தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை whatsappல் பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Friday, 29 April 2016

அரசியல் மேடை - 26

திசை திருப்பும் நாடகம்!  திரும்பும் திசையெல்லாம் பணம் இறைந்து கிடக்கிறது. கோடிக் கணக்கில் பணம் கைப்பற்றபட்டுள்ளது. ஆனால்  அது குறித்து இன்னும் போதுமான  வெளிச்சம் ஊடகங்களில் காணப்படவில்லை. அந்தப் பணம் அனைத்தும் அ.தி.மு.க.வினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட  பணம் என்பதுதான் காரணமோ என்று  தோன்றுகிறது.


சில நாள்களுக்கு முன்னர், கரூருக்கு அருகில் உள்ள அய்யம்பாளையம் என்னும் ஊரில், அன்புநாதன் என்பவருக்குச் சொந்தமான இடத்திலிருந்து கணக்கில் வராத 4.77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மறுநாள் சென்னை எழும்பூரில் ஓர் அடுக்குமாடி வீட்டில், ஆனந்த், விஜய்  என்னும் இரண்டு இளைஞர்களிடமிருந்து 5 கோடி ரூபாய்  கிடைத்துள்ளது. ராமனாதபுரத்திலிருந்தும்  கணக்கில் இல்லாத பணம் பறிமுதல் ஆகியுள்ளது.

கரூர் அன்புநாதன், அமைச்சர் நத்தம்  விஸ்வநாதன், அமைச்சர்  ஓ.,பி.எஸ். மகன் ரவீந்திரநாத், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கு நெருக்கமானவர். அவருக்குச் சொந்தமான ஒரு பெரிய  பண்ணை வீட்டில் ஏராளமான பணம், ஆம்புலன்ஸ் ஊர்தி, 12 பணம் என்னும் இயந்திரங்கள் எல்லாம் கிடைத்துள்ளன.  ஆம்புலன்சின் மீது, "இந்திய அரசு" என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அவர் இன்னமும் (28ஆம் தேதி வரை) கைது செய்யப்படவில்லை. வெளிநாடு தப்பிவிடுவார் என்று காவல்துறை எதிர்பார்க்கிறது.

சென்னையில் பிடிபட்ட இரண்டு இளைஞர்களும், தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றப் பொறுப்பாளர் விஜயகுமாரின் மகன்கள். ராமநாதபுரத்தில் சிக்கியிருப்பவர் அ.தி.மு.க சிறுபான்மைப் பிரிவின் பொறுப்பாளர்களில் ஒருவர்.

ஆக மொத்தம், பிடிபட்டுள்ளவர்கள் அனைவரும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் அது குறித்துப்  போதுமான விவாதங்கள் ஊடகங்களில் நடைபெறவில்லை. அப்படி எதுவும் நடைபெற்றுவிடாமல் மக்களின் கவனம் திசை திருப்பப்பட்டு விட்டது.

ஆம்! இந்த நிகழ்வுகள் செய்தித் தாள்களில் வந்து கொண்டிருந்த வேளையில்தான், திடீரென்று இன்னொரு செய்தி வெளிவந்தது. கோவில்பட்டியில் தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று வைகோ அறிவித்தார். ஊடகங்களின் கவனம் அந்தத் திசையில் திரும்பிவிட்டது.

எனவே வைகோவின் திடீர் முடிவு தற்செயலானதன்று, ஆளும் கட்சியின் ஊழலை மக்கள் அறிந்து கொண்டு விடாமல், கவனத்தை வேறு இடத்திற்குக் கொண்டு போகும் முயற்சியோ என்ற ஐயம்  எழுகிறது. அதற்காகத்தான்,  சரியாக அந்த நேரத்தில், உப்புச் சப்பில்லாத ஒரு காரணத்தைக் காட்டி அவர் போட்டியிலிருந்து விலகிக் கொண்டிருக்கக் கூடும்?

தான் தேவர் சிலைக்கு மாலையிடச் சென்றபோது, ஒரு கூட்டம் தனக்கு எதிராகக் குரல் எழுப்பினர் என்றும், தான் போட்டியிடும் தொகுதியில் தி.மு.க. சாதிக் கலவரத்தைத் தூண்டிவிட எண்ணியுள்ளதாகவும், எந்த ஆதாரமும் அற்ற ஒரு குற்றச்சாற்றை அவர் எடுத்து வீசினார்.

அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய கூட்டத்தில் எவ்வளவு பேர் இருந்தார்கள் தெரியுமா? எண்ணி ஏழு பேர்.  அவ்வளவு 'பெரிய' கூட்டத்தைக் கண்டு அஞ்சி ஒருவர் தேர்தலை விட்டே விலகி விடுவார் என்றால் அவருடைய அஞ்சாமையை  என்னவென்று கூறுவது? சரி, அவர்கள் யார்? 27ஆம் தேதி தினமலர் ஏடு, அவர்கள் நடிகர் கருணாசின் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்ககூடும் என்று கூறுகிறது. அவர்களுக்கும், தி.மு.க. விற்கும் என்ன தொடர்பு? நடிகர் கருணாஸ், இரட்டை இலைச் சின்னத்தில், திருவாடானைத் தொகுதியில் போட்டியிடுகிறார். உண்மை நிலை இப்படியிருக்க, தி.மு.க.வின் பழி போடுவது ஏன்?

நடக்கவிருப்பது தேர்தல் அன்று, யுத்த களம் என்று வைகோ பேசுகிறார். அது உண்மையானால், ஏழு பேரைக் கண்டு, ஆயுதங்களைக் கைவிட்டு யாரேனும் ஓடுவார்களா? களத்தில் நின்று கொண்டு கலங்குவது வீரனுக்கு அழகா? போர்க்களத்தில் என்ன ஒப்பாரி என்று வரலாறு கேட்காதா?

ஏன் அப்படி அவர் புலம்புகிறார்? அது தனக்காக இல்லை, அ.தி.மு.க.வைக் காப்பாற்றுவதற்காகவே என்பதைக் காலம் சொல்லும்.


6 comments:

 1. உண்மையை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கும் எங்கள் சுப.வீ அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. இரத்தினவேல்29 April 2016 at 12:07

  கோவில்பட்டியில் வெற்றி பெறுவது கடினம் என்று வைகோ நினைத்ததும் அவர் போட்டியிலிருந்து விலகிக் கொள்ள மற்றொரு காரணம்.

  ReplyDelete
 3. Just diversion tactics not just by "Poiko" but also by the media.

  ReplyDelete
 4. எனக்கென்னவோ இது அவர் தனது கூட்டணி கட்சி தலைவர்கள் மீது மேற்கொண்ட ஒரு தாக்குதல் என்று எண்ண தோன்றுகிறது. அதிலும் குறிப்பாக விஜயகாந்த்-பிரேமலதா- சுதீஷ் போன்றவர்களின் அரைவேக்காடுத்தனம் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள முறுகல் கூட ஒரு அடிசனல் காரணமாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட விஜயகாந்த் Factor என்பது இந்த தேர்தலோடு இல்லாமல் போகவேண்டும் என்ற அதிமுகவின் விருப்பம் இதனால் நிறைவேறி உள்ளது. சு.சாமியின் விருப்பத்தை பிரேமலதா நிறைவேற்றினார்.ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ நிறைவேற்றுகிறார்.

  ReplyDelete
 5. மற்றவர்களை மாட்டிவிட்டு இவர் ஓடி போய்விட்டார்! பாவம் மற்றவர்கள்! ஜெயலலிதா சொன்னதை சரியாக செய்கிறார்! பதில் மே 19 ல் தெரியவரும்

  ReplyDelete
 6. சாதி ரீதியான நிகழ்வுகள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை அல்லவா..இதை வைகோ போன்ற சமூக பொறுப்புள்ள தலைவர்கள் மிகவும் கவனமாக கையாள வேண்டிய விஷயம் தானே..அப்படி இருக்கையில் கலவரம் ஏற்ப்படுத்துவதர்க்கு சதி நடக்கிறது என்று சொல்வது...எதிர் சமூகத்தை தூண்டி விடுவது போல் ஆகாதா..இதனால் கூட கலவரம் வெடிக்க வாய்ப்பு உருவாகும் சூழலை வைகோ'வே உருவாக்க முயற்ச்சிக்கிறார் என்று கூட சொல்லலாம்...இது அவரது இத்தனை கால அரசியல் வரலாறுக்கு அழகா? ஆக மொத்தத்தில் அவரது அரசியல் வாழ்க்கை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறேன்...

  ReplyDelete