தினமும் சுபவீயின் ஒரு நிமிடச் செய்தியை பெற விரும்புவோர் subavee.blog@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் அலைபேசி எண்ணை அனுப்பவும்.

Monday 27 June 2016

எத்தனை காலமும் ஏமாற்றலாம்


"இராசீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை, ஏனைய குற்றவாளிகளான நளினி உள்ளிட்ட நால்வரோடு சேர்த்து விடுதலை செய்வதெனத் தமிழக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இம்முடிவு மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இன்னும் மூன்று நாள்களுக்குள் மத்திய அரசிடமிருந்து எந்த விடையும் வரவில்லையென்றால், தமிழக அரசே தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்யும்" என்று 2014 பிப்.19 அன்று  சட்டமன்றத்திலேயே அறிவித்தார், அன்றும்  முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா. 


இப்போது சில நாள்களுக்கு முன் (ஜூன் 25), சென்னை உயர்நீதிமன்றத்தில்,  விடுதலை கோரி  நளினி அளித்திருந்த மனுவிற்குப் பதில் மனு (counter) அளித்த தமிழக அரசு, அவர் மனுவைத் தள்ளுபடி செய்யுமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.

இப்போதும் தமிழகத்தின் முதலமைச்சர் அதே   ஜெயலலிதாதான்.  பிறகு ஏன் இந்த மாற்றம்? மலையிலிருந்து மடுவில் குதித்திருப்பதன் நோக்கம் என்ன? இந்தப் 'பச்சை இரட்டை வேடத்தை' எவரும் கண்டிக்கவில்லையே என்?  இவ்வாறு பல வினாக்கள் எழுகின்றன. 

விடுதலை செய்யப்போவதாக அவர் அறிவித்த நேரம், இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி கொண்டிருந்த கால கட்டம். தமிழ்த் தேசியவாதிகள் அந்த அறிவிப்பில் மகிழ்ந்து அறிக்கை விட்டனர்.  25 ஆண்டுகளாகத் தான் பிள்ளையைப் பிரிந்து வாடும் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மா,  ஜெயலலிதாவை நேரில் சந்தித்து, நெகிழ்ந்துபோய் நன்றி சொன்னார். அந்த நிழற்படம்  ஊடகங்களுக்குச் சென்றது. சுவரொட்டியாகவும் மாறி, அ.தி.மு.க.விற்கு ஆதரவைப் பெருக்கியது.  

ஆனால் விடுதலை மட்டும் வரவே இல்லை.  என்ன காரணம்?

மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில், இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் (Cr.P.C) 435(1) ஆம் பிரிவின் கீழ் விடுதலை செய்யவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்தச் சட்டப்  பிரிவில், "மத்திய அரசுடன் கலந்துரையாடி (in consultation with...)என்று ஒரு தொடர் உள்ளது.  கலந்துரையாடல் என்றால் மத்திய அரசுக்கு அறிவித்தல்தான் என்றனர் வழக்கறிஞர்கள் சிலர். ஆனால் அதனை மத்திய அரசு ஏற்கவில்லை. உச்சநீதி மன்றத்திற்குச் சென்று, எங்களைக்  கேட்காமல் விடுதலை செய்ய மாநில அரசுக்கு  உரிமை இல்லை என்று மனு அளித்தது.  

அந்த மனுவை ஏற்று விசாரித்த உச்ச நீதி மன்றம், 2015 டிசம்பர் 2 அன்று, கலந்துரையாடல் என்றால் மத்திய அரசின் ஒப்புதல் பெறுவதுதான் (in consultation means getting concurrence) என்று தீர்ப்பளித்தனர்.

அதனையொட்டி ஊடகங்களில் நடைபெற்ற விவாதங்களில், நளினியின் வழக்குரைஞர் ராதாகிருஷ்ணன், தோழர் தியாகு போன்றவர்கள், சட்டப்  பிரிவு 435 குறித்து நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. இந்திய அரசமைப்புச் சட்டம் 161ஆவது பிரிவின்படி தமிழக அரசு தானே அவர்களை விடுதலை செய்ய முடியும். அதனை மத்திய அரசோ, நீதி மன்றங்களோ தடுக்க முடியாது என்றனர். அந்தப் பிரிவு மாநில ஆளுநரின் அதிகாரம் (Governor's power) பற்றி பேசுகிறது. "பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது....(The Government of State shall have the power to grant pardons....)" என்றுதான் அந்த விதி தொடங்குகிறது. யாரும் தடுக்க முடியும் என்பது போன்ற குறிப்புகள் ஏதும் அதில் காணப்படவில்லை. அவர்கள் சொன்னது சரியாகத்தான் இருந்தது.

ஆனால் அதற்கும் ஒருபடி மேலே போய், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,  "அந்த அம்மாவுக்கு அந்தத் துணிச்சல் உண்டு. பாருங்கள் இன்னும் இரண்டு நாள்களில் அவர்களை அவர் விடுதலை செய்து விடுவார்" என்று பாராட்டுப் பத்திரம் படித்தார். அற்புதம் அம்மாவும், அந்த அம்மா தன் பிள்ளையை விடுதலை செய்து விடுவார் என்று நம்பினார். 

இந்தப் பாராட்டு, நம்பிக்கை எல்லாம் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு, ஜெயலலிதாவுக்குப் பயன்பட்டதே அன்றி, பாதிக்கப் பட்டவர்களின் விடுதலைக்கு உதவவில்லை. 

அண்மையில் கூட, அவர்களை விடுதலை செய்யக் கோரி, ஒரு கோரிக்கைப் பேரணி நடைபெற்றது. வேலூரிலிருந்து தொடங்குவதாக இருந்த அந்தப் பேரணிக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு,  சென்னையில் மட்டும் நடத்த அனுமதித்தது. பேரணி நடத்தக் கூட அனுமதியில்லையா என்று யாரும் பொங்கி எழவில்லை. "அம்மா" சொன்னதை அப்படியே கேட்டு நடந்தார்கள்.  சரி, வீரியத்தை விடக்  காரியம்தான் முக்கியம், நல்லது நடக்கட்டும் என்று நாடு காத்திருந்தது.  ஆனால் இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. இப்போது நளினியின் மனுவையும் தள்ளுபடி செய்யக் கோருகிறது தமிழக அரசு. 

இந்தச் சூழலிலும் அந்தத் "துணிச்சல்கார அம்மாவின்" பிம்பத்தை யாரும் குலைக்க விரும்பவில்லை. அவருடைய இரட்டை வேடத்தை கண்டித்து எந்த அறிக்கையும், எந்தத் தமிழ்த் தேசியத் தலைவரிடமிருந்தும் வரவில்லை. இதுவே தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றிருந்தால், நாடே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும்!

மூன்று செய்திகளை உள்வாங்கி இந்தக் கட்டுரையை நாம் நிறைவு செய்யலாம்.

       1. உண்மையாகவே அவர்களின் விடுதலையில் ஜெயலலிதாவிற்கு விருப்பம் இருந்திருந்தால் அவர் இந்திய அரசமைப்புச் சட்டம் 161 ஆவது பிரிவைத்தான்  பயன்படுத்தி இருப்பார். அப்படி அவர் செய்யவில்லை.

       2. இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் 435(1) பிரிவின் கீழ் விடுதலை செய்ய  முடிவெடுத்திருப்பதாகக்  கூறியது, மத்திய அரசின் மேல் பழி போட்டுத் தான் தப்பித்துக் கொள்ள மட்டுமே! 

       3. கோரிக்கைப் பேரணி நடத்துவதற்கும், நீதிமன்றத்தில் மனு அளிப்பதற்கும் கூட ஒப்புதல் தர மறுக்கும் ஜெயலலிதா அவர்களுக்கு விடுதலை வழங்குவார் என்று இன்னும் சிலர்  நம்புகின்றனர்.  சரி,இன்னும் எத்தனை காலம் வேண்டுமானாலும் அவர் நம்மை ஏமாற்றலாம்!


5 comments:

  1. பேரறிவாளன் விடுதலை மட்டும் தான் சாத்தியம். அதை முன்னெடுப்பது தான் பலனை தரும். 7 என்ற எண்ணை விட்டு தொலைத்து பேரறிவாளன் என்று தனியாக முயற்சி எடுக்க வேண்டும். சோனியா மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேசினால் ஏதாவது பலன் இருக்கும். இந்த சிக்கல் கலைஞர் கையிலும் இல்லை, ஜெயலலிதா கையிலும் இல்லை. சோனியா காந்தி அல்லது சு ஸ்வாமியை அணுகினால் மட்டும் தான் ஏதாவது மாற்றம் கிடைக்கும். அற்புதம் அம்மாள் ஏமாற்றப்படுகிறார்.

    ReplyDelete
  2. என் கணிப்பு என்னவென்றால், வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த அரசியலை உபயோகிக்க முடிவெடுத்திருப்பாரோ என்னவோ இந்த பச்சையம்மாள் !!!

    ReplyDelete
  3. இதை அரசியல் ஆதாயத்திற்குப் பயன் படுத்திக்கொள்வது அவர் மட்டும் இல்லை. தமிழக அரசியலில் உள்ள நூறு சதவீதம் பேரும் செய்வதே. தமிழக அரசியல் குட்டையில் ஊறிய மட்டைகள்.

    ReplyDelete
  4. பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம், ஐந்து மாவட்டங்களில் சாதி வெறி, மூடநம்பிக்கை, நுழைவுத் தேர்வு ஆகியவற்றுக்கு எதிராக ஊர்திப் பரப்புரை பயணம் என்று தாங்கள் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது. ஊர்திப் பயணம் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்ப்படுத்த வேண்டும், மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
  5. நீங்கள் சில விஷயங்கள் குறித்து யோசிக்க வேண்டும். அதனை திமுகவிடம் சொல்ல வேண்டும்.கர்வமே இல்லாமல் மக்கள் நலனுக்காக திமுக இவற்றை ஒரு எதிர் கட்சியாக கோரிக்கை வைக்க வேண்டும்.
    நான் குறிப்பிடும் வேரான விஷயங்களை பாருங்கள்:
    வேரான விஷயம் ஒன்று : கேரளாவில் கேரள மாடல் என்று ஒரு விஷயம் இருக்கிறது. அதனை பற்றி வெளி நாட்டவரும் பாராட்டி எழுதுகிறார்கள். அந்த லின்க் இது https://en.wikipedia.org/wiki/Kerala_model . அதனை தயவு செய்து படித்து பாருங்கள். வெளி நாட்டவருக்கு சவால் விடுகிறது கேரளா என்று வெளி நாட்டினர் எழுதுகிறார்கள். அவர்களை பாராட்டுகிறார்கள். இங்கே கலைஞர் மாடல் என்று எடுத்து கொண்டால் அரசியல் மற்றும் வணிகம் என்ற எண்ணம்தான் வருகிறது. எப்படி அதனை அவர்கள் செய்து காட்டினார்கள் என்று உங்களை போன்ற அறிவாளிகள் என்று யோசிப்பீர்கள். அதனை என்று மக்களுக்கு சொல்வீர்கள். கேரளாவில் இருக்கும் தலித் மக்களும் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் இருக்கிறார்கள்( தவறாக புரிந்து கொள்ள வேண்டாம், இந்தியா முழுமைக்கும் கஷ்டப்படும் மனிதர்கள் தலித்துகள், அவர்கள் ஏதோ ஒரு முறையால் கேரளாவில் நிம்மதியை பெற்று இருக்கிறார்கள் என்று வலியுறுத்தவே அவ்வாறு கூறுகிறேன்) . அந்த இயற்கையோடு இணைந்த சூழ்நிலை அதனை அவர்களுக்கு தருகிறது(சில exceptional தவிர்த்து). கேரளா புதிய முதல் அமைச்சர் பதவி ஏற்றவுடன் இயற்கை பற்றி பேசுகிறார். இதனை நீங்களும் பேசுவீர்களா அய்யா ..?
    வேரான விஷயம் இரண்டு : சிறு இடத்தில் உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளை கட்டி தரும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சென்னையில் அதிகரித்து வருகிறது. இந்த ஆராய்ச்சி லிங்கை படித்து பாருங்கள். https://www.researchgate.net/publication/233490985_The_Consequences_of_Living_in_High-Rise_Buildings
    இந்த லின்க் சொல்வது என்னவென்றால் உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளில் வாழும் குழந்தைகள் எதிர் மறையான எண்ணங்களை, தற்கொலை எண்ணங்களை பெறுகிறார்கள், மோசமான அடுத்த தலைமுறை உருவாகும் என்று கவலை கொள்கிறது. என்னுடைய கவலை என்னவென்றால் மிக சிறிய ரோடு வசதியே இல்லாத இடங்களில் உயர்ந்த அடுக்கு மாடி வீடுகளை கட்டினால் எப்படி மக்கள் போய் வருவார்கள்.அந்த சாலைகளில் நடக்கவே முடியாமல் செய்து விட்டார்கள். நிறைய விபத்துகள் நடக்கின்றன. ஒரு நாள் அலுவலகம் சென்று வருவதே கடின வேலை மாதிரி இருக்கிறது. இதனை உணர்வு பூர்வமாக அணுக வேண்டும். உங்களை மாதிரி பிரபலமான மனிதர்கள், உங்கள் கட்சி அல்லது திமுக ஆட்களை அணுகி மக்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும். பிறகு அதனை பேச வேண்டும். இதனை பேசுவீர்களா அய்யா ..?
    வேரான விஷயம் மூன்று: பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து கொண்டே போகிறது. கடந்த ஐந்து வருடமாக நான் தனியாக ஒரு கைப்பை பயன்படுத்துகிறேன். அதிலேதான் பொருள்கள் வாங்குகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு குறைந்தது 1000 பைகளாவது இதுவரை தவிர்த்து இருப்பேன். இதனை சில இடங்களில் மிக சில நகராட்சிகளும் மாநகராட்சிகளும் பின் பற்றுகின்றன. அதாவது அந்த நகராட்சி தலைவர் சுற்று சூழல் குறித்த எண்ணம் உடையவர் ஆக இருந்தால்.பெரும்பாலான இடங்களில் மக்கள் தாராளமாக பிளாஸ்டிக் பயன் படுத்துகிறார்கள். குப்பைகள் சேருகின்றன.இவை மக்குவதற்கு 500 வருடங்கள் ஆகிறது. இவை சேர்ந்தால் சுற்று சுழற்சி முறையை தடுக்கின்றன. நோய்களை உண்டு செய்கின்றன. இதனை பேசுவீர்களா அய்யா ..?

    இவை எல்லாம் வேரான பிரச்சினைகள். உடல் நலம் மன நலம் பேணுபவை. மக்களுக்கு இன்று வாழ்க்கை ஓடினால் போதும். எதிர் கால தலைமுறை பற்றி ஆட்சியாளர்கள் மற்றும் உங்கள் போல அறிவாளர்கள்தான் கவலை பட முடியும்.
    மேலும் நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, பள்ளிகள் உள்ள சாலைகளில் ஸ்பீட் பிரேக்கர் அமைத்தல்( அவை நெடுஞ்சாலையாக இருந்தாலும்) , போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் நான்கு வழி சாலை கோரிக்கை, குழந்தைகள் கடத்தல் தொழிலுக்கு முற்று புள்ளி வைத்தல், போக்குவரத்து அதிகம் உள்ள சாலைகளில் நடை மேம்பாலங்கள் அமைத்தல் போன்ற கோரிக்கைகள். இவை எல்லாம் நாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்வோம், பெயர் அவர்களுக்கு செல்வதை நாங்கள் விரும்ப வில்லை என்று திமுக சொல்லாமல் மக்கள் நலனுக்காக கோரிக்கை வைக்க வேண்டும். அதிமுகவினர் செய்ய விருப்பம் இல்லாமல் இருந்தாலும் திரும்ப திரும்ப சொல்லி உங்கள் கோரிக்கையால் செய்ய வைக்க வேண்டும் .அல்லது பாருங்கள் நாங்கள் சொல்லி விட்டோம் அதிமுகவினர் செய்ய தயாராக இல்லை என்ற விஷயத்தை மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும். இதனை பேசுவீர்களா அய்யா ..?

    ReplyDelete