தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Sunday 17 April 2016

அவர் கண்ணிமைப்பின் கதகதப்பில்...


பத்து ஆண்டுகள் பறந்தோடி விட்டன.

2006 ஏப்ரல் 17 ஆம் தேதி, தலைவர் கலைஞர் அருகில் அமர்ந்து நான் எடுத்துக் கொண்ட புகைப்படம்தான் மேலே உள்ளது. அதற்கு முன்பும் தலைவரை நான் சந்தித்து உள்ளேன் என்றாலும், அந்தச்  சந்திப்புதான்  என் அரசியல் சிந்தனை மற்றும் போக்கினை மாற்றிய சந்திப்பு!


நான் சிறுவனாக இருந்தபோது, காரைக்குடியில் உள்ள எங்கள் வீட்டில் (சமதர்ம இல்லம்) அண்ணா, நாவலர், கலைஞர், பேராசிரியர் போன்ற பெரிய தலைவர்கள் பலர் வந்து தங்கிச் சென்ற நிகழ்வுகள்  இப்போதும் மங்கலாக என் நினைவில் உள்ளன. பள்ளி, கல்லூரியில் படித்தபோது, ஆயிரக்கணக்கானவர்களில் ஒருவனாய் நின்று, தொலைவில் இருக்கும் மேடையின் ஒளி வெளிச்சத்தில் தலைவரைக் காண முண்டியடித்து முந்திச் சென்ற நாள்களும் நினைவில் உள்ளன.

எனினும், கோபாலபுரம் வீட்டில் அருகில் நின்று பார்த்தது 1976ஆம் ஆண்டில்தான். அப்போது நெருக்கடி நிலைக் காலம். அந்தக் கெடுபிடிகள் அனைத்துக்கும் முகம் கொடுத்துக் கலங்காமல் நின்ற கலைஞரை நேரில் காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அப்பாவிடம் சொன்னபோது, உடனே  என்னை அழைத்துப் போனார். ஒருவித அச்சத்துடன் தயங்கித் தயங்கி அந்த மாடிப் படிகளில் ஏறிச் சென்று தலைவரை நேரில் பார்த்தபோது பிரமிப்பாக இருந்தது. 

அது மகிழ்ச்சியான காலம் இல்லை என்பதால், என் அப்பாவும், கட்சி நிலைமைகள் குறித்துக் கவலையுடன் தன் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். பிறகு என்னை  அறிமுகப்படுத்தி வைத்தார். "என் கடைசி மகன், எம்.ஏ. தமிழ் படித்துக் கொண்டிருக்கிறான்" என்றார். நான் வணக்கம் சொன்னதோடு சரி. வேறு எதுவும் பேசத் தெரியவில்லை. 30 ஆண்டுகளுக்குப் பிறகு  மீண்டும் வந்து பேசுவேன் என்று அப்போது நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

ஆனால் இடையில் என் பாதை மாறிப் போனது. கவிஞர்கள் இன்குலாப், குடந்தை நண்பர்கள் கீதாலயன், பொதியவெற்பன் ஆகியோர் நட்பினால் சற்று மார்க்சீய ஈர்ப்பு ஏற்பட்டது. அய்யா நெடுமாறன், தோழர்கள் மணியரசன், தியாகு ஆகியோருடன் ஏற்பட்ட தொடர்பினால் தமிழ்த் தேசியப் பாதை தெரிந்தது. அவர்களிடமிருந்து தி.மு.க. எதிர்ப்பு, கலைஞர்  எதிர்ப்பும் என்னைத் தொற்றிக் கொண்டது. 

17 மாதங்கள் பொடா சட்டத்தின் கீழ்ச் சிறையில் இருந்துவிட்டு 2003 இறுதியில் வெளிவந்தபின், 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து நெடுமாறன் அவர்களோடு நானும் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். ஆனால் அடுத்து வந்த 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடுநிலையாக நாம் இருந்து விடலாம் என்று நெடுமாறன் அவர்களும், நான் அன்று  சார்ந்திருந்த தமிழர் தேசிய இயக்கமும் முடிவெடுத்த போது,  அதனை என்னால் ஏற்க இயலவில்லை. அத்துடன், திராவிட இயக்கம் இல்லாமல் இங்கு தமிழ் உணர்ச்சி வந்திருக்க முடியாது என்னும் உண்மையும் என்னுள் ஆழப் பதிந்திருந்தது. எனவே, தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் நிலையிலிருந்து 15.04.2006 அன்று விலகினேன். தனி ஒரு மனிதனாய்த்  தி.மு.க.வை ஆதரித்துத் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

மறுநாள், நண்பர் நக்கீரன் கோபால், நாளேடுகளில் வந்திருந்த செய்தியைப் பார்த்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டார். கலைஞரைச் சந்திக்க விருப்பம் உள்ளதா என்று கேட்டார். "எனக்கு விருப்பம் உள்ளது. ஆனால் அவர் விரும்ப வேண்டுமே" என்றேன். ஏனெனில், இடைப்பட்ட காலங்களில் நான் தி.மு.க.வையும், கலைஞரையும் நிறைய விமர்சனம் செய்து பேசியுள்ளேன். நான்  ஏற்பாடு செய்கிறேன் என்றார்.

அடுத்த நாள் (17.04.2006) காலை  8 மணிக்குக் கோபாலபுரம் வீட்டில் தலைவரைச் சந்தித்தேன். அப்போது அங்கு முனைவர் நாகநாதனும், நக்கீரன் காமராஜும் இருந்தனர். தி.மு.க.விற்கு ஆதரவாக என்னை நான் முழுமையாக மாற்றிக் கொண்ட நாள் அது!


எங்கோ தொலைவில் இருந்து ஏக்கத்தோடு எந்தத் தலைவரைப் பார்த்தேனோ, அவர் பக்கத்திலேயே ஒரு  பத்தாண்டுகள் இருக்கக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்வின் வசந்தம். . இன்னும் பல ஆண்டுகள் அவர் கண்ணிமைப்பின் கதகதப்பில், என் அரசியல் பயணத்தைத் தொடர அவாவுகிறது  என் மனம்.  

12 comments:

  1. நன்று, கலைஞர் ஐயா வை நீங்கள் பார்க்க ஆவல் கொண்டு இருந்தது போல், நானும் பேராசிரியர் சுபவீரபண்டின் ஐயா வை பார்க்க ஆவலோடு இருக்கிறேன், தங்களின் வலைப்பூ, youtube, ஐ தொடர்ந்து பார்த்துவருகின்றேன், உங்களை தொடர்பு கொள்ள திராவிட கழகம் இற்கு தொடர்பு கொண்டு தங்கள் அலைபேசி என்னை கேட்டேன்,, உங்களது gmail account இற்கு கூட message அனுப்பியிருந்தேன், நாஞ்சில் சம்பத் அம்மாவிற்காக காத்திருப்பது போல்,உங்களிடம் ஒரு 5 நிமிடம் உரையாட காத்திருக்கிறேன்

    ReplyDelete
  2. இரத்தினவேல்17 April 2016 at 14:05

    பத்தாண்டுகளுக்கு முன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தை முழுமையாக ஆதரிக்க நீங்கள் முடிவு செய்தது சரியானதுதான் என்பதை இன்றைய அரசியல் போக்குகள் மெய்ப்பித்திருக்கின்றன.

    ReplyDelete
  3. ஐயா, எனக்கு ஒன்றும் தங்களை போலவோ, திரு.கருனாநிதி போலவோ தமிழுக்கு தொன்டு செய்தவன் அல்ல! என் நினைவு சரியாக இருக்கும் என்றால் சரியாக செம்மொழி மாநாட்டில் நீங்கள் ஒரு கோரிக்கையினை வைத்திர்கள், இனியாவது தமிழர்கள் தமிழில் கையெழுத்து போடுங்கள் என்று! அன்று நான் பள்ளிபடிப்பை படித்து கொண்டு இருந்தேன் அந்த நாளில் நான் எடுத்த சபதம் தமிழில் கையெழுத்து போடவேண்டும் என்று! இன்று வரை தொடர்கிறேன்! இது பெரிய செய்தியா என நினைப்பவர்களுக்கு சொல்ல வேண்டும், என நினைக்கின்றேன் தமிழால் நாம் அழகாவோம் செய்து பாருங்கள்! இன்னோரு வேண்டுகோள் அய்யா, திராவிட இயக்கம் இல்லாமல் தமிழ் உணர்ச்சி இங்கு வந்திருக்க முடியாது என சொல்லுகின்றிர்கள் அதனை அடுத்து வரும் கட்டுரையில் விரிவாக விளக்க வேண்டும் என வேண்டி விரும்பி கேக்கிறேன்! இந்த சிறுவனுக்காக

    ReplyDelete
  4. தோழர் அந்தோணி செல்வம் அவர்களின் கூற்று நூறு விழுக்காடு உண்மை..!
    தங்களைப் போன்றே நானும் அப்போது இருந்து தான், தமிழில் கையெழுத்து இடுவதை ஆரம்பித்தேன்.
    இளைஞரான தங்களுக்கு,
    வாழ்த்துக்கள் பல..!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா!! வாழ்த்துகள் ஐயா சுப.வீ அவர்களுக்கு தான்! அவர் தான் அந்த சிந்தனனையே நம்மில் மலர செய்தார் அல்லவா!!!

      Delete
  5. திரு.சுபவீ அவர்கள்,
    நமது சமுதாயத்திற்கு கிடைத்த,
    பட்டை தீட்டிய, நல் வைரம்..!!

    ReplyDelete
  6. அய்யா கலைஞரின் அணுக்க தொண்டராக தங்கள் இருப்பதால் தங்களுக்கு ஒரு வரலாற்று கடமை இருப்பதாக எண்ணுகிறேன்.
    தமிழகம் பல நூற்றாண்டுகளாக...இன்னும் சரியாக சொல்லபோனால் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் மீதும் தமிழகத்தின் மீதும் ஏற்றி வைக்கப்பட்ட இழிவுகள் சுமைகளை நீக்கி வைத்ததில் கலைஞரின் பங்கு முதன்மையானது என்றே கருதுகிறேன்.
    இந்த உண்மை தமிழனப் பகைவர்களால் மிகவும் நன்றாக புரிந்து கொள்ளப்பட்டதாகும். அதனால்தான் ஆதிக்க வர்க்கம் தனது கொடூர முகத்தை அடிக்கடி திமுக மீதும் கலைஞர் மீதும் மட்டும் அல்லாமல் கனிமொழி மீதும் கூட காட்டி கொண்டே இருக்கிறது.
    அவர்களுக்கு புரியும் தமிழர்களை இனி ஏமாற்றுவது நடக்காத காரியம் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் ஏற்றி வைத்த விளக்கு எரிய தொடங்கி விட்டது . அது இன்னும் இன்னும் கொழுந்து விட்டு பிரகாசமாக ஒளிரும்.

    எத்தனை கோடரிகாம்புகள் முயற்சி செய்தாலும் அவர்களின் ஆரிய நோக்கம் இனி நிறைவேறாது.
    அத்திவாரம் பலமாக போட்டாயிற்று. அத்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை. கலைஞரின் மனதுக்கு மட்டுமே தெரிந்த பல வரலாறுகள்... ஹிந்தி ஆதிக்கம். முதல் மாநில கட்சியின் எழுச்சி.. பிச்சைகாரன் மறுவாழ்வு.. மனிதனை மனிதன் சுமப்பதை ஒழித்தமை... எமர்ஜென்சிக்கு முதல் அடி விழுந்தது கலைஞரின் கரத்தால் அல்லவா?..இன்னும் எத்தனையோ வரலாறுகள் ஒவ்வொரு மைல் கல்லுக்கும் பின்னே எவ்வளவு சீரிய நோக்கம் கடும் உழைப்பு இருந்திருக்கும்? எதிர்ப்பு இருந்திருக்கும்?
    கலைஞரின் கதையுடன் தமிழினத்தின் கதையும் பின்னி பிணைந்து இருக்கிறது.
    தமிழை தமிழ்நாட்டை தமிழனை அரியாசனம் ஏற்றி வைத்தது பெரியார் /அண்ணா/ கலைஞர் என்ற வரலாற்று தொடர் நாயகர்ள்தான்.
    தங்களுக்கு கலைஞர் மீது இருக்கும் நெருக்கம் காரணமாக இதுகாறும் வெளியுலகம் அறிந்திராத பல பக்கங்களை வெளிக்கொண்டு வரமுடியும்.
    தமிழக வரலாறு தங்களை வரலாற்று நாயகனுக்கு அருகில் வைத்திருப்பது தற்செயலான சம்பவம் அல்ல.

    தங்களை நன்றாக படைத்த நற்தாய் தந்தையர்-
    நம் தலைவனை நன்றாக தமிழ் செய்யுமாறே

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=DlD2PhBZS5A
    அய்யா இந்த கானொளியில நான் கேட்டிருக்கிற கேள்விக்கு பதில் சொல்லுவிங்க எண்டு நினைக்கிறன்.

    ReplyDelete
  8. ஒரு காலத்தில் நீங்கள் கூட திமுக/கலைஞர் எதிர்ப்பு பிரச்சாரம் செய்து இருக்கிறீர்கள் என்ற விஷயம் மிக ஆச்சரியமாக இருந்தது. தமிழகத்தில் ஒவ்வொருவரும் கலைஞர் எதிர்ப்பு ஒரு காலத்தில் கொண்டு பிறகு அவருக்கு ஆதரவாளராக மாறி விடுகிறார்கள். இதுதான் அவரது பலம். எப்படி மாறுகிறார்கள் என்று கேட்டால் அதற்கு விடை இல்லை. ஏதோ ஒன்று மாற்றிவிடுகிறது.

    ReplyDelete
  9. கலைஞரும் ஒரு நாள் இரண்டாம் முறை "உடைந்த சித்திரங்கள் " ஆவார் - அடுத்து வரும் முதலாளியைப் பொறுத்து

    ReplyDelete
  10. தாங்கள் – கடந்த 50 வருடங்களாக தலைப்பு செய்தியாக வரும் கலைஞருடன் 10 வருடங்களுக்கு முன் இணைந்து 20 – சதவீத செய்திகளில் பங்கு பெற்றதை மிக அழகாக வர்ணித்துள்ளீர்கள்.
    தங்களின் சிறப்பு: கணீர் வெண்கல குரலுடன், மிக அழகிய தமிழில், எளிமையான முறையில் அனைவருக்கும் புரிதல் வண்ணமும் சிந்திக்கும் வண்ணமும் உரையாடுவது / சொற்பொழிவாற்றுவது. இதனை செய்ய கடின பயிற்சியும் உழைப்பும் தேவை. எளிதில் வந்துவிடாது.
    9 வருடங்களுக்கு முன் எதேச்சையாக “ஒன்றே சொல் நன்றே சொல்” – கேட்டதன் தாக்கம் மூலம் நான் உணர்ந்தது.
    கலைஞர் அவர்களின் இயக்கம், அறிவு சார்ந்தோர்களுக்கு முக்கியத்துவம் தரும் இயக்கம்; ஆகவே என்றும் கலைஞர் அவர்களின் இதயத்தில் தங்களுக்கு தனி இடம் உண்டு.

    ReplyDelete
  11. ஐயா உங்களை நேரில் கண்டு கை குலுக்கு ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை வாய்ப்பளியுங்கள் ஐயா!

    ReplyDelete