல்லியா ஜெயலலிதா மட்டும் அல்ல இன்னும் பல பணமுதலைகள் எல்லாம் சட்டத்தின் உதவியாலும் அதிகாரவர்க்கத்தின் அளவு கடந்த கருணையாலும் காப்பாற்ற பட்டுகொண்டிருக்கிரார்கள். எல்லோரையும் எப்பொழுதும் ஏமாற்றமுடியாது என்ற பாடத்தை 2G கதை வசனகர்த்தாக்கள் கண்டிப்பாக படிக்கத்தான் போகிறார்கள். ரோஹித் வேமுலா. JNU கண்ணையா குமார் போலவே ஆர்,ராஜாவின் மீதும் அவாளுக்கு கடும் சீற்றம்,....பார்பனச்சீற்றம்?

  ReplyDelete
 12. காந்தி அழைத்தார் நல்லவர்கள் அரசியலுக்கு வந்தனர்.கருணாநிதி அழைக்கிறார் கொள்ளை அடிப்பவர்கள் வருகின்றனர் என்கிறார் திரு.பழ கருப்பையா ஒரு காணொளியில்.2G ஊழலில் பழ கருப்பையா கருணாநிதியை,திமுகவை என்னவெல்லாம் சொல்லி திட்டினார் அதற்காகவே அதிமுகவில் MLA ஆக்கப்பட்டார் பழ கருப்பையா ஆனால் மந்திரி பதவி கிடைக்காதலால் இப்போது வெட்கமில்லாமல் அதே கருணாநிதியை, திமுகவை அதரிக்கிறார்.
  இது கருணாநிதியின் தவறில்லை.நல்லவர்களின் தவறு.நல்லவர்கள் அரசியலை விட்டு ஒதுங்காமல் தங்களால் இயன்றதை செய்துவந்தாலே காலப்போக்கில் அரசியல் சுத்தமாகும்.இது பழ.கருப்பையா போன்று மாறிமாறி வெற்று கொள்கைவாதம் பேசி பிழைப்புவாதம் செய்யும் அனைவருக்கும் பொருந்தும்.

  ReplyDelete